களஞ்சியப் பகுதி 56

பூங்காவனம் அறை

63 பகுதிகளில்·மூல எண்ணிடல் அல்ல

சாமியார் : எனக் கென்னமோ, சுகதேவ் திரும்பி வருவது சந்தேகமாகிவிட்டது. விதி நம் விழிகளையும் மூடி விடும்...சுகதேவ் எதிரே நின்றால்கூட நம் பார்வைக்கு திரைபோட்டு விடும் பயங்கர சக்தி வாய்ந்தது அந்த விதி... (பூங்காவனம் வந்து கொண்டே) பூங் : உம்...ஆரம்பமாகிவிட்டது விதிக்கு விளக்கம்!...அவரை நீங்கள் சாமியாரை நம்புகிறீர்கள்—சாமியார் பாவம், விதியை நம்புகிறார்—விதி சாமியாரை நம்பி வாழ்கிறது—இப்படிச் சக்கரம்போல விதி சுற்றிக்கொண்டே இருந்தால், சுகதேவும் எங்காவது சுற்றிக் கொண்டேதானி இருப்பான்... சாமி : அவசரக்காரப் பெண்கள்... பூங் : ஆமாம் சாமியாரே! அது முழுக்க...முழுக்க உண்மை...நான் அவசரக்காரிதான்...அவசரக்காரியே தான்... பல : பூங்காவனம், போதும் நிறுத்து. (சுகதேவ் ஓடி வருகிறான்) சுகதேவ் : அப்பா...அப்பா... ராணி : வந்து விட்டாயா செல்வமே!... சுக : என்னைக் கொஞ்சுவதற்கு நேரமில்லை...அப்பா...காரியம் மிஞ்சிவிட்டது... பல : என்ன சொல்கிறாய்? சுக : நீங்கள் வந்தால்தான் ஒரு உயிரைக் காப்பாற்றமுடியும்! பல : என்ன சுகதேவ்? சுக : தூக்கு மேடைக்கு போய்க் கொண்டிருக்கிறான் ஒரு ஏழை! அவனைக் காப்பாற்றுங்கள்...அவனை எதிரி நாட்டு உளவாளி என்று சொல்லி கொலைக் குற்றம் சுமத்தி தண்டித்து விட்டார்கள்...அப்பா உடனே புறப்படுங்கள், வேங்கை புரத்து வாசலிடம்!... பல : விஷயத்தை விவரமாகச் சொல்... சுக : முத்தனுக்குத் தூக்கு தண்டனை கொடுத்து விட்டார்கள்!... [பூங்காவனம் “முத்தா” என்று அலறி விழுகிறாள்] சுக : அத்தை!... பல : பூங்காவனம்!...யாரங்கே? உடனே போய் வைத்தியர் பூபதியை அழைத்து வாருங்கள்!... [வைத்தியர் பூபதி வருகிறார்—பூங்காவனத்தை பரிசோதித்து மருந்து தருகிறார்.] பூபதி : பயப்படாதீர்கள்!...மன அதிர்ச்சிதான்...வேறொன்றுமில்லை! பிரபு, ஏன் இப்படி திடீரென்று மயக்கம் வந்தது?...எதாவது ஷாக் செய்தி?... பல : அப்படி ஒன்றுமில்லை...நமது மாளிகையில் குதிரைக்காரனாக இருந்தானே காவேரியின் மகன் முத்தன், அந்த முத்தனுக்குத் தூக்குத் தண்டனையாம்! அதைக் கேள்விப்பட்டவுடன்... [பூங்காவனம் மறுபடியும் “முத்தா” என அலறுகிறாள்...