பொருளடக்கம்

குறளோவியம்

குறளோவியம்

பாராட்டுரைகளும் கலைஞர் ஏற்புரையும்

அச்சுப் பக்கம் 114 · ஸ்கேன் 1831

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

பேராசிரியர்

கலைஞருடைய மணிவிழாவை நடத்தியதற்குப் பின்னர், அது போன்ற இன்னொரு விழாவை நடத்துவதற்கு ஒரு வாய்ப்பு என்று கருதக் கூடிய அளவு இந்த விழா; அது மணிவிழா; இது மணிமுடி விழாவாக அமைந்திருப்பதாக நான் உணருகிறேன்.

அரசியல் என்பது முழுவதுமே போர்க்களக்காட்சி அல்ல என்று சொன்னாலும் கூட, உலைக்களக் காட்சியாகத்தான் பெரும்பாலும் அரசியல் இருக்கிறது என்பதை யாரும் மறந்துவிட முடியாது. உலைக்களக்காட்சியிலே அயராது பணியாற்றுகிற ஒரு தொண்டனாக - ஒரு தளபதியாக - ஒரு தலைவனாகத் தன்னை ஒப்படைத்துக் கொண்டிருப்பவர் கலைஞர்.

ஓயாது உலைக்களத்திலே நிற்பவன், அங்கே உள்ள வெப்ப மிகுதியினாலே வியர்வை கொட்டக்கொட்ட, வேலை தடைபட, அது காரணமாக சோர்வு கொள்ளக்கூடிய அளவுக்கு அவன் பணியாற்ற வேண்டியவனாகத்தான் இருப்பான்.

அந்த உலைக்களத்திலே நின்று போர்க்கருவிகளை வடிக்கக்கூடிய கடமையும் இருக்கக்கூடிய அந்த அரசியல்வாதி, சோலையிலே உலவச் சென்றால், அப்போது அங்கு வீசுகின்ற மென்காற்று அவனுடைய மனதிற்கு எப்படிப்பட்ட மகிழ்ச்சியை - நிறைவை - உற்சாகத்தை - புன்னகையை வழங்குமோ அதைப் போல கலைஞர் அவர்கள் அரசியலிலே உலைக்களத்திலே நிற்பவர். தேவைப் படுகிற நேரத்திலே போர்க்களத்தில் நிற்பவர். எனவே, அவர் இந்த இலக்கியச் சோலையிலே உலவுவதை, ஏறத்தாழ அவருடைய பதினைந்தாவது வயதிலே இருந்து ஓர் இயல்பாக ஆக்கிக் கொண்டு இலக்கியச் சோலையிலேயும் உலவுவார்; அந்தச் சோலையிலே உள்ள நறுமலர்களையெல்லாம் நுகர்வார். அதன் நறுமணங்களையெல்லாம் தனித்தனியாகப் பிரித்து அறிவார்; அந்த மணங்களையெல்லாம் மறுபடியும் ஏட்டிலே நிரப்புவதைப் போல தன்னுடைய எழுத்திலே நிரப்புவார்; மற்றவர்களுக்கெல்லாம் விருந்தாக்குவார் என்று சொல்லத்தக்க அளவுக்கு இலக்கியச் சோலையிலே உலவுகிற ஒரு கலை உணர்வுமிக்க கலைஞராக அவர் விளங்கி, அது காரணமாகத் தன்னையே கூட அரசியலிலே ஏற்படுகிற சோர்வுக்கெல்லாம் மாற்றாக - இந்த இலக்கியப் பூஞ்சோலையிலே இருப்பவராக ஆக்கிக் கொண்டிருப்பவர்.

பேரறிஞர் அண்ணா, அந்த வழியிலேதான் தமிழ்நாட்டிலே பணியாற்றினார்கள். அரசியலிலே எவ்வளவுதான் ஆர்வம் இருந்தாலும் கூட, அவருக்கு இருந்த இலக்கிய ஆர்வம் மிகுதியாகும். அதே வழியிலே கலைஞர் அவர்கள், அறிஞர் அண்ணாவுக்குத்

தப்பாத தம்பி; தவறாத தம்பி; அவர் வழிமாறாத தம்பி; அண்ணாவின் வழியிலே வளர்கிற ஆற்றல் மிக்க தம்பி என்று அறிஞர் அண்ணாவாலே உணரப்பட்டு அந்த வகையிலே வளர்ந்தவர். இன்றைய தினம் நாட்டுக்குக் குறளோவியத்தை வழங்கியிருக்கிறார்.

வள்ளுவர், குறளைத் தந்தார்; வைரமணிகளைத் தந்தார். அந்த வைர மணிகளைத் தங்க ஏட்டிலே பதித்துத் தந்தார். மூன்று பாலாக அவர் வகுத்துத் தந்தார். அவர் தந்த வைரமணிகளைக் காணுகிறபோது - அவை எவ்வளவு அழகுடையனவாக இருந்தாலும் காணுகிறபோது - கண் கூசுகிறது. அதைப் பார்க்க முடிவதில்லை. ஏனென்றால், அதைப் பார்க்கிறபோது அவற்றில் அறிவாற்றல் ஒளி மிகுந்திருப்பது காரணமாக, வைரமணியை நோக்கப் பார்க்க முடியாத நிலைமை ஏற்படுவது உண்டு.

இன்னும் சொல்லப் போனால் அந்த ஒளி பளிச்சிட்டுத் தெரிகிற ஒளியாக இருக்கிற பொழுது, அந்த வைரத்தினுடைய அழகு தெரிவதில்லை. ஒளி மட்டுமே தான் தெரியும். ஆனால், அதே வைரத்தை மரகதத்தோடு, கோமேதகத்தோடு வேறு பல வண்ண வண்ண வைரத்தை ஒத்த கற்களோடு இணைத்துப் பொன்னை இழைக்கிறபோது, அந்த வைரம் தனித்து ஒளி பெறுவது மட்டுமல்ல; அதனுடைய அழகை முழு அளவிலே காணக்கூடிய அளவு முழு ஒளியையும் தரும்.

