காட்சி 46 / 47
காட்சி 46
காட்சி 46
மூல ஸ்கேன் 162, 163, 164, 165, 166, 167, 168, 169
கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.
(அரசன் தூங்குகிறான். படுக்கையில் கொசுவலை கட்டப்பட்டிருக்கிறது. அல்லி வருகிறாள். கீழே தடுக்கி குப்புற விழுகிறாள். துப்பாக்கி கீழே விழுகிறது. அரசன் விழித்துக் கொண்டு எழுந்து விடுகிறான். அவள் அவசரமாக எழுந்து போய் கைத்துப்பாக்கியை கையில் எடுப்பதற்கு முன்பு, அவள் கையைப் பிடித்துக் கொள்கிறான். அவள் கையிலே துப்பாக்கி இருந்தும் சுட சுட முடியாமல், அவளது கை அவன் கையில் அகப்பட்டு விடுகிறது.)
அர: அல்லி! எங்கே வந்தாய்?
அல்லி: தெரியவில்லை! உம்மைக் கொல்வதற்காக வந்தேன்!
அர: என்னைக் கொல்லவா? ஏன்
அல்லி: எவ்வளவு நாளைக்கு எங்களை கொன்று வாழ முடியும் - கொலைக் கருவி கொலுமண்டபத்துப் பக்கமும் திரும்பும் என்பதைக் காட்ட வேண்டாமா, அதற்காக!
அர: கொன்றுவிடு! பயப்படவில்லை! ஆனால் என்னைக் கொன்று என்ன லாபம் என்பதைச் சொல்!
அல்லி: லாபமில்லை! நஷ்டமில்லாமலாவது இருக்குமல்லவா? உம்மை உயிரோடு விட்டால் நாளைக் காலையிலே - பொன்னழகன் கூட்டத்தைக் கைதுசெய்யும்படி உத்திரவு உதயமாகும் - புதுமைப் பித்தனை சுட்டுத்தள்ள சட்டம் பிறக்கும் - மக்கள் மன்றம் தடை செய்யப்படும் - இந்தக் காரியங்கள் எதுவும் நடக்காமல் தடுப்பதுதான் உம்மைக் கொன்றுவிடத் தீர்மானித்தோம்!
அர: நீ குறிப்பிட்ட எந்தக் காரியமும் நடக்காமல் நானே தடுத்து விட்டேன்! நாளைக் காலையிலே மணிமகுடபுரியை மக்கள் கையிலே ஒப்படைக்கப் போகிறேன். சீமான்கள் சபையிலே, இப்போது தீர்மானமும் நிறைவேறிவிட்டது.
அல்லி: புரிகிறது - புவியாளும் மன்னரே - உமது தந்திரம் புரிகிறது! பொய் சொல்லி தப்பிவிடலாம் என்று எண்ணுகிறீரா? உரிமைப் புதுவெள்ளத்தை அணைபோட்டுத் தடுக்கும் உமது உயிரை அணைக்காமல் திரும்ப மாட்டேன்!
அர: உயிரை அணைப்பாய் - அல்லி - நான் யார் என்று தெரிந்தால் என் உடலையே அணைப்பாய்!
(அல்லியை விடுகிறான். அல்லி துப்பாக்கியை அவன் மார்புக்கு நேராக நீட்டுகிறாள்)
அர: அல்லி - சுடு! சுட்டுக் கொன்று விடு! ஆனால் சுடுவதற்கு முன் நான் யார் என்று தெரிந்து கொள்!
(பீரோவிடம் திரும்புகிறான்.)
அல்லி: நில்லும்!
அர: துப்பாக்கியை எடுக்கப் போவதில்லை! இந்தத் துப்பாக்கியின் யார் என்று காட்டப் போகிறேன்! கொஞ்சம் இரு! (பீரோவிலிருந்து தாடி முதலியன எடுத்து) ஒரு வினாடியில் தெரிந்து கொள்வாய் நான் யாரென்று! இதோ! பார் அல்லி! என்னைப் பார்! நீ யாரை சுட வந்திருக்கிறாய் என்று பார்!