பூபதியின் மூளை வேகமாக வேலை செய்கிறது.] பூபதி : பிரபு! இந்த மாளிகைக்குப் பின்புறமாக படிக்கட்டுகள் இருக்கின்றதல்லவா?... பல : இருக்கிறது... (பூபதி அறையைச் சுற்றி நன்றாகக் கண்ணோட்டம் செலுத்துகிறார். காதல் புறாக்கள்—கன்றை நாடும் பசு—மான் தோல்வேங்கை மூன்று ஓவியங்களையும் உற்றுப் பார்க்கிறார்) பூப : தயவு செய்து என்னை அந்தப் பின்புறத்து படிக்கட்டுகளின் பக்கம் அழைத்துப் போங்கள்! (போகிறார்கள். பூபதி படிகளை எண்ணுகிறார்) சுக : அத்தை...அத்தை...கவலைப்படாதே அத்தை! அடடா...அங்கே முத்தாயி வேற முத்தனுக்காக கவலைப்பட்டுக்கிட்டு இருப்பா...ஆகா!...நான் என்ன வேகமா வந்தேன்...என் வேகத்தையே இந்த வைத்தியர் கொறச்சிட்டாரே...ம்...படி எண்ணட்டும் போயிட்டாரு படி!...அட வாங்கய்யா. பல : என்ன பூபதி; படிகள் ஏன் எண்ணினீர்?... பூப : படிகள் எண்ணினேன்—அதோடு பழைய நிகழ்ச்சி ஒன்றையும் எண்ணினேன்... ஆகா! நன்றாக ஞாபகம் இருக்கிறது—இப்போது நடப்பதுபோல் இதோ, எல்லாம் என் கண்முன்னே அப்படியே காட்சியாகின்றன! அந்தக் காட்சியை அப்படியே சொல்கிறேன். கவனமாகக் கேளுங்கள்... இந்த மாய்கையான சாமியார் ஒருநாள் இரவு அவசரமாக ஓடிவந்து என்னைக் கூப்பிட்டார். ரகசியம் ஒன்று—அதை மறைத்துவிட வேண்டுமென்றார். வந்தேன்! கண்கள் வழியிலேயே கட்டிவிட்டார். மறுத்தேன். பொன் மூட்டை ஒன்று வழங்கினார். ஒத்துக் கொண்டேன். என்னை எங்கே அழைத்துக் கொண்டு போகிறார் என்றே எனக்குத் தெரியவில்லை. கண்கள் கட்டப்பட்டே இருந்தன. ஏதோ படிகளில் ஏறி என்னை அழைத்துச் செல்வது தெரிந்தது...படிகளைக் கவனமாக எண்ணிக் கொண்டேன். முப்பத்தாறு படிகள்! நன்றாக ஞாபகம் இருக்கிறது...ஒரு இருண்ட அறையில் மங்கலான வெளிச்சத்திற் கிடையே என் கண்கள் அவிழ்த்து விடப்பட்டன. எந்த இடமென்று தெரிந்து கொள்ள...சுற்று முற்றும் பார்த்தேன்...இதோ, இந்த மூன்று ஓவியங்களும் அப்போதும் இருந்தன!...கட்டிலிலே ஒரு பெண் படுத்திருந்தாள்...அவள் முகம் கருப்புத் துணியால் நன்றாக மூடப்பட்டிருந்தது...பிரசவ வேதனையால் அந்தப் பெண் துடித்துக் கொண்டிருந்தாள். இன்னும்...சிறிது நேரத்தில் இறந்து விடுவாள் போல் தோன்றியது...பிறகு நான் மருத்துவம் செய்தேன்...ஆஹா!...ஆஹா!...அழகான குழந்தை—குழந்தையை உடனே சாமியார் காவேரி என்பவனிடம் கொடுத்துவிட்டார். காவேரி குழந்தையுடன் ஓடி விட்டான். மீண்டும் என் கண்கள் கட்டப்பட்டு வீட்டில் கொண்டுவந்து விடப்பட்டேன். மறுநாளே என் வெளிநாட்டுப் பயணமும் ஆரம்பமாகிவிட்டது. அதனால் அந்தப் பரம ரகசியம் பாதாளத்தில் புதைந்து கிடந்தது. திருப்பி வந்ததிலிருந்து சாமியாரையும் எவ்வளவோ கேட்டுப் பார்த்தேன்; சொல்லவில்லை. ஆனால் இப்போது புரிகிறது, அந்தக் குழந்தை பிறந்த இடம் இந்த அறைதான் என்பது! ஆம்...