அதைப்போல வள்ளுவர் தந்த குறளை ஓவியத்திலே வைத்து இழைத்து, அந்த வைரத்தினுடைய ஒளியினை நம் கண்ணாலே காணக்கூடிய அளவுக்கு உருவாக்கித் தருகிற அரும் பெரும் பணியை, ஒரு பேற்றற்க மிக்க பணியை வைரத்தைப் பொறித்து, பொன்னைப் பொறித்து, பொற்கொல்லரும் ஆற்றக் கூடிய பணியை தமிழைப் பொறித்து, அதன் குறளைப் பொறித்து, [சில சொற்கள் மூல ஸ்கேனில் தெளிவில்லாததால் ஊகிக்கப்படவில்லை] ஆற்றக் கூடிய ஒரு கலைஞனாக இருந்து கலைஞர் அவர்கள் அதை இன்றைக்கு நிறைவு செய்திருக்கிறார்கள்.

வள்ளுவன் வரிகள் முழுதும் வாழ்வதற்கு வழி காட்டிய காரணத்தால், “வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு” என்று பாரதி பாடினார். அந்த வள்ளுவன் தந்த குறளை, நம் உள்ளம் கொள்ளத்தக்க வகையிலே எடுத்துச் சொன்ன புலவர்கள் என்று சொல்லத்தக்கவர்கள் மிகப் பலர் அல்லர். மிகச் சிறந்த உரையாசிரியர்கள் பரிமேலழகரோ, மணப் புலவரோ அல்லது இன்னும் அண்மைக் காலத்திலே தோன்றிய உரையாசிரியர் கா. சு. பிள்ளையோ, டாக்டர் மு. வ. வோ, என்னுடைய அருமைப் பேராசிரியர் டாக்டர் வ. சுப. அவர்களோ அல்லது இன்னும் பலப்பல ஆசிரியர்கள், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களோ அல்லது புலவர் குழந்தை அவர்களோ நாமக்கல் கவி அவர்களோ, வகைவகையாக வண்ணவண்ணமாக வள்ளுவனுடைய குறளுக்கு உரை வழங்கியிருக்கிறார்கள். ஆனால், அந்த உரைகளைக் காணுகிறபோது, வள்ளுவனுடைய கருத்தை ஒரு கோணத்தில் உரையாசிரியர்கள் மூலமாக நாம் காண்கிறோம்.

கலைஞர், வள்ளுவரை எந்தெந்த குறள் மூலமாகத் தொட்டுக் காட்டினாலும் வள்ளுவரை முழுத் தோற்றத்திலே காட்டுகிறார்.

வள்ளுவரின் அழகைக் காட்டுகிறார்; முகத்தைக் காட்டுகிறார்; அவருடைய சீற்றத்தைக் காட்டுகிறார்; அவர் பெரிய அறிவு மேதையாக விளங்குவதைக் காட்டுகிறார்; வள்ளுவரை ஒரு தலைவராகக் காட்டுகிறார்; வள்ளுவரின் உள்ளத்திலே இருந்த ஒரு தலைவியையும் சித்திரித்துக் காட்டுகிறார்; வள்ளுவரை வணிகராகக் காட்டுகிறார்; வள்ளுவரை வேடனாகக் காட்டுகிறார்.

மூலத்தின் நிலையான வரம்பு

இப்பக்கத்தின் சில சொற்கள் மூல ஸ்கேனில் மங்கியுள்ளன; அவை இருக்கும் இடம் குறிக்கப்பட்டுள்ளது. அவை ஊகிக்கப்படவில்லை. இது மூலத்தின் நிலையான நிலை.

வள்ளுவர் உள்ளத்திலே ஒரு பெரிய உலகம் இருப்பதை - அந்த உலகத்தை விவரித்துக் காட்டுகிறார்.

இருபதாம் நூற்றாண்டுக் கலைஞர், இருபது நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த வள்ளுவரின் மறுபதிப்புக் கலைஞர் என்று கூறத்தக்க அளவிற்கு இந்த குறளோவியத்தின் மூலமாக “வள்ளுவரை உணர்ந்த கலைஞன் நான்” என்று கலைஞர் காட்டிக் கொண்டிருக்கின்றார்.

கலைஞர் தீட்டியிருக்கின்ற குறளோவியம் அஜந்தா ஓவியத்தைப் போல; தமிழகத்தில் இருக்கின்ற சில திருக்கோயில்களில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தீட்டப்பட்ட ஓவியம் இன்னும்கூடப் போற்றப்படுவதைப் போல, இந்தக் குறளோவியமும் நிலைக்கும்.

இந்த ஓவியத்தின் மூலம் தமிழ்க்குலம் நிலைக்கும்; அந்தத் தமிழ்க்குலம் நிலைக்கும் அளவுக்குக் கலைஞருடைய புகழும் நிலைக்கும்.

வாழ்க கலைஞர்!

வளர்க அவர் புகழ்!

மகா வித்துவான் தண்டபாணி தேசிகர்

இந்த நூலின் அமைப்பு முறை, அழகான அமைப்பு முறை; இரண்டு குறள் அறத்திற்கும் பொருளிற்கும்; மூன்றாவது குறள் இன்பத்தைப் பற்றியதாக இருக்கும். ஏன் இப்படிக் கையாண்டார்கள் என்று எண்ணிப் பார்க்கிறேன்.

