களஞ்சியப் பகுதி 36
தனபதி மாளிகை
63 பகுதிகளில்·மூல எண்ணிடல் அல்ல
தனபதி : முத்தாயி! உனக்காக நான்மட்டுமா காத்திருக்கிறேன்?...அதோ, அந்த வானத்துச் சந்திரிகையும் காத்திருக்கிறது...கோபப் பெண்ணே! குளிர் மொழிப் பாவாய்! ஏன் இன்னும் வராமல் இருக்கிறாய்?...அந்த குதிரை வீரர்கள் மண்டுகளா?...அல்லது இந்தப் புரவிகள் தான் என் அவசரப் புரியாதவைகளா? எவ்வளவு நேரம்...எவ்வளவு நேரம்...அப்போதே சொன்னேன்...ஆனந்தபுரத்துக்கும், தலைநகருக்கும் இடையே ஒரு குறுக்குப் பாதை போட வேண்டுமென்று...இந்த அசட்டு ராஜா கேட்டிருந்தால் இப்போது எவ்வளவு சீக்கிரம் வந்திருக்க முடியும் என் முத்தாயி!... [வீரர்கள் பெண் வேடம் பூண்ட சுகதேவைக் கொண்டு வருகிறார்கள்] தனபதி : முத்தாயி! வந்துவிட்டாயா?...முத்தாயி, பேசமாட்டாயா?...ஆகா! உனது பொன்மொழி சிந்தும் இதழ்களை யார் மூடியது?...இந்தக் குதிரைக்காரப் பயல்கள் முட்டாள்கள்! [வாய்க்கட்டை அவிழ்க்கிறான்...சுகதேவ் ஓ வென்று அலறுகிறான். வேலழகன் ஆத்திரம் அடைகிறான்] சுக : அய்யா, பிரபுவே! என்னை அடிக்காதீர்கள்... வேல : நீ எப்படி இங்கு வந்தாய்?... சுக : நானும் முத்தாயியும், அவள் பெண்ணாகவும், நான் ஆணாகவும்...இல்லை...இல்லை...அவள் ஆணாகவும்...நான் பெண்ணாகவும்...வேஷம் போட்டுக்கொண்டு ஆற்றங்கரை ஓரத்திலே ஆனந்தமாக விளையாடுவதற்குச் சென்றோம்...அப்போது ஏற்பட்டது பிரபு, இந்த ஆபத்து!... தன : முட்டாள்! வெளியில் சொல்லாமல் ஓடு இதை விட்டு... * * * [தண்டோரா போடப்படுகிறது...மாறுவேட முத்தனும் முத்தாயியும் வருகிறார்கள்.] பறையடிப்பவன் : இதனால் சகலமான பேர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால்,...வேங்கைநாட்டுப் படையிலே இருந்து முத்தன் என்பவன் தப்பி ஓடிவிட்டான்...அவன் அடையாளமாவது—அரும்பு மீசை—அழகான வாலிபன்—சிகப்பு நிறம்—வெண்கலக் குரல்—அவனைப் பிடித்துக் கொடுப்பவருக்கு சரியான வெகுமதி அளிக்கப்படும்!...இது வேங்கை நாட்டுத் தளபதி வேலழகர் உத்திரவு!...டம்!...டம்!... [முத்தனும் முத்தாயியும் வணிகர் வீட்டுப் பக்கம் வருகிறார்கள். வணிகர் குழந்தையுடன்] வணி : பாத்தியாடா கண்ணு! டம்...டமா...டமா...ஓடிப்போனவனே நீ புடிச்சு தாரியா?......[குழந்தை அழுகிறது.] ஏ!...அழக்கூடாது...அன்புக் காட்சி...அழகு மணி மாளிகையின் அலங்காரத் திரு உருவே...அழித் தெழுதா சித்திரமே...ஆடிவரும் பொன்விளக்கே...ஆராரோ... [முத்தன்-முத்தாயி வருவது தெரிகிறது.] தன : யார்? யார்...நீங்க? என்ன வேணும்? உங்களுக்கு ஒண்ணும் பிச்சைபோட என்னால் முடியாது...நான் கைக்குழந்தைக்காரன்... முத் : ஏதாவது வேலை தேடறதுக்காக... தன : அண்ணனும், தங்கச்சியும் பொறப்பட்டீங்களா?....... முத் : அப்போ!...நாங்க புருஷன் பெஞ்சாதி சாமி... தன : ஊகூம்...என்னு வேலை பாப்பீங்க?... முத்தாயி : இட்டவேலையைத் தட்டாமல் பார்ப்போம். அவருக்கு உடம்பு முடியாது...நான் மாத்திரம்... தன : சரி...இந்தக் குழந்தையை-வளர்க்க முடியுமா உன்னால்?... முத் : ஓ!... தன : அனுபவம் இருக்கா?... முத் : குழந்தைகூட என்கிட்ட தாவுதே...வாடா கண்ணு!...... தன : தாயார் இல்லாத குழந்தை—வாழைக்குல ைமாதிரி வந்து பொறந்திருக்குது...இத பாத்துக்கணும்...ஊதியம் கிடையாது...உங்க ரெண்டு பேருக்கும் சாப்பாடு தான்...இதோ ஓலைக்குடிசை...அதில்...குடியிருந்துக்கலாம்... முத் : சரி... தன : உன் பேரு என்னு?... முத் : என் பேரு பொன்னி...அவரு... முத்தன் : ம்...புருஷன் பேரு சொல்லாதே...பாவம்...என் பேரு பொன்னனுங்க, சாமியோய்!