பொருளடக்கம்

சங்கத் தமிழ்

பகுதி 25 / 102

இளையோன் எதற்கும் இளையான்!

அச்சுப் பக்கம் 122–127 · ஸ்கேன் 137142 · முழுப்பக்க ஓவியம்: ஸ்கேன் 138

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக; ஒவ்வொரு அச்சு வரியும் தனி வரியாக.

இளையோன் எதற்கும் இளையான்!

கலகலவெனக் காலில் ஒலித்த
சதங்கையைக் கழற்றி; வீரக்
கழலினை அணிந்த இளங்கன்று அவன்!
பின்னிச் சடையிட்ட நீள்குடுமி களைந்து
மின்னிடும் வாளேந்தி நிற்கின்ற சிறுவன் அவன்!
மெல்லிய கரங்களில் எழில் வளையல் நீக்கி
வில்லினைத் தோளில் தாங்கிய இளைஞன் அவன்!
ஐம்படைத் தாலியினை இன்னும் மார்பில் பூண்ட
அறியாப் பருவத்தினன் அவன்!

பாண்டிய மரபில் வந்த அந்தப் பாலகனோ
பலமுண்டு பகையழிக்கத் தன் தோளுக்கென்று
படை நடத்தத் தலைமை ஏற்றான்;
பார் அதிர முரசொலித்தான்!
கடும் எதிர்ப்பின் தலை மிதிக்கப் புறப்பட்டுக்
களம் சென்று வெல்வேன் என்று சூளுரைத்தான்!
நெடுஞ்செழியன் என்கின்ற பெயருடையான்;
நிமிர்ந்த தலை வளையாத புகழுடையான்!
உடைவாள் ஓங்கி உறுமுகின்ற அச்சிங்கக் குட்டிதனை
இடைக்குன்றூர் கிழார் எனும் புலவர், இவ்வாறு
பலபடப் பாராட்டி வாழ்த்துப் பாடி
பால்மணமும் மாறாத பச்சிளம்பசலை என்றார்.
அந்தப் பாண்டிய இளவலைப் பாடி மகிழ்ந்த
செந்தமிழ்ப் பாவலர் பல்லோர் ஆவர்!

குன்றூர் கிழார் மற்றும் குறுங்கோழியூர்க் கிழார்,
குடபுலவியனார், கல்லாடனார் - மதுரைக்
கணக்காயனார் மகன் நக்கீரனார் - அவன்
கொலுமண்டபத்துப் புலவர் ஏறு
மதுரைக் காஞ்சி பாடிய
மருதனார் என்னும் மாங்குடிக் கிழார்;
இத்தனைச் சான்றோர் தமிழ்க்கவி கேட்டு

முழுப்பக்க ஓவியம் — அச்சிட்ட உரை இல்லை

Illustration

Full-page colour illustration. No source-visible literary text is present on this scan, so there is no body transcription.

பத்தரை மாற்றுப் பசும்பொன் பாண்டியன்
சித்திரத் தமிழால் கவிதை யாத்திடும்
சிறப்பினைப் பெற்று செருக்களம் புகுந்தவன்!

வயதில் இளையோன் பாண்டியன் என்று,
வலியோர் ஐந்து வேளிர் துணையுடன்;
சேர சோழ முடிமன்னர் இருவர்,
போரில் குதித்து ஓலை அனுப்பினர்!
வேளிர் வேந்தர் ஐவர் படையும்
வில், புலி பொறித்த கொடியுடை மன்னர்
இருவர் படையும் இணைந்து மோதிட;
எழுவரை எதிர்க்க இயலுமோ என்று
இளைஞன் பாண்டியன் கலங்கவே இல்லை!

“ஒடுங்கி அடங்கிடுக! அல்லால்; உயிர்
ஒழிந்து போக நேரிடும்!” என்ற
ஓலை கண்டு உரக்கச் சிரித்தான்!
ஒளிந்திடும் மரபல்ல போருக்கென்றான்!

