காட்சி 61 / 61
காட்சி 61]
காட்சி 61]
மூல ஸ்கேன் 184, 185
கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.
[சுமதியின் வீடு
விதவை முத்தாயி — அவள் தோழி சுமதி—இருவரும் இருக்கிறார்கள். பாளையக்காரர் குடும்பம் முழுவதும் அவள் எதிரே இருக்கிறது, சாமியார் உட்பட!
பலதேவர்: முத்தாயி! — ஏன் எங்களோடு பேசமாட்டேன் என்கிறாய்...
முத்தாயி: என் பெருமூச்சுகளுக்குப் பேசும் சக்தியில்லை என்று கருதுகிறீர்களா?
பூங்காவனம்: கண்ணே முத்தாயி—சொல்வதைக் கேள். எங்களோடு வந்துவிடு! என் மகனைப் பார்ப்பது போல உன்னையும் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
முத்தாயி: மகன்! இன்னொரு முறை சொல்லாதீர்கள். உங்கள் மாளிகை கெளரவம் மண்ணாகிவிடும்! வெட்கமில்ல உங்களுக்கு; முத்தன் உங்கள் மகன் என்று சொல்லிக்கொள்ள... தாயாம் தாய்! நாயைப்போல மகன் நடத்தப்பட்டபோது, வாயை மூடிக்கொண்டிருந்த தாய்! பசியால் மகன் வாடிய சேதியை ருசியோடு கேட்டுக் கொண்டிருந்த தாய்! மகன் என்ற பாசத்தை மறைத்துக் கொள்ளத் தூண்டியது உங்கள் மாளிகை வாசம் - புத்திரன் என்று கூறிக் கொள்ளத் தடையாயிருந்தது உங்கள் போலி கெளரவம் - கண்யம் - மதிப்பு - மரியாதை - மண்ணாங்கட்டி எல்லாம்! பாளையக்காரர் பெருமைக்குப் பங்கம் வரக்கூடாதென்று தானே - பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்த மகன் - பரதேசி போல நடத்திக் கொண்டிருந்தீர்கள்? எங்கே தாயே! அந்தத் திமிர்? திமிருக்கு போட்ட திரை கிழிந்துவிட்ட காரணத்தால் தேடி வந்தீர்களோ மகனை! - மாளிகை கெளரவத்தைப் பாதுகாக்கும் தாய் - மது வெறிக்கு விசிறி வீசும் தகப்பன்! பத்தினியாக வேஷம் போட்டாள் தாய்! பக்தனைக் கூத்தாடினை தகப்பன்! கற்பிழந்தவள் கன்னிகையாள். சாமி, சாமியாக வாழ்கிறான். ஏன்? ஏன்? ஏன்? ரத்தக் கண்ணீரைக் கேளுங்கள் பதில் சொல்லும்! போலி கெளரவம் - போலி பக்தி - இவை இரண்டையும் கேலி செய்கிறது தூக்கு மாட்டப்பட்டு சாய்ந்த என் முத்தனின் பிணம்! மதிப்பு கெடக்கூடாது - மகன் கெட்டாலும் பரவாயில்லை என்பவள் மாதாவாம் - மக்கள் ஆதரவு குறையக்கூடாது - மகான் என்ற பெயர் மறக்கூடாது - மகனைப்பற்றி கவலையில்லை யென்றவன் பிதாவாம் - இந்த மகா நல்லவர்கள் மருமகளை அழைக்க வந்திருக்கிறார்கள் - மானங்கெட்டவர்கள் - உங்களுக்கெல்லாம் பதில் சொல்ல என் முத்தன் உயிரோடு இல்லை. இன்று இல்லாவிட்டால் நாளை - உங்களுக்கு மட்டுமல்ல - உங்களைப் போன்ற உலுத்தர்களுக்கு, பதில் சொல்ல என் வயிற்றிலே வளருகிறது வாள்! போலி மதிப்பைப் பொசுக்கும் தீ! மக்களை ஏமாற்றி வாழும் மதயானைகளை மாய்க்கும் வேல்! என் வயிற்றிலே வளருகிறது - அது சொல்லும்! குதிக்காரர்கட்குப் பதில்! சூழ்ச்சிக்காரர்கட்குப் பதில்! சூடான பதில் - சுயமரியாதை பதில்!
அந்தப் பதிலுக்குக் காத்திருங்கள்! பாவிகளே! என் முத்தனை அநியாயமாகக் கொன்ற பாவிகளே! அந்தப் பதிலுக்குக் காத்திருங்கள்! இப்போது போய்விடுங்கள் இதைவிட்டு—
முத்தாயியின் கனலும், புனலும் நிறைந்த கண்களுக்கு முன்னே நிற்கமுடியாமல் பலதேவர் குடும்பமும் - சாமியாரும் தலைகுனிகிறார்கள்.
★