(புதுமைப்பித்தனாக நிற்கிறான்.)
அல்லி: ஆ! புதுமைப் பித்தனா?
அர: புதுமைப் பித்தன்தான்! புரட்சிக்காரி அல்லியின் காதலன்தான்! தவறிப் போய் இந்தத் தங்க வீட்டிலே பிறந்து விட்ட மனிதன்தான்! அல்லி! சுடப் போகிறாயா என்னை? நீ சுடுவாய்!! நீ ஒரு புதுமையான நெருப்பாயிற்றே! நீங்கினால் சுடுவாய் - நெருங்கினால் குளிர்வாய்!
(அல்லி எதுவும் புரியாது திகைத்து நிற்கிறாள் - பொன்னழகனின் குரல் மட்டும்)
குரல்: “ஆமாம் - எனக்குத் தெரியாமல்தான் போய் விட்டது - பொன்னழகனை சகோதரனாகவும், புவியாளும் மன்னனைக் காதலனாகவும் எண்ணுகிற ஒரு சதிகாரி எனக்குத் துணையாக வந்திருக்கிறாள் என்பது தெரியாமல்தான் போய்விட்டது - துரோகம் - அணைபோட்டுத் தடுக்க முடியாத துரோகம் - வெள்ளம்- ஐந்தாம் படைகள் இங்கேயே இருக்கின்றன - எந்த நேரத்திலும் இந்த மன்றத்தின் வாழ்வைத் தீர்த்துக் கட்டக் கூடிய அரசனுடைய கையாட்கள் நமக்குள்ளே உலவுகிறார்கள்.
(அல்லி நடுங்குகிறாள்.)
அல்லி: நான் ஐந்தாம் படைதான்! துரோகிதான்! பொன்னழகனின் குற்றச்சாட்டு உண்மையானது தான்! மாளிகை வாசலில் மடியிலே கிடந்தவள்தான் நான்! அரண்மனைக்காரனின் ஆலிங்கனத்திலே சிக்கியவள்தான் நான்!
அர: இல்லை அல்லி! இல்லவே இல்லை! நீ நினைப்பது போல நான் இருதயமற்ற மனிதனல்ல! உன்னை ஏமாற்றிய ஜாலக்காரனுமல்ல! ஜனநாயகத்தின் முன்னோடும் பிள்ளை, நான் என்பதைப் பெருமையோடு சொல்லிக் கொள்கிறேன்! நீ எந்தப் புதுமைப் பித்தனை நேசித்தாயோ அதே புதுமைப் பித்தன் தான்! மான் தோலிலே வேங்கை உலவுவதுண்டு - ஆனால், நான் வேங்கைத் தோலிலே உலவ வேண்டிய மானாகி விட்டேன்! மன்னன் வேடத்திலே வாழ வேண்டிய மனிதனாகி விட்டேன்! இந்தத் தவறுக்கு நான் பொறுப்பாளியல்ல! என் தங்கமே - என்னை நம்பு! மன்னன் வேடத்தை சில நாள் தாங்கினால்தான் மக்களுக்கு நிரந்தரமான நன்மை ஏதாவது செய்ய முடியும் என்று கருதினேன் - கருதியபடி காரியத்தில் வெற்றியும் பெற்றேன்! அல்லி! இன்னும் என்னை நம்ப மாட்டாயா? - நாளைக்கு காலையில் மக்கள் ஆட்சி மலரப் போகிறது! மன்னன் முடி துறக்கப் போகிறான்! சீமான்கள் சபை கலைக்கப்படப் போகிறது! நம்பு, அல்லி! என்னை நம்பு!!
அல்லி: ஊஹும்.. மக்கள் மன்றத்தின் கட்டளையை நான் நிறைவேற்ற வேண்டும்! அதோடு அரசனின் காதலி என்ற அவமானச் சின்னத்தை உமது ரத்தத்தால் கழுவிக் கொள்ள வேண்டும்!