எப்போதும் ஒரு காவியத்தையோ ஓவியத்தையோ தீட்டுகின்ற ஒரு கலைஞன், கடைசிவரையில் அதன் சுவை குன்றாமல் அழைத்துச் செல்லக் கூடியவனாக இருக்க வேண்டும். இந்த உரம், கலைஞர் மனத்திலே நன்றாக ஊறியிருக்கிறது. அதனாலேதான் இன்பத்துப்பாலை இடையிடையே அமைத்து, நம்மிடம் தளர்ச்சி உண்டாகாதபடி அந்த ஓவியத்தை முடித்துக் காட்டுகின்றார்.

கலைஞர் அவர்கள் மிகவும் அழகிய முறையிலே, சுவை குன்றாமல் இந்த ஓவியத்தைத் தீட்டிச் செல்கின்ற முறையைப் பார்க்கிறேன். இந்த நூல் எனக்கே - ஏன் எனக்கே என்றால் நான் சுவையறிவு உள்ளவன் - எனக்கே ஒரு விம்மிதத்தை உண்டாக்கிற்று; அதைப் பாராட்டக்கூடிய நேரமும் எனக்குக் கிடைத்திருக்கிறது.

கலைஞர் அவர்கள் மற்ற அனைத்துக் குறள்களுக்கும் ஓவியம் தீட்டித் தந்தால், எல்லோருக்கும் அது பயன்படும் என நம்புகிறேன். எங்கள் முயற்சியெல்லாம் ஏட்டு முயற்சி; அவர்கள் முயற்சியெல்லாம் எண்ண முயற்சி, இந்த எண்ண முயற்சி வெல்லும்; தமிழ் மக்கள் ஏற்றம் பெறுவார்கள்.

திருக்குறள், பண்டிதரின் பாவையாகவே நெடுநாள் இருந்து வந்தது. என்னுடைய பன்னிரண்டாவது ஆண்டிலேயே நான் பரிமேலழகர் உரையோடு கூட மனப்பாடம் செய்து ஒப்பித்தேன்.

இப்படி மனப்பாடம் செய்து ஒப்பித்த ஒன்று, பிறகு எப்படியெல்லாம் பயன்படுத்தப்படலாம் என்று சொல்ல அப்பொழுது ஆள் இல்லை. இப்பொழுது நமது கலைஞர் பெருமான் அவர்கள், தன்னுடைய கலையழகினாலே காட்சிப் பொருளாகக் கருத்தில் பதிவித்தார்.

அதனை அவ்வப்போது நான் படித்து மகிழ்ந்திருக்கின்றேன். இன்று இளைஞர் முதல் என்னைப் போன்ற கிழவர் வரை எல்லோருக்கும் பயன்படக் கூடிய முறையில் குறளோவியம் அமைந்துவிட்டது.

சுவைத்துச் சுவைத்து என்னுடைய முதுமையை மாற்றிக் கொண்டேன்.

இந்தக் குறளோவியம் 354 குறள்களோடு நின்றுவிடாது, பிறகும் வளர்ந்து திருக்குறள் முழுமைக்கும் ஓவியமாகத் தீட்டப்பட வேண்டும். அது வரையில் கலைஞர் அவர்களின் வாழ்வும் வளமும் பெருகிக் கொண்டிருக்கும்; தமிழ் உயரும்; தமிழ் வளரும்; தமிழ் வாழும் என்ற நிலையில்தான், ஒரு எதிர் நோக்கோடு அவர்களை வாழ்த்துகிறேன்.

டாக்டர் வ.சுப.மாணிக்கம்

இந்தக் குறளோவியத்தில் உள்ள பெரிய சிறப்பு, முப்பதாண்டுகளுக்கு முன் கலைஞர் அவர்கள் தொடங்கி, இந்தக் குறளோவியத்தை எழுதியிருக்கிறார். 1956ஆம் ஆண்டு தொடங்கி இதுவரை எழுதியிருக்கிறார். அப்பொழுது நல்ல இளமையாக இருந்திருப்பார் - ஏன் இப்போதும் நல்ல இளமையுடன்தான் இருக்கிறார்.

முப்பதாண்டுகளுக்கு முன் தொடங்கி முப்பதாண்டுகளாக விடாமல் எழுதியிருக்கிறார் என்றால், அவருடைய தெளிவு, உறுதி, இதை எப்படியும் முடிப்பது என்ற எண்ணம். எவ்வளவு சிறப்பான ஓர் எண்ணத் திண்மை இருந்தால், முப்பதாண்டுகளுக்கு முன் தொடங்கி முடித்திருப்பார்.

அவர்களுக்கு, பிறப்பில் நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ, எனக்கு அதைவிட நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ, இருந்தாலும் முப்பதாவது வயதில் அவருக்கு என்ன தமிழ் நடை வாய்த்ததோ, அந்த நடை இப்பொழுதும் இருக்கிறது. நல்ல கை வந்த நடை, அவரது முப்பதாவது வயதிலேயே இருந்திருக்கிறது.

சிலருக்கு முப்பதிலே ஒரு நடை வரும்; முப்பத்தைந்திலே ஒரு நடை வரும்; அறுபதிலே தள்ளாடிப் போகும்.

ஆனால், முப்பதாண்டுகளாக ஒரே நடையைப் பெற்றிருக்கக்கூடிய சங்கத் தமிழாற்றல் உள்ள சங்கப் புலவருள் ஒருவர்; சங்கச் சான்றோருள் ஒருவர்; சங்கத் தமிழ் பேசும் ஒருவர், கலைஞர்.

எவன் ஒருவனுக்குச் சங்கத் தமிழில் நாட்டம் இல்லையோ, அவன் வெறும் பங்கத் தமிழன் என்பது எனது கருத்து.

திருக்குறள், தொல்காப்பியம் போன்ற சங்க நூல்கள், நமது தமிழுக்கு மூல வேர்கள், விழுதுகள். இந்தச் சங்க இலக்கியங்களில் யார் ஊறித் திளைக்கின்றார்களோ அவர்கள்தான் தமிழினத்தின் நாகரிகத்தையும் சிறப்பையும் உணர முடியும்.