இன்று தூக்கு மேடையிலே நிற்கும் முத்தனுக்கு, தொட்டில் கட்டியிருக்க வேண்டிய இடம் இது தான்! ஆனால் ஒன்று பிரபுவே! இந்தச் சாமியார் அவ்வளவு அக்கரை எடுத்துக் கொண்டாரே, அது ஏன் என்று எனக்கு இன்னும் விளங்கவில்லை... (பூங்காவனம் எழுகிறாள்) பூங் : நான் சொல்லுகிறேன்! முத்தனின் தாய் நான் தான்! பல : ஆ!... பூங் : என்னை ஏமாற்றியவன் இதோ, இந்தக் காதகன் தான்! பல : என்ன!...... பூங் : அண்ணா! என்னை மன்னித்து விடுங்கள்! நீங்களும் அண்ணியும் வடக்கே சென்றிருக்கும்போது, இவன் வலையில் நான் விழுந்து விட்டேன்! பக்தி போதனை செய்வதாக இந்தப் பாலசந்நியாசி அடிக்கடி வந்தான்...ஒரு நாள்—இரண்டு நாள் உலகத்தைப் பற்றிப் பேசினான். பிறகு உலகைப் படைத்தவனின் உத்தம குணங்களை விளக்கினான். கடவுள் அவதாரங்களும் காதல் லீலைகள் புரிந்ததாக வர்ணித்தான். மாயக் கண்ணன்—மன்மதன்—ரதி தேவி—மகேசன் பார்வதி—வள்ளி மணவாளன்—பிரம்மா. திலோத்தமை—மே னகா விசுவாமித்தான்—இப்படி எல்லாம் புராணக் கதைகள் சொன்னான்—போதை நிறைந்த இவன் வார்த்தைகள் என் புத்தியைத் தடுமாற வைத்து விட்டன...விவரிப்பானேன்—வீழ்ந்தேன்...வீழ்ந்தேன்...தமிழச்சி கட்டிக் காக்கும் கற்பு நெறியிலிருந்து வீழ்ந்தேன்...சந்நியாச சத்தை விட்டுவிடுகிறேன்—சம்சார வாழ்வு தொடங்குகிறேன் என்றான். கடைசியில் கருவிலே முத்தனும் வந்தான்! ஊர் கை கொட்டிச் சிரிக்கும் உன்னை மணந்தால் என்று காரணம் கூறி, என்னை கை விட்டு விட்டான்! முத்தனின் தந்தை இவன்! நான் தான் தாய்! சுக : ஓ!...இதுதானா அத்தை காரணம்? வேங்கை நாட்டு மன்னரை கல்யாணம் செய்து கொள்ளமாட்டேன் என்று நீ சொன்னது ஏன் என்று இப்போது அல்லவா புரிகிறது! பூப : ஹ...ஹ...ஹ!...பற்றற்ற துறவிகள் புரட்சியைக்கூட நாடமாட்டார்களாம்—நீரோ பூங்காவனத்தையே நாடி இருக்கிறீர்...ஹ...ஹ...ஹ! பல : பூபதி! ஐயாயிரம் பொன் தருகிறேன், இந்த அவமானச் செய்தியை வெளியே சொல்லாதீர்!... பூப : எனக்கு வேண்டாம் ஐயாயிரம் பொன்! முன்பு ஒருமுறை நான் பொன்னுக்கு அடிமைப்பட்டதால் இந்த போலி வேடதாரி இத்தனை நாள் வெளிச்சம் போட முடிந்தது!...பெருமையுள்ள பிரபுவே! இனியும் இந்த ரகசியத்தை மூடி வைத்துப் பயனில்லை—உடனே சென்று முத்தனைக் காப்பாற்றுங்கள்...