களஞ்சியப் பகுதி 8
திரிசங்கு வீட்டின் கொல்லைப்புறம்.
63 பகுதிகளில்·மூல எண்ணிடல் அல்ல
★ [முத்தாயி தண்ணீர் குடத்துடன் வருகிறாள். திரி : முத்தாயி!...முத்தாயி! முத் : என்னப்பா?...... திரி : ஏங்கம்மா போயிட்டே? உன்னை நான் எங்கெல்லாம் தேடறது...யாரு வந்திருக்கான்னு பாரு ... தம்பி வாங்க. சீ...சீ...உன்னையாரு கூப்பிட்டது...? (ஆடுவருகிறது; அதைத்தொடர்ந்து சுகதேவ் வருகிறான்.) நீங்க வாங்க தம்பி!...வெட்கப் படாதேம்மா...யாருமில்லை...இளவரசர் சுகதேவ் இவர்தான். முத் : வணக்கம் !... சுக : வாழ்க!... வாழ்க!... ஆஹா!... கைகள் குவிவதும் விரிவதும் கமல மலர்போல் காட்சியளிக்கிறது. திரிசங்கு; நீ சொன்னது அவ்வளவும் உண்மைதான் ... ஐயோ பாவம்! வெட்கத்தால் கண்ணங்கள் சிவந்தே விட்டன, மிளகாய் பழம்போல்— [முத்தாயி உள்ளே போய்விடுகிறாள்] திரி : பார்த்த உடனேயே இப்படி பரிகாசம் செய்யலாமா தம்பி நீங்கள். சுக : ஆங்...என்ன சொன்னேன்?...எனக்குத் தெரியாமலே ஏதாவது சொல்லிவிட்டேனா என்ன? ...ம்... திரிசங்கு உன்னை ஒன்று கேட்கிறேன்...மறுக்க மாட்டாயே... திரி : நீங்கள் பாளையக்காரர் பலதேவரின் மகன் ... இளவரசர்...நான் கேவலம் உங்கள் வேலைக்காரன். கேட்காமலேயே எடுத்துப் போகும் உரிமை இருக்கிறது உங்களுக்கு .... சுக : ஆஹாஹா ... த்சு...த்சு...கண்கள் சுழலுகின்றன...காது கேட்க மறுக்கிறது ... நா அசைய மாட்டேன் என்கிறது...அய்யய்யோ! இருதயம் ஓடவே இல்லை...... திரி : தம்பி!... தம்பி!... என்ன இது ... நான்போய் வைத்தியரை அழைத்து வாட்டுமா ....? சுக : வேண்டாம் வேண்டாம், இது வைத்தியமில்லாத வியாதி...கண்ணொடு கண்ணோக் கொக்கின் ... அதா வது காதல் எனும் கள்ளமொந்தையில் ஒரு ஈ போல வீழ்ந்து விட்டேன்! திரி : தம்பி!...இன்றுபோய் நாளை வாருங்கள்; காரியம் வெற்றி...... சுக : “இன்றுபோய் நாளைவா” ... அடடே! இந்த வார்த்தையை எங்கேயோ கேட்டமாதிரி இருக்கிறதே ... உம்...ஆமாம், கம்பராமாயணத்தில் ... இராமன் இராவணனை அப்படித்தான் வாய்சொல்லுகிறான் ... அய்யோ! மறுநாள் வந்த இராவணனுக்கு வெற்றி கிடைக்கவில்லையே; மரணமல்லவா கிடைக்கிறது...... திரி : மறுநாள் வந்த ராமனுக்கு வெற்றிதானே... தம்பி... சுக : ஓ!...அப்படியானால் இந்த ராமன் கட்டாயம் நாளை வருவான்... திரி : கட்டாயம் வாருங்கள்... சுக : வாராமல் இருப்பேனோ?—திருசங்கு வீடு ஒரு தாமரைத் தடாகம்; அங்கு பறந்து வரும் வண்டு இந்த சுகதேவ்...வருகிறேன். திருசங்கு... திரி : சரி தம்பி!... (போகிறான். திருசங்கு கோபமாக) திரி : முத்தாயி!...முத்தாயி!... முத் : என்னப்பா! போய்விட்டாரா அந்த மனிதர்?... திரி : மனிதரா?... முத் : இல்லை...இல்லை...மன்னிக்கவும்; தவறிச் சொல்லி விட்டேன்... திரி : மன்னிப்பதா...இளவரசரே வீட்டுக்கு வந்திருக்கிறார்...இப்படித்தான் அவமானப் படுத்துவதா?... முத் : இளவரசர்...ம்...மோசமான வாலிபன்... திரி : யார் மோசம்? அவனுக்கென்ன அழகிலே குறைவா?...அந்தஸ்திலே குறைவா?...அசட்டுப் பெண்ணே—அவனுடைய அறிவை நீ உணரமாட்டாய்.. முத் : உணர முடியாத அளவுக்கு இந்த உத்தமரின் அறிவு ஊசி முனையைவிடச் சிறியது போலும்! இல்லையா அப்பா?... திரி : போதும் நிறுத்து-அவன் நினைத்தால் ஊர்வசி ரம்பையெல்லாம் ஓடிவருவார்கள்... முத்தாயி : இதிலென்னப்பா ஆச்சரியம்? ஆஸ்தானத்து முனிவர்களிடமே ஓடிவந்தவர்கள் அரண்மனைக்காரர்கள் அழைத்தால் அட்டியா சொல்லப் போகிறார்கள்! வருவார்கள் அப்பா வருவார்கள்— திரிசங்கு : வாயைமூடு வாயாடி! நான் கெஞ்சிக் கூத்தாடி அவனை வீட்டுக்கு அழைத்து வந்தேன்; நீ அவர் முகத்தில் கரி பூசி அனுப்பிவிட்டாய். முத்தாயி : இல்லையே—அதற்குள்ளதான் போய் விட்டாரே—அப்பா! அப்பா! அவர் முகத்தில் கரி பூசினால் இன்னும் அழகாக இருப்பார் கார்மேக வண்ணன் போல. திருசங்கு : ஜாக்கிரதை—காதில் விழுந்தால் கண்ணைப் பிடுங்கி விடுவார். முத்தாயி : கண்ணப்ப நாயனாரோ? திருசங்கு : சீ! பேச்சுக்குப் பேச்சு பதில் பேசிக் கொண்டு. [முத்தாயி சிரித்தபடி உள்ளே ஓடி விடுதல்]