காட்சி 1 / 5
காட்சி—1.
காட்சி—1.
சாக்ரடீசின் வீட்டு வாயில்
மூல ஸ்கேன் 29, 30, 31
கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.
அச்சிடப்பட்ட முன்னுரைக் குறிப்புஸ்கேன் 27, 28
ஃ சாக்ரடீஸ் கிரேக்கம் தந்த தத்துவாசிரியன்; ஏதென்ஸ் அளித்த ஒப்பற்ற அறிவுப் புதையல்!
ஃ அவன் தயாரித்த பிளேட்டோ இன்றைய அரசியல் கருத் துக்கள் பலவற்றிற்குத் தந்தையாக இருக்கிறான்.
ஃ மார்க்சும், எஞ்சல்சும் தயாரித்து லெனின்—ஸ்டாலின் போன்றோரால் புடம்போட்டு எடுக்கப்பட்ட பொன்னென பொது வுடைமைத் தத்துவம், பிளேட்டோ என்னும் சிந்தனை உலகக்கூடத் தில் தயாரானதுதான்!
ஹெகல் என்னும் ஜெர்மன் நாட்டு தத்துவஞானி பிளேட் டோவின் உலகக்கூடத்தைப் பயன்படுத்தித்தான் புளித்துப்போன நாஜிசக் கருத்துக்களுக்கு ‘ஜாடை’ காட்டினான். அந்தக் கட்டாரி யைக் கொண்டு தவறான வழியில் பயன்படுத்தித் தலை கொய்யப் புறப்பட்டனர், ஹிட்லர்—முசோலினி போன்ற புல்லர்கள்!
இது போன்ற நல்லனவற்றிற்கும் தீயனவற்றிற்கும் மூலப் பொருள் உதவியவன் பிளேட்டோ; அந்தப் பிளேட்டோவைத் தயாரித்தவனே சாக்ரடீஸ்!
வரலாறு கூறுகிறபடி சாக்ரடீஸ் ‘சாவுக்குப் பயப்படாத முதல் மனிதன்’ மட்டுமல்லன்; இதுபோன்ற பல தகுதிகளுக்கும் அவன் உரிமையாளன்!
அவன் பேச்சுக்களிலே சில நம் கருத்துக்களுக்குப் புறம் பானவையென்று சிலர் கூறலாம். ஆனால் அறிவியக்கம் இந்தத் தூசு நிகர் காரணங்களைக்கொண்டு அவனை ஒதுக்கிவிடத் தயாராக இல்லை.
மூதறிஞர் ராஜாஜி ‘சோக்ரதர்’ என்னும் நூலிலே சாக்ர டீசை சங்கராச்சாரியார்போன்ற ஆஸ்திகப்பழமாக்கியிருக்கிறார்.
நானோ அறிவுலக ஜோதியாக அவன் நடமாடியதை இந்தச் சிறு நாடகம் மூலம் இங்கே சித்தரித்திருக்கிறேன்.
சபைன் என்னும் பேராசிரியர், ஜனநாயகத்தின் தொட்டி லாகிய ஏதென்சில், சாக்ரடீஸ் போன்ற பெரியார் ஒருவர் சாகடிக் கப்பட்டது வியப்பாக இருக்கிறது என்று கூறுகிறார்; இதில் ஏதா வது திரை மறைவான அரசியல் இருக்குமோ என்றும் ஐயப் படுகிறார்.
இந்தப் பின்னணியோடு இனி படிக்கத் துவங்குங்கள்!
[குள்ள உருவம்—திடகாத்திரமான தேக அமைப்பு— சுழன்று கொண்டேயிருக்கும் ஒளிவிளக்கு போன்ற கண்கள் - தட்டையான மூக்கு - துடிப்பு நிறைந்த அகன்ற புருவங்கள் - தடித்த உதடுகள் - சிறிய தாடி - போர்வைபோல் உடல் முழுவதும் மறைத்திருக் கும் பட்டும் பஞ்சும் கலந்த சாதாரணமான ஒரே உடை - இவன்தான் கிரேக்கம் தந்த கீர்த்திவாய்ந்த அறிஞன் சாக்ரடீஸ்! ஏதென்ஸ் நகரத்து மூலைமுடுக்கு களிலே, சந்து பொந்துகளிலே, போவோர் வருவோ ரை நிறுத்திவைத்துத் தர்க்கவாதம்புரியும் இலட்சிய வாதி. அவனுடைய வீட்டு வாயிலிலே முதற்காட்சி ஆரம்பமாகிறது.]
(தெருவில் மக்கள் அங்குமிங்கும் போய்க்கொண்டிருக்கிறார்கள். சாக்ரடீஸ் சப்தமிட்டு அவர்களை அழைக்கிறான்.)
