பகுதி 96 / 102
ஒருதலைக் காதல் — 5
அச்சுப் பக்கம் 439–443 · ஸ்கேன் 451–455 · முழுப்பக்க ஓவியம்: ஸ்கேன் 453
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக; ஒவ்வொரு அச்சு வரியும் தனி வரியாக.
ஒருதலைக் காதல்
5
“நானும் சிலநாளாய்ப் பார்க்கின்றேன் உன்னை!
‘தேனும் கசந்ததடி’ எனும் நிலையில் இருக்கின்றாய் பெண்ணே!
பருவத்தின் கோளாறெனக் கண்டும் காணாதிருந்தால் ஒரு
துருவத்தில் நின்று நீ, மறுதுருவத்தைத் தொடுகின்ற முயற்சியிலே
இளங்கன்று பயமறியாதென்பது போல் ஈடுபடல் தீதாகும்
- அதனை,
இப்போதே தடுத்துவிடல் ஒரு தாயின் கடமையாகும்!
உச்சிமலை மீதுள்ள குறிஞ்சி மலர் பறிப்பதற்கு
ஊனமுற்றுக் கால்நொண்டும் பெண்ணொருத்தி முனையலாமா?
உருள்பெருந்தேரின் கலசத்தில் ஒளிர்கின்ற கொடி அசைய,
உறையூரின் சோழமகன் போர்முனைக்குச் செல்லும்போது; நீ
ஓடிச்சென்று வழிமறித்து உரையாடல் நிகழ்த்தியதை
ஊர்கண்டால் என்ன சொல்லும்?
பேர்கொண்ட பெருவணிகன் குடும்பத்துக்கோர் இழுக்குவரின்
நேர் நின்று உற்றார் முன் பேசுதற்கு உன் தந்தை
நாணவேண்டும்!
வாணிபக் குடியினர் நாம் - அவனோ வையம் ஆளப் பிறந்த
குலம்!
ஏணிகள் அடுக்கடுக்காய் வைத்தாலும் எட்டாத காதலுக்கு,
ஏங்கித் தவிக்காதே, ஏந்திழையே! என் மகளே!
வீங்கிக் கிடக்குது உன் விழியிரண்டும் விரால் மீனாய்!
தூங்கித் தொலைத்திடுக; முன்போல சேல்கெண்டை ஆகிவிடும்!”
ஆத்திரத்தைக் காட்டியும் அரவணைப்பைக் கொட்டியும்
அறிவுரை புகன்ற அன்னை, அவளை விட்டகன்றபின்னே
“அவளை மறப் பதெனில் என் ஆவியைத் துறக்க வேண்டும்”
என்றலறி,
அணைத்துக் கொண்டாள் நற்கண்ணை; பொற்கொடியை!
“மறப்பதா? ஆவிதுறப்பதா? என்பதை நாம்
மறுபடி யோசிக்கலாம்; முதலில்
அல்லதை விடுத்து நல்லதையே சிந்திப்போம்!
புல்லர்தம் படையுடன் பொருதிடும் கிள்ளியைப்
பொழுதெல்லாம் நீ எண்ணியெண்ணி - கன்னத்தில்
உழுதிடும் அளவுக்குப் பெருக்குகின்றாய் கண்ணீர்!
தடுக்கின்றோள் அன்னையென்று துடிக்கின்றாய்,
ஒடிக்கின்றாள் உன் மனத்தையென்று நினைக்காதே!
ஓடுகின்ற கோயில் தேர்களுக்குப்
போடுகின்ற முட்டுக்கட்டையெல்லாம் - தேரை
ஓடாமல் செய்வதற்கா? இல்லை, இல்லை! தெருவில்
ஒழுங்காகச் செல்வதற்கே!
பாய்ந்தோடும் குதிரையின் கடிவாளம் இழுத்தலும் தளர்த்தலும்,
பயணம் சரியாய் நடந்திட வேண்டுமென்பதற்கல்லால்,
ஓய்ந்து ஓரிடம் வீழ்ந்து கிடப்பதற்கோ?
ஆய்ந்துபார் ஆரணங்கே!
காய்ந்து சினந்து கடிந்துகொண்டாலும் அன்னை,
தேய்ந்திடுநிலவாய் நின்காதல் ஆகாதிருக்கவே எச்சரிக்கின்றாள்
உன்னை!
வளர்பிறையாய் உம் காதல் வளர்ந்து
குளிர்நிலவாய் அமுதமழை பொழிந்தால்
குலமகளே! உமை வாழ்த்தாமல்
உன் தாயின் மனமென்ன;
நிலமகழ்ந்து எடுத்திட்ட
இரும்பாகப் போமோ?
கருவுற்ற காலத்தில் அவள் நாவினைக்
கசப்பாக்கித் தொல்லை தந்தபோது
திருவுற்ற அந்தத் தாய்
புளிப்பாலே கசப்பு போக்கி - உன்
புன்னகை காணத் தவமிருந்தாள்!
