காட்சி 5 / 5
காட்சி—5.
காட்சி—5.
சிறைச்சாலை
மூல ஸ்கேன் 40, 41, 42, 43
கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.
சிறைச்சாலை
(சாக்ரடீஸ் காலிலே சங்கிலி பூட்டப்பட்டுச் சிறிய இடத்திலே அங்குமிங்கும் உலவிக்கொண்டிருக்கிறான். கதவு திறக்கப்படுகிறது—கிரிட்டோ வருகிறான்.)
சாக்: கிரிட்டோ! என் அருமை நண்பா! வா வா........
(வெளியே வந்து பார்த்து).... ....அது யார்?
கிரி : உன் மனைவி....குழந்தைகள்!
(பெரிய குழந்தைகள் இருவரும், கைக்குழந்தையை ஏந்திய படி எக்ஸேந்திபியும் உள்ளே வருகிறார்கள் கண்ணீர் வடித்தபடி........)
: !........
(அவள் அழுகிறாள், குழந்தைகள் அழுகிறார்கள், பச்சைக் குழந்தையும் வீறிட்டு அழுகிறது.)
சாக்: அன்புள்ளவளே!........பார்த்தாயா?.... ....பயனற்ற தத்துவ விசாரணையில் காலத்தைக் கழிக்கிறேன்; தர்க்கவாதம் புரிந்து தொல்லைப்படுகிறேன் என்றெல்லாம் கோபித்துக் கொண்டாயே; இப்போது பார், உன் கணவன் அகிலம் புகழும் வீரனாக, தேசம் புகழும் தியாகியாக மாறிவிட்டான்!....எக்ஸேந்திபி! நீ பாக்கியசாலிதான்! படை பலம் பண பலம் அத்தனை பலத்தையும் எதிர்த்து நின்று, யாருக்கும் பணியாத பெருமையோடு, விழிகளைக் கடைசியாக மூடப்போகும் கர்மவீரனுக்கு நீ மனைவி!....குழந்தைகளைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்! அவர்கள் பெரியவர்களாக மாறி, நேர்மை தவறி நடந்தால், நான் உங்களைத் திருத்த முயன்றதுபோல், நீங்களும் அவர்களைத் திருத்த முயலுங்கள்; போ....நேரமாகிறது....காவலர்கள் கோபிப்பர்!........ கிரிட்டோ, இவர்களை அனுப்பி வை!
(கிரிட்டோ; அவர்களை வெளியே அழைத்துச் செல்கிறான். பிறகு,கிரிட்டோ மட்டும் உள்ளே வருகிறான்.)
சாக்: கிரிட்டோ! உனக்குத் தெரியுமல்லவா?.... ....முப்பதுநாள் சிறைவாழ்வு இன்றோடு முடிவடைகிறது! நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி....விஷம் சாப்பிட்டுச் சாகவேண்டிய நன்னாள் இன்றுதான்!
கிரி : சாக்ரடீஸ்! தத்துவ வாதங்களால் அழிக்க முடியாத உன்னை, விஷம் அழிக்கப்போகிறது!....
ஒரு யோசனை நண்பா!........இன்னும் நேரமிருக்கிறது; என்னிடமோ மின்னும் தங்கமிருக்கிறது! காவலர்களை வசப்படுத்திக்கொண்டு எப்படியாவது தப்பிவிட்டால்....?
சாக்: வெட்கப்படுகிறேன் கிரிட்டோ!........சாக்ரடீஸ் சாவுக்குப் பயந்தவனல்ல........நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளைப் பற்றி நான் சர்ச்சை செய்ததும், அபராதங்கட்டத் தயாராக இருப்பதாகக் கூறியதும். தேசப் பிரஷ்ட உத்திரவு பற்றி வியாக்யானம் கூறியதும், என் பிரச்சாரத்தின் நோக்கம் பற்றிப் பெரியதோர் பிரசங்கம் செய்ததும்—மரணத்திற்கு பயந்து அல்ல! இவ்வளவுக்கும் தயாராக இருந்தும், கிரேக்க நாட்டு நீதிமன்றம் வீணாக சாக்ரடீசை அழித்துவிடும் வெறிச்செயலில் ஈடுபட்டது என்பதை நிரூபிப்பதற்காகத்தான்! அதை வைத்து நான் சாவுக்கு அஞ்சுகிறேன் என்று கணக்கிட்டுவிடாதே கிரிட்டோ!........ பிளேட்டோ, கிரிட்டோ, அப்போலடோரஸ் முதலிய நண்பர்களையும்; மனைவி மக்களையும், எனதருமை ஏதென்ஸ் நகரத்தையும் விட்டுப் பிரியும் நேரம் நெருங்கிக்கொண்டேயிருக்கிறது! உள்ளே எனக்காக விஷம் தயாராகிக் கொண்டேயிருக்கிறது! இன்னும் கால் நாழிகையில் காவலன் வந்து விடுவான், கடும் விஷத்தோடு!
