முரசொலி கடிதங்கள் · 3453
ஒரு “தலைவன்” இருக்கிறான் மயங்காதே!
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.
3453. ஒரு “தலைவன்” இருக்கிறான் மயங்காதே! உடன்பிறப்பே,
செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள சட்டப்பேரவை வரலாற்றில் செப்பேடுகள் போன்ற தீர்மானங்களும் சட்டங்களும் இந்தக் கடிதத்தில் இடம் பெறுகின்றன.
மேலும்; எத்தகைய “வாய்மை!” மிக்க எதிர்க்கட்சித் தலைவரை பெற்றிருக்கிறது நமது சரித்திரக் கீர்த்தியுள்ள சட்டப்பேரவை என்பதை இக்கடிதம் சான்றுகளுடன் நிரூபணம் செய்வதால் பேரவை வரலாற்றில் அதுவும் ஒரு செப்பேடுதானே?
அதனால் இந்தக் கடிதம் முழுமையும் படி! உடன்பிறப்பே,
11-1-2010 அன்றுதான் தமிழகச் சட்டப் பேரவை தற்போது நடைபெறும் இந்த மண்டபத்திலே தனது பணியினை ஆற்றவிருக்கின்ற கடைசி நாள். அதே நாளில் ஆளுநரின் உரைக்கு முதலமைச்சர் பதில் சொல்லும் நாளாகவும் அமைந்தது. ஆனால், 10ஆம் தேதி நள்ளிரவில் எனக்குக் கிடைத்த தகவல் - பேரவையிலே அமளியை ஏற்படுத்துவதற்கான ஒரு முயற்சி நடைபெறுவதாகக் கூறப்பட்டது. நான் உடனே அமைச்சர்கள் துரைமுருகனையும், பொன்முடியையும் வீட்டிற்கு வரச்சொல்லி இரவு இரண்டு மணிவரை அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தேன். என்னதான் அவதூறாக கழக அரசின் மீது பேசினாலும், என்னைப் பற்றிப் பேசினாலும், கழக உறுப்பினர்கள் பொறுமை காட்ட வேண்டுமென்றும், அமளிக்கு இடம் கொடுத்து விடக் கூடாதென்றும், கடைசி நாளில் எந்த விதமான அசம்பாவிதமும் நடந்து விடக் கூடாது என்றும், ஆளுநர் உரைக்கு துணை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதில் கூறலாமென்றும், அதன் பின்னர் பேரவையின் இறுதிநாள் என்ற முறையில் நான் சிறிது
நேரம் பேசலாம் என்றும் முடிவு செய்து கொண்டு இரண்டு மணிக்கு மேல்தான் தூங்கச் சென்றோம்.
நள்ளிரவில் எனக்கு வந்த செய்தியின் படியே பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் தனது பேச்சை புத்தகமாகவே தயார் செய்து கொண்டு வந்து பேரவையில் பேசினார், இல்லை எதிரார். அவர் கழக அரசின் மீது சாட்டிய ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் நான் விளக்கமாக பின்னால் பதிலளிக்கிறேன். முதலில் அந்தப் பேரவை பற்றி நான் அவையிலே பேச எண்ணி, பாதியிலேயே நிறுத்தி விட்ட கருத்துக்களை, அவையிலே பதிவு செய்ய விரும்பியதை இந்த மடலில் தொடர்ந்திட விரும்புகிறேன். நான் ஏற்கெனவே அவையிலே பேசியதை நீ படித்திருப்பாய்!
செயிண்ட் ஜார்ஜ் கோட்டை பற்றிய வரலாற்றை அவையிலே தொடங்கி - அங்கே அமைந்த சட்டப்பேரவை மண்டபத்தில் என்னென்ன தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன, என்னென்ன முடிவுகள் எடுக்கப்பட்டன என்பதைப் பற்றிய விவரங்களைத் தொடருகிறேன்.
29-7-1953 குலக்கல்வி முறையை அமலுக்குக் கொண்டு வருவது பற்றிய தீர்மானம். அந்தக் கல்வி முறையை நடைமுறைப்படுத்தக் கூடாது என்று திருத்தத் தீர்மானம். வாக்கெடுப்பில் திருத்தத்திற்கு எதிராக 138 வாக்குகளும், எதிர்த்து 138 வாக்குகளும் கிடைத்து, பேரவைத் தலைவர் திருத்தத்திற்கு எதிராக வாக்களித்ததால் திருத்தம் தோல்வியடைந்தது. எனினும், 18-5-1954இல் குலக்கல்வி முறையை கைவிடுவதாக அரசு முடிவெடுத்தது.
முதறிஞர் ராஜாஜி முதல்வர் பொறுப்பை ராஜினாமா செய்ததை அடுத்து பெருந்தலைவர் காமராஜர் 13-4-1954 அன்று முதலமைச்சரானார். பின்னர் காமராஜர் தலைமையில் இருந்த அமைச்சரவை ராஜினாமா செய்து, பெரியவர் பக்தவச்சலம் தலைமையில் அமைச்சரவை அமைந்து, இப்போதுள்ள சட்டப்பேரவை மண்டபத்திலே தனது பணியினைத் தொடர்ந்தது.
மதுரைப் பல்கலைக் கழகம் 1965இல் தொடங்கப்பட்டதற்கு மதுரை காமராஜர் பல்கலைக் கழகம் என்ற பெயர் மாற்றம் 1978இல் செய்யப்பட்டது.
6-3-1967 அன்று அண்ணா தலைமையில் ஒன்பதுபேர் கொண்ட கழக அமைச்சரவை பதவியேற்றது. பேரவைத் தலைவராக திரு. ஆதித்தனாரும், துணைத் தலைவராக திரு. புலவர் கோவிந்தனும் பொறுப்பேற்றனர்.
24-11-1967 முதல் பேரவைத் தலைவர் திருக்குறள் ஒன்றினைச் சொல்லி நிகழ்ச்சிகளைத் துவக்கும் வழக்கம் ஏற்பட்டது.
பேரறிஞர் அண்ணா அவர்கள் - சென்னை மாநிலத்திற்கு “தமிழ்நாடு” எனப் பெயர் சூட்டி வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தனித் தீர்மானத்தை நிறைவேற்றியது. (18-7-1967)
சுயமரியாதை மற்றும் சீர்திருத்த திருமணத்தைச் செல்லுபடியாக்கிடச் சட்டம் வகுத்தது.
தமிழை ஆட்சி மொழியாக்கி - மும்மொழித் திட்டத்தை நிராகரித்து தமிழகத்தில் இரு மொழித் திட்டத்தை நடைமுறைப்படுத்தியது. (23-1-1968)
நான் முதல் அமைச்சராக 1969இல் பதவியேற்ற பிறகு நிலச் சீர்திருத்த (உயர் அளவைக் குறைத்தல்) சட்டம் உருவாகியது.
விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கு பல்வேறு விதமான பணிகளுக்கு நியாயமான கூலி நிர்ணயிக்க வகை செய்யும் சட்டம்.
தொழிலாளர் நலம் காத்திடும் வகையில் மே தினத்தை அரசு விடுமுறையாக்கிட வழி வகுத்தது.
31-3-1969 அன்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நீண்ட நாள் உறுப்பினரான ஜி. கோமதி சங்கர தீட்சிதருக்கு 80 வயது பூர்த்தியானதை யொட்டி நான் பொன்னாடை அணிவித்து பாராட்டினேன்.
பஞ்சாப் முதல் அமைச்சர் குர்னாம்சிங் அவர்களின் அழைப்பையேற்று அந்த மாநிலத்திற்கு சென்று அங்கேயுள்ள பல்கலைக் கழகத்தைப் பார்வையிட்டு வந்ததின் தொடர்ச்சியாக தமிழகத்திலே வேளாண்மைப் பல்கலைக் கழகம் தொடங்குவதற்காக ஒரு சட்டம் 1971இல் நிறைவேறியது.
குடிசைப் பகுதி மாற்று வாரியச் சட்டம் 1971இல் தி.மு. கழக ஆட்சியில் நிறைவேறியது. குடியிருப்புகளுக்கு உரிமைகளை
வழங்கல் சட்டம் 1971இல் நிறைவேறியது. 8-7-1971 அன்று காவேரி பிரச்சினை குறித்து நடுவர் மன்றம் அமைக்கக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
17-12-1971 புதிதாக உருவான பங்களாதேஷ் நாட்டிற்கு வாழ்த்து தெரிவித்து தீர்மானம்.