அந்த வகையில், இளமைக் காலந்தொட்டே நல்ல சங்கத் தமிழில் புலமை இருந்த காரணத்தால் அவருடைய குறளோவியத்தில் இருக்கின்ற தமிழ் நடை அவ்வளவு அழுத்தமான - அழகு நிறைந்த - இனியதாக அமைந்திருக்கின்றது.

கலைஞரை நான் மட்டுமே பாராட்டவில்லை; தமிழகமே இன்று பாராட்டுகின்றது.

எவன் ஒருவனுக்குத் தமிழ்ப் பற்று - தமிழ் இனப்பற்று இருக்கின்றதோ, அவன் தான் பெருஞ்செல்வன் என்பது வரலாறு கண்ட உண்மை.

அந்த வகையில் நம்முடைய கலைஞர் அவர்கள் முப்பது ஆண்டுகள் நூல்களையும் படித்து, மிகத் தெளிந்த புலமை பெற்று இந்த நூலை எழுதி இருக்கிறார்.

இந்த நூலில் ஓர் இடத்தில் கலைஞர் சொல்லுகிறார்:

தலைவி, தலைவனுக்கு விருந்து படைக்கிறாள். பல்வேறு காய்கறிகளுடன் பாகற்காயும் படைக்கிறாள். அந்தப் பாகற்காய் “பகுத்தறிவு போல் கசந்தது” என்கிறார்!

என்ன நயம்! இந்த ஒரு தொடர் போதும் கலைஞரை உணர்வதற்கு.

எதிர்காலத்திலே குறளோவியத்தின் பல பக்கங்கள் கிடைக்காவிட்டாலும் இந்த ஒரு பக்கம் மட்டும் கிடைத்தால்கூட போதும், கலைஞரைத் தெரிந்து கொள்ள முடியும்.

இதுவரையில் ஆயிரம் ஆயிரம் உரைகள் எழுதப்பட்டு இருக்கின்றனவே ... அவற்றில் எங்காவது ஓர் இடத்தில் பகுத்தறிவு என்ற கருத்தை யாராவது குறிப்பிட்டிருக்கிறார்களா? இல்லை!

அந்த வகையில் நமது கலைஞர் அவர்கள் - நன்றாகத் தமிழ் அறிந்தவர்கள் - தமிழ் வாழ வேண்டுமென்று நினைப்பவர்கள்!

கலைஞர் அவர்கள், பரிமேலழகர் உரைக்கு மேலாக - மணக்குடவர் உரைக்கு மேலாக - இதுவரையில் வந்துள்ள உரைகளுக்கெல்லாம் மேலாக - பல பக்கங்களில் கண் கவரும் ஓவியங்களோடு குறளோவியம் தந்துள்ளார்.

எதிர்காலத்தில் ஒரு பெரும் ஆராய்ச்சிக்குரிய இந்த நூலைத் தமிழறிஞர்கள், பலஆயிரக்கணக்கான பொதுமக்கள் அடங்கிய இந்த மன்றத்தில் வெளியிடுவதில் நான் பெருமையடைகின்றேன்.

பாரதி பதிப்பகத்தார் இந்த நூலை மிகுந்த - சிறந்த முறையில் வெளியிட்டிருக்கிறார்கள்.

குறள் படைத்த வள்ளுவருக்கு எவ்வளவு மதிப்பு உண்டோ அவ்வளவு மதிப்பு, இந்தக் குறளோவியம் படைத்த இந்தக்கவிக்கும் உண்டு.

மதுரை யாதவர் கல்லூரி முதல்வர் தமிழ்க்குடிமகன்

கலைஞர் அமைத்த வள்ளுவர் கோட்டம் நெடுங்காலம் நிலைத்து நிற்குமா? குறளோவியம் நிலைத்து நிற்குமா? என்று ஒரு பட்டிமன்றம் வைத்தால், நான் குறளோவியத்தின் பக்கம்தான் பேசுவேன். ஏனென்றால், கட்டடங்கள் என்ற முறையில், அவை ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னால் சற்றுத் தளர்வு பெறலாம். ஆனால், ஓர் இலக்கியம் என்ற முறையில், ஒரு இலக்கிய கர்த்தா பல நூறு ஆண்டுகளுக்கு முன்னால் உருவாக்கிக்கொடுத்த கருத்துக்களுக்கு இப்படி ஒரு ஓவியத்தை இதுவரையில் எந்தத் தமிழறிஞனும் எழுதியதில்லை என்பதுதான்.

திருக்குறளுக்கு நூற்றுக்கு மேற்பட்டவர்களின் குறிப்புகள், உரைகள் வந்திருந்தாலும் ஒவ்வொருவருடைய நெஞ்சத்திலும் முற்றிலும் உத்தியை கையாண்ட ஒரே தலைவர் கலைஞர் மட்டும்தான்.

பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் திருக்குறள் பாடமாக வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், மாணவர்கள் அதைப் பொருட்படுத்துவதே இல்லை. அது திருக்குறளின் குற்றமல்ல; ஒவ்வொரு மாணவனுடைய உள்ளத்திலும் அதைப் பதிய வைக்கின்ற உத்தியை, எந்தக் கல்வித் துறையும் கையாளாதது ஒரு குற்றம்.

ஆனால், இனிமேல் திருக்குறளை வெறும் குறள் பாடமாக வைப்பதைவிட, இந்தக் குறளோவியத்திலிருந்து நான்கு கதைகளைப் பாடமாக வைத்தால் அது பதிவதைப்போல வேறு எவனுக்கும் எதுவும் பதியாது என்பதை என்னால் ஓர் ஆசிரியன் என்ற முறையில் உறுதியாகச் சொல்ல முடியும்.

