காட்சி 6 / 21
காட்சி: 6.
காட்சி: 6.
மூல ஸ்கேன் 93, 94
கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.
இடம்: ரோடு.
[மரகதமும்-அவள் தோழி மாலாவும் நாடகம் முடிந்தபின் பேசிக் கொண்டு வருகிறார்கள்.]
மரகதம்: மாலா! வேண்மாள் வேஷம் உனக்கு பொருத்தமாயிருந்ததடி.... ஆகா! அந்சு, அண்ணா மாதிரி நடிச்சாரே; சொம்பு வீரமாதம்......
மாலா: மரகதம்! இப்படி ஒரு நாடகத்தை ஏற்பாடு பண்ணி... தமிழ்த் தியாகிகள் தினத்தை சிறப்படையச்செய்த உன்னை... எல்லா மாணவர்களும் பாராட்டுகிறார்கள்... நீ, செயலாளராக வந்த பிறகு... மாணவர் மன்றத்துக்கே தனி மதிப்படி மரகதம்... ஏன்! மங்கையர் குலத்துக்கே தனி மதிப்புத்தான்...
மரகதம்: ஏ.... ஏ.... மாலா!... ரொம்ப புகழ்ந்திடாதே!... மங்கையர் உலகத்திற்கு நாம் என்ன பெரிய சேவை செய்து விட்டோம்?... எத்தனையோ தியாக பத்தினிகள் இந்தத் தென்னகத்தின் ஒளி விளக்குகளாக இருந்திருக்கிறார்கள். இப்போதும் இருக்கிறார்கள்!...
மாலா: இப்போதும் இருக்கிறார்களா? யார் மரகதம்?
மரகதம்: கணவனையும் - உடன்பிறப்பையும் போரிலே இழந்து விட்ட பிறகும் சின்னஞ் சிறு பாலகனுக்குச் சீவி முடித்துச் செருமுனைக்கு அனுப்பி வைத்த தாய் களைப்பற்றிய வீரவரிகளைப் புறநானூற்றிலே படித்திருக்கிறோம்... ஆனால்... நான் இப்போது இருப்பதாகச் சொல்லுகிற அந்தத் தியாக மகளிர்க்குப் புறநானூறுப் பாட்டு இல்லை... ஆனால்... அந்த வீரத்தாய்மார்கள் இருக்கிறார்கள் மாலா; இருக்கிறார்கள்.
மாலா: மரகதம்?
மரகதம்: தமிழ்காக்க நடைபெற்ற கிளர்ச்சியில் தமிழகமே தணற்காடு — ரணக்காடாக மாறியபோது, தன் ஆருயிர்க் கணவனை அறப்போர்க் களத்தில் உயிரோடு அள்ளிக்கொடுத்து விட்டுத் தாலியறுத்து தவித்து நிற்கும் தமிழ்த்தாய் ஒருத்தி இருக்கிறார்கள்; எனக்குத் தமிழ் உணர்ச்சி ஊட்டிக்கொண்டு!... காண வருகிறாயா; அந்தக் காவேரி என்னும் கனற்பிழம்பை! கற்பின் உருவை! காண வருகிறாயா மாலா!
மாலா: மரகதம்! அப்படிப்பட்ட தமிழ் அன்னையின் காலடி மண்ணை எடுத்துத் தலையில் போட்டுக்கொண்டால்... கோழைகளின் உள்ளமும் வீரங்கொள்ளுமே! எனக்குக்காட்டு மரகதம்; அந்தக் கற்புக்கரசியை!
மரகதம்: வா, போகலாம்...
(இருவரும் போகிறார்கள்)
(திரை)