களஞ்சியப் பகுதி 58

சுமதி வீடு

63 பகுதிகளில்·மூல எண்ணிடல் அல்ல

பூங்காவனம் : முத்தாயி! இவ்வளவும் கேட்ட பிறகும் ஏன் எங்களோடு பேச மாட்டேன் என்கிறாய்?... முத்தாயி : என் பெருமூச்சுகளுக்கு பேசும் சக்தி இல்லை என்று கருதுகிறீர்களா?... பூங் : கண்ணே முத்தாயி!... முத் : தொடாதீர்கள் என்னை! பூங் : முத்தனைப் பற்றி உனக்கு மட்டுந்தானா கவலை?...எங்களுக்கெல்லாம் இல்லையா?...உனக்குக் கணவன்—எனக்கு மகன்!... முத் : மகன்! இன்னொரு முறை சொல்லாதீர்கள்...உங்கள் மாளிகை கெளரவம் மண்ணாகிவிடும். வெட்கமில்லா உங்களுக்கு...முத்தனை உங்கள் மகன் என்று சொல்லிக் கொள்ள?...தாயாம் தாய்!...நாயைப் போல் மகன் நடத்தப் பட்டபோது வாயை மூடிக் கொண்டிருந்த தாய்!...பசியால் மகன் வாடிய சேதியை ருசியோடு கேட்டுக் கொண்டிருந்த தாய்!...மகன் என்ற பாசத்தை மறைத்துக்கொள்ளத் தூண்டியது உங்கள் மாளிகை வாசம்! புத்திரன் என்று கூறிக் கொள்ளத் தடையாக இருந்தது உங்கள் போலி கெளரவம்—மதிப்பு—மரியாதை—மண்ணாங்கட்டி—எல்லாம்! பாளையக்காரர் பெருமைக்கு பங்கம் வரக்கூடாது என்றுதானே பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்த மகனை பரதேசி போல நடத்திக் கொண்டிருந்தீர்கள்? எங்கே தாயே அந்தத்திமிர்? திமிருக்கு போட்ட திரை கிழிந்து விட்ட காரணத்தால் தேடிவந்தீர்களோ மகனை?... மாளிகை கெளரவத்தை பாதுகாக்கும் தாய்! மதவெறிக்கு சாமரம் வீசும் தகப்பன்!...பத்தினியாக வேஷம் போட்டாள் தாய்!...பக்தனைக் கூத்தாடினான் தகப்பன்!...அறியாத கன்னிபோல் வாழ்ந்தாள் அம்மை!...அடியாரின் தீவினையை வாழ்ந்தான் அப்பன்! அம்மை அப்பர்களே! அவலக்குண ஜீவன்களே! அச்சமத்தின் புதிய பதிப்புகளே! கற்பிழந்தவள் கன்னியாக வாழ்ந்தாளாம்—காமாந்தகாரன் சாமியாராகத் திரிந்தானாம்! இந்தக் கயமையின் உருவங்களுக்கு கடைசி நேரத்திலே ஞானோதயம் பிறந்து விட்டதாம்!...வந்து விட்டார்கள் தூக்கம் விசாரிக்க வைக்கெட்ட வஞ்சகர்கள்! மதிப்பு கெடக்கூடாது—மகன் கெட்டாலும் பரவாயில்லை என்பவள் மாதாவாம்!...மக்கள் ஆதரவு குறையக் கூடாது—மகன் என்ற பெயர் மாறக் கூடாது—மகனைப் பற்றி கவலை இல்லை...ஆனால் இந்த மகா நல்லவர்கள் மருமகளைத் தேற்றி வந்து விட்டார்கள்! மானங்கெட்டவர்கள்—ஆடினர்களாம், பாடினர்களாம்—ஆனந்தம் அனுபவித்தார்களாம்—அதன் அடையாளச் சின்னம் பிறந்ததும் விசுவாமித்திரன் மேனகைபோல் வீண் கெளரவத்தைக் காப்பாற்றிக் கொண்டார்களாம்!—விதியற்றவர்கள்!...அறுந்து போன தந்தியை ஒட்டவைக்க வந்து விட்டார்கள், அன்றொரு நாள் அதே வீணையைப் பழுதியில் எறிந்த புண்ணியாத்மாக்கள்!...போங்கள் இதை விட்டு; போய்விடுங்கள் இப்போது! உங்களுக்கெல்லாம் பதில் சொல்ல என் முத்தன் இங்கில்லை! இன்றில்லா விட்டால் நாளை உங்களுக்கு மட்டுமல்ல; உங்களைப் போன்ற உத்தர்களுக்கும் பதில் சொல்ல என் வயிற்றிலே வளர்கிறது வாள்! போலி மதிப்பைப் பொசுக்கும் தீ!...மக்களை ஏமாற்றி வாழும் மதயானைகளே மாய்க்கும் வேல் என் வயிற்றிலே வளர்கிறது—அது சொல்லும் சூதகாரர்களுக்குப் பதில்!...சூழ்ச்சிக்காரர்களுக்குப் பதில்!...கூடான பதில்! சுயமரியாதைப் பதில்!... அந்த பதிலுக்குக் காத்திருங்கள் பாவிகளே!...என் முத்தனை அநியாயமாகக் கொன்ற பாவிகளே! அந்த பதிலுக்குக் காத்திருங்கள்— மாய் : முத்தாயி! முத்தன் சாகமாட்டான்... முத் : சாமியார் நடையில் பேசும் தத்துவார்த்தமா?...சொர்க்கலோகத்தில் சுகமாக இருப்பார் என் முத்தன் என்கிறீரா?...பூவுடல்தான் அழியும்; புகழுடல் அழியாது என்று கூறுகிறீரா!... மாய் : இல்லை! பலதேவர் சக்கரவர்த்தியை சந்திக்கப் போயிருக்கிறார்—முத்தனுக்கு விடுதலை கட்டாயம் கிடைத்துவிடும்!... சுகதேவ் : அதோ!...அப்பாவும் வந்து விட்டார். என்னப்பா! என்ன ஆயிற்று? முத்தனுக்கு விடுதலையா?... [பலதேவர் தலை குனிகிறார்] முத்தாயி : என் முத்தனுக்கு விடுதலைதான்! இந்த உலகத்திலிருந்து என் ஆசை முத்தனுக்கு விடுதலைதான்! உங்களைப் போன்ற துரோகிகள் வாழும் பூமியிலிருந்து என் அன்பு முத்தனுக்கு விடுதலைதான்! விடுதலைதான்! [ஓடுகிறாள்...வெறி பிடித்தவள் போல்]