களஞ்சியப் பகுதி 19

அஞ்சல் மனை

63 பகுதிகளில்·மூல எண்ணிடல் அல்ல

[முத்தன் பாடிக் கொண்டிருக்கும்போது அஞ்ச லோடி ஏதோ பைகளைக் தூக்கிக் கொண்டு வெளியே போகிறான் திரிசங்கு வருகிறான்.] திரிசங்கு: எங்கே முத்தன்? முத்தா! முத்தன்: ஆ! திரிசங்கு: பயப்படாதே முத்தா. முத்தன்: பயமென்ன! அரண்மனையிலே ஏதாவது புதிய ஆணை பிறந்திருக்கும். திரிசங்கு: அரண்மனைக்கும், நான் வந்ததற்கும் தொடர்பே இல்லை...முத்தா, இங்கு யாருமில்ல ைஅல்லவா? முத்தன்: இல்ல...என்ன விஷயம்? திரிசங்கு: உனக்கும், என் மகளுக்கும் உண்மை யான அன்பு இருப்பது எனக்குத் தெரியும். முத்தன்: இப்போதாவது தெரிந்ததே! திரிசங்கு: கேள் முத்தா! முத்தாயி உன்னைக் தவிர வேறு யாரையும் மணக்க முடியாது என்று கூறிவிட்டாள். நீ வீசிய வில்லில் வீழ்ந்து விட்டாள். முத்தன்: நான் வீசவும் இல்லை. அவள் விழவும் இல்லை...நாங்கள் இருவருமே காதல் வலையில் சிக்கி விட்ட புறாக்கள்! திரிசங்கு: அந்த வலையை அறுத்து என் மகளை விடுவிக்க வேண்டும். விடுவித்த பிறகும் அவளைத் துரத்தும் வல்லூறு நீ இருக்கக்கூடாது. முத்தன்: துரத்தவேண்டிய தூரத்தில் அவள் இருக்க மாட்டாள். முத்தாயி என் தோளிலே தொத்தும் கிளி! என்னடா இது, மருமகப் பிள்ளை இப்படி கூச்ச மின்றி பேசுகிறான் மாமனாரிடம் என்று எண்ணுகிறீர்களா? மன்னிக்கவும். திரிசங்கு: கேள் முத்தா; நீதான் என் மானத் தைக் காப்பாற்ற வேண்டும். என் மகள் எப்படி வாழ வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன் தெரியுமா? முத்தன்: உங்கள் எண்ணம் போலவே எங்கள் வாழ்க்கை நடக்கும்! திரிசங்கு: நடக்காது முத்தா. நடக்காது. வீணைக் கெடுக்காதே ஒரு குடும்பத்தை.. நீ வாழ வகையற்றவன், வாழ முடியாதவன். என்னை விட்டுத் தள்ளு...உன்னைப் போல ஒரு ஏழைக்குப் பெண் கொடுக்க எந்த பித்துப் பிடித்த தகப்பனாவது ஒப்புக் கொள்வானா? உன்னால் நடத்த முடியுமா ஒரு குடும்பத்தை? நீயும் மனிதனாயிற்றே; கல்யாணம் பண்ணிக்கொண்டு மாமனார் வீட்டை எதிர் பார்த்துக் கிடக்க உனக்கு மானமில்லாமலா போய் விட்டது! முத்தாயி சின்னப்பெண். உலகம் தெரியாதவள்...... காதல் பேசுகிறாள் இப்போது. கல்யாணமான பிறகு காதல் கீதம் எல்லாம் கதையைக் கட்டிவிடும். காதுக்கு வைரத் தோடு, கழுத்துக்கு முத்துமாலை—இப்படி மாறிவிடும் பெண்களுடைய புத்தி. முடியுமா உன்னால் அவைகளை வாங்கித்தர