பாடக்குழுவிலே இருக்கின்ற அறிஞர்கள், அரசியல் வேறுபாடுகளைப் பற்றிக் கவலைப்படாமல், உள்ளபடியே அவர்கள் வள்ளுவர் கூறுகிற நடுநிலை உணர்வு படைத்தவர்களாக இருப்பார்களேயானால் - வள்ளுவர் கூறுகிற செய்நன்றி உணர்வு இருக்குமேயானால் - அவர்கள் இதைப் பாடமாக வைக்கவேண்டும்.

காசி ஆனந்தன்

கலைஞர் அவர்கள் இந்தக் குறளோவியத்தில், வீரர்களையெல்லாம் - பழைய புறநானூற்று வீரர்களையெல்லாம் ஓவியமாக்கித் தந்திருக்கிறார்கள்.

ஆனால், எங்களுடைய நாட்டிலே இதே கலைஞர் மிக நீண்ட காலங்களுக்கு முன்பு - அவர்தான் - ஆம்! அவர்தான் ஓவியங்களாக இருந்தவர்களையெல்லாம் வீரராக ஆக்கினார்! இந்தத் தமிழ் மண்ணிலே, வீரர்களையெல்லாம் ஓவியமாக ஆக்கியிருக்கிறார்; ஈழநாட்டில், ஓவியங்களையெல்லாம் வீரர்களாக ஆக்கியிருக்கிறார்.

அதனால்தான் இன்று நாங்கள் களத்தில் நின்று போராடிக் கொண்டிருக்கிறோம்.

இங்கு வந்து கலைஞர் அவர்களுக்கு நன்றிக்கடன் தெரிவிக்கின்ற வகையில், இந்த விழாவில் கலந்து கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறோம்; கலந்து கொள்கிறோம்.

அண்ணா அவர்கள், அன்றைக்குக் கலைஞர் அவர்களுடைய விரலில் கணையாழி அணிவித்தார்கள். இன்று அண்ணா உயிரோடு இருந்திருந்தால், இந்தக் குறளோவியம் எழுதிய கலைஞருடைய அடுத்த நான்கு விரல்களுக்கும் கணையாழி போட்டிருப்பார்.

தமிழ்நாட்டில் மிகப் பெரிய உயர்ந்த நாளாக, இந்த நேரத்தில் கலைஞர் அவர்களுடைய குறளோவிய நூல் வெளியிடப்படுகிறது.

மக்களால் உருவாக்கப்படுகிறவன் தலைவன் அல்ல; மக்களை உருவாக்குகிறவனே தலைவன் - தலைவர் கலைஞர் அவர்கள் ‘தலைவர்’; அவர் தமிழ் இனத்தில், உலகத்தில், ஈழமண்ணில், மலேசியாவில், சிங்கப்பூரில், பிஜியில், தென்னாப்பிரிக்காவில் ... எங்கு தமிழன் வாழ்ந்தாலும், இந்த மண்ணில், இந்த இனத்தில், இந்தக் காலத்தில் மக்களை உருவாக்குகிற ஒரேயொரு தலைவர் கலைஞர்.

இந்த மண்ணில் இதுவரை தோன்றியவர்களில், கலைஞர் ஒருவர்தான் திருவள்ளுவருக்கு மிகப்பெரிய நன்றிக்கடனைச் செலுத்தியவர்.

ஆட்சிமொழிக் காவலர் இராமலிங்கனார்

“நீராருங்கடலுடுத்த” என்ற தமிழ் வாழ்த்து எங்கே பாடப்பட்டாலும் அந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம் அந்தப் பாடலின் நலத்தை நான் நுகர்வதை விட, கலைஞர் பெருமான் அவர்களைத்தான் நான் நினைத்துக் கொள்வேன்.

அதைப்போல, வள்ளுவர் கோட்டத்தை நினைக்கும்போதெல்லாம், அந்தப் பக்கம் போகும் போதெல்லாம், அதைக் காணும் போதெல்லாம் கலைஞர் பெருமான் அவர்களுக்கு ஒரு கும்பிடு போடுவேன்.

இவையெல்லாம் நிலையான செயல்கள்.

காவிரிப்பூம்பட்டினம் என்ற நகரம் இருந்தது என்று கேள்விப்பட்டிருக்கிறோம். ஒரு சிறு கிராமமாக இருந்த அந்த ஊரை வளமாக்கி, அங்கு பழம்பெருமையைப் பறை சாற்றும் பூம்புகாரை அவர்கள் உருவாக்கினார்கள். அதை நினைக்கும்போதும் கலைஞர் அவர்களைத்தான் நான் நினைத்துக் கொள்வேன்.

இப்படி என் உள்ளத்தைக் கவர்ந்தவர் கலைஞர்; என்பால் நிறைந்த அன்புடையவர்.

படித்தவர்கள் பாராட்ட வேண்டிய நூல் குறளோவியம். குறளோவியம் ஒரு கவிதை நூல் என்பது என் கருத்து.

கவிதை என்பதே “கொளவு” என்ற பகுதியிலிருந்து வருகிறது. உள்ளத்தைக் கொளுவது கவிதை - பாட்டு என்கிறோம்; அது உள்ளத்திலே பட்டுச் சொல்வது; மற்றவர் உள்ளத்திலே படும்படியாகச் சொல்வது பாட்டு. இப்படி உள்ளத்தைக் கொளுகின்ற தன்மையை இந்த நூலில் நான் காண்கிறேன்.

புதுக் கவிதை என்கிறார்கள். மரபுக் கவிதை என்கிறார்கள். எது சிறந்தது என வாதங்கள் நடப்பதைப் பார்க்கிறோம்.