இந்தியச் சுதந்திரத்தின் வெள்ளி விழாவினை யொட்டி ஆளுநர் மேதகு கே. கே. ஷா அவர்கள் தலைமையில் பேரவை மண்டபத்தில் 14-8-1972 நள்ளிரவு 12 மணிக்கு பேரவை சிறப்புக் கூட்டம் கூடியது. அப்போது பேரவைத் தலைவராக கே.ஏ. மதியழகன் இருந்தார். துணைத் தலைவராக பெ. சீனிவாசன் இருந்தார்.
அனைத்துப் பிரிவினரும் அர்ச்சகர் ஆவதற்கு வகை செய்ய மத்திய அரசை வலியுறுத்தி 15-4-1974 அன்று ஒருமனதாக தீர்மானம்.
மாநில சுயாட்சிக்கான தீர்மானத்தை 16-4-1974 அன்று நான் முன்மொழிந்து பேரவை நிறைவேற்றியது.
21-8-1974 அன்று கச்சத்தீவு குறித்த தீர்மானம்.
பேருந்துகள் மற்றும் ஒப்பந்த ஊர்திகளை அரசு மேற்கொள்ளும் வகையில் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
30-6-1977 அன்று எம்.ஜி.ஆர். தலைமையில் அ.தி.மு.க. அமைச்சரவை அமைந்தது.
அண்ணா தொழில் நுட்பப் பல்கலைக் கழகத்திற்கான சட்டம் 1978இல் நிறைவேறியது.
21-8-1981 மற்றும் 25-10-1983 ஆகிய நாட்களில் இலங்கைப் பிரச்சினைக்கான தீர்மானங்கள்.
அன்னை தெரசா மகளிர் பல்கலைக் கழகச் சட்டம் 1984இல் நிறைவேறியது.
உடல் நலம் பெற்று நாடு திரும்பிய எம்.ஜி.ஆர். தலைமையில் 14-2-1985 அன்று அமைச்சரவை அமைந்தது.
தமிழ்மொழிக்கென தனி பல்கலைக் கழகம் தஞ்சையில் அமைக்கச் சட்டம்.
அழகப்பா பல்கலைக் கழகச் சட்டம் 1985இல் நிறைவேறியது.
தமிழக மேலவை 1-11-1986 முதல் ஒழிக்கப்படுவதற்கான தீர்மானம் அ.தி.மு.க. ஆட்சியில் 14-5-1986 அன்று நிறைவேற்றப் பட்டது. மேலவைத் தலைவராக அப்போது சிலம்புச் செல்வர் ம.பொ.சி. இருந்தார். மேலவை உறுப்பினராக நானும் இருந்தேன்.
மொழிப் போரில் அண்ணா வழியில் அரசியல் சட்டப் பிரிவை எரித்தமைக்காக பேராசிரியர் க. அன்பழகனார் உள்ளிட்ட கழகச் சட்டமன்ற உறுப்பினர்கள் பத்து பேரை அரசியல் சட்டத்திற்கு விரோதமான நடவடிக்கைகளிலே ஈடுபட்டார்கள் என்று கூறி அவர்களின் பதவி பறிக்கப்பட்டதும் இந்தச் சட்ட மன்றத்திலேதான். (22.12.1986)
தமிழ்நாடு எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழகச் சட்டம் 1987இல் நிறைவேறியது.
9-8-1987 அன்று இந்தியா விடுதலை அடைந்து நாற்பதாண்டுகள் நிறைவுப் பெற்றதைக் கொண்டாடும் வகையில் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.
24-12-1987இல் எம்.ஜி.ஆர். மறைந்ததை யொட்டி அவரது துணைவியார் திருமதி ஜானகி அம்மாள் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். (சில மாதங்கள் மட்டும்)
27-1-1989இல் மீண்டும் என் தலைமையில் அரசு அமைந்தது.
5-5-1989இல் தமிழகச் சட்டமன்றப் பேரவை தனது பொன் விழாவினைக் கொண்டாடியது. இந்த விழாவில் முன்னாள் அமைச்சரும், முன்னாள் கேரள ஆளுநருமான திருமதி ஜோதி வெங்கடாசலத்திற்கும், சுதந்திரப் போராட்ட வீரரான எல். கிருஷ்ணசாமி பாரதிக்கும் நினைவுப் பரிசுகளை நான் வழங்கினேன். குறிப்பாக - சட்ட மேலவை முன்னாள் தலைவர்கள் மாணிக்கவேலு, சிலம்புச் செல்வர் ம.பொ.சி., முன்னாள் சட்டப் பேரவைத் தலைவர்கள் புலவர் கோவிந்தன் போன்றவர்களுக்கு பொன்விழா விருதுகள் வழங்கப்பட்டன.
12-5-1989 அன்று மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்த மைய அரசைக் கோரி தீர்மானம்.
24-4-1990 அன்று காவேரி பிரச்சினையை நடுவர் மன்றத் தீர்ப்புக்கு விட வேண்டுமென்ற நிலையை மத்திய அரசு உச்ச நீதிமன்றத்திற்கு எடுத்துரைக்க வேண்டுமென்று கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
21-8-1990 அன்று மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்தியதற்காக நன்றி தெரிவிக்கும் தீர்மானம்.
பெண்களுக்கு சொத்தில் உரிமை வழங்கிட சட்டம் கண்டது.
1991ஆம் ஆண்டு மீண்டும் அ.தி.மு.க. அமைச்சரவை அமைந்து, ஜெயலலிதா அவர்கள் முதல் அமைச்சரானார்.
முரசொலி ஆசிரியர் செல்வத்தை உரிமை பிரச்சினை காரணமாக பேரவை நடுவே கூண்டிலே ஏற்றியதும் இதே சட்டமன்றத்திலே தான். (21-9-1992)
பல்கலைக் கழகங்களுக்கு முதல் அமைச்சரே வேந்தராக இருப்பதற்கு வகை செய்யும் சட்ட முன் வடிவுக்கு ஆளுநரின் ஒப்புதல் சட்டமன்றத்தின் காலம் முடியும் வரை கிடைக்கப் பெறவில்லை.
5-6-1993இல் அனைத்திந்திய சட்டமன்றத் தலைவர்கள் மற்றும் செயலாளர்கள் மாநாடு இதே அவையில் நடைபெற்றது.
20-4-1994 அன்று தமிழக விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு சட்ட விரோதமான அமைப்பு என அறிவிக்கப்படுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இந்திய அரசைக் கேட்டுக் கொள்ளும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
26-4-1995 அன்று மாநில ஆளுநர் நியமிக்கப்படுவதற்கு முன்பு மாநில முதல் அமைச்சர்களின் கருத்துக்களை கேட்க வேண்டுமென்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
13-5-1996இல் மீண்டும் என் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றது.
தமிழ் வளர்ச்சிக்கென தனி அமைச்சகம் கண்டு அமைச்சர் ஒருவர் தனியாக நியமிக்கப்பட்டார். அவர்தான் தமிழ்க்குடிமகன்.
அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்திற்கான சட்ட முன் வடிவு நிறைவேற்றப்பட்டது.
28-4-1997 அன்று தந்தை பெரியார் பெயரில் பல்கலைக் கழகம் அமைய சட்டம் இயற்றப்பட்டது.
14-7-1997 அன்று சட்டமன்றத்தின் பவள விழாவும், சட்டமன்றப் பேரவையின் வைர விழாவும் நடைபெற்றன.
1997இல் முதன் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட கிட்டப்பார்வை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ஒவ்வொரு தொகுதிக்கும் 25 இலட்சம் என ஒதுக்கப்பட்டது.
2001ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று ஜெயலலிதா அவர்கள் முதல் அமைச்சராகப் பொறுப்பேற்றார். நீதிமன்றத் தீர்ப்பு காரணமாக ஜெயலலிதா பதவி விலக நேரிட, இடையில் ஒரு சில மாதங்கள் ஓ. பன்னீர்செல்வம் முதலமைச்சராக பதவி வகித்தார்.
