பொருளடக்கம்சாக்ரடீஸ்

காட்சி 4 / 5

காட்சி — 4

காட்சி — 4

நீதிமன்றம்

மூல ஸ்கேன் 34, 35, 36, 37, 38, 39

X

கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.

நீதிமன்றம் (ஐநூறு பேர் கொண்ட ஏதெனிய நீதிமன்றம் கூடியிருக்கிறது. மரத்தினால் செய்யப்பட்ட பெஞ்சுகளில் நீதிபதிகள் அமர்ந்திருக்கிறார்கள். ஒரு சில பலகைகள் பாயினால் மூடப்பட்டிருக்கின்றன, நீதிபதிகளும் பொது மக்களும் இடையிலே அமைக்கப்பட்டுள்ள சிறுசிறு கம்புகள் பிரிக்கின்றன. மன்றத்தின் வலது புறத்திலே நீதி மன்றத் தலைவரின் ஆசனம் இருக்கிறது. அதன் பக்கத்திலே ஒரு ஆசனம். அதில்தான் இரண்டு கட்சிக்காரர்களும் பேச வேண்டியபோது வந்து பேச வேண்டும். இடதுபுறத்தில் தனித்தனியே உள்ள இரண்டு ஆசனங்களில் கட்சிக்காரர்களும் — அவர்களின் சாட்சிகளும் காட்சி தருகிறார்கள். 'Hedge Log' என்ற பெட்டியிலேயுள்ள முத்திரை உடைக்கப்பட்டு, குற்றப்பத்திரிகைகள் கொட்டப்படுகின்றன. குற்றப் பத்திரிகைகளைக் குமாஸ்தா படிக்கிறான்.)

“பித்தன்ஸ்பேட்டைச் சேர்ந்த மெலிடயசின் குமாரன் மெலிடயஸ், அலோபிசில் உள்ள சோபரன்னிஸ்கோவின் குமாரன் சாக்ரடஸ் மீது கீழ்க்கண்டவிதமாகக் குற்றம் சாட்டுகிறான். இந்த நாடும் இந்த அரசாங்கமும் ஒத்துக் கொண்ட கடவுள்களை சாக்ரடஸ் ஒத்துக்கொள்வதில்லை. இளைஞர்களை உபதேசம் செய்து கெடுக்க முயலுகிறான். கெடுத்தும் வருகிறான். அவனுக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும்.”

(அனிடஸ், லைகன் இருவரும் மெலிடசைப் போலவே சாக்ரடஸ் மீது குற்றம் சுமத்துகிறார்கள்.)

அனி : சாக்ரடஸ்!....நாட்டில் நடமாடக்கூடாத ஓர் ஆத்மா!..... ஜனநாயக அரசாங்கத்தைக் குறை கூறும் அந்த ஜந்து, உடல் முழுவதும் விஷங்கொண்டது!........ கேட்டார்ப் பிணிக்கும் சொற்களால்—கேளாரும் வேட்ப மொழியும் வார்த்தைகளால்—சேடுமலியும் கருத்துக்களை அள்ளி வழங்கி அரசாங்கத்திற்கு விரோதமாக, சட்டத்திற்கு விரோதமாக இளைஞர்களைத் தூண்டிவிடும் இழிகுணக்கிழவன்!

(சாக்ரடஸ் சிரிக்கிறான், கலகலவென்று.)

நீதிமன்றத் தலைவர் : என்ன சிரிப்பு? என்ன காரணம்?

சாக் : ஒன்றுமில்லை, தலைவ!....... ஆத்திரத்திலே அனிடஸ் — தன்னை மறந்து என்னைப் பார்த்துக் கிழவன் எனக் கேலி புரிகிறார். அதை நினைத்தேன்—சிரித்தேன்! கடல்நுரை போல் நரை விழுந்துவிட்ட தலை, எனக்கும்—அனிடசுக்கும்!....இல்லையா, சபையோர்களே!....என்ன அனிடஸ், உண்மைதானே?