புது: அப்படியானால் - கட்டளையை நிறைவேற்று! அல்லி! காதலனைக் கொன்று போட்டு விட்டுப் போ! இத்தனை நாள் நம்மிடையே வளர்ந்த நேசமும், பாசமும், உன் நெஞ்சிலே இரக்கத்தை உண்டாக்கவில்லை என்றால் - நான் என்ன செய்ய முடியும்? உத்திரவை நிறைவேற்று! - உன்னை உயிராகப் பாவித்தவனின் உயிரைப் போக்கு! எந்த அகன்ற நெஞ்சிலே, உன் அழகான முகத்தைப் பதித்துச் சாய்ந்து கிடந்தாயோ - அந்த நெஞ்சிலே குறி பார்த்துச் சுடு! வேண்டாம் - வேண்டாம்! என் நெஞ்சிலே சுடாதே! அங்கே என் காதலி அல்லி இருக்கிறாள்! அவள் மீது துப்பாக்கி ரவைகள் பாய்ந்து விடும்! என் தலைக்குக் குறி வைத்துக் கொல்லு! அன்பே! ஆருயிரே! - அருமருந்தே! உன் ஆசைக்குரியவனை ஒரு நொடியில் தீர்த்து விடு! உம் சுடு! இரு, இரு, இதோ வருகிறேன்! புதுமைப் பித்தனை சுட்டு விடாதே! அவன் உன் காதலன்! காதலனை சுடக் கூடாது! உன் பகைவன் அரசன் தான்! அரசனைச் சுடு! சுட்டுத் தள்ளு!
(புதுமைப் பித்தன் வேடத்தைக் கலைத்து அரசனாக நிற்கிறான் - அல்லி, மெய்மறந்து நிற்கிறாள்.)
அர: ம்.. சுடு... அல்லி.. இதோ உன் பகைவன் - மணிமகுடபுரியின் மன்னன்! உன்னை மயக்கிய புதுமைப் பித்தனல்ல - அவன் ஒழிந்தான்! உன் கண் எதிரே இனி அவன் தோன்ற மாட்டான்! சுட்டு விடு - துவளாதே! மடமடவென்று சுட்டுத் தள்ளு! கொஞ்சம் பொறு... அல்லி! உன்னை ஆசை தீர ஒருமுறை நினைத்துக் கொள்கிறேன்! நாம் ஆடியதையும் பாடியதையும் மனக் கண்ணிலே நிறுத்திக் கொள்கிறேன்! ஆனந்தமாக ஒரு பெருமூச்சு விட்டுக் கொள்கிறேன்! மலர்க்கரம் படைத்தவளே - என் மனம் நிறைந்த மாதரசி - காதலி - அல்லி - காதலி, காதலி - சுடு.. சுடு!
(கண்களை மூடிக் கொண்டு பேசுகிறான் - துப்பாக்கி சப்தம் - பயங்கர இசை - கண்ணை விழிக்கிறான் - தான் சாகவில்லை - அல்லி, தன்னையே சுட்டுக் கொண்டு கீழே கிடக்கிறாள்.)
அர: ஆ.. அல்லி...!
(திகைக்கிறான் - அப்போது பொன்னழகன் - துப்பாக்கியை நீட்டியபடி அங்கு ஓடிவந்து)
பொன்: நில்! அக்கிரம அரசனே! அடப்பாவி! அல்லியைக் கொன்று விட்டாயா? இதே பழிக்குப் பழி!
(அரசனைச் சுடுகிறான். அரசன் கீழே விழுதல் - காவலர் ஓடிவந்து பொன்னழகன் முதலியோரைச் சூழ்தல்.)
