பிரிவு 1 / 11

ஒருதலைக் காதல் — 1

One-Sided Love — 1

X
ஒருதலைக் காதல்
கற்கண்டுத் தமிழில் கவிதைகள் வடிக்கும்நற்கண்ணை என்றொரு பெண்பாற் புலவர்,இதம், பரம் என்று பாடல் இயற்றிக் கொண்டிராமல்அகம், புறம், நற்றிணை எனும் சங்கத் தொகுப்பில்கனகமணிகளாய்ப் பதித்திட்ட பாடல்கள் ஆறு - அவைகாதற்கனிகளைப் பிழிந்திட்டக் கவிதையின் சாறு!
அந்த ஆறு பாடலுடன்;
காவற்பெண்டு எனும் மறக்குலத் தாயொருத்திகளம் சென்ற மகனைப்பற்றி வினவிய கன்னியிடம்,புலியிருந்த குகையிதோ எனப்பூரிப்புப் பொங்கக்கூறி,புறப்பாட்டு ஒன்றைப் போர்ப்பாட்டாய் இசைத்ததையும்,அந்தத்தாய்தான் பெருநற்கிள்ளி பெயரும்சோழப்பெருமகனைச்சொந்தத்தாய்போல வளர்த்த செவிலித்தாய் என்பதையும்கிள்ளியின் அழகு, ஆற்றலில் மயங்கி - நற்கண்ணை; அவனைஅள்ளிப் பருகுதல்போல் கனவுலகில் மிதந்ததையும்,பெருநற்கிள்ளியின் பேராண்மையினை - கவிப்பெருமான் சாத்தந்தையார், பீடுநடைபோடும்புறப்பாட்டாய் தீட்டிப்புகழ்மாலை சூட்டியதையும் - சற்று
ஆழமாய்ச் சென்று ஆய்ந்து நான் படித்ததாலேஆலுக்கு விழுதெனவே ஒரு கற்பனை தோன்றிற்றெனக்கு!நற்கண்ணைக்கு நற்கிள்ளிமீது தாவியெழுந்த காதல்,பொற்கிண்ணத்துப் பாலாய்ப் பொங்கித் தரையில் வழிந்தகதையை,
‘ஒருதலைக் காதல்’ எனும் சிறு தொடரோவியமாய்க்குறுங்காதல் காவியமாய்ப் படைக்கின்றேன்: படித்துச்சுவைத்திடுக!
பச்சைப் பட்டாடை உடுத்திக் கச்சையுடன்பரதமாடும் பருவமயில்போல - கழனியிலேபயிர்கள் ஆடும் வளமிகு சோழநாட்டின்பழங்காலத் தலைநகராம் உறையூரின்கண்வீரவேண்மான் வெளியன் தித்தன் என்பான்வெண்கொற்றக் குடையின்கீழ் வீற்றிருந்து,தாரை வார்த்தபடியிருந்தான்; அரசின் பெருஞ்செல்வத்தைத்தபோதனர் நடத்துகின்ற வேள்விக்கும் யாகத்திற்கும்!“தமிழ்மரபுக்கு இது ஏற்றதல்ல,” என்று அவன் மகன்தடுத்து நின்று அதனைத் தொடர்ந்து எதிர்க்கவும் வந்தான்.
சோழவேந்தன் தித்தனோ; தன்மகன் பெருநற்கிள்ளிசொல்லுகின்ற கருத்தையெல்லாம் புறக்கணித்துஅறியாக்குழந்தை; நோய்ப் போக்கும் கசப்பு மருந்தின்அருமை தெரியாமல்அதனை அருந்திட மறுத்துத் தட்டுதல்போல நற்கிள்ளியளித்தநல்லுரை எதனையும் ஏற்றிட மறுத்து,நாட்டின் செல்வம் வாரியே இறைத்தான்.
“அரச கருவூலத்தை நிரப்புவது குடிமக்கள் வேலை!அவர் வாழ்வைத்தரிசு நிலமாக்கி இதயத்தில் செருகுவதோ வேலை?கொற்றவர்க்கு அழகு குடிதழுவிக் கோலோச்சல்;கொள்கை அற்றவர் செயலோ நல்ல குறிக்கோளுக்குக்கொள்ளிவைத்தல்!பாலும் தேனும் பகிர்ந்துய்யும் குடம் குடமாய்த் தீயிலூற்றிப்பலியாக ஆடு, மாடு, குதிரையெல்லாம் வெட்டி வீழ்த்தி,அவிர்ப்பாகம் பெறுவதற்கு யாககுண்டங்கள் வளர்த்துத்தவமிருத்தல்‘அன்பே கடவுள்’ என்னும் தத்துவத்தின் அடிப்பீடம்ஆடுகின்ற செயலன்றோ?”எனக் கேட்டுத் தடுத்தான் கிள்ளி!