இலக்கண மரபுப்படி எதுகை மோனையோடு அசை, சீர், தளை கெடாமல் பாடுவதுதான் கவிதையா அல்லது அவற்றைப் பொருட்படுத்தாமல் புதுக் கவிதை என்று சொல்கிறோமே, அப்படிப் பாடுவதுதான் பாட்டா என்று வாதங்கள் நடக்கும்போது நான் எண்ணிப் பார்த்தேன்.

இதையோ அதையோ கவிதை என்று சொல்லிவிட முடியாது. கவிதை என்றால் கொள்கின்ற தன்மை இருக்க வேண்டும். அப்படிப் பார்த்தால், இது புதுக் கவிதைக்கும்

மரபுக் கவிதைக்கும் இடையிலே இருக்கின்ற உரைக் கவிதை. இந்த நூலைப் படிக்கிறபோது, ஒவ்வொரு தொடரும் உள்ளத்தைக் கொளுகிற வகையிலே கலைஞர் அமைத்திருக்கிறார்கள். இது ஒரு கலைத்திறன்.

எப்படித்தான் நல்ல வண்ணங்களை ஒருவரிடம் கொடுத்தாலும் கலைத்திறன் இருந்தால்தான் நல்ல ஓவியங்களை உருவாக்க முடியும். கலைத்திறன் இல்லாவிட்டால், எத்தகைய வண்ணங்களைக் கொடுத்தாலும் ஓவியங்கள் உருவாகாது.

இந்த நூலில் நிறைய எதுகை மோனைகள் இருக்கின்றன. நல்ல பல கருத்துக்கள் இருக்கின்றன. மனத்தைக் கவரக்கூடிய கவிதை நூல் என்றுதான் நான் நினைக்கிறேன்.

குறளோவியத்திற்குப் பொருளாக இருப்பது திருக்குறள். திருக்குறள், தமிழர்களுக்குப் பொது நூல்; வேதம் என்றால்கூட பொருத்தமாக இருக்கும். மனிதன் நல்வாழ்வு வாழ்வதற்கு, நேர்மையாக ஒழுக்காக வாழ்ந்து தெய்வ நிலைக்குப் போவதற்குத் துணையாக இருக்கக் கூடிய செய்திகள் அந்த நூலில் சொல்லப்பட்டிருக்கின்றன. ஆனால், அந்த நூலை எளிதில் படித்துப் புரிந்து கொள்ள முடியாது. அதற்கு உரை வேண்டியிருக்கிறது. எவ்வளவோ உரைகளும் இருக்கின்றன. ஆனால், அந்த உரைகளைப் படிப்பதற்கும் உரை தேவைப்படுகிறது.

படிப்பதற்கு எளிதாகப் பாமரர்களும், பட்டிக்காடுகளில் உள்ளவர்களும் எளிதில் குறள் கருத்துக்களைப் புரிந்து கொள்ளக்கூடிய முறையில் இந்தக் குறளோவியம் எழுதப்பட்டிருக்கின்றது.

வீட்டில் நான் குறளோவியம் நூல் படித்துக் கொண்டிருக்கும்போது, ஆறாவது வகுப்புப் படித்துக் கொண்டிருக்கும் என் பேத்தி, நூலின் அட்டையைப் பார்த்ததும் அழகாக இருக்கின்றது என்று பிடுங்கியவள், அதைப் படிக்கவும் ஆரம்பித்து விட்டாள். படித்துவிட்டு “இதில் கதைகள்கூட நிறைய இருக்கிறது தாத்தா” என்று கூறினாள். நானும் “தொடர்ந்து படியம்மா; 354 குறளும் எளிதில் மனப்பாடம் ஆகும்” எனக் கூறினேன்.

ஏன் இதைச் சொல்கிறேன் என்றால், படிப்பவர்கள் அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் இந்தக் குறளோவியம் எழுதப்பட்டு இருக்கின்றது.

உடல் நலத்தைப் பெறுவதற்கு சுக்கு - மிளகு - திப்பிலி ஆகியவற்றை அப்படியே சாப்பிடக் கடினமாக இருக்கும். ஆனால், அதனையே லேகியமாக்கித் தேனில் கலந்து எளிதாகச் சாப்பிட்டு உடல் நலத்தைப் பெறலாம்.

நல்ல மருந்துப் பொருட்களை லேகியமாக்கித் தருவதுபோல இந்தக் குறளோவியம் அமைந்திருக்கின்றது.

இவ்வளவு அருமையான நூலை - உலக மக்கள் அனைவருக்கும் பயன் தரக் கூடிய நூலை கலைஞர் ஆக்கித் தந்திருக்கின்றார்கள். முப்பதாண்டுகால முயற்சியில் கிடைத்த இந்த நூலைப் போற்றிப் பயன்படுத்த வேண்டும்; உருவாக்கித் தந்த கலைஞருக்கு நன்றி சொல்ல வேண்டும்.

ஆசிரியர் சாவி

திருக்குறளுக்கு எவ்வளவோ பேர் உரை எழுதியிருக்கிறார்கள். ஆனால், அந்த உரைகளுக்கெல்லாம் மேலாக கலைஞர், வள்ளுவருக்குப் பெருமை தேடிக் கொடுத்திருக்கிறார்.

நான்கூட எவ்வளவோ உரைகளைப் படித்திருக்கிறேன். எனக்கு ஒன்றும் புரியாது. அவைகளுக்கு யாராவது விளக்கம் எழுதினால் நன்றாக இருக்கும் என நினைப்பதுண்டு.