2006ஆம் மே திங்களில் தி.மு. கழக ஆட்சி அமைந்து முதலமைச்சராக ஐந்தாவது முறையாக நான் பொறுப்பேற்றேன்.
தமிழ் மொழியை 1 முதல் 10ஆம் வகுப்பு வரையில் பள்ளிகளில் அனைத்து மாணவர்களும் பயில்வதை கட்டாயமாக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
மத மாற்றத் தடைச் சட்டத்தை நீக்குவதற்கான சட்ட முன் வடிவு நிறைவேற்றப்பட்டது.
தைத் திங்கள் முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டு தினமாக அறிவிக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
அருந்ததியர்களுக்கு கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் தனி ஒதுக்கீடு செய்ய வகை செய்யும் சட்ட முன் வடிவு மூன்று சதவிகித இட ஒதுக்கீடு வழங்கி நிறைவேற்றப்பட்டது.
சிறுபான்மையினரான முஸ்லீம்களுக்கு 3.5 சதவிகிதம் இட ஒதுக்கீட்டுச் சட்டம்.
அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக வழி செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதும் இந்த அவையிலேதான்.
காமராஜர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக தமிழகம் எங்கும் கொண்டாட தனிச் சட்டம்.
பெரியார் நினைவு சமத்துவபுரத் திட்டம் நிறைவேற வழி வகுத்ததும் இந்தச் சட்டமன்றத்தில்தான்.
11-5-2007 அன்று இந்தச் சட்டப் பேரவையில் என்னுடைய சட்டப் பேரவை பணிகளுக்கான பொன் விழா சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. மேதகு ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா கலந்து கொண்டார். 12-5-2007 அன்று நடைபெற்ற இரண்டாம் நாள் சிறப்பு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மக்களவைத் தலைவர் மாண்புமிகு சோம்நாத் சட்டர்ஜி அவர்கள் விழாவிற்கு தலைமையேற்றுப் பாராட்டினார்கள்.
சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் நடந்த விவாதங்களில் ஒருசிலவற்றை நினைவூட்டிட விரும்புகிறேன்.
இராம. அரங்கண்ணல்:- பழம் பெரும் தியாகிகளில் ஒருவரான நெல்லைச் சீமை வாஞ்சிநாத ஐயரின் குடும்பத்தினர் தியாகிகள் மானியம் கோரி விண்ணப்பித்திருந்தார்கள். அதைக் கடந்த அரசாங்கம் கவனிக்காமல் இருந்தது. அது இப்போது எந்த நிலையில் உள்ளது?
மாண்புமிகு அண்ணா:- வாஞ்சிநாத ஐயர் அவர்களுடைய பிரச்சினையில் அவருடைய விதவையார் அவர்கள் மனு செய்து கொண்டார்கள். வாஞ்சிநாத அய்யர் அவர்கள் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு மிகவும் பெயர் பெற்றவர் என்றாலும், அவர் இறுதியாகச் செய்த காரியத்தை தியாகிகளின் காரியம் என்று முன்னால் இருந்த அரசாங்கம் ஒப்புக் கொள்வதற்குக் கொஞ்சம் தயக்கம் இருந்தது. ஏனெனில் உயிர் இழந்தவர்கள் அல்லது அங்ககீனமானவர்கள் அல்லது தியாகத்திற்குப் பிறகு நலிவுற்றவர்கள் ஆகியோருக்கு பென்ஷன் தருவது என்று முன்னால் தீர்மானித்திருந்தார்கள். வாஞ்சிநாத ஐயர் அவர்கள் ஆஷ் துரையை சுட்டுக் கொன்ற பிறகு தன்னைத்தானே மாய்த்துக் கொண்டதால், அவர் சுதந்திரப் போராட்டத்தில் உயிர் இழந்ததாகக் கருதப்படாமல், தானாகவே தன் உயிரைப் போக்கிக் கொண்டதால், கொடுப்பதா வேண்டாமா என்ற தயக்கம் இருந்தது. போன வாரம் நான் அதைப் பார்க்க நேரிட்டபோது, அவர் தன்னைத்தானே மாய்த்துக் கொண்டிருந்தாலும், அவர் உள் நோக்கம் சுதந்திரப்
போராட்டம் என்ற காரணத்தினால் அவர் விதவைக்கு பென்ஷன் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறேன்.
★
உடன்பிறப்பே; அண்ணாவின் அந்தப் பரந்த மனப்பான்மை வழி நின்றுதான் நானும் ஆட்சியை நடத்தி வருகிறேன்; கட்சியையும் கட்டிக் காப்பாற்றுகிறேன். பழைய பேரவை மண்டபத்தில் நடைபெற்றவைகளை விடுத்து, தற்போது நடைபெற்ற சம்பவத்திற்கு வருகிறேன். எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா தன் உரையைத் தொடங்கும் போதே அவர் எந்த முடிவோடு வந்திருக்கிறார் என்பதைத் தெரிந்து கொள்ள முடிந்தது. உதாரணமாக தன் பேச்சில் யாரும் குறுக்கிடக் கூடாது என்றும், அப்படி குறுக்கிட்டால் முதலமைச்சரின் பதில் சொல்லும் திறமையிலே அவர்களுக்கு நம்பிக்கை இல்லை என்றாகும் எனக் கூறினார். உடனே அமைச்சர் துரைமுருகன் எழுந்து, அ.தி.மு.க. ஆட்சியிலே இருந்த போது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசும்போது அமைச்சர்கள் குறுக்கிட்டார்களே, அப்படியானால் அவர்கள் உங்களுக்கு பதில் சொல்ல திறமையில்லை என்று நினைத்துத்தான் குறுக்கிட்டார்களா என்று கேட்டார். அவர் அவ்வாறு சொல்லக் காரணமே, எதிர்க்கட்சித் தலைவர் தன் பேச்சின் தொடக்கத்தில் யாரும் குறுக்கிட்டால் முதலமைச்சருக்கு பதில் சொல்ல திறமையில்லை என்று பொருளாகி விடும் என்று சொன்ன காரணத்தினால்தானே? அதற்கு மாறாக அவர் பேச்சின் தொடக்கத்தில், தன் பேச்சில் தேவையில்லாமல் யாரும் குறுக்கிடாமல் ஒத்துழைக்க வேண்டுமென்று சொல்லியிருந்தால் துரைமுருகன் குறுக்கிடத் தேவையில்லாமலே ஆகியிருக்கும் அல்லவா?
அடுத்து எதிர்க்கட்சித் தலைவர் பேசும்போது, தி.மு.க. அரசு கொண்டு வந்துள்ள மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்கு முதலமைச்சரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது, தன் ஆட்சியிலே தனது பெயர் அப்படி சூட்டப்படவில்லை என்றார். இது உண்மையான விவரமா? பேரவையில் தவறான தகவல்களைக் கூறினால் உரிமைப் பிரச்சினையே கொண்டு வரலாம். எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா திட்டங்களுக்கு தனது ஆட்சியில் தன்
பெயரை சூட்டப்படவில்லை என்று சொன்னாரே, அது எவ்வளவு பெரிய உண்மைக்கு மாறான தகவல் என்பதற்கு இதோ சில உதாரணங்கள்!
