காட்சி 24 / 21
காட்சி 24.
காட்சி 24.
மூல ஸ்கேன் 125, 126, 127, 128, 129
கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.
மகாநாடு:
(திரவியம்பிள்ளை, தசாவதாரம், கண்ணன் ஆகியோரும் கூட்டத்தினரும்)
தசா:— மகாஜனங்களே! இப்போது நம்முடைய காங்கிரஸ் ஜனநாயக சோஷலிச மகாநாட்டைத் திறந்துவைப்பதற்காக நான் முன்வந்து நிற்கிறேன். நம்முடைய காங்கிரஸ் மகாநாடு என்றாலே ஜனங்கள் அதிகமாக வருவதில்லை... இப்போது ஜனங்களைக் கூட்ட வேறு ஏற்பாடெல்லாம் செய்திருக்கிறோம்... ஜனங்கள் அதிகமாக வரவில்லை என்பதற்காக காங்கிரசுக்குப் பலமில்லை—மதிப்பில்லை—என்று கூறிவிட முடியுமா? ஜனங்கள் காங்கிரசைப் பற்றிய செய்திகளை எல்லாம் பத்திரிகைகளில் படித்துத் தெரிந்து கொள்கிறார்கள்... அதனால்தான் பேச்சுக் கேட்க வருவதில்லை. நாம்ப இங்கே கொச்சையாப் பேசுறதைக்கூட பத்திரிக்கைக்காரன் ஒழுங்கா இலக்கண சுத்தமா போட்டுடுரான்... நாட்ல படிக்கத் தெரிஞ்சவா கொஞ்சம்தானோ... மிச்சமிருக்கிற படிக்காதவா வரக்கூடாதோன்னு கேட்கலாம்... படிக்காதவுங்க, படிச்சவங்களைக் கேட்டுத் தெரிஞ்சிக்கிறாங்க... இதான் சோஷலிசம். இந்த சோஷலிசத்தை இப்ப நான் ‘கட்’ பண்ணி... இல்லை... இல்லை... சோஷலிச மகாநாட்டை... திறந்து வைத்து... என்னுடைய ஆசனத்தில் நான் அமர்கிறேன்... அடுத்து... நீண்டகாலமாக... காங்கிரசில் இருந்து உழைத்து வரும்... ஏழைபங்காளர்... சோஷலிச வழிகாட்டி... நமது தீரர் திரவியம் பிள்ளை அவர்கள் மகாநாட்டுக்குத் தலைமை வகித்துப் பேருரையாற்றுவார்கள்...
(ஆர்ப்பாட்டமாக எழுந்து திரவியம்பிள்ளை வருகிறார். மாலை சூட்டப்படுகிறது)
திரவியம்:— மகாஜனங்களே! சகோதர, சகோதரிகளே! ஜனநாயக சோஷலிசத்திற்கு முக்கியமான தேவை... திட்டம்... ஐந்தாண்டுத் திட்டம். திட்டம்... இல்லா விட்டால் நம்மைப் போன்றவர்கள் வாழ முடியாது... ஐந்து என்பது இந்தியாவுக்கே ஒரு தனியான நம்பர்! பஞ்ச பூதம் ஐந்து—ஐம்புலன் ஐந்து! பஞ்ச பாண்டவர் ஐந்து—நேருவின் பஞ்ச சீலம் ஐந்து! எல்லாத்தையும் விட விசேஷம்... சாதனுடைய கை கால்களிலே விரல்கள் அஞ்சு...
தசா:— மனித அறிவே கூட அஞ்சு தானுங்களே...
திர:— யோவ்... அது நாலுய்யா... ஆதலாலே மகா ஜனங்களே! நம்ப நாட்டுக்குப் போடப் பட்ட திட்டமும் அஞ்சாண்டுத் திட்டம்... இந்த ஐந்தாண்டுத் திட்டம் பணக்காரன் வீட்டுக் கதவைத்தான் தட்டுச்சு... ஏழை வீட்டுக் கதவைத் தட்டவே... அப்படின்னு சில பேரு பேசுராங்க... ஏழை வீட்டுக்குக் கதவு ஏது; இருந்தாவுல்ல தட்டுறதுக்கு!... பணக்காரன் வாழ்ந்தாதான் ஏழை வாழமுடியும்... ஒரு உதாரணம் சொல்றேன்... ஆத்துல தண்ணீர் நிறையப்போனாத்தானே வாய்க்காலில் தண்ணி வரும்... பணக்காரன் ஆறு மாதிரி... ஏழை, வாய்க்கால் மாதிரி... சோஷலிசத்தைக் கேட்டுட்டு முதலாளிகளோ நிலப்பிரபுக்களோ பயப்படவேண்டியதில்லை. அதை விளக்கிப் பயத்தைப் போக்கத்தான் இந்த மகாநாடு... இதில்...