கலைஞர் எழுதியிருக்கிறார் - அவர் எழுதியிருக்கின்ற ஒவ்வொரு ஓவியமும் - நான் உண்மையாகச் சொல்கிறேன்; ராமகிருஷ்ண பரமஹம்சருக்கு அப்புறம், ராஜாஜிக்கு அப்புறம் குட்டிக் கதைகள் சொல்வதில் கலைஞருக்கு இணை கலைஞர்தான். மிகவும் பொருத்தமான கதைகள். இப்பொழுது நடந்த கதையை எப்பொழுதோ எழுதப்பட்ட குறளுக்குப் பொருத்தமாகச் சொல்வார்.

நான் தினமணிக் கதிரில் இருக்கும்போது, கலைஞர் குறளோவியம் எழுதிக் கொடுப்பார். வாராவாரம் அவருடைய குறளோவியம் எப்போது வரும் என்று நானும் என்னுடைய உதவி ஆசிரியர்களும் குறளோவியத்திற்காகக் காத்துக்கொண்டிருப்போம்.

பத்திரிகை அலுவலகத்தில், இந்தக் கதை வந்து விட்டதே என்று எண்ணுவது போக, எப்பொழுது வரப் போகிறது என்று காத்திருந்து - அது வந்தவுடன் கையெழுத்துப் பிரதியிலேயே அதைப் படித்து விடுவோம். ஒரு இடத்தில்கூட அடித்தல் திருத்தல் இராது. இரண்டாவது முறை மாற்றி எழுதமாட்டார்.

கலைஞருக்குத்தான் அப்படி எழுத்து வரும். தெளிவான சிந்தனை இருப்பவர்களுக்கு அடித்தல் திருத்தல் எதுவும் இருக்காது.

வள்ளுவருக்கு அருமையாக ஒரு நினைவாலயம் எழுப்பி, குறளோவியமும் எழுதி வள்ளுவருக்குப் பெருமை தேடிக் கொடுத்திருக்கிறார்.

தமிழகத்தில் உள்ள தமிழர்களுக்கு மட்டுமல்ல. உலகில் எங்கு இருந்தாலும் அவர்களை மேம்பாடடையச் செய்யும் அளவிற்குக் கலைஞர் இந்த நூலை எழுதியுள்ளார்.

வீட்டுக்கு ஒரு நூலகம் என்பார்கள். நூலகம்கூட வேண்டாம். குறளோவியம் இருந்தாலே போதும்; எந்த நேரமும் பயன்படக்கூடியது.

டாக்டர் மெ.சுந்தரம்

இந்தியத் துணைக்கண்டத்திலேயே முதல் முதல் ஆறு எம்.பில். பட்டங்களையும் ஐந்து டாக்டர் பட்டங்களையும் பெறக்கூடிய அளவிற்குப் படைப்பிலக்கியத்தை எழுதிய ஒரே பெருமகன் கலைஞர் அவர்கள்தான்.

ஏனென்றால், அந்தப் பதினொன்றையும் மேற்பார்வையிட்டு வழங்கக்கூடிய ஒரு நல்ல வாய்ப்பைத் தமிழ்த்தாய் எனக்கு அளித்தாள்.

கலைஞருடைய படைப்பிலக்கியத்தை வைத்துப் பெறப்பட்ட ஆறு எம்.பில். பட்டங்கள், சிலப்பதிகாரம் தொடங்கி குறளோவியம் வரை வந்திருக்கின்றது.

கலைஞருடைய பேச்சுக்கள், எழுத்துக்கள், சிந்தனைகள், சிற்றிலக்கியங்கள், பேரிலக்கியங்கள், கவிதைகள், நாடகங்கள் அனைத்தையும் சேர்த்து ஐந்து டாக்டர் பட்டங்கள் வழங்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

இப்படிப் பதினொரு ஆராய்ச்சிப் பட்டங்கள் உருவாக்கும் அளவிற்குப் படைப்பிலக்கியங்களைக் கலைஞர் உருவாக்கி இருக்கிறார். அதற்காக நான் பெருமைப்படுகிறேன்.

கலைஞர் அவர்களை நான் பாராட்டுவதைக் காட்டிலும் அமெரிக்கப் பேராசிரியப் பெருமக்கள் இரண்டு பேர் பாராட்டியதை இங்கு கூற விரும்புகிறேன்.

அமெரிக்காவில் உள்ள மினசோட்டா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பிலிப்ஸ் செகல் மென் 11-2-85 அன்று எனக்கு எழுதிய கடிதத்தில், கலைஞரின் இன உணர்வையும் மொழி உணர்வையும் இலக்கியப் புலமையையும் பெரிதும் பாராட்டியிருக்கிறார்.

கலைஞரின் பணி தமிழ்த் தாய்க்கு மணிமுடி சூட்டிடும் பணி என்று மற்றொரு பேராசிரியர் ஹார்டு கிரேவ் எனக்கு எழுதிய கடிதத்தில், கலைஞரைப் பாராட்டியிருக்கிறார்.

இவர்கள், கலைஞரை நேரடியாக அறியாதவர்கள், அவரது எழுத்தைப் படித்து விட்டு இந்தப் புகழாரத்தைச் சூட்டியிருக்கின்றார்கள்.

டாக்டர் மா.நன்னன்

‘குறளோவியம்’ நூலுக்கு டாக்டர் வ.சுப. மாணிக்கம் அவர்கள் மதிப்புரை வழங்கியிருக்கின்றார்கள். அந்த மதிப்புரை, வானத்திலே பறந்து கீழேயிருக்கின்ற பொருள்களைப் படம் பிடித்துக் காட்டுகின்ற பருந்துப் பார்வை போன்ற அமைப்புடையது.

ஆனால், என்னுடைய உரையிலே, சோலையிலே நுழைகின்ற குயில் போல ஒன்றிரண்டு கருத்துக்களை மட்டும் சுட்டிக் காட்டலாம் எனக் கருதுகிறேன்.