தமிழ்நாட்டில் வெளி மாநிலங்களுக்குச் செல்லும் பேருந்துகளைக் கொண்டு “புரட்சித் தலைவி டாக்டர் ஜெ. ஜெயலலிதா போக்குவரத்துக் கழகம்” என்ற பெயரால் புதிய போக்குவரத்துக் கழகம் ஆரம்பிக்கப்படும் என்ற அறிவிப்பு. (6.4.1993)
அம்பத்தூரில் சுமார் 29 ஏக்கர் நிலப்பரப்பில் அமையவிருக்கும் தொழில் நுட்பப் பயிலகத்திற்கு ஆறு கோடி மக்களால் ஆராதனை செய்யப்படும் மாண்புமிகு தமிழக முதல்வர் டாக்டர் புரட்சித் தலைவி அவர்களின் பெயரினையே சூட்டிட வாரியம் முடிவெடுத் துள்ளது. (8.4.1994)
“ஜெ. ஜெ. ஹேண்ட்லூம் டவர்” (8.4.1994)
“புரட்சித்தலைவி சீர்மிகு உயர்பள்ளி” (19.4.1994)
மாண்புமிகு புரட்சித் தலைவி அவர்களின் திருப்பெயரால் மகளிருக்கான டாக்டர் புரட்சித்தலைவி பொற்கோப்பை கால்பந்துப் போட்டி நேரு விளையாட்டு அரங்கத்தில் நடத்தப்பட விருக்கிறது. (19.4.1994)
முதல்வர் டாக்டர் புரட்சித் தலைவி அவர்கள் பெயரில் தமிழகத்தில் சிறந்த வெளிப் பல்கலைக் கழகம். (19.4.1994)
சிறந்த விளையாட்டு அணியினருக்கு மாண்புமிகு முதல் அமைச்சர் புரட்சித் தலைவி டாக்டர் ஜெ. ஜெயலலிதா அவர்களின் பெயரில் சிறந்த வேலைப்பாடுகள் அடங்கிய சுழற்கோப்பை (10.4.1994)
அனைத்துச் சமுதாய நலக் கூடங்களுக்கு, புரட்சித் தலைவி அவர்களுடைய பெயர் சூட்டப்படும். (26.4.1994)
தமிழகத்திலே இருக்கிற அனைத்து நகராட்சிகளிலும், நவீன வசதிகள் கொண்ட திருமண மண்டபங்கள் இதய தெய்வம் டாக்டர் புரட்சித் தலைவி அவர்களுடைய பெயரிலே கட்டப்படும். (26.4.1994)
புரட்சித் தலைவி டாக்டர் ஜெ. ஜெயலலிதா என்ற பெயரில் அழகு உலா ரதங்கள் இரண்டு இந்த ஆண்டு விடப்படும். (27.4.1994)
திராவிட இனத்தினுடைய தன்மானத் தலைவியாக இருக்கிற டாக்டர் புரட்சித் தலைவி அவர்களுடைய திருப்பெயர் வன உயிரின உய்விடத்திற்கு சூட்டப்படும். அது போன்று அங்கே அமைந்திருக்கின்ற தேசியப் பூங்கா, “டாக்டர் ஜெ. ஜெயலலிதா தேசியப் பூங்கா, முதுமலை” என்று இன்று முதல் அமைக்கப்படுகிறது. (26.4.1994)
செங்கை - எம்.ஜி.ஆர். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் புதிய கட்டிடத்திற்கு “புரட்சித் தலைவி டாக்டர் ஜெ. ஜெயலலிதா” என்கிற திருப்பெயரை சூட்ட முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. (30.4.1994)
60 லட்சம் ரூபாய் செலவில் கோவையில் எழுப்பப்பட்டு முடிக்கப்பட்டுள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகத்திற்கு “டாக்டர் புரட்சித் தலைவி ஜெ.ஜெ. மாளிகை” என்னும் திருப் பெயர் சூட்டப்படுகிறது. (30.4.1994)
சென்னை திரைப்பட நகருக்கு திரை உலக வளர்ச்சிக்கு பெரிதும் பாடுபட்டவரான இதய தெய்வம் டாக்டர் புரட்சித் தலைவி அவர்களின் பெயரால் ஜெயலலிதா திரைப்பட நகர் என பெயர் சூட்டப்படும். இப்படி “ஜெயலலிதா திரைப்பட நகர்” என்று பெயர் சூட்டப்படவில்லை என்று பேரவையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா பேசியிருக்கிறார்.
3-5-1995 தேசிய அவை நடவடிக்கை குறிப்புப் புத்தகத்தில் பக்கம் 375 - “ஒரு நூற்றாண்டு காலத்தை எட்டிப் பிடிக்கும் திரைப்படத் துறைக்கு, நூற்றாண்டை அடைவதற்கு முன்னரே அதை வரவேற்றுச் சூட்டிய மணி மகுடமாய் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பெயரில் “ஜெ. ஜெயலலிதா திரைப்பட நகர்,” சென்னை தரமணியில், 86 ஏக்கர் நிலப் பரப்பில் அனைத்து வசதிகளும் நிரம்பப் பெற்றதாக உருவாக்கப்பட்டு, மாண்புமிகு முதலமைச்சர் (ஜெயலலிதா) அவர்களால் 31-8-1994 அன்று திறந்து வைக்கப்பட்டது. உலகத் திரைப்பட வரலாற்றில் சென்னைக்குச் சிறப்பிடம் பெற்றுத் தரும் கலைச்சோலை
“ஜெ. ஜெயலலிதா திரைப்பட நகர்” ஆகும். திரை உலகின் தேவைகளை ஒரே இடத்தில் நிறைவேற்றிக் கொள்ளும் அளவுக்கு நவீன வசதிகள் அமைந்த கலைக் கோட்டமாக இது விளங்குகிறது.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் ஜெயலலிதா சட்டப் பேரவையில், தாங்கள் ஆட்சிக்கு வந்த போது திரைப்பட நகர் என்பதே இல்லை. திரைப்பட நகர் என்பது புதிதாக உருவாக்கப்பட்டது” என்று சொன்னார் என்றால் எவ்வளவு பெரிய பொய்யை மனமறிந்து பேரவையிலே ஒரு முன்னாள் முதலமைச்சர், இந்நாள் எதிர்க்கட்சித் தலைவர் சொல்லியிருக்கிறார். இதைப் பற்றி பத்திரிகைகள் ஏன் விளக்கம் தர முன் வரவில்லை என்றுதான் நான் கேட்க விரும்புகிறேன். ஓகோ; அப்படியா சங்கதி?
இந்தத் திரைப்பட நகர் பற்றி 28-4-1997 அன்று சட்டமன்றப் பேரவையிலே நான் குறிப்பிடும்போது, “திரைப்பட நகர் ஜெ.ஜெ. சினி சிட்டி ஒன்று ஆரம்பிக்கப்பட்டது பற்றி உங்களுக்கெல்லாம் தெரியும். இதன் பெயரை நாங்கள் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு தான் பொருத்தமான பெயராக “எம்.ஜி.ஆர். திரைப்பட நகர்” என்று மாற்றியிருக்கிறோம். கடந்த கால ஆட்சியில் இந்த திரைப்பட நகரின் தொடக்க விழாவுக்கென்று நிர்ணயிக்கப்பட்ட உச்ச வரம்புத் தொகை 75 ஆயிரம் ரூபாய். ஆனால் செலவழித்தது 43.14 இலட்சம் ரூபாய். இதைப் பற்றி தலைமை தணிக்கை அலுவலர் கூறும்போது “The Company incurred an expenditure of Rs. 43.14 lakhs by way of printing of invitation cards, souvenir, decoration, silver mementoes, cultural programmes, etc., towards inauguration of the project as against the ceiling limit of Rs. 75,000 fixed in September 1991 by the State Government for such function” என்று தெரிவித்திருக்கிறார்” என்றெல்லாம் விளக்கியிருக்கிறேன்.
“ஜெ.ஜெ. 92” என்ற புதிய வகை வாசனை அரிசியை அறிமுகம் செய்திருக்கிறோம். விஞ்ஞான தொழில் நுட்பங்களை வழங்கும் விரிவாக்க அலுவலர்களுக்கு “டாக்டர் புரட்சித் தலைவி விருது” உருவாக்கியுள்ளோம். மேலும் “டாக்டர் புரட்சித் தலைவி தென்னை வளர்ச்சித் திட்டம்” அமலாக்கப்பட்டு, செயல்படுத்தப் பட்டுள்ளது. (19.4.1995)
ஆடு, கோழி, முயல் போன்றவைகள் வளர்க்கப்படும் “டாக்டர் புரட்சித் தலைவி மகளிர் கால்நடை கூட்டுறவுச்
சங்கம் துவக்குவதை இத்துறை பெரும் பேறாக நினைக்கிறது. (19.4.1995)
மாண்புமிகு முதல் அமைச்சர் இதய தெய்வம் டாக்டர் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஆன்மீகக் கல்வித் திட்டம்.
புரட்சித் தலைவி நல்லாசிரியர் விருது வழங்கும் திட்டம்.
“புரட்சித் தலைவி ஆய்வுப் பெருந்தகையாளர் ஊக்குவிப்புத் திட்டம்.”