“நாடாளும் மன்னன் நான் எனை எதிர்த்து என்மகன் நீயேநாத்தழும்பேறி நாத்திகம் பேசுவதோ? உன்நாவை அறுத்து நாய் நரிகளுக்கிடுமுன்நடந்திடுக நாட்டை விட்டு!” என ஆணையிட்டான் தித்தன்!
“இன்றே பிரிகின்றேன் எனைப்பெற்ற உறையூரை;ஆனால் மன்னா;ஒன்றே தெய்வமென்றும் அதற்கு உயிர்ப்பலிவேண்டாமென்றும்நான் கூறியதை நாத்திக மென்கின்றீர் - நீரோ;வான்மீது தொங்குவதாய்க் கூறுகின்ற சொர்க்கம் காணவையகத்தை நரகமாக்கி வதைக்கின்றீர் உயிர்களையே!பித்தனையும் தெளிவிக்கக் கூடும்; ஆனால் என் தந்தையாம்தித்தனை இனித் திருத்தல் இயலாதென்ற முடிவோடுபோகின்றேன்” என்று
பொற்கோவாம் பெருநற்கிள்ளி உறையூரைவிட்டுமுக்காவல்நாட்டு ஆமூர் சென்றான்! அக்கணமேசொற்கோவாம் சாத்தந்தையெனும் புலவர் பிரானும் சோழன்முன்நிற்காமல் கிள்ளியினைப் பின்தொடர்ந்தார்.
அரசிளங்குமரனே கொண்ட கொள்கைக்காகஅரியாசனம் துறந்த பின்னர்,அவைப்புலவர் பதவியது அற்பமென எட்டித்தள்ளி,தமிழ்க்குலத்தின் மானம், வீரம், பண்பாடு, மரபுதாழாது காப்பதற்குச் சூளுரைத்துக் கிள்ளியின் அருகிருந்தார்.
முக்காவல் நாட்டு ஆமூரில் ஒருநாள்முரட்டு மல்லன் ஒருவன் தோள்தட்டி ஓடிவந்து,“என்னை வென்றிடுவார் யாருண்டு இவ்வூரில்?”என முழக்கி அறைகவல் விடுத்ததோடு - தன்முன்னேநிற்கமுடியாமல் அவ்வூரார் தோற்றுவிட்டால்முக்காவல் நாடு முழுமையும் தனக்குரிமை ஆகு”மென்றான்!நாட்டுடைத் தலைவன் அதுகேட்டுப் போர்நடைபோட்டு முன்வந்து - அந்தக்காட்டெருமை மனிதனை மற்போரில் வீழ்த்தமுயன்றுதோற்றுவிட்டான்!
“ஆமூர் இனிமேல் வெற்றிபெற்ற தனக்குத்தான் உரிமையென்றுஆகா! ஊரகு!” என்று கத்திய மல்லன் முன்னே,விண்ணில் நட்சத்திரமொன்று வீழ்கின்ற வேகத்தில்மண்ணில் ஓங்கி உதைத்தவாறு குதித்து;
“மல்லனே; நில்லடா!” என மார்தட்டிக்கொண்டுமறவர்குல மாவீரனொருவன் அந்தமனிதமிருகத்தின் மேல் பாய்ந்தான்!
‘யார் அது? யார் அது?’ என ஆமூர் அதிர்ந்தது!“யார் அது; உறையூர் தித்தன் மகன் பெருநற்கிள்ளி”யென்றுகையொலி செய்து ஒரு கூட்டம்! ‘என்ன ஆகுமோ’ என,கண்கலங்க நின்றது மற்றோர் கூட்டம்!
‘ஆமூர் தலைவனுக்கே கிட்டாத வெற்றி,அகவையிற் குறைந்த இளைஞனுக்குக் கிட்டுமோ?’ என்றுமூக்கின்மேல் விரல் வைத்துமுக்காவல் நாட்டுமக்கள் திகைத்து நின்றார்!
“ஊதினால் துரும்பெனப் பறந்திடுவாய்;உனக்கு இத்தனை ஆணவமா?” என்றுமோதினான் முரட்டு மல்லன் கிள்ளியின் மேல்!