சாக்ரடீஸ் : ஏற்றமிகு ஏதென்சு நகரத்து எழில் மிக்க வாலிபர்களே! நாற்றமெடுத்த சமுதாயத்தில் நறுமணம் கமழ்விக்க—இதோ சாக்ரடீஸ் அழைக்கிறேன்; ஓடிவாருங்கள்! பச்சை ரத்தம் பாய்ந்தோடக் கச்சைக்கட்டிக் களம் செல்லும் காளையரே! உங்களைத்தான் கூவி அழைக்கிறேன்.... கூட்டம் கூட்டமாகச் சூழ்ந்து வாருங்கள்! வீரம் விலை போகாது, விவேகம் துணைக்கு வராவிட்டால்! தீட்டிய வாளும், தின வெடுத்த தோள்களிலே தூக்கிய ஈட்டியும்மாத்திரம் போதாது தீரர்களே! இதோ நான் தரும் ஆயுதத்தை எடுத்துக் கொள்ளுங்கள்! அறிவாயுதம்! அறிவாயுதம்!! இருட்டுமேனியும் குருட்டுமதியும் கொண்ட மடமைப் பைசாசத்தை ஒரே நொடியில் ஒழித்துக்கட்டும் புதிய போர்க்கருவி! புறங் காணா வீரர்களின் அகங்காட்டும் புரட்சிக் கருவி! புலிநிகர் பருவ இளைஞர்களே! என்னோடு-புறப்படுங்கள்! பகைவன் நம் நாட்டுக்குள்ளே புகுந்துவிட்டான்—படை எதுவுமின்றி!..... பாமரரின் உள்ளத்தைக் கொள்ளை அடித்து விட்டான்..... அறியாமை அந்தகாரத்திலே ஏதென்சு நகரத்தை மூழ்கடித்து விட்டான், மூடநம்பிக்கை எனும் அந்தப்பகைவன்! எழில் மிகுந்த ஏதென்சு அறிவுப் பொழிலாக மாற, ஆற்றல் நிறை தோழர்களே, அணிவகுத்துப் புறப்படுங்கள்!
(வாலிபர்கள், போர்வீரர்கள் சூழ்ந்து நின்று சாக்ரடீசின் உபதேசத்தைக் கேட்கின்றனர். சாக்ரடீசின் மனைவி எக்ஸேந்திபி என்பவள் கணவனின் போக்கிலே கசப்புக் கொண்டு வீட்டு வாயிற்படியிலிருந்த படியே வெறுப்புடன் பார்த்து நிற்கிறாள்........ சாக்ரடீசின் நண்பன், வயதான தோழன் கிரிட்டோ வருகிறான். அவனைக் கண்டதும்........)
சாக் : கிரிட்டோ! வந்துவிட்டாயா? வா, வா!....இதோ வயதான காலத்திலே வாலிபர்களை நல்வழிக்கு அழைத்துச்செல்லும் கடமையிலே விரைந்து நடக்கிறேன் நான்!.... எனக்கு வாய்த்த இளம் மனைவி, இரண்டாம்தாரம்....எக்ஸேந்திபி, எத்துணை ஆத்திரத்தோடு என்னைத் தடுக்கிறாள் பார்! பார்! பார்! அவள் கனல் பொழியும் விழிகளைப் பார்! விழிகளா அவைகள் ?.... பயங்கரமான மின்னலப்பா ; மின்னல்!....
எக்ஸேந்திபி : (கோபமாக) ஆமாம்; மின்னல்தான் ......இந்தக் கிண்ணாரக் கிழவருக்கு மனைவியின் கண்கள் மின்னலாகத் தான் தெரியும்....!
சாக் : என் செய்வது ..? நானோர் கற்பனைக் கவியாக இருந்தால், உன் பருத்த இடையைப் பார்த்து ஆகா, மின்னல் இடை என்பேன்!.... கிரிட்டோ....சாக்ரடீஸ்தான் பொய் சொல்ல மாட்டானே; உண்மை சொல்கிறேன்... மின்னலின் ஒளியை என் மனைவியின் கண்களில் காண்பதால் ! ........இல்லையா நண்பா ....!
எக்ஸ்: போதும் ! போதும் ! .... வீதியிலே போகிறவர் வருகிறவர்களோடு இருக்கட்டும், உமது விவாதங்களும், விளக்கங்களும், விளக்கெண்ணெய்த் தத்துவங்களும்! உமது முதல் மனைவி மிர்டோ, அவளைப் பிடித்த நல்ல காலம் செத்து விட்டாள் ! நானிருக்கிறேன் இப்படிக் கஷ்டப்பட ........ குடும்பம் — குடும்பத்திலே மனைவி — மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள் என்ற கவலை வேண்டாமா மனிதனுக்கு ?