“இளவயது எனக்கென்று ஏளனம் புரிகின்றார்
எதிர்ப்போர் வயதும் படையும் என் முன்னே
எப்பாடு படப் போகின்றதென்று
இக்கணமே தெரிவிக்கின்றேன்!
ஓலை கொண்டு வந்தவனே! உடன்
ஓடு நீ; உன் ஏழு மன்னரிடம்! வீர
வேலை கரம் ஏந்திவிட்டான்; இந்த
விடலையாம் செழியன் என்று நான்
விடை தந்ததாக அறிவித்திடுக!” என்றான்!
“தலையாலங்கானத்துப் போர்க்களம் புகத்
தயாராகட்டும் தென்பாண்டிப் படை”, என்றான்!

அப்போது,
மாங்குடி மருதனார் இடைமறித்து; “பாண்டி
மன்னர் குலக் கொழுந்தே! இந்தப் பாவலன்,
மறுப்பதாக எண்ண வேண்டாம்.
மாற்றார் வலிமையினைக் காணும்போது
தோற்றோம் இறுதியில் நாம் என்றே முடிவு வரும்!
எச்சரித்தல் என் கடமையென்ற காரணத்தால்,
இனியும் சிந்தித்துப் போர்தவிர்த்தல் நலமாகும்” என்றார்!
மீன்கொடிப் பாண்டியனோ; மாங்குடி
மருதனார் மொழி கேட்டு, அவர் முன் சென்று;
“மான்குட்டி போல் இருக்கின்றேன், அதனாலே

மாற்றார் எனும் புலிப்போத்தின் வாய்க்குள்ளே
இரையாக மாறிப்போவேன் என்று
இரங்கலுரை இப்போதே ஆற்றுகின்றீர்.
அச்சம் தவிர்த்திடுக அய்யனே! இறந்தபின்னர்
எச்சமெனத் தமிழன் விட்டுச் செல்வது மானமொன்றே!
அந்த மானத்தைப் பகைவர் காலடியில் பூவாக்கிப்
போட்டுவிட்டு,
சொந்த வாழ்க்கைதனை சுகமாக ஆக்கிக் கொள்வோன்
சோற்றாலடித்த பிண்டமாவான்; நூல் அறுந்தக்
காற்றாடிப் பட்டமாவான்!

தமிழுக்குத் தலைவணங்கும் நெடுஞ்செழியன் நான்;
தகவிலார்க்குத் தலைவணங்க ஒப்பமாட்டேன்!
எழுவரென்ன எழுபது கோடிப் பேர்
எட்டுத் திசையும் முரசு கொட்டி,
எதிர்க்க வரினும் என்னை - இந்த
இளையோன் எதற்கும் இளையான் என்ற
இலக்கியத்தைப் படைக்கின்றேன் போர்க்களத்தில்!
பாண்டியத்துப் பெருமண்ணில், வெறும்
ஆண்டிகளோ வாழ்கின்றார்? இல்லை! இல்லை!
குலமாதா பாண்டித்தாய்; கோழைகளைக்
குழந்தைகளாய்ப் பெற்றெடுக்கவில்லை! இந்த
இந்த நிலமகளின் பெருமைக்கு மேலும் பெருமை.
நெடுஞ்செழிய இளைஞனவன் சேர்ப்பான் என்று
நம்பிடுவீர்; நாட்டோரே! நல்லோரே!” என முழக்கி;
“நகுதக் கனரே, நாடு மீக்கூறுநர்” எனும்
நரம்பெலாம் வீரம் மீட்டும் புறப்பாட்டை
நாடாளும் இளமன்னன் இயற்றலானான்!

அப்பாட்டில்

* அணிதேர்ப் புரவியும் ஆனைகளுடனே
ஆட்பெரும்படையும் மிகக் கொண்டதால், நம்மை;
இழித்தும் பழித்தும் ஏளனம் செய்தும்
இளையோன் என்றும் சிறுமொழி கூறிய
எதிரிகள் எழுவரின் இடுப்பை ஒடித்து
தலையாலங்கானப் போரில் வென்று - அவர் தம்
அலைகடற் படையை அறவே அழித்து
நிலைகுலைந்த பகைவரை முரசொடு பிடித்து
மலையென நிமிர்ந்து நிற்பேன் கண்டீர்!
எழுவரிடம் எதிர் நிற்க முடியாமல் நான்
விழுவதானநிலையொன்று தோன்றுமாயின்
குடிமக்கள் நலம்
பேணாக் கொடுங்கோல் மன்னன் எனக்
குவலயம் எனைத் தூற்றட்டும்!