அர: (எழுந்து திணறியபடி) நில்லுங்கள் - காவலர்களே! அவர்களை யாரும் தொடாதீர்கள்! நானாகவே இந்த முடிவைத் தேடிக் கொண்டேன்! பொன்னழகரே - அவசரப்பட்டு விட்டீர்! அல்லியை நான் கொல்லவில்லை! அவளே சுட்டுக் கொண்டாள்! உம்மீதும் குற்றமில்லை! யாரோ, அவசரக்காரர்கள் சீமான் சபையின் முதல் தீர்மானத்தை மட்டும் உம்மிடம் கூறியிருக்கிறார்கள்? முடிவான தீர்மானம் என்ன என்பது உமக்குத் தெரியாது! மரண மூச்சு விட்டுக் கொண்டிருக்கும் நான், உங்களிடத்தில் ஒரு மகிழ்ச்சிகரமான செய்தியைச் சொல்லப் போகிறேன் - மணிமகுடபுரியிலே நாளைக் காலை முதல் மக்களாட்சி உதயமாகப் போகிறது! சீமான்கள் சபையிலேஅந்த முடிவை எடுத்து விட்டுத்தான் தூங்குவதற்கு வந்தேன் - நீண்ட தூக்கத்திற்கு நீங்களே ஏற்பாடு செய்து விட்டீர்கள், சந்தோஷம்! பல நாட்களாக நான் பட்ட பாட்டிற்குச் சரியான பலன் கிடைத்து விட்டது! மக்களின் மனதை வளப்படுத்தியிருக்கிறேன் - போதுமான அளவுக்கு! புதிய ஆட்சியை நிர்வகிக்கிற அளவுக்கு! ஜாதி - மத - பேதங்கள் - கடவுள் கொள்கைகள் - மூட நம்பிக்கைகள் அனைத்தும் ஒழிந்த மக்களரசுக்கு வழி வகுத்துவிட்ட பெருமையோடு உங்களிடமிருந்து விடைபெற்றுக் கொள்கிறேன் பொன்னழகரே! பலாத்காரத்தால் செய்து முடிக்க முடியாதகாரியத்தை - அப்படிச் செய்தாலும் நிலைக்க முடியாத காரியத்தை - அமைதியான முறையிலே செய்து முடித்து விட்டேன்; அறிவுப் புரட்சி - அதனையொட்டி அரசியல், பொருளாதாரப் புரட்சி - என்ற எனது கொள்கை வெற்றி பெற்று விட்டது! என்ன திகைக்கிறீர்கள்? என்னடா இது - புதுமைப் பித்தன் சித்தாந்தம் போல இருக்கிறதே, என்று பார்க்கிறீர்களா? புதுமைப்பித்தன் மட்டுமல்ல; மணிமகுடம் பத்திரிகையின் ஆசிரியர் கூட பேசுவது போலத் தெரியும்! இதோ பாருங்கள் தோழர்களே! நன்றாகப் பாருங்கள்! உங்கள் தோழனைப் பாருங்கள்! (புதுமைப் பித்தனாக மாறிக் கொண்டு) மன்னனாகப் பிறந்தேன் - மதமும் அதிகாரமும் வகுத்த நியதிப்படி! மக்கள் தொண்டனாக வாழ்ந்தேன் - இதோ மக்கள் தொண்டனாகச் சாகிறேன்! தோழர்களே! நாளை முதல் புதிய அரசு - புதிய கொடி - புதிய வாழ்வு - புதிய பொதுத் தேர்தல் - அந்தத் தேர்தலிலே போட்டியிடுங்கள்! வெற்றி நம் பக்கமேதான்! ஏழை மக்களின் தூதுவர்கள் பாராளும் உறுப்பினர்களாக அமையட்டும்! பழைய பத்தாம்பசலி ஆட்சி ஒழியட்டும்! பகுத்தறிவு ஆட்சி உதயமாகட்டும்! பலாத்காரத்தை இன்றோடு மறந்து விடுங்கள் - அது என் ரத்தத்தோடு உறைந்து போகட்டும்! வருகிறேன் தோழர்களே - வருகிறேன். அல்லி.. அல்லி! (அவளை அணைத்தபடியே) வருகிறோம்! புதுமைக் காதலர்கள் இருவரும் உங்களிடம் விடைபெற்றுக் கொள்கிறோம்! பொன்னழகரே! எங்கே? ஒரு முறை வாழ்த்து முழங்குங்கள்! மக்கள் மன்றம் வாழ்க! மக்கள் மன்றம்.. வாழ்க!
(அனைவரும்) வாழ்க!
அர: வாழ்க, வாழ்க! தாயகம் வாழ்க! தன்மானம் வாழ்க!! சமத்துவம் வாழ்க!! வாழ்க...