கிரி : அருமை நண்பா! மலை குலைந்தாலும் மனங்குலையாமாவீர உன் ஒளிவீசும் சுழற்கண்களை, துடிக்கும் அகன்ற புருவங்களை தொகை தொகையாகப் பகைவரினும் துவளாது! தத்துவ விளக்கம் கொட்டும் உணர்ச்சி மிக்க உதடுகளை இனி ஒரு சாக்ரடீஸ் உருவத்திலே நான் காணப் போகிறேனா?
சாக்: அழாதே நண்பா! அதோ வந்து விட்டது அமுதம்! அறிவு படைக்கு இந்த அரசாங்கம் வைக்கும் விருந்து! தள்ளாத கிழவனுக்கு இந்தப் பொல்லாத நாடு தரும் பரிசு! அதோ வந்துவிட்டது!
(காவலன் விஷக் கிண்ணத்துடன் வருகிறான்.)
சாக்: சிறைக்காவல! இதை என்ன செய்யவேண்டும்? முறைகளைக் சொல்லு!
காவ: (சாக்ரடீசின் விலங்குகளை அவிழ்த்துவிட்டு அழுதபடி) பெரியவரே! விஷத்தை முழுவதும் குடிக்க வேண்டும்........ பிறகு இங்குமங்கும் நடந்து கொண்டேயிருக்க வேண்டும்! கால்கள் மரத்துப்போகும் வரையிலே அப்படி நடக்க வேண்டும்....பிறகு உட்காரலாம்....கொஞ்சம் கொஞ்சமாக உடம்பு சில்லிட்டுக் கொண்டே வரும். பிறகு படுத்து விடலாம்.
சாக்: ஆனந்தமான நித்திரை ! கனவு மங்கையாலும் கலைக்க முடியாத நித்திரை!...காவல! கொடு இப்படி!
(விஷக் கிண்ணத்தை வாங்குகிறான்.)
கிரி: நண்பா! ....சிறிது நேரம் பொறுத்துக்கூடச் சாப்பிடலாம்! சிறைச்சாலையிலே அதற்கு அனுமதி உண்டு!
சாக்: கிரிட்டோ! உனக்கு மிகவும் அற்ப ஆசை! விஷத்தை இன்னும் இரண்டு நாழிகை கழித்துச் சாப்பிடுவதாக வைத்துக்கொள்! அதற்குள் திடீர் என்று இருதயம் வெடித்து நான் இறந்துவிட்டால்... கிரேக்க நாட்டு நீதிமன்றத்தின் தண்டனையை எப்படி நிறைவேற்றுவது?...புதிய சாக்ரடீசா பிறந்து வருவான்? கூடாது; கூடாது...இப்போதே சாப்பிடுகிறேன்...
கிரி: நண்ப! கடைசியாக எனக்கு ஏதாவது சொல்லு!
சாக்: புதிதாக என்ன சொல்லப் போகிறேன் — உன்னையே நீ அறிந்து கொள்!’’ எதையும் ஏன், எப்படி எதற்காக என்று கேள்! அப்படிக் கேட்டால்தான் சிலைவடிக்கும் இந்தச்சிற்பி சிந்தனைச் சிற்பியாக மாறினேன். “அவர் சொன்னார்; இவர் சொன்னார் என்று நம்பி அறிவிழந்து தடுமாற்றம் அடைய வேண்டாம் — எவர் சொன்ன சொல்லானாலும் அதனை உந்தன் இயல்பான பகுத்த றிவால் எண்ணிப் பார்ப்பாய்’’ இதைத்தான் உனக்கும், இந்த உலகத்திற்கும் சொல்ல விரும்புகிறேன்.
கிரி: ஏதென்சின் எழுச்சிமிக்க சிங்கமே! எங்கள் தங்கமே!.... கிரேக்கப் பெரியாரே! எம்மையும் உம்மையும் இந்த விஷம் பிரிக்கப் போகிறதா?... அய்யகோ, நினைக்கவே நெஞ்சு நடுங்குகிறதே! சாக்ரடீஸ் ... உனது சவத்தை எப்படி அடக்கம் செய்யவேண்டும்?...
