பொருளடக்கம்

சங்கத் தமிழ்

பகுதி 93 / 102

ஒருதலைக் காதல் — 2

அச்சுப் பக்கம் 420–425 · ஸ்கேன் 432437 · முழுப்பக்க ஓவியம்: ஸ்கேன் 433

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக; ஒவ்வொரு அச்சு வரியும் தனி வரியாக.

ஒருதலைக் காதல்

2

பெருங்கோழிநாய்கன் எனும் பெருவணிகன்
பெற்றெடுத்த தமிழ்க் கொடிதான் நற்கண்ணை
வான் பொய்ப்பினும் தான் பொய்யாக் காவிரி
புனல் பரந்து பொன் கொழிக்கும் சோழ நாட்டார்,
கடல் கடந்தும் வாணிபம் பெருக்கியதால்
காவிரிப்பூம்பட்டினத்துத் துறைமுகத்தில்
நீரின் வந்த நெடுவேக குதிரைகளும்,
காலின் வந்த கருமிளகு மூட்டைகளும்,
வடமலையில் பிறந்திட்ட மணிக்குலமும் மின்னும் பொன்னும்,
குடமலையில் பிறந்திட்ட நறுமணச் சந்தனமும் அரும்புகை
அகிலும்,
தென்கடல் முத்தும், குணகடல் பவளமும்,
கங்கையின் விளைவும், காவிரியின் பயனும்,
ஈழநாட்டு உணவும், கடாரத்துப் பொருளும்,
இன்னபிறவும் இறக்குமதி, ஏற்றுமதியெனக் குவிந்து
தென்னகச் சீர்மை உயர்த்துதல் கண்டு,
கடியலூர் உருத்திரங்கண்ணனார் எனும் புலவர்
கரிகால் சோழனின் காலத்து வளமையெலாம்
“பட்டினப்பாலை” யாம் பழந்தமிழ்ச் சுவடியில்
பதியவைத்துப் பாரோர் போற்ற வைத்தார்! - அந்தப்
பெருமைசேர் வணிகர் வழிவழி வந்தவனாய்
பெருங்கோழிநாய்கன் ஆமூரில் விளங்கினான், அன்று!

வணிகர் திலகம் வார்த்தெடுத்த வைரச்சிலை,
வடிவழகி நற்கண்ணை கிளிமழலைப் பேச்சுக்காரி!
ஒளியுமிழும் கண்களுக்கு உலகமே அடிமையாகும்!
களிநடன மயிலசைவு; இடையில், நடையில்!
அழகிருக்குமிடத்தில் அறிவொளியும் இணைந்துவிட்டால்
அருவியிலாயிரம் தேன்குடம் உடைந்து கலந்ததுபோல்;
அமிழ்தம்! அமிழ்தம்! அமிழ்தமன்றோ? - அவ்வாறே
கமழ்ந்தாள் நற்கண்ணை; தமிழ் அமிழ்தக் கவியாக!

ஏடெடுத்து மலர்க்கரத்தில் எழுத்தாணி பிடித்து
மாடெதிர்த்துக் கொம்புதனை முறித்தது போல்

முழுப்பக்க ஓவியம் — அச்சிட்ட உரை இல்லை

[Full-page illustration; no printed body text.]

ஆமூர் மல்லனையே வெற்றிகண்டு வீழ்த்திவிட்ட
ஆணழகன் நற்கிள்ளி வீரத்தைப் பாட்டாக எழுதி வைத்தாள்.

எழுதியதை,
எடுத்தெடுத்துப் படித்துப் பார்த்தாள்
ஏனோ; அவளே நாணமுற்றுப் பின்னர்
எடுக்காமல் படுத்துப் பார்த்தாள் - தூக்கம்
பிடிக்காமல் எழுந்தமர்ந்து; எழுதியதை மீண்டும் மார்பகத்தில்
அணைத்துப் பார்த்தாள்!

