களஞ்சியப் பகுதி 37

அஞ்சல் மனை

63 பகுதிகளில்·மூல எண்ணிடல் அல்ல

வேதாளம் : உம்...இரண்டும் புதிய பறவைகள்—பருவ மலர்கள்—எங்கே போய் காதல் கீதம் பாடுகிறீர்களோ? திரிசங்கு! கவலைப் படாதே. உன் மகளுக்கேற்ற மன்மதனை தேடிப் பிடித்துவிட்டாய். இனி அவள் பாடு! அவன் பாடு! திரிசங்கு : மன்மதன் என்பதற்காக அல்லவே, நான் இப்படி பொல்லாம் கட்டப்பட்டு இந்த திருமணத்தை ஏற்பாடு செய்தது. ஒட்டைக் குடிசையிலே கிடக்கும் நான்...... வேதா : உப்பரிகையிலே உலவலாம் பாளையக்காரர் சம்மந்தியாக என்று எண்ணினாய்—அதுதானே! இப்போது தான் என்ன—சுகதேவ், முத்தாயி இருவரும் தங்கள் காதல் சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு விரைவில் வந்து விடுவார்கள். திரி : எப்போது? நான் சுடுகாட்டுக்குப் போகும் போது? வேதா : அப்படியானால்தான் என்ன? உனக்கு கொள்ளி வைக்கப் போகிற பேரன் எதிர்கால பாளையக்காரராக அல்லவா இருப்பான். ஹி...ஹி...ஹி...திரிசங்கு! அதெல்லாம் இருக்கட்டும். இவ்வளவு மகத்தான திருமண ஏற்பாட்டுக்கு யோசனை சொன்னேனே—எனக்கு எங்கே பரிசு? திரி : பரிசா? வேதா : ஊதியம் என்று கேட்கட்டுமா? திரி : விளையாடாதீர், என் வேதனையோடு. வேதா : விளையாட்டா? இந்த வேதாளம் விளையாட்டமாட்டான் திரிசங்கு...மரியாதையாக எனக்குத் தரவேண்டிய பரிசு வரவேண்டும். இல்லாவிட்டால்,...... திரி : இல்லாவிட்டால் என்ன செய்வீர்கள்? வேதா : என்ன செய்வேன்? சுகதேவை ஏமாற்றிநீ கெடுத்து விட்டாய் என்று பாளையக்காரரிடம் கூறுவேன். ஜாக்கிரதை! திரி : பயமுறுத்தாதீர். பாளையக்காரர் முட்டாள் அல்ல ஆதாரமில்லாத உன் பொய்யை அப்படியே நம்பிவிட. வேதா : ஆதாரமா இல்லை? முத்தாயி உன் வீட்டில் இல்லாததே எனக்கு பெரிய ஆதாரம் தெரியுமா? திரி : போதும்! நிறுத்தும்! நீரும்தான் யோசனை சொன்னீர். வேதா : அது வாராது அப்பனே இந்த வழக்குக்கு! இரு...இரு உன்னைப் பேசிக் கொள்கிறேன். ஒழுங்காக நடந்து கொண்டால் பிழைத்தாய். இல்லை..... திரி : இல்லை—செத்துவிடுவேன். அவ்வளவுதானே! ஒன்றும் மிரட்டாதீர். உம்மால் ஆனதைச் செய்யும்.