பொருளடக்கம்

சங்கத் தமிழ்

பகுதி 35 / 102

ஆட்சியும் மாட்சியும்!

அச்சுப் பக்கம் 180–184 · ஸ்கேன் 193197 · முழுப்பக்க ஓவியம்: ஸ்கேன் 194

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக; ஒவ்வொரு அச்சு வரியும் தனி வரியாக.

ஆட்சியும்

மாட்சியும்!

நெடுங்கிள்ளி யென்கின்ற உறையூர்ச் சோழன் - தன்
பெரும்படைக்குக் களத்தீனி வேண்டுமென்று கூறி,
பூம்புகார்ச் சோழன் நலங்கிள்ளிதனை எதிர்த்துப்
போர்முரசு கொட்டுக என்றான்; புலியெனச் சீறி!

"இருக்கின்ற ஆட்சிஎல்லை போதாதென்று;
தருக்கு மிகக் கொண்டு படையெடுத்து வந்து
இருமருங்கும் தமிழர்களின் இரத்தம் கொட்ட
எதற்காக இப்படியோர் நாடு பிடிக்கும் ஆசை?
என்னிடமே நேரில் வந்து, தலைவணங்கித் தாழ்ந்து
இந்நாட்டைப் பரிசிலாக வேண்டிநின்றால்
இன்னுயிரும் கொடுப்பேனே எடுத்துக்கொள் என்று!
எளிதாக உள்ள இந்த வழிதனையே விடுத்து
எலியாக முயலாக எமையெண்ணி இகழ்ந்து
எதிர்நின்று போர்புரிய என்ன நெஞ்சழுத்தம்?
நெடுங்கிள்ளி உணர்வதற்கு ஒன்றுரைப்பேன்; கேளீர்!

என்

கொடுவாளின் முனையின் முன்னால் விளையாடல்
நன்றல்ல சொல்வீர்!''

இவ்வாறு

நலங்கிள்ளி உரைத்த மொழிகேட்டு நல்லதோர்
நகைச்சுவைத் துணுக்கு இதுதான் என்று சிரித்துத் தன்
பலங்கொண்ட மட்டும் பகையெதிர்க்கக் கிளம்பி,
படையுடனே வந்துவிட்டான் நெடுங்கிள்ளி முழங்கி!
போர்கண்டு கலங்கிடாத பூம்புகார்ச் சோழன்;
தார்புனைந்த நெஞ்சகத்தை நிமிர்த்தி நின்று

"புலியொன்று தூங்கும்போது அதனை இடருகின்ற
புவியிருண்ட குருடன் போல நெடுங்கிள்ளி
வீழ்ந்திடுவான்.

முழுப்பக்க ஓவியம் — அச்சிட்ட உரை இல்லை

Illustration

Full-page colour illustration. No source-visible literary text is present on this scan, so there is no body transcription.

ஓங்கி உயர்ந்த யானைக் கூட்டக் காலடியில்
மூங்கில் இளம்புதர்கள் படும் பாட்டைப் போல்
வீங்கிய தோளுடைய என் வீரர் முன்னே - பூமி
தாங்கிடும் வண்ணம் அவன் வீழ்ந்திடானாயின்;
உள்ளத்தால் காதலின்றி உடலால் இன்பமூட்டும்
கள்ளியராம் பொதுமகளிர் பலரைத் தழுவி
வாடி வதங்கித் துவளுகின்ற இழிநிலை; நான் மார்பில்
சூடியிருக்கும் மாலைக்கு வாய்க்கட்டும்!" என்றான்.
இந்தச் சூளுரையால் சோழன் விளக்கும் செய்தி;
இழிதகை விலைமகளை உயர்ந்தோர் நாடார் என்பதாம்!
நலங்கிள்ளிச் சோழன், தன் கோட்டை விட்டெழுந்தான்,
நெடுங்கிள்ளிச் சோழன், களம் பட்டழிந்தான்!

அதனால்

காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி யென்று அவனைக்
கவிஞர்கள் குறித்துப் பாடிக் காட்டினர்!
நெடுங்கிள்ளி நலங்கிள்ளி இருவருமே
உடன்பிறந்தார் என்கின்ற ஓர் ஆய்வும் உண்டு!
படைமுகத்தில் குறுக்கிட்டுக் கோவூர்கிழார் தடுத்தும்கூட
பயனற்றுப் போயிற்று; பண்பார்ந்த கவிஞர் சொல்

செவியேறவில்லை!

அதனாலே
உறையூருக்கும் மன்னனாகி நலங்கிள்ளி;
குறையில்லா செங்கோல் கொண்டு ஆட்சி செய்தான்.
அப்போது ஒருநாள் அத்தாணி மண்டபத்தில்
அரசுபுரிதல் எளிதல்ல என ஆன்றோரிடை வாதம் வளர்ந்திட,
அறிவு நலன் - புலமை நலன் கொண்ட வேந்தன்;
அன்றிருந்த அரசு முறை பற்றிக் கருத்தறிவித்த
ஆற்றல் கண்டு அவைச்சான்றோர் அவனைப்
போற்றிப் புகழ்ந்து ஏற்றி மகிழ்ந்தனர்!

