காட்சி 2 / 5
காட்சி—2.
காட்சி—2.
மூல ஸ்கேன் 32
கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.
(அனிடஸ், மெலிடஸ், லைகன் மூவரும் ஆழ்ந்த யோசனையில் ஈடுபட்டிருக்கிறார்கள்.)
அனிடஸ் : குமுறும் எரிமலை! கொந்தளிக்கும் கடல்! இவைகளை விடப் பயங்கரமானவன் சாக்ரடீஸ்!.....அறிவாயுதமாம்..... அனைத்துலகும் அடிபணியும் அஸ்திரமாம்!.....அந்த ஆயுதம் கிரேக்கத்தில் தயாராகுமானால், நாம் தலைதூக்கவே முடியாது மெலிடஸ்! என்ன சொல்கிறாய், லைகன்?.....
லைகன்: நான் கல்லுக்குக் கடவுள் உருவம் தரும் சிற்பி!..... ஒரு காலத்திலே இந்த சாக்ரடீசும் என்னைப்போலச் சிற்பிதான்! இப்போதோ அவன் சிந்தனைச் சிற்பியாக மாறிவிட்டான்....பரவாயில்லை. கல்லைக் கடவுளாக்கும், நானும் கற்பனை மூட்டைகளுக்குத் தெய்வீக மெருகு தரும் கவிஞனாம் மெலிடசும், அரசியல் நிபுணனாம் நீயும் ஒன்றுசேர்ந்து விட்ட பிறகு.... சாக்ரடீஸ்—சமுத்திரத்துத் துரும்புதானே; அனிடஸ்.....!
மெலிடஸ் : சபாஷ் லைகன், சபாஷ்.....! பொதுமக்கள் கழுதைகளாயிருந்தால்தான் நாம் தூக்கி வைக்கும் பொய்மூட்டைகளைச் சுமப்பார்கள்! குருடர்களாய் இருந்தால்தான் நாம் காட்டுகிற வழியிலே நடப்பார்கள்! நாம் கீறிய கோட்டைத் தாண்டாத கிரேக்க மக்களுக்கு அந்தக் கிழவன் அறிவுக்கண் வழங்குவதற்குள் அவனை நாம் அழித்துவிட வேண்டும்........
(மூவரும் ஒரு முடிவோடு புறப்படுகிறார்கள்.)