திர:— என்னைவிட விளக்கமா... நம்ப கண்ணன் பேச இருக்கிறாரு... அவர்... இனிமே தீவிர சோஷலிசம் எல்லாம் பேசுறதை விட்டுட்டு... நம்ப ளோடசேர்ந்து காங்கிரஸ் வெற்றிக்கு உழைக்கப் போராரு... நம்ப தலைவர் காமராசரே; தர்மகர்த்தா சோஷலிசம் போதும்னு சொல்லிட்டாரே... பணக்காரர்கள்... அதாவது நாங்கள்லாம் தர்மகர்த்தா மாதிரி நடந்துக்கணும்... தர்மகர்த்தா, எப்படி நடப்பாங்கன்னு உங்களுக்குத் தெரியும்... பணக்காரனை ஒழிப்போம்னு சொல்லலாமே தவிர... முடியுமா?... “பணக்காரர்களே! கொஞ்சம் விட்டுக்கொடுங்க” அப்படின்னு கெஞ்சிக் கேக்கிறதுதான் காங்கிரஸ் சோஷலிசம்; நமக்கேத்த சோஷலிசம்!... இல்லேன்னு பட்டக்காரரு—செட்டி நாட்டாரு—பொள்ளாச்சியாரு—வட பாதிமங்கலத்தாரு—வாண்டையாரு—வகீசனாரு—மூப்பனாரு—உடையாரு—இப்படிப் பெரிய பெரிய கோடீஸ்வரர்கள், லட்சாதிபதிகள், பஸ் முதலாளிகள், ஆலை அரசர்கள், நிலப்பிர புக்கள் எல்லாம் காங்கிரசில் இருப்பாங்களா?
எது எப்படியிருந்தாலும் ஏழைகளுக்காகப் பாடுபடு கிற ஒரே கட்சி காங்கிரஸ்தான்...
இப்பக் கூட அஞ்சாறு பெரிய கம்பெனிகளுக்கு ஒரு கோடி ருபாய்வரையில் நிலவரியை ரத்துச் பண்ணியிருக்கிறோம்...
விவசாயிகளுக்கு நில வரியை ரத்துப் பண்ணக் கூடாதான்னு கேப்பான்... மனுஷனுக்கா வரி? நிலத்துக்குத்தானே? அதைப் போயி ரத்துப்பண்ணச்சொல்லிமனுஷன் கேக்கிறது நியாயமா?...
விலைவாசி ஏறிட்டு துன்னு சொன்னா... என்ன அர்த்தம்? மக்களுக்கு வாங்குற சக்தி அதிகமாயிட்டுது! அரிசி கிடைக்கலே! ஒரே கூச்சல்! எப்படிக் கிடைக்கும்? நாட்ல; வருஷத்துக்கு ஒரு கோடி பிள்ளை அதிகமாகப் பிறக்குது...
தசா:— அதே மாதிரி சாவுற கணக்கும் இருக்குல்லே!
திர:— அதை ஏன்ய்யா இப்ப சொல்றே?
தசா:— அதுக்கும் அரிசிச் செலவு இருக்கே... வாய்க்கரிசி.
திரவி:— ஓ... அதுக்காகச் சொன்னியா? பரவாயில்லை. அப்புறம் பாருங்க... பஸ் தொழிலை தேசீயமயமாக்கு—பாங்குகளை தேசீய மயமாக்கு—பஞ்சாலைகளைத் தேசீயமயமாக்கு... அப்பத்தான் சோஷவிசங்கிறான்... முடியுமா? இப்பவே நம்ப சர்க்கார் நடத்துற பஸ்தொழிலிலே லட்சக் கணக்கிலே நஷ்டம். கேவலம், ஒருபால்பண்ணை மாதவரத்திலே! அதில் 40 லட்சம் நஷ்டம்... என்னாமயம் வேண்டியிருக்கு... பொதுவா... நம்ப எலக்ஷனுக்கு... ஒரு மந்திரம் மாதிரி சோஷலிசம் சோஷலிசம்னா? கருப்பா? சிவப்பா? பச்சையா? நீலமா?... காங்கிரஸ் சோஷலிசம் இருக்கே; அது ஒரு பாரிஜாதப்பூ!... அதை யாராலும் பறிக்க முடியாம இருந்தது... அதை ரொம்பபிரயாசைப்பட்டு பறிச்சிட்டு வந்தவர், காமராசர்! இதோ பாருங்க... அந்தப்பாரிஜாதப்பூவை... உங்களுக்குக்காட்டுரேன்...