“கடிக்காமல் இனிக்கின்ற கரும்பும் உண்டோ? - ஆனால்
காணாமல் சுவைக்கின்ற காதல் உண்டே! அதற்குத்
தேடாமல் கிடைக்கின்ற சான்றாக நானே இன்று
மூடாத விழிகளுடன் புரள்கின்றேன்” என்று
தன்னைத்தானே நொந்துகொண்டு
தளிர்க்கொடியாள் தவித்தபோது;
“பொன்னைத்தான் தொலைத்துவிட்ட
வறியோன் போலத் துடிப்பது ஏன்?
உன்னைத்தான் கேட்கின்றேன் தோகையே” என்று
உயிர்த்தோழி பொற்கொடி அருகில் வந்தாள்.

“துடிப்பது ஏனென்று புரியவில்லையா? நான்
படிப்பதைக் கேள்” என்று எழுதிய ஏடெடுத்தாள்.
எழுத்துக்கள் ஒவ்வொன்றையும் இருவிழியால் முத்தமிட்டு
இதயத்தின் எதிரொலியைத் தோழிக்கு விளக்கிச் சொன்னாள்.

“என்னைக்கு ஊர் இஃது அன்மையானும்,
என்னைக்கு நாடு இஃது அன்மையானும்,
ஆடு ஆடு என்ப ஒருசாரோரே;
ஆடன்று என்ப ஒரு சாரோரே;
நல்ல, பல்லோர் இருநன் மொழியே;
அஞ்சிலம்பு ஒலிப்ப ஓடி, எம் இல்,
முழா அரைப் போந்தை பொருந்தி நின்று,
யான் கண்டனன் அவன் ஆடாகுதலே”

மூல மேற்கோள்(புறநானூறு : பாடல் : 85
பாடியவர் : நற்கண்ணையார்
பாடப்பட்டோன் : சோழன் போரவைக்கோ பெருநற்கிள்ளி)

“சுடுங்காதல் நெருப்பாலே சுவைப்பண்டம் சமைத்து

கடுந்தமிழ்ச் சொல்லாலே இப்பாடல் இயற்றியுள்ளேன்.
இனியவளே! என் தோழி பொற்கொடியே!
இதன் கருத்தை எளிய நடையில் கூறுகின்றேன், கேள்!

உளங்கவர்ந்த என்னுயிர்த் தலைவனுக்கு
ஊரும் இதுவல்ல; நாடும் இதுவல்ல - அதனாலே
ஒரு சாரார் அவன் தோளில் வெற்றிக்கிளி தொத்துமென்றும்,
மறுசாரார் மல்லனுக்கே வெற்றி - இந்த மறவனுக்கு
இல்லையென்றும்,
இரு கருத்தை உதிர்த்தார் எனினும்
இருவருமே இவனைத்தான் நினைத்திருந்தார்
என்பதிலே என் மனதுக்கோர் மகிழ்ச்சி தோன்றி
அன்பனது வெற்றி உறுதி உறுதியென்று
சிலம்பொலிக்க ஓடிச்சென்ற நான் உளம்
சிலிர்க்கப் போர் முடிவை எதிர்நோக்கி - என்
மனையின்கண் வளர்ந்துயர்ந்த
பனைமரத்தின் மறைவில் நின்று
நினைவனைத்தும் அவன்மீது பாயவிட்டு,
எனைக்கவர்ந்தோன் இறுதியிலே வென்றுவிட்ட காட்சி
கண்டேன்.”

