பொருளடக்கம்சேரன் செங்குட்டுவன்

காட்சி 3 / 4

காட்சி—3.

காட்சி—3.

மூல ஸ்கேன் 50, 51

X

கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.

சேரன் கொலுமண்டபம்

சேரன்: வாளேந்தி, தமிழகத்தில் புகழேந்தி வாழும் வேங்கைப் புலிகளே! வந்துவிட்டது உங்களுக்கு எல்லாம் அழைப்பு! வடநாட்டிலே மீண்டும் ஓர்முறை நம்வீரத்தை நிலைநாட்ட நல்லதோர் வாய்ப்பு! இமயத்திலே பொறித்திருக்கும் நம் சின்னங்களைப் பழித்தார்களாம். சிறுமதி கொண்டோர் சிலர்—புலியைக் கேலி செய்தான் போர்முனை காணா புல்லன். வில்லை இகழ்ந்தான் வீரத்தை விலை கேட்கும் வீணன் - கயலைப் பழித்தான் களம்புகு கதைகளைக் கேட்டறியாக் கசடன். உத்திரனும்—விசித்திரனும்—சித்தரனும்—சிவேதனும்—பைரவனும்! விழிக்காதீர்கள்! மனிதர்களின் பெயர்கள்தான் இவைகள்! இந்த மண்டூக மன்னர்களுக்குத் தலைவர்களாம் கனகனும்விசயனும் கங்கைக்கரைவாழ் காவலர்கள் காவிரிக்கரைக்கு அறைகூவல் விடுத்தார்களாம்! தோழர்களே! புத்தி புகட்டுவோம் அவர்களுக்கு—புறப்படுங்கள்!

ஒரு அமைச்சர் : சோழனுக்கும் பாண்டியனுக்கும் இல்லாத ஆத்திரம் தங்களுக்கு மட்டும் ஏன் மன்னவா?

சேரன்: தமிழன் என்பதால்—தன்மான உணர்ச்சி குன்றாததால்! சோழனோ பாண்டியனோ என்னுடைய பகைவனாக இருக்கலாம் அதற்காக வடநாட்டு மன்னர்கள் வாலாட்ட விடமாட்டேன் என் உயிருள்ள வரையில்! என் தமிழையல்லவா இகழ்ந்தார்கள்! தருக்கர்கள்! ஆ....குறள் தந்த கோமானே, வள்ளுவனே! உன்னை இகழ்ந்தார்கள் வடநாட்டார்! அத்தாணி மண்டபத்தில் சத்தான கருத்துரைக்கும் சாத்தனாரே! உம்மை இகழ்ந்தார்கள்! முத்துக்கடலே, முல்லைக் கொல்லையே! உன்னை இகழ்ந்தார்கள் எட்டுத்திக்கும் முரசு கொட்டி வாழும் சிங்கத் திருவிடமே. உன்னை இகழ்ந்தார்கள். அன்னை நற்சோணையே, இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் மகன் செங்குட்டுவனின் வெற்றியை இகழ்ந்தார்கள் ஈடற்ற புலவனே, இளங்கோ! ஆசைத்தம்பி! உன்னை இகழ்ந்தார்கள்! நீதிக்கு உயிர் தந்த பாண்டியனே! ஆரியப் படைகடந்த நெடுஞ்செழியனே! உன்னை இகழ்ந்தார்கள்!—செந்தமிழ் வளங்குறையா சிங்க ஏறுகளே! அறிஞரே! கவிஞரே! கலைவாணரே! உம்மையெல்லாம் இகழ்ந்தார்கள்! இகழ்ந்தார்கள்! இகழ்ந்தவர்கள்! இகழ்ந்தவர்கள் உயிரோடு இருக்கிறார்கள் வடநாட்டில் மன்னர்களாய்! பொருணை நதியும், பொழிலும் சூழ்ந்த எழில்மிகு வஞ்சித் தலைநகரே, உன்னை இகழ்ந்தார்கள்! இகழ்ந்தார்கள்! இழிகுணம் படைத்தோர் இகழ்ந்தார்கள்; அமைச்சர் அழும்பில் வேள் இருக்கவீரன் வில்லவன் கோதை தளபதியாயிருக்க—உங்கள்திரண்ட தோள்களில் எல்லாம் வலிமை வளர் பிறையாயிருக்க—அந்தப்புரத்திலே உலவிக் கிடக்க வேண்டியசிலதுகள் ஆவேசக் கூச்சலிட்டதாம்—வீரர்களே! பார்ப்போம் ஒரு கை, அந்த நா காக்கத் தெரியாத நாடோடிகளை தும்பிவாடி, தோரணங்கற்பட்டு, வேட்ட மங்கலம் கோட்டைகளிலுள்ள வீரரெல்லாம் கிளம்பட்டும்! காளையரே, காதலியருக்கு கடைசிமுத்தம் இதுவாக இருக்கலாம் என்று கூறிவிட்டுப் புறப்படுங்கள்! நாமென்ன சாகப் பயப்படும் சமுதாயமா? சமருக்கஞ்சும் இனத்தவரா, அந்தச்சாமரமேந்திகளிடம் சரணடைய! இல்லை!....இல்லை!.. களத்திலே உங்கள் தலைகள் பறிபோகலாம்! ஆனால் கனல் கக்கும் கண்களோடு அவை கொய்யப்படட்டும். தசைகள் கிழித்தெறியப்படலாம்! ஆனால் சுயமரியாதை இரத்தத்தின் சூடுதணியாமல் அவை கிழிக்கப்படட்டும். முரசு தட்டுங்கள்! இமயத்தை முட்டுங்கள்! தமிழன் தோற்றதில்லை! தோற்றதில்லை! தோழர்களே! ....புறப்படுங்கள்!