சண்டமாருதச் சுழற்சிபோல் நடந்திட்ட மற்போர் நிகழ்ச்சியைசாத்தந்தையார் வழங்கிய பாடலெனும் பலகணிமூலம்சற்றுத் தொலைவிலிருந்து காண்போம் நாம்!மல்லன் மீது துள்ளிப்பாய்ந்த நற்கிள்ளிஒருகாலை மார்புக்குமேல் மடித்துமற்றொரு காலால் மாற்றானின் தாக்குதல் தடுத்து,முரடனது முதுகின்கண் இறுகப் பிணைத்து; பசியால்மூங்கிலைத்தின்ன முயலும் யானை;அதனை வளைத்தும் முறித்தும் மிதிப்பது போலமல்லனின் தலையும் காலும் மோதியும் முறித்தும்மண்பத்தரையில் வீழ்த்தி மாண்டிடச் செய்த சோழமகனை
‘போரவைக் கோப்பெரு நற்கிள்ளி’ எனப்புகழ் விருது வழங்கி வாழ்த்திய புலவர்,‘புதல்வனது வீரத்தைக் காண்பதற்கு - உறையூர்ப்புலியாளும் தித்தன் வந்திலையே?’ என மனமிக நொந்தார்.
நற்கிள்ளி போர் புரிந்த வேகத்தைசொற்கவை நனி சொட்டச் சொட்டஉயர்தமிழ்க் கவிஞர் சாத்தந்தை,உவமைக்கூறி விளக்குகின்றார்; இதோ:-
★ “சாறுதலைக் கொண்டெனப் பெண்ணீற் றுற்றெனப்பட்டமாரி ஞான்ற ஞாயிற்றுக்கட்டில் நினக்கும் இழிசினன் கையதுபோழ்தூண்டு ஊசியின் விரைந்தன்று மாதோ;ஊர்கொளவந்த பொருநனொடு,ஆர்ப்புனை தெரியல நெடுந்தகை போரே!”
(புறநானூறு : பாடல் 82பாடியவர் : சாத்தந்தையார்)
இதற்கு உற்ற பொருள் நான் கற்ற தமிழில் அளிக்கின்றேன்.இந்த உவமை நயத்தின் இனிமையை நீவீர் உணர்ந்திடுவீர்!
“கட்டில் பின்னும் கடைநிலைப்பாட்டாளியொருவன் - அதனைவிற்றுப் பிழைக்கத் திருவிழா தொடங்குமுன்விரைந்தோடிட வேண்டும் - அவ்வேளையில்கட்டிய மனையாள் பேற்று வலியால் பெரிதும் துடிப்பதாய்ச்சேதி வந்து செவியினைத் துளைத்திட; தன்செயல் முடித்துப் புறப்பட அவன் பட்டபக்க - வான
வீதியில் கதிரோன் மேற்கே வீழ்ந்து கனமழைக்கானஅறிகுறியும் கண்டிடவேகட்டில் பின்னும் அவன் கையூசி எத்தனைக்கடுமையாய் விரைந்து வாரைச் செலுத்துமோ - அந்தஊசியினும் வேகமாய்ப் போரை முடித்து - எதிரியைத்தூசியென வீசிவிட்டான் வீரன் கிள்ளி!”
இவ்வாறுமுத்தமிழ் வித்தகரின் பாமாலைக்கும்முக்காவல் நாட்டுமக்கள் பூமாலைக்கும்தலைவணங்கி நன்றியினை; நற்கிள்ளி தெரிவித்தபோது,கலைவண்ண மங்கையொருத்தி ஆங்கே - காதல்அலையாயும் நெஞ்சுடனே தோழியிடம்; - அன்பால் அவனைவிலைகொள்ள முடியுமோ என்று விழியால் கேட்டாள்!நிலைகொள்ள முடியாமல் தவித்திட்ட அம்மங்கை;மலைமுகடு எறியிறங்கப் பெருமழைசொரிந்திட்டநற்கண்ணையெனும் நங்கை!
பொருள் விளக்கம்:சாறு = விழா. தலைக்கொண்டென = தொடங்கிவிட்டன.ஈற்று உற்றென = பிள்ளை பெறுங்காலம் உற்றனள்.பட்டமாரி = மழை. ஞான்ற ஞாயிறு = கதிர் மறையும் வேளை.நினக்கும் = பிணைக்கும். போழ்தூண்டு ஊசி = தோலால் ஆகியவாரைக் கோக்கும் ஊசி.
♦ ♦ ♦

மூலமும் சான்றும்