என்பெண்ணுக்கு. குடும்பம் இருக்கட்டும் திருமணத்திற்கு நிச்சயம் செய்ய ஒரு பொன் நாணயம் வைத்து புரோகிதருக்கு தட்சணை கொடுக்க வழியிருக் கிறதா உன்னிடம்? முத்தா! ஆத்திரமாய் பேசுகிறேன் என்று நினைக்காதே; இன்னொன்றையும் சொல்லிவிடுகிறேன். அஞ்சல் மனையிலே வேலை பார்த்தாய். அதுவும் போய் விட்டது... அஞ்சல் மனைக்கு குதிரை தேய்த்து, அதற்குக் கூலியாக இந்த உள்ளங்கை போன்ற அறையிலே வசிக் கின்றாய். அந்த வேலையும் நீ பார்க்க முடியாது இனிமேல்; அரண்மனை உத்தரவு தடுக்கிறது. இனி வீட்டு நிழல்கள்; மாட்டின் நிழல்கள் இவைதான் உனக்கு வாசஸ்தலம்! முத்தா! உன் வறுமையைப் பரிசீக்கிறேன் என்று கவலைப் படாதே, கவலையோடு கவலையாக இன்னும் ஒன்றைச் சொல்லிவிடுகிறேன். நீ உணர்ந்து பார்ப்பதற்காக. உனக்கு வயதாகி இருந்து; உலகத்தோடு ஒட்டி ஒழுகும் பழக்க மிருந்து; உனக்கும் ஒரு மகள் இருப்பதாக வைத்துக்கொள் அந்தமகளை தகப்பன் பெயர் தெரியாத ஒரு மணமகனுக்கு மணம் செய்து கொடுப்பாயா? நீ செய்வாயோ என்னமோ. என்னால் முடியுமா? என் வைதீக மனம் இடம் கொடுக் குமா? யோசித்துப்பார்! உன் அம்மா காவேரி என்று தெரியுமே தவிர, அவள் உன்னை யாருக்குப் பெற்றாள் என்பது...... முத்தன்: போதும்! போதுமய்யா போதும்! திரிசங்கு: காதைப் பொத்திக் கொண்டு பயனில்லை. கண்ணை அகலமாகத் திறந்தும் பயனில்லை. கருத்துக் கத வைத் திற... கொஞ்சமாகத் திற, போதும். சீரும், சிறப்பும் சிங்கார மாளிகையும் அழைக்கிறது என் மகளே. நீ அதை மறக்கிறாயா? மறக்கிறாயா முத்தா? நீ மறுத்தால், அது அவள் மேல் உனக்குள்ள காதலுக்கு அடையாளமல்ல அவளை சீரழிக்க வேண்டும் என்ற உன் கொடிய எண்ணத் துக்குத்தான் அடையாளம். முத்தா! உன்னைக் கெஞ்சிக் கேட்கிறேன். உன் காலில் வேண்டுமானாலும் விழுகிறேன். அவளை மறந்து விடு...அவளை மறந்து விடு. முத்தன்: [அழுதபடி] ஆ! அய்யோ! மறக்கமுடியாத மாணிக்கம், இழக்க முடியாத செல்வம்....அதையா மறந்து விடுவது? திரிசங்கு: நீ மறக்கா விட்டால் முத்தாயி தன் தகப்பனை மறந்துவிட வேண்டும். அப்படி மறந்து விட்டால் மரக்கிளையிலே அனாதையாக அந்தரத்திலே தொங்கும் இந்த திரிசங்குவின் பிணம் உன்னை சபிக்கும்...பிணம் உன்னை சபிக்கும்! முத்தன்: அய்யா! என் உயிரை மறக்கச் சொல்கிறீர். மறந்து விடுகிறேன். திரிசங்கு: முத்தா! முத்தன்: போய் வாருங்கள். [திரிசங்கு பூரிப்புடன் அதை விட்டுப் போகிறான். முத்தன் குழப்ப மடைகிறான்.]