மெலி : சாக்ரடீஸ்!....வழக்கும் விசாரணையும் உங்கள் இருவரின் தலையைப் பற்றி அல்ல! ...அதை ஞாபகப்படுத்த விரும்புகிறேன்,

சாக் : மிகவும் நன்றி, மெலிடஸ்!....ஆனால் ஒன்று!....எண்சாண் உடம்பிற்குத் தலையே பிரதானம் போல்....இந்த வழக்கிற்கும் தலையே பிரதானம்! என் தலையிலேயிருந்து சுடர் விட்டுக் கிளம்பும் அறிவு—அதை அழிக்க உன் தலையிலேயிருந்து புறப்படும் அர்த்தமற்றக் கற்பனைகள்-அனிடசின் தலையிலேயிருந்து பீறிட்டெழும் அரசியல் ஆணவம்—இந்த மூன்றுக்குமிடையே நடைபெறும் மும்முனைப் போராட்டம்—அதன் விளைவுதான் மெலிடஸ், இந்த வழக்கு!

நீதி : சாக்ரடீஸ்! உம்மீது சாட்டப்பட்டுள்ள குற்றங்களுக்கு நீர் சொல்லும் சமாதானமென்ன?

சார் : என் சமாதானங்களைக் கேட்டு இளகாத சட்டம் கூட இரக்கம் காட்டலாம்—ஆனால், இந்தச் சபை எனக்காக இரங்குமா?

அனி : பார்த்தீர்களா, கட்டத்தையும் சபையையும் அவமதிக்கிறான்! இப்படித்தான் இளைஞர்களையெல்லாம் கெடுத்தான்!

சாக் : இளைஞர்களை ஒரு கிழவன், எப்படியப்பா கெடுக்க முடியும் ?....நானென்ன, வாலிபர்க்கு வலை வீசும் விலை மாதா ?.... பருவ விருந்தளிக்கும் பாவையா ?

மெலி : மாதரிடம் இல்லாத மயக்குமொழி....வாலிபர்க்கு வலை வீசும் வனிதையரும் பெற்றிடாத வசீகரச் சொல் அலங்காரம்—வார்த்தை ஜாலம்—அடுக்குத் தொடர்—இப்படிப்பல மாயங்கள் கற்றவர் நீர்!........

சாக் : மந்திரவாதி என்றுகூடச் சொல்வாய் !........அன்புள்ள இளைஞனே!....இளைஞர்களை நான் செடுக்கிறேனா? இல்லை அவர்களாக வந்து கெடுகிறார்களா ?

மெலி : நீரே வலியச் சென்று கெடுக்கிறீர்!........சந்தை கூடும் இடங்களிலே, சந்து முனைகளிலே, சாலையோரங்களிலே, நடுத்தெருக்களிலே, நாலுபேர் சேருகிற மர நிழல்களிலே உமது பிரசங்கம் நடைபெறாத நேரமே கிடையாது!

சாக் : ஏதென்சு நகரத்திலே நான் ஒருவன்தான் இளைஞர்களைக் கெடுக்கிறேன்....இல்லையா?

மெலி : ஆமாம்.

சாக் : நீ கெடுக்கவில்லை?

மெலி : இல்லை!

சாக் : அனிடஸ்?

மெலி : இல்லை!

சாக் : சிற்பி லைகன்?

மெலி : இல்லை!

சாக் : இந்த நீதிபதிகள்?

மெலி : இல்லை!

சாக் : யாருமே இளைஞர்களைக் கெடுக்கவில்லை; எல்லாரும் இளைஞர்களுக்கு நன்மையே செய்கிறார்கள், என்னைத் தவிர!....

மெலி : ஆமாம்—ஆமாம்!

சாக் : இவ்வளவு பேரும்—ஏன்—ஏதென்சு நகரமே இளைஞர்களைத் திருத்தும்போது, நான் ஒருவன் அவர்கள் பாதையைத் திருப்பிவிட முடியுமா?........

மெலி : ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி விஷம்!... ....

சாக் : ஏன், இப்படியும் சொல்லலாமே....இருண்ட வீட்டுக்கு ஓர் ஒளிவிளக்கு!.... என்ன மெலிடஸ் திகைக்கிறாய்? அனிடசின் அரசியல் மேதாவிலாசத்தாலும் உன்னுடைய அளவுக்கு மீறிய கற்பனைக் கவிதைகளாலும் கவர முடியாத காளைகளை நான் கவருகிறேன் என்றால்—அந்தப் பெருமை எனக்கல்ல; என்னையும் ஏதென்சு நகரத்தையும் வாழ்விக்கத் தகுந்த அந்தக் கொள்கைகளுக்கே அந்தப் பெருமை!.... சபையோர்களே!.... வாலிபர்கள் என்னைச் சுற்றி வானம் பாடிகள் போல் வட்டமிடக் காரணம், என்னுடைய வார்த்தை அலங்காரம் அல்ல! வளங்குறையாத கருத்துக்கள் — தரங்குறையாத கொள்கைகள் — இந்தத் தரணிக்குத் தேவையான தங்கம்நிகர் எண்ணங்கள்!........ அழகு மொழியால், அலங்கார அடுக்குகளால், அரும்பு உள்ளங்களை மயக்குகிறேன் என்கிறார்களே, அவர்களைக் கேட்கிறேன், அந்த மொழி எனக்கு மட்டும் சொந்தமல்லவே—அனிடசும்; மெலிடசும் அதைப் பேசக்கூடாது என்று நான் தடைபோட்டது கிடையாதே! பேசிப் பார்க்கட்டுமே அவர்களும்—பாவம், பேசித் தோற்றவர்கள்! மொழியிலே அழகு குறைந்ததால் அல்ல—எண்ணத்தில் இழுக்கு நிறைந்துவிட்டதால்! இருள் படிந்துவிட்டதால்!