சாக் : (சூழ்ந்துள்ள இளைஞர்களைக் காட்டி.........) இதோ, இந்தப் பிள்ளைகளுக்கும் சேர்த்துத்தான் நான் பாடுபடுகிறேன்.... அன்புள்ளவளே!... சூரியன், பூமிக்கும் அதைச் சுற்றியிருக்கும் கடலுக்கும், அவைகளிலே வாழுகின்ற எல்லா உயிர்களுக்கும் கடமையைச் செய்து வருகிறான் !....
எக்ஸ்: இப்படி விண்ணைப் பற்றியும் மண்ணைப் பற்றியும் பேசிக்கொண்டு, உம்மை நம்பி வந்த பெண்ணை நட்டாற்றில் விட்டுவிடும்....(தனக்குத்தானே கோபமாக) அடி, எக்ஸேந்திபி உனக்கு ஏண்டி இந்த வம்பு !....
எப்படியாவது கெட்டுத் தொலை! .... ஒழிந்து போ! .... இந்த தரித்திரம் பிடித்த வீட்டைவிடச் சுடுகாடு எவ்வளவோ மேல் !....இந்தத் தர்க்கவாதியைக் கட்டிக்கொண்டு அழுவதைவிடக் கழுத்தில் ஒரு சுருக்குக் கயிற்றைக் கட்டிக்கொண்டு சாகலாம் ! சாகலாம் ! .... சாகலாம் ! ....
(பேரிரைச்சல் போட்டபடி உள்ளே போகிறாள். அவள் போனதும் சாக்ரடீஸ் சிரித்துக் கொண்டே, மற்றவர்களைப் பார்த்து....)
சாக் : அப்பாடா, இடி இடித்து ஓய்ந்தது... மின்னல் வரும்போதே தெரியும், இப்படி இடி இடிக்கும் என்று!....இளைஞர்களே!.... இலட்சியவாதிகளுக்கு இப்படி எத்தனையோ இடையூறுகள்!... வீட்டிலே இதுபோல்! .... நாட்டிலோ, கேட்கத் தரமில்லை ! அரசியல்வாதி அனிடஸ் தன் அக்கிரமங்களைச் சுட்டிக் காட்டும் சூழ்நிலை எதுவுமே முளைக்கக் கூடாது எனக் கருதுகிறான். கற்பனை உலகத்தைச் சிருஷ்டித்துக் களிப்படையும் மெலிடஸ்; கற்களிலே, உலோகங்களிலே சிலைகளை வடித்துக் காட்டிச் சிறப்படையும் லைகன்—இவர்களெல்லாம் எனது அறிவுப் பிரச்சாரத்தால் அஸ்திவாரமே ஆட்டங் கொடுக்கிறதென ஆத்திரப்படுகிறார்கள்........ கிரேக்கத்தின் கீர்த்தி, புவனமறியாததல்ல ! அதற்காக இங்கு விழுந்திருக்கும் கீறல்களை மறைத்திட முயல்வது, புண்ணுக்குப் புனுகு தடவும் வேலையைப் போன்றது ! ....... அதனால்தான் தோழர்களே ! சிந்திக்கக் கற்றுக்கொள்ளுங்கள் எனச் சிரந்தாழ்த்தி உங்களை அழைக்கிறேன். அறிவு ! அகிலத்தின் எந்த மூலையிலிருந்தாலும் அதைத் தேடிப் பெறுவதற்காக உங்களை அழைக்கிறேன்!.... “உன்னையே நீ அறிவாய்!” இந்த உபதேசத்தின் உண்மையை உணர்வதற்காக என் உயிரினுமினியவர்களே! உங்களை எல்லாம் அழைக்கிறேன்....
(அப்போது எக்ஸேந்திபி ஒரு பாத்திரத்திலே தண்ணீரைக் கொண்டுவந்து, சாக்ரடீசின் தலையில் கொட்டுகிறாள்)
கிரிட்டோ : ஆ ! என்ன இது ? என்ன இது ?....
சாக் : பதறாதே கிரிட்டோ ! .... ஒன்றுமில்லை !.... முதலில் மின்னல் கண்டாய்; பிறகு இடி இடித்தது, மழையும் பெய்கிறது..... அவ்வளவுதான் !.....
(இளைஞர்களும் கிரிட்டோவும் சிரிக்கிறார்கள். எக்ஸேந்திபி கோபத்தோடு உள்ளே போகிறாள்.)