இப்படியெல்லாம் பெயர் சூட்டும் நிகழ்ச்சிகள் நடைபெற்ற போது - அந்த விமர்சனங்களையெல்லாம் கேட்டு புளகாங்கிதமடைந்து அமர்ந்திருந்த ஜெயலலிதா; தற்போது எனது பெயரிலே எப்படியொரு திட்டத்தை ஆரம்பிக்கலாம், தனது ஆட்சியிலே அவ்வாறு பெயர் வைத்துக் கொண்டதே இல்லை என்று பேரவையிலே சொல்லும்போது அது தவறான தகவல் என்பதை எப்படி சொல்லாமல் இருக்க முடியும்? அதனால் தான் அமைச்சர் பொன்முடி குறுக்கிட்டு உங்கள் ஆட்சிக் காலத்திலே இப்படியெல்லாம் பெயர்களை வைத்துக் கொண்டீர்களே என்று கேட்டதற்கு, அமைச்சர் பொன்முடி கூறியது முற்றிலும் தவறான தகவல்கள் என்று பேரவையிலே கூறிவிட்டார். அம்மா துதி பாடும் உறுப்பினர்கள் கரகோஷம்; கூச்சல்!
உடன்பிறப்பே, நான் அவரது பெயரை அவரது ஆட்சிக் காலத்திலே பல திட்டங்களுக்கு வைத்துக் கொண்டதை தவறு என்று சொல்ல முன் வரவில்லை. ஆனால் அ.தி.மு.க. ஆட்சியிலே நடைபெற்றதை இல்லையென்று பேரவையிலே அப்பட்டமாக மறுத்துக் கூறுவதைத்தான் சரியா என்று கேட்க விரும்புகிறேன். ஆனால் இந்த உண்மையான தகவல்களை நம் நாட்டிலே உள்ள ஏடுகளாவது சொல்ல முன் வருகிறதா என்றுதான் நான் ஆதங்கப்படுகிறேன். அதே நேரம் அவர்களின் அபிமானத்தைப் பாராட்டுகிறேன்.
ஏன் அம்மையார் ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்திலே கூட, 25-4-1995 அன்று பேரவை நடவடிக்கை குறிப்பைப் பார்த்தால் - இதோ அ.தி.மு.க. அமைச்சர் ம.சின்னசாமி பேசியிருக்கிறார், பாருங்கள் -
“கள்ளக்குறிச்சி வட்டத்தில் இருக்கிற இரண்டாவது ஆலைக்கு கள்ளக்குறிச்சி யூனிட் நம்பர் 2 என்ற ஆலைக்கு ஒரு புதிய பெயரைச் சூட்ட வேண்டுமென்று முடிவெடுத்துள்ளேன். ஒரு நிறுவனத்திற்கு பெயர் சூட்டுகிற பொழுது நாட்டிற்கு உழைத்தவர்களுடைய பெயரைச் சூட்டி மரியாதை செய்ய வேண்டும். அதே போல, நாட்டிற்கு உழைப்பதற்கு உரிய தலைவர்களை இந்த நாட்டுக்கு அளிக்கப் பெற்றவர்களுக்கும் மரியாதை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தமிழகத்தினுடைய ஆறரை கோடி மக்களுடைய தாயாக விளங்குகிற மாண்புமிகு முதல்வர் டாக்டர் புரட்சித் தலைவி என்கிற தாயை தமிழ் நாட்டிற்கு தந்திட்ட தாய் அன்னை சந்தியாவினுடைய பெயர் சூட்டப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.”
அவை நடவடிக்கை குறிப்பிலே இடம் பெற்றவைகளைத்தான் நான் இங்கே எழுதியிருக்கிறேன்.
இவ்வாறு விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, அமைச்சர் பரிதி இளம்வழுதி எழுந்து, எல்லா பல்கலைக் கழகங்களுக்கும் ஆளுநர்தான் வேந்தராக இருந்து வருகிறார், அதை மாற்றி எல்லா பல்கலைக் கழகங்களுக்கும் வேந்தர் நீங்கள் தான் என்று அறிவித்துக் கொண்டீர்களே, அது உண்மையா இல்லையா? என்று வினவினார். அதற்கும் ஜெயலலிதா அது முற்றிலும் கற்பனையான ஒரு குற்றச்சாட்டு, எந்தப் பல்கலைக் கழகத்திற்கும் நான் வேந்தர் என்று அறிவிக்கவில்லை. கற்பனைக் குற்றச்சாட்டை சொன்னதற்காக அவரும், பொன்முடியும் அரசியலை விட்டு விலக வேண்டும் என்றார்.
1991ஆம் ஆண்டு முதல் 1996 வரை நடைபெற்ற அ.தி.மு.க. ஆட்சியிலே ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது, பல்கலைக் கழகங்களுக்கு முதல் அமைச்சரே வேந்தராக இருப்பதற்கு வகை செய்யும் சட்ட முன்வடிவு பேரவையில் 5-1- 1994 அன்று நிறைவேற்றப்பட்டது உண்மை. அந்த சட்ட முன் வடிவு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டதும் உண்மை. ஆனால் ஆளுநர் தனது உரிமை பறி போகிறது என்ற காரணத்தால் சட்ட மன்றத்தின் காலம் முடிகின்ற வரை அந்த சட்ட முன் வடிவுக்கு
ஒப்புதல் தரவில்லை என்பதுதான் உண்மை. இதற்கான சட்ட முன் வடிவு 5-1-1994 அன்று அ.தி.மு.க. ஆட்சியிலே பேரவையிலே விவாதிக்கப்பட்ட போது, அப்போது அமைச்சராக இருந்த நாவலர் அவையிலே பேசியிருக்கிறார். அதாவது, “இப்போது இருக்கின்ற பிரச்சினை, பல்கலைக் கழக வேந்தராக ஆளுநர் இருந்தார்கள். அந்த வேந்தராக இப்போது மாண்புமிகு முதலமைச்சராக வருகிறவர்கள் இருக்க வேண்டும் என்பது சட்டத்தினுடைய நோக்கம். நாங்கள் மக்களாலே தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் வேந்தராக இருக்க வேண்டுமென்று கருதுகிறோம். மாண்புமிகு பரிதி இளம்வழுதி அவர்கள் நியமிக்கப்பட்ட ஆளுநரிடத்திலேயே அந்த அதிகாரங்கள் இருக்க வேண்டுமென்று வாதாடுகிறார்” என்று அப்போது எடுத்த முடிவிற்கு ஆதரவாகப் பேசி அவை குறிப்பிலே இன்றளவும் இடம் பெற்றுள்ளது. இதிலிருந்து பேரவையில் தற்போது அமைச்சர் பரிதி இளம்வழுதி சொன்னது உண்மையா? அதனைக் கற்பனைக் குற்றச்சாட்டு என்று ஜெயலலிதா கூறியது உண்மையா? என்பது தெளிவாகிறது அல்லவா? யார் அரசியலை விட்டு விலக வேண்டும்! நீங்களே முடிவுக்கு வாருங்கள்.
எதிர்க்கட்சித் தலைவர் அடுத்து தன் பேச்சை தொடர்ந்த போது - அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு அ.தி.மு.க. உறுப்பினர் திரு. நத்தம் விசுவநாதன் பேசிய போது, “கும்பி கருகுது, குடல் வேகுது, ஊட்டி வாசம் ஒரு கேடா” என்று சொன்னதால், பொன்முடி குறுக்கிட்டு ஊட்டி வாசம் ஆளுங்கட்சி சார்பிலே யாரும் மேற்கொள்ளவில்லை, உங்கள் அம்மையார்தான் ஊட்டியிலே உள்ள கொடநாட்டிலே தங்கியிருக்கிறார் என்று கூறியதை எடுத்துக் காட்டி - தான் கொட நாட்டிலே தங்கியது உண்மை தான் என்றும், கொட நாடு தமிழ்நாட்டிலே தான் இருக்கிறது, அங்கே தங்கியதில் என்ன தவறு? ஆனால் முதலமைச்சர் அடிக்கடி பெங்களூர் சென்று பண்ணை வீட்டிலே தங்குகிறாரே? அது நியாயமா? என்ற கேள்வியை அவையிலே எழுப்பினார். உண்மை தான், நான் கடந்த ஆண்டு ஒரு முறையும், இந்த ஆண்டு ஒரு முறையும் பெங்களூர் சென்று அங்கேயுள்ள என் மகள் செல்வி தொடர்ந்து அழைத்ததின் பேரில் தங்கியிருந்தது உண்மைதான். அதிலே ஒரு முறை பெங்களூர் சென்ற போது அய்யன் வள்ளுவரின் சிலை திறப்பினையொட்டி சென்றிருந்தேன்.