ஆலின் இலைபோன்ற அவள் அழகு வயிற்றை - ஒரு
சாலின் வடிவாக்கி நீ அலங்கோலம் தந்தபோதும்,
உன் கோலம் காண்பதற்கே - அவள்
உயிர் வாழ்ந்து கொண்டிருந்தாள்!
மணிவயிற்றுக்குள்ளிருந்து நீ
மாறி மாறி உதைத்தபோதும்,
[Full-page illustration; no printed body text.]
வலிபொறுத்துக் கொண்டபடி
அணியென்ன பூட்டலாம் அந்தக் காலுக்கென்று
ஆயிரம் சிந்தனை செய்திருந்தாள்!
ஊதையில் துரும்பெனத் தாயுடல் அலைக்கழித்து
உலகில் நீ பிறந்துருண்டு அழுதபோது - இன்ப
போதையில் துன்பமெலாம் மறந்திருந்தாள்! இன்றவள், உன்
பாதையில் பாடம் சொல்லல் ஒரு பாபமா?
பூவைத்துப் பொட்டிட்டு முத்தமாரி பெய்தபோது - நீ,
பூவையாய் ஆவது எப்போதென்று ஆண்டெண்ணிக் கிடந்த
அன்னை;
கோவையாய்ச் சிவந்த உன் இதழைக் கிளியொன்று
கொத்துமென்று தெரியாத பேதையா என்ன?
ஆற்றில் இறங்கிக் குளிக்கத் தடைகூறவில்லை அன்னை!
ஆழம் தெரிந்து இறங்கென்று கூறுகின்றாள் அவ்வளவே!
அதற்குள் நீ அவன் வருமட்டும் வழிபார்த்துக் காத்திருந்து
அல்லும் பகலும் உறக்கமின்றி வாடிவதங்கி,
உடலைக் கெடுத்துக் கொள்கின்றேன் என்றால்;
உனை உயிராக நினைக்கின்ற பெற்றோர்கள் ஒப்புவரோ?
உன் தோழி கெஞ்சுகின்றேன்; உடனே கேள்!
உறங்கி எழு! உற்சாகமாய் இரு!
உறையூர் எங்கும் ஓடிவிடாது - உன்
அறையூரில் அடங்கத்தான் போகிறது!” என்றுரைத்துச்
சிரித்தாள் தோழி!
“உறங்காமல் இருக்கவில்லை நான்!
உறங்கித்தான் விழித்துக் கொண்டேன் - சற்று
சிணுங்காமல் கேள் என் கதையை!
கண்மூடித் துயில் கொள்ளும் நேரம்,
கனவில் என்னை நெருடுவதும் அவன் நினைவே!
* “ஊர்நடுவே உயர்ந்து நிற்கும் மாமரத்தில்
முட்களைப் போல் பற்கள் கொண்ட வௌவால்
ஊஞ்சலாடி ஒரு கிளையில் தலைகீழாய்த் தூங்கி
அழிசியெனும் ஆர்க்காட்டுச் சோழவேந்தனது
அடர்த்திமிகு காட்டகத்து நெல்லிக்கனியின்
இளம்புளிப்புச் சுவையை நுகர்வதாக,
இனிய கனவொன்று கண்டது போல்;
கன்னியென்னையும் கனவொன்று மெய்மறக்கச்
செய்ததடி!
காலமெல்லாம் அக்கனவில் திளைத்திருந்தால்
காதலரிருவர் கட்டுண்டு மகிழ்ந்திருப்போம்!
கண்கள் செய்த தவறாலே விழித்துக் கொண்டேன்;
கலைந்ததடி இன்பமெலாம் கதிர்பட்ட பனிபோலே!”
இவ்வாறு,
பொற்கொடிக்குத் தான் கண்ட கனவை
நற்கண்ணை எடுத்துரைத்துத் துவண்டபோது,
போர்முரசின் வெற்றிஒலி - விண்ணைப்
பொடிசெய்யும் விதத்தினிலே எழுந்ததுகாண்
“வெற்றி யாருக்கு? யாருக்கு?” என்று நற்கண்ணை
வீதிக்குப் பறந்து வந்தாள்!
* “உள்ஊர் மாஅத்த முள்எயிற்று வாவல்
ஓங்கல் அம்சினைத் தூங்குதுயில் பொழுதின்
வெல்போர்ச் சோழர் அழிசிஅம் பெருங்காட்டு
நெல்லிஅம் புளிச்சுவைக் கனவி யாஅங்கு
அதுகழிந்தன்றே தோழி ......”
மூல மேற்கோள்(நற்றிணை : பாடல் : 87
பாடியவர் : நற்கண்ணையார்)
பொருள் விளக்கம் :
முள்எயிற்றுவாவல் = முள்போன்ற பற்களையுடைய வௌவால்.
மாஅத்த ஓங்கல் அம்சினை = மாமரத்தின் உயர்ந்த அழகிய
கிளை. தூங்குதுயில் = தொங்கிக் கொண்டு உறங்குதல்.
கலைஞர் மு. கருணாநிதி · சங்கத் தமிழ். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்