கலைஞர் அவர்களின் உவமையழகுக்கு ஓர் உதாரணத்தைச் சொல்ல வேண்டுமானால்,

“வெள்ளிப் பாற் குடத்தின் வாய்போன்ற வட்ட நிலா” என்று ஒரு இடத்திலே கலைஞர் கூறியிருக்கிறார்.

நிலாவைப் பற்றி பாரதிதாசன் நிரம்பப் பாடியிருக்கிறார். ஆனால், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பார்வையிலேகூட படாத ஓர் உவமையைக் கலைஞர் அவர்கள்,

“வெள்ளிப் பாற் குடத்தின் வாய் போன்ற வட்ட நிலா” என்று நிலவுக்கு மிக அழகாக உவமை கூறியிருக்கிறார்.

கலைஞரின் உருவகச்சிறப்பிற்கு ஓர் எடுத்துக் காட்டுத் தர விரும்புகிறேன்.

“ஒரு பெண் காதலனைப் பிரிந்த வருத்தத்திலே இருக்கிறாள். தூக்கம் வரவில்லை. உடனே கண்ணயர்ந்தாவது கவலைகளை மறப்போம் என விழிகளை இமைகளால் தாழிட்டுக் கொள்கிறாள். அந்தப் பொல்லாத விழிகள், இமைக்கதவுகளைத் தட்டிப் பார்த்து விட்டு நினைவுச் சாளரத்தின் வழியாக வெளியே எட்டிப் பார்க்கின்றன.”

இதுவரை எங்காவது, எந்த இலக்கியத்திலாவது இதுபோன்ற உருவகம் இருக்கின்றதா என்று விசாரித்துப் பாருங்கள். நான் கேட்டறிந்த வரையிலேகூட இப்படி ஓர் உருவகத்தை யாரும் அமைத்ததாக எனக்கு நினைவில் இல்லை.

கலைஞர் ஏற்புரை

1956-ஆம் ஆண்டில் குறளோவியம் எழுதத் தொடங்கினேன் என்பதை, நூலில் முன்னுரையாகக் குறிப்பிட்டிருக்கிறேன். அதை நம்முடைய அன்புக்குரிய நண்பர்களும் இங்கே விளக்கியிருக்கின்றார்கள்.

சற்றொப்ப 30 ஆண்டுகால உழைப்பால் 354 குறட்பாக்களுக்கு 300 குறளோவியங்கள் தீட்டப்பட்டு, அது நூல் வடிவிலே வெளியிடப்பட்டுள்ளது.

புகழ்ந்து பேசினார்கள்; பாராட்டிப் பேசினார்கள். இதற்கெல்லாம் நன்றி கூறுகின்ற வகையிலே நான் நீண்ட நேரம் பேச வேண்டுமென்று நீங்கள் யாரும் நினைக்கக் கூடாது. நான் பேசவும் கூடாது.

ஏனென்றால் பத்து மாதம் சுமந்து, பேற்று வலிகண்டு, அந்தப் பேற்று வலியினால் துடியாய்த் துடித்து இறுதியாகக் குழந்தையைப் பெற்றெடுத்து, குழந்தை பக்கத்திலே படுத்திருக்கிற நேரத்தில் அதைப் பார்த்துக் கண்களால் மகிழ்ச்சியைக் கொட்டிக் கொண்டிருக்கின்ற தாயின் அருகாமையில் அவளுடைய தோழிகளெல்லாம் வந்து - பக்கத்து வீட்டிலே உள்ளவர்களெல்லாம் வந்து - வயதான மூதாட்டியரெல்லாம் வந்து குழந்தையைப் பார்த்து “ஆகா எவ்வளவு அழகான குழந்தை; வைரம் போல் இருக்கிறது; தங்கம் போல் இருக்கிறது” (இருந்தாலும் இல்லாவிட்டாலும்) அப்படித்தான் சொல்லுவார்கள். அப்படிப் பலரும் வந்து குழந்தையைப் பாராட்டுகிற நேரத்தில், உடனே அந்தக் குழந்தையைப் பெற்றெடுத்த தாய், அவர்களையெல்லாம் பார்த்து “இதைப் பெற நான் எவ்வளவு சிரமப்பட்டேன் தெரியுமா? பத்து மாதம் சுமந்தேன் தெரியுமா? மூன்றாவது மாதம் நாலாவது மாதம் பாடெல்லாம் உங்களுக்குத் தெரியுமா? எவ்வளவு மாங்காய் தேவைப்பட்டது தெரியுமா?” என்றெல்லாம் அவர்களைப் பார்த்தவுடன் இவ்வளவு கதைகளையும் சொல்லிக் கொண்டிருக்க மாட்டாள். பக்கத்து வீட்டுக்காரரானாலும் மூதாட்டியரானாலும் முதியோர்களானாலும் அல்லது கணவரேயானாலும் மாமன் மாமிகளானாலும் அத்தனைப் பேரும் அந்தக் குழந்தையைப் பாராட்டி மகிழ்கிற நேரத்தில், பதிலுக்கு ஓர் இனிமையான புன்னகையைத்தான் களைப்புற்றிருக்கின்ற அந்தத் தாய் வீசுவாள். அந்தப் புன்னகையைக்கூட அவர்களைப் பார்த்து வீசமாட்டாள்; அந்தக் குழந்தையைப் பார்த்துக்கொண்டுதான் வீசுவாள்.

அதைப் போல மூதாட்டியாக - பக்கத்து வீட்டுப் பெண்மணிகளாக - தோழிகளாக - பெரியவர்களாக - என் தாய் தந்தையர்களாக நீங்களெல்லாம் வந்து என் குழந்தையைப் பாராட்டினீர்கள். நான் அந்தக் குழந்தையைப் பார்த்துக் கொண்டே புன்னகை புரிகின்றேன். அதுதான் நான் காட்டுகின்ற - தெரிவிக்கின்ற நன்றி.

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்