மகளின் அழைப்பையேற்று தந்தை சென்று நாட்கணக்கில் ஓய்வெடுப்பது ஒன்றும் தவறில்லையே? நான் மாதக் கணக்கிலும், வாரக் கணக்கிலுமா தங்கியிருந்தேன். எதிர்க்கட்சித் தலைவர் ஆளுநர் உரையிலே பேச வேண்டிய முக்கிய குறிப்பாக இதனைப் பேசிய போது அமைச்சர் துரைமுருகன் குறிப்பிட்டு கொடநாடு தமிழ்நாட்டில் தான் இருக்கிறது, அதை ஏற்றுக் கொள்கிறோம், ஆனால் ஐதராபாத்தில் உள்ள திராட்சை தோட்டத்தில் சென்று ஓய்வெடுத்தீர்களே, ஐதராபாத் என்ன தமிழ்நாட்டிலா இருக்கிறது என்று கேள்வி கேட்டார். உடனே ஜெயலலிதா அமைச்சர்கள் அற்ப விஷயங்களைப் பேசி அவரை பேச விடாமல் செய்கிறார்கள் என்றார்.
தொடர்ந்து ஜெயலலிதா காங்கிரஸ் உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ்க்கு பதில் அளிக்க முற்பட்டார். அதாவது தகவல் அறியும் உரிமைச் சட்டம் தற்போதைய முதல்வர் ஆட்சிக் காலத்தில்தான் செயல்படுத்தப்பட்டதாக இங்கே பாராட்டினார். அது தவறான தகவல். எங்கள் ஆட்சிக் காலத்திலேதான் அது செயல்படுத்தப்பட்டது. நான் முதலமைச்சராக இருக்கும்போது முதன்முதலாக அந்தச் சட்டத்தை அமல்படுத்தி மூன்று கமிஷனர்களை நியமனம் செய்தேன் என்று கூறினார். தகவல் அறியும் உரிமைச் சட்டம் 17-4-1997 அன்று பேரவையில் தி.மு.கழக ஆட்சிக் காலத்தில் முதன் முதலாக முன் மொழியப்பட்டு - 30-4-1997 அன்று பேரவையிலே நிறைவேற்றப் பட்டது. அதன் பின்னர் மத்திய அரசே தகவல் அறியும் உரிமைச் சட்டம் ஒன்றினை அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும் விதமாக நிறைவேற்றியது. அந்தச் சட்டத்தின்படி தான் ஜெயலலிதா மூன்று கமிஷனர்களை தமிழகத்திலே நியமனம் செய்தாரேயொழிய அவரது ஆட்சிக் காலத்தில் எந்தச் சட்டமும் கொண்டு வரவில்லை என்பதுதான் உண்மை. இப்போதும் “விக்கிபீடியா (என்சைக்ளோ பிடியா)” வை எடுத்துப் பார்த்தால் - “The Right to Information Laws were first successfully enacted by the State Government of Tamil Nadu (1997)” என்று வெளியிட்டிருப்பதைப் பார்த்து தெரிந்து கொள்ள முடியும்.
அடுத்து, எதிர்க்கட்சித் தலைவர் - திரைப்படத் துறையினர் அடுத்த திங்கள் எனக்கு நடத்தவுள்ள பாராட்டு விழாவினை
தாங்கிக் கொள்ள முடியாமல் - திருட்டு வி.சி.டி. பற்றிப் பேசி - தனது ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் திருட்டு வி.சி.டி. களே கிடையாது என்றும் - தி.மு.க.வைச் சேர்ந்த இரண்டு பெரிய அதிகார மையங்கள் தற்போது இந்தத் திருட்டு வி.சி.டி. தொழிலை நடத்துகிறார்கள் என்றதொரு குற்றச்சாட்டினை எந்தவிதமான ஆதாரமும் இல்லாமல் பேரவையிலே தெரிவித்தார். அவர் இவ்வளவு பெரிய குற்றச்சாட்டினை சுமத்திய காரணத்தால், அமைச்சர் பரிதி இளம்வழுதி குறுக்கிட்டு - “உங்கள் ஆட்சிக் காலத்தில் திருட்டு வி.சி.டி. தொழில் கிடையாது, ஏனென்றால் அந்தத் தொழிலை செய்து கொண்டிருந்த நீங்கள் ஆட்சிக்கு வந்து விட்ட காரணத்தினால், அப்போது அந்தத் தொழில் இல்லை” என்றார். அவர் இவ்வாறு கூறியது கூட தவறு என்று நான் பின்னால் திரும்பி அவரைக் கண்டித்தேன்.
பேரவையில் கழகச் சட்டமன்ற உறுப்பினர்கள் பேசும்போது என்னைப் பற்றி புகழ்ந்துரைத்து பேச வேண்டாம் என்றும், கருத்துக்களை மட்டும் பேசினால் போதும் என்றும் நான் முதல் நாள் சொல்லியிருந்ததை எடுத்துக் கூறி, எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா அம்மையார் அநாகரிகத்தின் உச்சக்கட்டத்திற்கே சென்று, முதல் அமைச்சருக்கு சொந்தக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் பிடிக்காதா? நடிக, நடிகையர் புகழ்ந்தால்தான் பிடிக்கும்போலும் என்றார். அவையின் விவாதத்தை பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்த அவை முன்னவர் பேராசிரியரே பொறுமையை இழந்து, எதிர்க்கட்சித் தலைவர் சொன்ன கருத்து ஒரு எதிர்க்கட்சித் தலைவருடைய கண்ணியத்தை எந்த அளவிற்குப் பாதிக்கிறது என்பதை அவருக்கு நினைவூட்டுவதாகவும், நடிப்பவர்கள் புகழ்வது மட்டும்தான் கலைஞருக்குப் பிடிக்கும் என்றால், எதிர்க் கட்சித் தலைவர் பேசுவது கூட பிடிக்கத்தான் வேண்டும் என்றார்.
அதைப்பற்றி எதுவும் தொடராமல், ஜெயலலிதா ஏழையெளிய மக்களுக்காக கழக அரசு கட்டிக் கொடுக்கவுள்ள 21 இலட்சம் வீடுகள் பற்றிப் பேச ஆரம்பித்து - இந்த ஆண்டு 1800 கோடி ரூபாயில் 3 இலட்சம் வீடுகளைக் கட்டுவதாக அறிவித்திருக் கிறீர்களே, அதற்கு எங்கிருந்து பணம் வரப் போகிறது? தி.மு.க. வினர் தங்கள் சொந்தப் பணத்திலிருந்து செலவிடப்
போகிறார்களா? தி.மு.க. தலைவரும் அவரது குடும்பத்தினரும் தங்கள் சொந்தப் பணத்தை செலவு செய்யப் போகிறார்களா? என்றார். எந்த அளவிற்கு அநாகரிகமான பேச்சு அது என்பதை பத்திரிகையாளர்கள்தான் நாட்டிற்குத் தெரிவிக்கவேண்டும். அவர்களுக்கு மனம் வருமா?
அடுத்து எதிர்க்கட்சித் தலைவர் தமிழக அரசின் நிதி நிலைமை குறித்தெல்லாம் பேசி தமிழக அரசுக்கு உள்ள கடன் சுமை பற்றியெல்லாம் பேசி கழக ஆட்சியிலேதான் அதிக கடன் சுமை ஏற்பட்டு விட்டது என்றார். 1996-2001 ஆம் ஆண்டுகால தி.மு.க. ஆட்சியின் இறுதியில் அதாவது 31-3-2001 அன்று ரூபாய் 28,685 கோடி அளவில் தமிழக அரசின் கடன் பொறுப்புகள் இருந்தன. இதன் பின் அ.இ.அ.தி.மு.க. ஆட்சி நடத்திய 2001-2006 ஆம் ஆண்டு காலத்தின் இறுதியில் அதாவது 31-3-2006 அன்று மாநில அரசின் கடன் பொறுப்புகள் ரூபாய் 57,457 கோடியாக உயர்ந்தது. சுருங்கக் கூறின் அ.இ.அ.தி.மு.க. ஆட்சியின் 5 ஆண்டுகால இறுதியில் தமிழக அரசின் கடன் பொறுப்புகள் தி.மு.க ஆட்சி விட்டுச் சென்றதை விட இரு மடங்காக உயர்ந்தது புலப்படும்.