நாட்டிலே நீண்டநாட்களாகச் சூழ்ந்திருக்கும் இருளை விலக்க முயல்கிறேன், குறுகிய காலத்தில்! அதற்குப் பரிசு, ‘சாக்ரடீஸ் தீமை செய்பவன்—விண்ணிலும் மண்ணிலும் என்ன இருக்கிறது என்று தேடிப் பார்க்கும் நாத்திகன்—பொய்களை உண்மையாக்கும் புரட்டன்—இப்படியெல்லாம் பட்டங்கள்—குற்றச்சாட்டுகள்! பரவாயில்லை! எழுபது வயதுக்குமேல் முதன்முதலாகக் குற்றவாளிக் கூண்டிலே நிற்கும் எனக்கு; எப்படியும் மரண தண்டனை அளித்துவிட வேண்டுமென்று மெலிடஸ், அனிடஸ் போன்றவர்கள் துடியாய்த் துடிக்கிறார்கள். இன்னும சில வருடங்களில்—சில மாதங்களில்—அவர்களது ஆசை தானாகவே நிறைவேறி விடலாம்! அவ்வளவு கிழவனாகிவிட்டேன் நான்! அதற்குள் அவசரப்பட்டு, சாக்ரடீசைக் கொன்றோம்என்ற அநியாயப் பழியை ஏன் தேடிக்கொள்கிறார்களோ, தெரியவில்லை.

நீதி : சாக்ரடீஸ், பேச்சை நிறுத்தும்! மரண தண்டனை—சிறைவாசம்—நாடு கடத்தல்—அபராதம் வசூலித்தல்—இப்படிப் பல தண்டனைகள் உமக்குத் தரப்படலாம். அவைகளில் நீர் எதை விரும்புகிறீர்?

சாக் : நான் சாவதாக இருந்தால் ஏதென்ஸ் நகரத்திலே, முப்பது பேர் கொண்ட சபையின் ஆட்சி நடைபெற்றதே—அதில் நான் ஒரு நிர்வாக அங்கத்தினனாகப் பதவிவகித்து, ஆர்ஜீனா போர்க்களத்தில் மாண்டவீரர்களின் சவங்களையும், உடைந்த போர்க்கப்பல்களையும் எடுத்து வராத குற்றத்திற்காகத் தளபதிகள் விசாரணை செய்யப்பட்டபோது அந்தச் சபையின் அநீதியைக் கண்டித்து வெளியேறினேனே அன்றே கொல்லப்பட்டிருப்பேன்! அதைத் தொடர்ந்து, லீனான் என்பவனைக் கொலைசெய்துவர என்னையும் மற்ற மூவரையும் சபை அனுப்பியபோது, அதை மறுத்து வீட்டுக்குப் போய் விட்டேன்; அப்படி மறுத்ததற்கே எனக்கு மரண தண்டனை கிடைத்திருக்கும், அப்போதே! நல்லவேளை அந்தச் சபை கிரேக்க நாட்டு நீதிமன்றம், சாக்ரடீஸின் பிணத்தைக் காண வேண்டுமென்று விரும்பினால், அதற்கு நான் தடையாக இருக்க முடியாது!

சிறைவாசம் அனுபவிக்கிறேன் எனக்கேட்கலாம்—அதிகாரிகளின் நிரந்தர அடிமையாகச் சிறையில் கிடப்பதை விடச் செத்து மடிவது மேல்!