தோல்வி என்னைத் தழுவுமாயின்
தொழுதேத்தி எனை நாடி
இல்லையென்று இரப்போர்க்கு
எதுவும் வழங்காத பாவியென
வையம் இகழுமளவுக்கு
வறுமை வந்தென்னை வருத்தட்டும்!
வெற்றி மாலை என் தோளை வெறுத்துவிட்டால்
உற்றார் அனைய எளியோரின் துயர்போக்க
உதவிட முடியா நிலை எனை வந்தடையட்டும்!
மாற்றார் கை ஓங்கி நிற்க - நம்
மறவர் படை தாழ்ந்து விட்டால்,
மாங்குடி மருதனார் தலைமை தாங்க
மாங்குயிலோசைத் தமிழ் மொழியில்
பாப்புனையும் பாவாணர் அனைவருமே
பாண்டியத்தை இனிப்பாடுவது சிறப்பல்ல என்று இந்த
நெடுஞ்செழியப் பாண்டியனை நீங்கி
நெடுந்தொலைவு சென்றிடட்டும்!”

இவ்வண்ணம் சூளுரைத்த பாண்டி மன்னன்
செவ்வண்ணம் கண்ணில் தேக்கி - படைக்குத்
தலைமையேற்றுச் சென்றிட்டான்;
தலையாலங்கானப் போர்முனை நோக்கி!

சூளுரைக் கவிதையைப் பாண்டியன்
சுளைத் தமிழில் வடித்தபோதும்;

சுற்றத்தார் அனைய எளியோர் காத்தல்,
கொற்றவர்க்குரிய கொடையளித்தல்,
பற்றுக் கொளல் குடிமக்கள்பால்,
கற்றறிந்த புலவர் கூட்டம், நாடு போற்றிக்
கவிபுனைதல் - இந்நான்கும்,
உயிரே போல் கருதி வாழ்ந்த
உயர்தனிப் பண்பாட்டையன்றோ
உறுதியாக உரைக்கின்றான்!

இதையெண்ணி மகிழும் காலை - நம்
இதயம்; தமிழ் உணர்வால் மலரும் சோலை!

* “நகுதக் கனரே, நாடுமீக் கூறுநர்;
இளையவன் இவன் என உளையக் கூறிப்,
படுமணி இரட்டும் பாவடிப் பணைத்தாள்
நெடுநல் யானையும், தேரும், மாவும்,
படைஅமை மறவரும், உடையம் யாம் என்று
உறுதுப்பு அஞ்சாது, உடல்சினம் செருக்கிச்
சிறுசொல் சொல்லிய சினங்கெழு வேந்தரை
அருஞ்சமஞ் சிதையத் தாக்கி, முரசமொடு
ஒருங்கு அகப் படேஎன் ஆயின் பொருந்திய
என்நிழல் வாழ்நர் சென்னிழல் காணாது
கொடியன்எம் இறை எனக் கண்ணீர் பரப்பிக்,
குடிபழி தூற்றும் கோலேன் ஆகுக!
ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி
மாங்குடி மருதன் தலைவன் ஆக,
உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பின்
புலவர் பாடாது வரைக, என் நிலவரை;
புரப்போர் புன்கண் கூர,
இரப்போர்க்கு ஈயா இன்மை யான் உறவே”

மூல மேற்கோள்(புறநானூறு : பாடல் : 72
பாடியவர் : தலையாலங்கானத்துச் செருவென்ற
பாண்டியன் நெடுஞ்செழியன்)

பொருள் விளக்கம் :

நகுதக்கனர் = சிரிக்கத் தக்கவர்.
மீக்கூறுதல் = அதிகமாகப் புகழ்தல்.
உளையக் கூறி = வெறுத்து வருந்துமாறு சொல்லி.
பாவடிப் பணைத்தாள் நெடுநல் யானை = பரந்த அடியும் பெரிய
காலுங் கொண்ட உயர்ந்த யானை.
உறுதுப்பு அஞ்சாது = என் மிகுந்த வலிமைக்கு அஞ்சிடாமல்.
வரைக என் நிலவரை = என் நாட்டை விட்டு நீங்குக.
புரப்போர் புன்கண் கூர = சுற்றத்தார் போல் பாதுகாக்கப்பட
வேண்டியவர்களின் துயரம் மிகுந்திட.

கலைஞர் மு. கருணாநிதி · சங்கத் தமிழ். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்