இந்த அரசைப் பொறுத்தவரையில் 12வது நிதிக் குழுவும் மைய அரசும் பரிந்துரைத்துள்ள அளவிலேயே நிதிப்பற்றாக் குறையை ஈடுகட்டுவதற்குத் தேவையான கடன்களை மத்திய அரசின் அனுமதியுடன் பெற்று நிதி நிர்வாகம் செய்து வருகிறது. 12வது நிதிக் குழு மற்றும் மத்திய அரசின் பரிந்துரையின்படி மாநில அரசின் நிதிப் பற்றாக்குறை மாநிலத்தின் மொத்த உற்பத்தியில் 3 விழுக்காட்டிற்கு மிகாமல் இருக்க வேண்டும். இந்த வரையறையையே தமிழக அரசு 2006-2007, 2007-2008 மற்றும் 2008-2009 ஆகிய நிதி ஆண்டுகளுக்குப் பின்பற்றியுள்ளது. 31- 3-2006 அன்று அ.இ.அ.தி.மு.க. ஆட்சியின் இறுதியில் இருந்த ரூபாய் 57,457 கோடி கடன் பொறுப்புகள் 2006-2007 நிதி ஆண்டு இறுதியில் ரூபாய் 60,170 கோடியாக உயர்ந்தது. இது 2007-2008 நிதி ஆண்டு இறுதியில் ரூபாய் 64,655 கோடியாக உயர்ந்துள்ளது. 2008-2009 நிதி ஆண்டு இறுதியில் 31-3-2009 அன்று மாநில அரசின் மொத்த கடன் பொறுப்புகள் ரூபாய் 74,858 கோடியாக உயர்ந்துள்ளது. அரசு கடனாகத் திரட்டும் நிதி ஆதாரங்கள் யாவும் அரசின் பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்துவதற்கும்
கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்வதற்கும் பயன்படுத்தப்படுகிறது. மந்த நிலையிலிருந்து பொருளாதாரத்தை மீட்பதற்காக மாநில அரசுகளின் செலவுகளை அதிகரித்து அதன் மூலம் மக்களின் வாங்கும் சக்தியை அதிகரித்து பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கம் (stimulus) அளிக்கும் வகையில் 2009-2010 ஆம் ஆண்டு மத்திய அரசு, மாநில அரசுகள் தங்களது நிதிப் பற்றாக்குறையை மாநிலத்தின் மொத்த உற்பத்தியில் 4 விழுக்காடு அளவிற்கு உயர்த்திக் கொள்ளலாம் என்று அனுமதித்து உள்ளது. இந்த வழிகாட்டுதலின்படியே தமிழக அரசு 2009-2010ஆம் ஆண்டிற்கான நிதி நிர்வாகத்தை மேற்கொண்டு வருகிறது. எனவே, தற்போது கடன் சுமை மிகவும் அதிகரித்து வருவதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன என்று மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் கூறியுள்ளது சரியான தகவல் அல்ல. சதியான தகவல்!
தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் தான் முக்கியமான 3 கேள்விகளைக் கேட்கப் போவதாகவும், அதற்கு முதல் அமைச்சர் பதில் கூற வேண்டுமென்றும் சொல்லிவிட்டு, மூன்று கேள்விகளைக் கேட்டார். அதற்கு பதில்களைக் கேட்ட ஜெயலலிதா, அதற்காக அவையிலே காத்திருக்க விரும்பாமல் பேசி முடித்தவுடன் அவசர அவசரமாகப் புறப்பட்டுப் போய் விட்டார். இருந்தாலும் அவர் கேட்ட மூன்று கேள்விக்கும் என்னுடைய பதில்கள் இதோ :-
முதல் கேள்வி:
தற்போது தமிழகத்தின் கடன் சுமை எத்தனை கோடி ரூபாய்?
பதில்:
ஏற்கெனவே மேலே கூறியவாறு 31-3-2009 அன்று மாநில அரசின் மொத்த கடன் பொறுப்புகள் ரூபாய் 74,858 கோடி ஆகும்.
இரண்டாவது கேள்வி:
21 இலட்சம் வீடுகளை இலவசமாக ஏழை எளிய மக்களுக்கு கட்டிக் கொடுப்பதற்கு பணம் எங்கிருந்து பெறப்போகிறீர்கள்?
பதில்:
இந்த வீட்டு வசதித் திட்டம் ஒரு திட்டச் செலவு (plan expenditure) என்பதால் மாநில அரசின் ஆண்டு திட்டத்திற்கான
நிதி ஆதாரங்களிலிருந்து (Resources for the Annual Plan) இத்திட்டத்திற்கான செலவு மேற்கொள்ளப்படும். 21 இலட்சம் வீடுகள் கட்ட ரூபாய் 12,600 கோடி தேவைப்படும். 21 இலட்சம் வீடுகள் 6 ஆண்டுகளில் கட்டிக் கொடுக்கப்படும் என்பதால் சராசரியாக ஒவ்வொரு ஆண்டும் ரூபாய் 2100 கோடி தேவைப்படும். வரும் 2010-2011 நிதி ஆண்டில் 3 இலட்சம் வீடுகள் கட்டிக் கொடுக்க இருப்பதால் ஒரு வீடு கட்ட ரூபாய் 60,000 என்ற மதிப்பீட்டில் ரூபாய் 1800 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
மூன்றாவது கேள்வி:
மாநில மொத்த பொருளாதார வளர்ச்சி வீதத்தில் ஏன் இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது?
பதில்:
தி.மு.கழக அரசு பொறுப்பேற்றபின் முதல் ஆண்டான 2006- 2007 நிதி ஆண்டில் தமிழக பொருளாதாரத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி வீதம் 11.29 சதவீதம் ஆகும். 2008-2009 ஆம் ஆண்டில் தமிழகத்தின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி 4.55 விழுக்காடாக மத்திய புள்ளியியல் நிறுவனத்தால் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. 32 மாநிலங்கள் மற்றும் மத்திய அரசின் நேரடி ஆளுமைக்கு உட்பட்ட பகுதிகள் (Union Territories) ஆகியவற்றில் 18 மாநிலங்கள் மற்றும் மத்திய அரசின் நேரடி ஆளுமைக்கு உட்பட்ட பகுதிகளுக்கு மட்டுமே இந்த மதிப்பீடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. வளர்ந்த மாநிலங்களான தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம் போன்ற மாநிலங்கள் 4.5 விழுக்காட்டிலிருந்து 5.5 விழுக்காடு அளவிலேயே ஆண்டு வளர்ச்சி வீதங்களைப் பெற்றுள்ளன. 2008-2009 ஆம் ஆண்டில் ஆந்திர மாநிலத்தின் வளர்ச்சி வீதம் 5.53 சதவீதம். கர்நாடகத்தின் வளர்ச்சிவீதம் 5.08 சதவீதம். தமிழகத்தின் வளர்ச்சிவீதம் 4.55 சதவீதம். உலகளாவிய பொருளாதார வீழ்ச்சியினாலும் அதன் காரணமாக நமது நாட்டில் தொழில் துறையிலும் குறிப்பாக ஏற்றுமதியிலும் மந்தநிலை காணப்படுவதால் தொழில் துறையில் முன்னணி மாநிலங்களாகிய தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரம் ஆகியவை குறைந்த அளவிலேயே வளர்ச்சி
வீதத்தை அடைந்திருக்கின்றன. மேலும் தொழில் துறையில் முன்னணி மாநிலங்களாக விளங்கும் குஜராத், மஹாராஷ்ட்ரா ஆகிய மாநிலங்களின் பொருளாதார வளர்ச்சி வீதம் குறித்து புள்ளிவிவரங்கள் இன்னும் பெறப்படவில்லை. 2008-2009 இல் 4.55 சதவீதமாக வளர்ச்சி வீதம் குறைந்து உள்ளதற்கு முக்கிய காரணம் உலகளாவிய பொருளாதார வீழ்ச்சியின் தாக்கமேயாகும்.