இப்படிப்
பாட்டும், பாட்டுக்குப் பொருளுமுரைத்து
வாட்டும் காதல் நிறைவேற வழியொன்று சொல்லென்று
வரம் கேட்டுத் தோழியிடம் தவமிருந்த நற்கண்ணைக்
கரம் பிடித்துத் தோழி சொன்னாள்;

“செந்தாமரை மலரே! நீ தேடும் செங்கதிரோன்;
செக்கர்வானத்தில் நெடுந்தொலைவில் இருப்பதாக எண்ணிடாதே!
முந்தாநாள் முரட்டு மல்லனை வீழ்த்திய மழவன்
முதுபுலவர் சாத்தந்தைப் பெருமானுடன் - இங்கிருந்து
மூன்று வீடு தள்ளித்தான் இருக்கின்றான்.
வந்தால் நீ என்னோடு; காட்டுகின்றேன்” என்றாள்.

“தடாகம் நோக்கி வானம் தானாக வந்துவிட்டால்
தாமரைக்குச் சூரியன் கைக்கெட்டும் தொலைவுதான் - எனினும்,
அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு எனும் பெண்ணியல்பு
எச்சரிக்கை செய்து என் கையைத் தடுக்குதடி!
வலுவில் சென்று நான்; அவன்
வலையில் விழுந்த கதை உளறிவிட்டால்

வாய்விட்டுச் சிரித்து அவன்
வந்தவழிபோ என்று உரைப்பானேல்,
காய்க்காமல் கனியாமல் என் காதற்பூ;
காலை அரும்பி அப்போதே காய்ந்த மலர் ஆகாதோ?
கதிரை, நிலவைக் கண்டதுண்டு என் கண்கள்
கடலை, வானை, மலையை, முகிலை,
மயிலை, புறாவை, கிளியை, குயிலை,
சிங்கம், புலியை, சிறுத்தையை, மானை,
இயற்கையின் எழிலை, இன்பப் பொழிலை,
செயற்கைச் சிலையை, சிறப்புறுகலையை
கண்டன எனினும் என் கண்கள்
கணத்தில் மீண்டு முகத்தில் அமைந்தன!
இன்றென் நிலைமை என்ன தெரியுமா? - அந்த
இனியனைக் கண்ட கண்கள் இன்னும்
என்னிடம் வந்து சேரவே இல்லை!
உன்னிடம் சொன்னேன் இந்த உண்மையினை”

என்றுரைத்த,
நற்கண்ணைக்கு வந்துள்ள நோயை எந்த
நாட்டு மருத்துவரும் போக்க முடியாதென்று
பொற்கொடியாம் அவள் தோழி - இச்செய்தியினைப்
போட்டுடைக்க நினைத்தாள் பெருங்கோழிநாய்கனிடம்!

அப்போது,
“மகளே; நற்கண்ணை!” என்றழைத்தவாறு
மாநாய்கன் மனை புகுந்தான்!
“மகிழ்வு தரும் தகவல் ஒன்று கேளம்மா!
மல்லனை வென்றிட்ட பெருநற்கிள்ளியினை,
நாளை பகல் விருந்துக்கு வருகவென்று
நம் வீட்டுக்கு அழைத்துள்ளேன்!
சாத்தந்தைப் புலவரது சம்மதம் பெற்று, அவனும்
சரியென்று ஒப்புக் கொண்டான்” என்றுரைத்தார்.

மணிமலர்ப்பாத சின்னவிரல் சிலிர்க்கத் தொடங்கி
மாங்கனிகள் இரண்டும் மென்மேலும் புடைத்தெழுந்து
மங்கைநல்லாள் மேனியெலாம் புல்லரித்து
மருதாணிச் சிவப்பாகக் கன்னங்கள் மாறித் தோன்ற
மான்குட்டி தோற்கின்ற துள்ளலுடன் நற்கண்ணை;
மயக்கம் வராமலே தோழியின் மடியில் சாய்ந்தாள்!

பொருள் விளக்கம் :

என்னைக்கு = என் தலைவருக்கு.
அன்மையானும் = இல்லாவிடினும். ஆடு = வெற்றி.
போந்தை = பனைமரம். குடமலை = மேற்குமலை.
குணகடல் = கீழ்த்திசைக்கடல்.

கலைஞர் மு. கருணாநிதி · சங்கத் தமிழ். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்