சாக்: புதைப்பதாயிருந்தால், இந்த நாட்டில் உலவும் புளுகு மூட்டைகளையும் என்னோடு போட்டுப் புதைத்து விடு!..... எரிப்பதாயிருந்தால், ஏமாற்றுக்காரர்களின் சுவடிகளையும் என்னோடு சேர்த்துச் சுட்டுச் சாம்பலாக்கித் தண்ணீரில் கரைத்து விடு!.... விடை கொடு. விஷம் அழைக்கிறது!.... என் தேசத்துப் பெருமக்களிடம் விடை பெற்றுக்கொள்ளப் போகிறேன்.... எனதருமை ஏதென்சு நகரத்துப் பெருமக்களே! இதோ சாச்ரடீஸ் சந்தோஷமாகச் சாகப் போகிறான்!... கிரேக்க நாட்டு நீதிமன்றம், கூடைக்கணக்கிலே அவன்மீது குற்றங்களைக் கொட்டிக் கோப்பை நிறைய நஞ்சையும் நிறைத்துப் பருகடா இந்த உயிர் பருகும் பாயாசத்தை என்று உத்திரவிட்டிருக்கிறது!... விஷக் கோப்பையின் விளிம்பிலே, உபதேசங்களை உதிர்த்த சாக்ரடீசின் உதடுகள் பதியப்போகின்றன! இன்னும் ஓரிரு விநாடிகள்! அதன் பிறகு சாக்ரடீசின் உடல், உயிர் எல்லாமே அதனதன் தொடர்பை அறுத்துக் கொண்டு, வாழ்க்கைத் தொடர்கதைக்கு முற்றுப்புள்ளி வைத்து விடும்!- வருகிறேன் கிரேக்கமே! .......வருகிறேன்! என தருமைஏதென்ஸ் நகரமே, வருகிறேன்!.....நான் ஆடியோடி ஆவேசமாகப் பேசுவதற்குத் துணைபுரிந்த ஏதென்சு நகரத்து எழில் வீதிகளே! வீதியோரத்து மர நிழல்களே! வீட்டோரத்து திண்ணைகளே! உங்கள் அனைவரிடமிருந்தும் இந்தக் கிழவன் விடைபெறுகிறான்! பீடுநடையும் பெருமித நோக்கும் கொண்ட இளைஞர்களே! நாடுகாக்கும் நல்லதம்பிகளே! பேரன்பு கொண்டோரே! பெரியோரே பெற்ற தாய்மாரே! நல்இளஞ்சிங்கங்காள்! உங்கள் அனைவருக்கும் சாக்ரடீசின் இறுதி வணக்கம் உரித்தாகுக ! இந்தக் கிழவன் கிரேக்க இளைஞர்களைக் கெடுத்ததாக யாராவது உண்மையாக உளமார நினைத்தால் அவர்கள் என்னை மன்னித்து விடட்டும்! மன்னித்து விடட்டும்! வருகிறேன். வணக்கம், வணக்கம். சிந்திக்கத் தவறாதே! ஏ, ஜெகமே! சிந்திக்கத் தவறாதே! உன்னையே நீ அறிவாய்! அறிவாய்!
(சாக்ரடீஸ் விஷத்தைச் சாப்பிட்டு முடிக்கிறான். கால்கள் தடுமாறுகிற வரையில் நடக்கிறான். பிறகு படுக்கிறான். உடல் ஜில்லிட்டுப் போகிறது! காவலன், போர்வையை இழுத்துச் சாக்ரடீசின் முகத்தை மூடுகிறான், சில வினாடிகளுக்குப்பின், சாக்ரடீஸ் போர்வையை முகத்திலிருந்து விலக்கி)
சாக்: கிரிட்டோ! ஒன்று சொல்ல மறந்தேன்...பக்கத்து வீட்டு அங்கிளிப்பியசுக்கு ஒரு கோழிக் குஞ்சு கடன் கொடுக்க வேண்டும். அதை மறக்காமல் கொடுத்துவிடு...
(அத்துடன் கிரேக்கப் பெரியவரின் மூச்சு நின்றது. கிரிட்டோ அழுதான். சின்னாள் சென்று கிரேக்கம் அவன் கல்லறையைக் கண்ணீரால் குளிப்பாட்டியது.)