பொருளடக்கம்சேரன் செங்குட்டுவன்

காட்சி 4 / 4

காட்சி—4.

காட்சி—4.

மூல ஸ்கேன் 52, 53

X

கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.

குயிலாலுவம்

(சேரன் செங்குட்டுவனுக்கும், கனக—விஜயருக்கும் நடைபெற்ற போரில் செங்குட்டுவன் வெற்றி பெறுகிறான்.)

சேர்: வில்லவா! வெற்றி முழங்கும் இந்த இடத்திற்குப் பெயர் என்ன?

வில்லவன்: குயிலாலுவம்.

சேர்: குயிலாலுவம், குறித்துக்கொள்! இந்தப் பாறைகள் அனைத்தும் பைந்தமிழ் வீரம் தீட்டிய ஏடுகள்! வெற்றி மட்டும் போதாது வில்லவா, அந்த வீணர்களை விடக் கூடாது.

வில்: காஷாய உடையிலே ரிஷிகளைப்போல் எங்கோ ஓடி விட்டார்களாம் கனக விஜயர்கள்.

சேர்; ஹா!...ஹா!........புதுமையல்ல........அவர்களுக்கு உரியதான ஒரே பழக்கம் அதுதான்!

(கனக விஜயர்கள் சாமியார் உடையில் கொண்டுவரப்படுகிறார்கள்.)

சேர்; யார் இவர்கள்?

வில்! கனக விஜயர்.

சேர்: கனக விஜயர், கனக விஜயர். ஹா! ஹா! ஹா....! வீராதி வீரர்களே! நன்றாக இருக்கிறது போர்த்திறமை! முதுகு காட்டுவது—முக்காடு போடுவது—மறைந்திருந்து தாக்குவது—மகானாய் மாறுவது. ஹா! ஹா! ஹா! முனிவர் வேடத்தில் இருக்கிறீர்களே! இதற்குப் பதில் சொல்லுங்கள் புராணத்திலே தேவாசுர யுத்தம் எவ்வளவு நாள் நடந்தது?

கன: பதினெட்டு ஆண்டுகள்!

சேர்: ராம ராவணப் போர்?....

கன: பதினெட்டு மாதங்கள்!

சேர்: பாரதப் போர்?

கன: பதினெட்டு நாட்கள்!

சேர்: வீரர்களே, நினைவிருக்கட்டும். சேரன் செங்குட்டுவன் வடநாட்டிலே நடத்திய போர், பதினெட்டே நாழிகையில் முடிந்துவிட்டது.

கன: மன்னவா, மண்டியிடுகிறோம். மன்னித்து விடுங்கள்!

சேர்! மன்னிப்பதா? நான் மன்னிப்பதா? தமிழ்நாட்டு மண்ணில் வந்து மண்டியிடுங்கள், அது உங்களை மன்னிக்கட்டும்!

வில்: மன்னவா, தமிழகம் திரும்ப வேண்டாமா? புறப்பட்டு முப்பத்திரண்டு திங்கள் ஆகின்றனவே.

சேர்: புறப்படுவோம்—வில்லவா. அதற்குள் கண்ணகிக்குச் சிலை நாட்ட இங்கு கல் எடுக்க வேண்டுமல்லவா?

வில்: ஆமாம்,

சேர்: அந்தக் கல்லைச் சுமப்பதற்குச் சரியான எருதுகள் கிடைத்து விட்டன. கனக—விஜயா, தமிழரின் வீரத்தின் மீது வீசினாய் ஒரு சொல்—இப்போது தூக்கு கல்!

- * -