[ஒருவன் வெள்ளித் தட்டில் ஒரு பெரிய பூவுடன் வருகிறான்]
திர:— பார்த்தீர்களா... பாரி ஜாதப்பூவை! காங்கிரஸ் சோஷலிசப் பூவை!... இதைப்பற்றி வர்ணிக்க எனக்குத் திறமையில்லை... நாட்டுக்கே நறுமணம் வீசும் இந்தப் பாரிஜாதப்பூவைப் பற்றி இப்போது கண்ணன் பேசுவார்...
கண்:— (பூவை வாங்கிக்கொண்டு பேசுகிறான்) ஆகா!... பாரிஜாதப் பூவே!... காங் கிரசிலேயள்ள கனதனவான்களுக்குக் கருணை கட்ட வந்த பாரிஜாதப் பூவே! ஏழை எளியவர்களின் ரத்தத்தை எடுத்துச் சிவப்பு வர்ணம்பூசிக்கொண்ட பாரிஜாதப்பூவே!... பாட்டாளிகளை—உழவர்களை—நெசவாளிகளை—நித்த நித்தம் வேலை செய்து ரத்தக்கண்ணீர்வடிப்பவர்களை கீழ்மட்டத்தில் வீழ்த்தி விட்டு, பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாக்கும் பாரிஜாதப்பூவே! ஆலை அரசர்களை—ஐஸ்வர்யச் சீமான்களை—வட்டிக்கடை வேந்தர்களை—குட்டிக் குபேரர்களை இன்பபுரியில் மிதக்கவிடும் பாரிஜாதப் பூவே!
திரவி:— (திகைப்புடன்) ஏ, ஏ... என்ன பேசுறே!...
கண்:— மார்க்ஸ் உயிரோடு இருந்தால் தொழிலாளிகளுக்குப் பாடுபடமாட்டார் முதலாளிகட்குத்தான்? பாடுபடுவார்—ஆகவே எனக்கு சோசவீசத்தில் நம்பிக்கையில்லை என்று எஸ்.கே. படீல் அவர்களைப் பேச வைத்த பாரிஜாதப்பூவே! காங்கிரஸ் சோஷலிசத்தில் பொதுத் துறையும் இருக்கும் தனியார்துறையும் இருக்கும் என்று கலப்பட சமதரம் உருவாக்கவைத்த பாரிஜாதப்பூவே! அரிசிமில்களைத் தேசிய மயமாக்க வேண்டுமென்று அன்றொருநாள் புவனேஸ்வரா மகாநாட்டில் போடப்பட்ட தீர்மானத்தைக்கூட காற்றிலே பறக்கவிட்ட பாரி ஜாதப்பூவே! பாராரூமன் றத்தில் காங்கிரஸ் சார்பில் பதினாலு மகாராஜாக்ககளைத் தேர்ந்தெடுத்திருக்கிற பாரிஜாதப்பூவே! வெள்ளரட்டை விழுங்காதே விட்டுவிடு என்று வேங்கையிடம் கெஞ்சும் முட்டாளைப் போல, “பணக்காரர்களே! ஏழைகளுக்கு விட்டுக்கொடுங்கள்” என்று அவர்கள் காவிலே வெட்க மில்லாமல் விழுகின்ற நிலையை ஏற்படுத்திய பாரிஜாதப்பூவே!... நீ பளபளப்பிலேதான் பாரிஜாதப்பூ! பார்வைக்குத்தான் பாரிஜாதப்பூ!... நீ உண்மையில்... ஊரையடித்து உலையில் போடுகின்றவனை வாழவைத்து; உழைப்பவனை ஏமாற்றி ஓட்டுப்பறிக்கிற காகிதப்பூ! காகிதப்பூ!! லட்சோப—லட்சம் விவசாயிகளுக்கு, தொழிலாளர்களுக்கு ஏழை நடுத்தர மக்களுக்கு, காங்கிரஸ் காட்டும் சோஷலிசம் வெறும் காகிதப்பூவேதான். காகிதபூ மணக்காது; காங்கிரஸ் சமதர்மம் கிடைக்காது! புரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே! புரிந்து கொள்ளுங்கள்.
புறப்படுங்கள், காங்கிரஸ் எனும் சிலந்திக் கூட்டை விட்டு! நான் வெளியேறி விட்டேன். இந்த வேஷக்கார சோஷலிசவாதிகளின் கூடாரத்திலிருந்து வெளியேறி விட்டேன். நீங்களும் புறப்படுங்கள்... உண்மையான சோஷலிச முகாம்... அறிவொளிவீசும் அண்ணாவின் தலைமையில் இயங்கும் திராவிட முன்னேற்றக் கழகம்தான்... வாரீர், வாரீர்!
காகிதப்பூ!...
மற்றவர்கள்:— மணக்காது!
கண்:— காங்கிரஸ் சமதர்மம்
மற்:— இனிக்காது!
(கூட்டம்கலைகிறது; திரவியமும்தசாவவதாரமும் கட்டிக்கொண்டு அழுகிறார்கள்)