எதிர்க்கட்சித் தலைவர் அடுத்து முக்கியமாக கேட்டது, 2006 ஆம் ஆண்டு 55 லட்சம் ஏக்கர் தரிசு நிலங்களை நிலமற்ற ஏழை விவசாயக் குடும்பங்களுக்கு வழங்கப்படும் என்று சொன்னீர்களே, 2 இலட்சத்து 11 ஆயிரத்து 366 ஏக்கர் நிலம் தானே வழங்கியிருக்கிறீர்கள் என்று வினா எழுப்பிய போது, “56 லட்சம் ஏக்கர் என்பது அ.தி.மு.க. நிதி நிலை அறிக்கையிலே கூறப்பட்டிருந்த வாசகம். அதை உண்மையென்று நம்பி நாங்களும் 56 லட்சம் ஏக்கர் என்று வெளியிட்டு விட்டோம்.” என்று கூறினேன். உடனே ஜெயலலிதா, “எங்கள் ஆட்சியில் வெளியிடப்பட்ட நிதி நிலை அறிக்கையில் 55 இலட்சம் ஏக்கர் தரிசு நிலம் பண்படுத்தப்படும் என்று அறிவித்தோமே தவிர, அந்த 55 லட்சம் ஏக்கர் நிலமும் அரசிடம் இருக்கிறதென்று சொல்லவில்லை. அப்படிச் சொல்லியிருந்தால் அதைக் காட்டட்டும் பார்க்கலாம்” என்றார். அதற்கு நான், “நீங்கள் 55 இலட்சம் ஏக்கர் நிலம் பண்படுத்தப்படும் என்று நிதிநிலை அறிக்கையிலே குறிப்பிட்டிருந்ததை நம்பி, அப்படி பண்படுத்தப்பட்டால் அதை ஏழையெளியவர்களுக்குத் தரலாம் என்று அறிவித்தோம்” என்று கூறினேன்.
இதோ 2001-2002ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை - நிதியமைச்சராக இருந்த திரு. பொன்னையன் 18-8-2001இல் படித்தது - பத்தி 18 - “பயிர் செய்ய ஏற்ற 20 இலட்சம் எக்டேர் (50 லட்சம் ஏக்கர்) தரிசு நிலங்களை வரும் ஐந்தாண்டு காலத்திற்குள் மேம்படுத்திட மாண்புமிகு முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்கள் தரிசு நில மேம்பாட்டுத் திட்டம் எனும் மிகப் பெரிய அளவிலான தொலை நோக்குத் திட்டம் ஒன்றை ஏற்கெனவே அறிவித்துள்ளார்.”
இந்த அறிவிப்பினை நம்பித் தான் 2006-2007ஆம் ஆண்டு தி.மு.கழக நிதி நிலை அறிக்கையில் 50 இலட்சம் ஏக்கர் என்று குறிப்பிடப்பட்டது என்று நான் விளக்கினேன். இதனை இப்போது
சொல்லவில்லை, 2006ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கையிலேயே பத்தி 14இல் “இதற்கு முன்பிருந்த ஆட்சியில் 2001-2002 ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் தமிழகத்தில் மொத்தம் 50 லட்சம் ஏக்கர் தரிசு நிலங்கள் உள்ளன என்று அறிவிக்கப் பட்டிருந்தது. அதனையொட்டி தி.மு.கழக தேர்தல் அறிக்கையில் இந்தத் தரிசு நிலங்களைச் சீர் செய்து நிலமற்ற ஏழை விவசாயக் குடும்பங்களுக்கு அரசு அளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது” என்றும் சொல்லப்பட்டுள்ளது. பேரவையிலே “காட்டட்டும் பார்க்கலாம்” என்று ஜெயலலிதா சவாலிட்டதற்கு இதோ நிதி நிலை அறிக்கையிலே கூறப்பட்டுள்ள வாசகங்களையே எடுத்துக் காட்டி விட்டேன். என்ன செய்யப் போகிறார் ஜெயலலிதா?
இறுதியாக ஜெயலலிதா 21 இலட்சம் இலவச வீடுகளை ஆறு ஆண்டுகளில் கட்டித் தருவதைப் பற்றி பேசி, அது மக்களை ஏமாற்றுவதற்கான திட்டம் என்றும் ஆனால் மக்களை ஏமாற்ற முடியாது என்றும் அதற்கு 1800கோடி ரூபாய் நிதிக்கு எங்கே போகப் போகிறீர்கள் என்றெல்லாம் கேட்டார். வீடுகள் கட்ட நிதி ஒதுக்கப்படுகிறதா என்பதை இன்னும் சில வாரங்களில் வரவிருக்கின்ற நிதி நிலை அறிக்கையிலே ஜெயலலிதா தெரிந்து கொள்வார். நாட்டு மக்களும் யார் மக்களை ஏமாற்றுகிறார்கள் என்பதை புரிந்து கொள்வார்கள். எம்.ஜி.ஆரின் பாடல் ஒன்றினைப் பாடி ஜெயலலிதா தன் பேச்சை முடித்துக் கொண்டார். அந்தப் பாடல் -
என்ன தான் நடக்கும், நடக்கட்டுமே! இருட்டினில் நீதி மறையட்டுமே! தன்னாலே வெளி வரும் தயங்காதே! ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே!
என்று அவர் பாடியது தான் தாமதம். அவருடைய கட்சி உறுப்பினர்கள் எழுப்பிய கூச்சல் அடங்க நீண்ட நேரம் ஆயிற்று.
நானும் பேரவையில் என் உரையை முடிப்பதற்கு முன்பு அந்தப் பாடலைப் பற்றியே குறிப்பிட்டேன். இதோ அது வருமாறு:-
“எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா அவர்கள் தன்னுடைய உரையின் இறுதியிலே மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களுடைய பாடலை இங்கே சொன்னார்கள். அந்தப் பாட்டு அவர்களுக்காகப்
பாடியதல்ல. எனக்குத் தெரியும் - எம்.ஜி.ஆர். அவர்கள் என்னை மனதிலே கொண்டு பாடிய பாடல் அது. ஏனென்றால் என்னுடைய நாற்பதாண்டு கால நண்பர் அல்லவா? இன்னும் சொல்லப் போனால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கட்சித் தேர்தல் நடைபெற்றபோது - தலைவராக நான்தான் வர வேண்டுமென்று எண்ணி அதற்காகப் பாடுபட்டவர், அதற்காக ஆட்களைச் சேர்த்தவர். அந்த நன்றி எனக்குண்டு, சாகின்ற வரையிலே உண்டு. அதைப் போல இந்தப் பொறுப்புக்கு நான் வர வேண்டுமென்று விரும்பியவர்களில் அவரும் ஒருவர். ஆகவே நான் அவருக்கும் எனக்கும் உள்ள நாற்பதாண்டு கால நட்பின் காரணமாக சொல்லுகிறேன். இங்கே அவர் இறுதியில் ஒரு பாடலைச் சொன்னாலுங்கூட - அதனை நான் இப்படித்தான் கருதிக் கொள்கிறேன்.
என்ன தான் நடக்கும், நடக்கட்டுமே! இருட்டினில் நீதி மறையட்டுமே! தன்னாலே வெளி வரும் தயங்காதே! ஒரு “தலைவன்” இருக்கிறான் மயங்காதே!
அதாவது ஒரு தலைவன் இருக்கின்றான் மயங்காதே என்றுதான் - என்னைக் குறிப்பிட்டுத் தான் சொல்கிறார் - ஒரு தலைவி இருக்கிறார் மயங்காதே என்று சொல்லவில்லை (மேஜையைத் தட்டும் ஒலி). இதை இந்த அவையிலே உள்ள உறுப்பினர்கள் எம்.ஜி.ஆருடைய அந்த நம்பிக்கையான வார்த்தையை ஏற்றுக் கொண்டு, இந்த அவையை சிறப்பாக நடத்த வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.”
அன்புள்ள, மு.க. 13-1-2010
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 43 (சீதை பதிப்பகம்), TVA_BOK_0065828_கலைஞரின்_கடிதங்கள்_தொகுதி_43.pdf; PDF பக்கம் 212–234. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.