களஞ்சியப் பகுதி 18
மடாலயம்
63 பகுதிகளில்·மூல எண்ணிடல் அல்ல
[ஊர் மக்கள் கூடியிருக்கிறார்கள். தனபதி, வேலழகர், மருத்துவர் பூபதி, வேதாளம் மற்றும் பலர் இருக்கிறார்கள். மாய்க்கை நாத சுவாமிகளின் சொற்பொழிவு நடை பெறுகிறது.] மாய்க்கை நாதர்: அன்பர்களே! இதுவரை தனபதி வேலழகர் படையின் பயன்கள் பற்றி அறியதோர் உரை நிகழ்த்தினார். நானும் அதைத்தான் சொல்லப்போகிறேன். பகவான் பரந்தாமனே பார்த்திபனை பாரதப் போரில் கலந்து கொள்ளச் சொல்லியிருக்கிறார். போர்கூடாது, அது ஒரு வெறிநெறெல்லாம் போதனை செய்கிறார்களே இன்று, அவர்கள் பகவத் கீதையைப் படிக்கட்டும். போரின் அவ சியம் பற்றி அந்தப் புல்லாங்குழலூதி எவ்வளவு கூறியிருக் கிறார் என்பது புலனாகும். சிவன் கை சூலமும், சிவ குமார னின் வேலும், விஷ்ணுவின் சக்கரமும் எதைக் குறிக் கின்றன? சமாதானத்தையா? சமரையா? ஆகவே, அன்பர் களே! எல்லோரும் போர் வீரர்களாக மாறுங்கள்...சாவுக் குப் பயப்படாதீர்கள். வாள் பிடிப்பதால் மட்டுமல்ல; வாழைப் பழத்தோல் சறுக்கி விழுந்து வாழ்வு முடிந்தோர் பலருண்டு; வீரனுக்கு மண்ணில் மட்டுமல்ல விண்ணிலும் புகழ்தான். வளாந்து போன தோள்களிலே வாகைமாலை ஏந்துங்கள். அதற்காகக் கைகளில் வாளேந்துங்கள். தெய் வமே துணையென திண் தோள் தட்டிக் கிளம்புங்கள்... அம்மையப்பா! அறநெறி வாழ்க!... மக்கள்: அம்மையப்பா! அம்மையப்பா! [கூட்டத்தினர் கலைந்து போகிறார்கள். தனபதியும், சாமியாரும் தனியிடத்தில் சந்திக்கிறார்கள்] தனபதி: மிகவும் நன்றி செலுத்துகிறேன். மாய்க்கை: கடமையைச் செய்தேன். தனபதி: தங்களைப் போன்ற மடாதிபர்கள் நாட்டுத் தொண்டு செய்யக் கிளம்பி விட்டால் இரண்டு உலகு வெளிச்ச மடைந்துவிடும். பின்னர் சந்திக்கிறேன். வரு கிறேன். மாய்க்கை: அம்மையப்பா! அருள் நெறிவாழ்க. [மாய்க்கை நாதர் தன் பீடத்தருகே வருகிறார். மருத்துவர் பூபதி மட்டும் அங்கேயே அமர்ந் திருக்கிறார். அவரைக் கண்ட மாய்க்கை நாதர் திடுக்கிட்டு] மாய்க்கை நாதர்: என்ன பூபதி! நீ இன்னும் போக வில்லையா? பூபதி: என்னையே நான் மறந்து விட்டேன், சாமி யாரே! உமது சொற்பொழிவில் உள்ளத்தையே தொலைத்து விட்டேன். ஹி...ஹி...ஹி...வாளையும், வேலையும் தொடாதே—வைகுந்தவாசனை தொழு...கையிலே கேட யம் ஏந்தாதே—கைலாச நாதனின் திருநீறு ஏந்து...அது எங்கே இப்போது? வளைந்து போன தோள்களிலே வாகை மாலை ஏந்துங்கள்...அதற்காகக் கைகளிலே வேலேந்துங் கள்...இது எங்கே? எல்லாம் மாயை...மாயாஜாலம்...இல் லையா சாமியாரே? மாய்க்கை நாதர்: பூபதி! போதும், போய்வாரும். பூபதி: புகழ்கிறேன் சாமியாரே, புகழ்கிறேன்! ஆகாகா! ஆண்டவனே! உன்னை எது எதற்கெல்லாந்தான் பயன்படுத்துகிறார்கள். உலகத்திலே தோன்றும் மாகான் கள் எல்லாம், உன் அவதார மென்கிறார்கள். பரமாத்மாவாக அவதரித்து அர்ச்சுனனை போர் புரியச் சொன்னாயாம். பிறகு பகவான் புத்தராகவும் நீயே அவதரித்து போர் புரிவது தீது என்று அசோகனுக்கு நல்வழி காட்டினாயாம். உன்னையே இப்படி முரண்படுத்தி இருக்கும்போது இந்தச் சாமியார் எம்மாத்திரம்? மாய்க்கை நாதர்: பூபதி! சாது மிரண்டால் காடு கொள்ளாது பூபதி! பூபதி: மிரள்வது சாது அல்ல...சூது, வாது, தீது இவைகள் தான் மிரள்கின்றன. மாய்க்கை நாதர்: நமக்குள் என்னப்பா வம்பு.... பூபதி: நமக்குள் என்ன, அந்த ரகசியத்தைச் சொல்லி விடுமே. மாய்க்கை நாதர்: பூபதி: உம்மைக் கும்பிடுகிறேன். போய்விடும். அந்த ரகசியத்தை மட்டும் கேட்காதீர்! பூபதி: சாமியாரே! போகிறேன். சாமியாரே! ஒன்றுமட்டும் நினைவிருக்கட்டும். பொய் கொஞ்சம் கொஞ்சமாகப் போதாகி மலரும்...ஆனால் உண்மை திடீரென்று வெடித்துவிடும்...ஹா...ஹா...ஹா...வருகிறேன். [பூபதி போகிறார். சாமியார் பெருமூச்சு விட்டு பீடத்தில் உட்காரப் போகிறார்.]