* “முடி புனைந்த மூத்தோர் மறைந்து; அவர்
வழித்தோன்றல் முடியேந்தி நாடாளும் வாய்ப்புப் பெறின்
அவர்தம் இயல்புக்கேற்ப ஆட்சியின் தன்மை
அமைந்திடும் என்பேன்!
குடிகளைக் கசக்கிப் பிழிந்து
வரிகளைக் குவித்து ஆள்பவர்க்கு
ஊக்கமில்லாக் காரணத்தால்
தூக்க முடியாப் பளுவாகும் ஆட்சிப் பொறுப்பு!

அஃதன்றி எதற்கும் அஞ்சாது நின்று
பகை மிரட்டல் என்பதற்குப் பணியாமல்
கேடின்றி நாடு காத்திடும் அரசுகளை
ஏடு புகழும் மறவாதீர்!
வற்றிய குளத்தில் காய்ந்துலர்ந்த
முற்றிய நெட்டித் தக்கையென
கையிலொரு அன்னச் சிறகு போல்
கனம் சிறிதுமின்றி எளிதாகத்தானிருக்கும் அந்த

ஆட்சி!”

இவ்வாறு

ஆட்சியின் இருவகைத் தன்மை கூறிய
மாட்சியை அறிஞர்கள் வியந்தனர்!
அரசன் நலங்கிள்ளியை வாழ்த்தினர்!
அவனோர் புலவனுங்கூட; அதனால் அவன்
அமுதமொழியாம் அன்னைத் தமிழ் மொழியையும்
ஆண்டு வாழ்ந்தான்!

* மெல்ல வந்து, என் நல்லடி பொருந்தி,
ஈயென இரக்குவர் ஆயின், சீருடை
முரசுகெழு தாயத்து அரசோ தஞ்சம்;
இன்னுயிர் ஆயினும் கொடுக்குவென், இந்நிலத்து;
ஆற்றல் உடையோர் ஆற்றல் போற்றாது, என்
உள்ளம் எள்ளிய மடவோன், தெள்ளிதின்
துஞ்சுபுலி இடறிய சிதடன் போல,
உய்ந்தனன் பெயர்தலோ அரிதே; மைந்துடைக்
கழைதின் யானைக் கால்அகப் பட்ட
வன்றிணி நீண்முளை போலன்று, சென்று அவண்
வருந்தப் பொரேஎன் ஆயின், பொருந்திய
தீதுஇல் நெஞ்சத்துக் காதல் கொள்ளாப்
பல்லிருங் கூந்தல் மகளிர்
ஒல்லா முயக்கிடைக் குழைக, என் தாரே!

* ‘மூத்தோர் மூத்தோர்க் கூற்றம் உய்த்தெனப்,
பால்தர வந்த பழவிறல் தாயம்
எய்தினம் ஆயின், எய்தினம் சிறப்பு 'எனக்
குடிபுரவு இரக்கும் கூரில் ஆண்மைச்
சிறியோன் பெறின் அது சிறந்தன்று மன்னே!

மண்டு அமர்ப் பரிக்கும் மதனுடை நோன்தாள்
விழுமியோன் பெறுகுவன் ஆயின், தாழ்நீர்
அறுகய மருங்கின் சிறுகோல் வெண்கிடை
என் றூழ் வாடுவறல் போல, நன்றும்
நொய்தால் அம்ம தானே - மையற்று
விசும்புஉற ஓங்கிய வெண்குடைய
முரசுகெழு வேந்தர் அரசுகெழு திருவே."

மூல மேற்கோள்(புறநானூறு பாடல் : 73,75
பாடியவர் : சோழன் நலங்கிள்ளி)

பொருள் விளக்கம் :

மடவோன் = அறிவற்றவன். துஞ்சுபுலி = தூங்கும் புலி.
சிதடன் = குருடன். கழை = மூங்கில். மைந்துடை = வலிமை
உடைய. வன்றிணி = பலமும் திண்மையும் உடைய.
ஒல்லா முயக்கு = அன்பிலா புணர்ச்சி.
பால்தர வந்த பழவிறல் தாயம் = விதிமுறைப்படி வந்த
(வாரிசு) அரசுரிமை. கூரில் ஆண்மை = ஆண்மை மிகக்
கொண்டிராத. மண்டுஅமர்=பெரும்போர்.
மதன் = மன எழுச்சி. பரிக்கும் = (எதிர்நின்று) தாங்கிடும்.
அறுகயம் = வற்றிய குளம். கிடை = நெட்டி.
நொய்து = எளிதானது.

கலைஞர் மு. கருணாநிதி · சங்கத் தமிழ். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்