அபராதம் கட்டினால் விட்டுவிடுவீர்கள்! ஆனால், அந்த அளவுக்கு நான் பணக்காரனாக இருந்திருந்தால், அபராதங் கட்டக்கூடிய பணவசதி உள்ள அளவுக்குப் போதுமான குற்றங்களைச் செய்திருப்பேன்! நாடு கடத்தலை ஏற்கலாம்—வேறு நாட்டில் சுதந்திரமாகத் திரியலாம்—ஆனால், என்னுடைய கொள்கைகளை என்னுடைய.சொந்த நாடே ஏற்க மறுக்கும்போது பிற நாடுகளில் வரவேற்பார்கள் என்று என்ன நிச்சயம்? இதனால், எனதருமை ஏதென்ஸ் நகரத்தும் பெருமக்களே! நான் செய்த காரியங்களுக்குத் தண்டனையாக ஒலிம்பியாவில் நடக்கும் குதிரை ரதப் போட்டியில் ஜெயித்தவனுக்கு வீரமானியம் கொடுப்பதுபோல் எனக்கும் கொடுத்து, என்னை ஆனந்தமாக வாழ விடுங்கள்! என் இலட்சியப் பிரச்சாரத்திற்குத் தேவையான வசதிகளை இடைவிடாது செய்து தாருங்கள்! அதுதான் நீங்கள் எனக்கும் என் கொள்கைக்கும் காட்டுகிற மரியாதையாகும்!

(சபையோர் திகைப்பு)

நீதி: அலட்சியமான பேச்சு!....அவமதிப்பு!....வாக்கெடுப்பு நடைபெறட்டும்! சாக்ரடீசுக்கு மரணமா?........மன்னிப்பா?........ என்று சங்குகள் மூலம் வாக்களியுங்கள்!

(வாதியிடம் உள்ள பலகையிலும், பிரதிவாதிக்கு நேரே உள்ள பலகையிலும் நீதிமன்றத்தினர் தங்கள் இஷ்டப்படி “சங்கு”களை அடுக்குகிறார்கள். வாக்கெடுப்பு முடிகிறது, “சங்கு”கள் எண்ணப்படுகின்றன. ‘மரணம்’ என்று 281 சங்குகளும், ‘மன்னிப்பு’ என்று 220 சங்குகளும் கணக்கிடப்படுகின்றன. சபை, சாக்ரடீஸின் முகத்தைப் பார்க்கிறது. அவனது கண்களிலே புதிய ஒளி பிறக்கிறது.)

நீதி: மன்னிக்கும்படி 220 வாக்குகள்! மரண தண்டனை அளிக்கும்படி 281 வாக்குகள்! வாக்கெடுப்பின்படி, சாக்ரடீசுக்கு விஷம் தரப்பட்டு, மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும்!

சாக்: ஏதென்ஸ் நகரத்து நீதிமன்றம் பெருமைக்குரிய தீர்ப்பை அளித்து மௌனப் புன்னகை புரிகிறது! உலக சரித்திரத்திலே இடம் பெறுகிற இந்த ஏதென்சுத் தீர்ப்புக்கு ஆளாகி விட்ட பெருமை முதன்முதலாக எனக்குக் கிடைத்திருக்கிறது! ‘அறிவு விளக்கைக் கையிலே ஏந்து, என்று கூறியதற்கு அழிவைப் பரிசாகத் தரும் புண்ணிய காரியத்தை நிறைவேற்றி விட்டர்கள் ! 281—220!........முப்பத்தொரு வாக்குகள், இப்படித் திரும்பி விழுந்திருந்தால் சாக்ரடீஸ் காப்பாற்றப்பட்டிருக்கலாம்! அந்த வாக்குகளும் ஆயிரக்கணக்கான நாணயங்கள் செலவிடப்பட்டு வாங்கப்பட்டவை என்பதைக் கூறாமலிருக்க முடியாது! கவலையில்லை! இந்த மன்றத்தின் முறைப்படிப் பேசி வாழ்வதைக் காட்டிலும், என் முறைப்படிப் பேசிச் சாவது எவ்வளவோ மேன்மையானது!........ எனக்குத் தெரியும்; ஒரு மனிதன்—எதையும் பேசி, எதுவும் செய்து, மன்னிப்புக் கேட்கத் தயாராயிருந்தால் இதுபோன்ற தண்டனைகளிலேயிருந்து நிச்சயம் மீளலாம்! களத்தில் எதிரியின் காலில் விழுகிற போர் வீரனாக மாறிவிட நான் நினைத்ததில்லை. அதனால் மரணத்தைப் பரிசாகப் பெற்றிருக்கிறேன்.