பொருளடக்கம்

1. குடும்பத்தின் நல்விளக்கு

கட்டுரை 1 / 1

குடும்பத்தின் நல்விளக்கு

The Family's Lamp of Well-Being

அச்சுப் பக்கம் 2–9

scan 4, 13 shows no printed numeral

X

கீழே அச்சிட்ட மூலத்தின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ்க் கட்டுரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், மேற்கோள்கள், அச்சுத் துணைத்தலைப்புகள் அனைத்தும் மூலத்தின்படியே.

குடும்பநலத் திட்டத்தைப்பற்றி இஸ்லாமியச் சகோதரர்களுக்கு அல்லது வேறு மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு எந்தளவுக்கு நம்பிக்கை இருக்கிறது அல்லது அதிலே அவர்களுக்கு அக்கறை இருக்கிறது என்பதையெல்லாம் நான் விளக்கமாகச் சொல்ல வேண்டியதில்லை என்றே கருதுகின்றேன். சிறுபான்மையோராக இருந்தாலும், வேறு மதங்களைச் சார்ந்தோராக இருந்தாலும் இதிலே மதமாச்சரியங்களையெல்லாம் கடந்து, எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டு இதை ஒரு நாட்டுப் பிரச்சனையாக எல்லா மதத்திலே இருப்பவர்களும் கவனிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றேன்.

இந்தியாமீது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு செய்த நேரத்தில், பாகிஸ்தானத்திலே இருப்பவர்கள் இஸ்லாமியர்களாயிற்றே; இந்தியாவிலே இருக்கின்ற இஸ்லாமியர்கள், பாகிஸ்தானத்திலே இருக்கின்ற

இஸ்லாமியர்கள் பக்கம்தான் இருக்கவேண்டும் என்கின்ற எண்ணம் எள்ளளவும் உள்ளத்திலே ஏற்படாமல், இந்தியா நம்முடைய நாடு என்ற உணர்ச்சியோடு, பாகிஸ்தான் படைவீரர்களை எதிர்த்து நின்று, பாகிஸ்தான் நாட்டைப் புறங்காணுகின்ற அளவுக்கு அத்தகைய வியத்தகு வீரத்தைக் காட்டியவர்கள் இந்தியாவிலே உள்ள இஸ்லாமியப் பெருமக்கள் என்பதை நான் மிகுந்த நன்றி உணர்வோடு எடுத்துக் காட்டவும் விரும்புகின்றேன். எப்படி பாகிஸ்தானத்துப் படை எடுப்பு இந்தியாவின்மீது ஏற்பட்ட நேரத்திலே நீங்கள் மதத்தை ஒரு புறத்திலே ஒதுக்கி வைத்துவிட்டு, நாட்டை முன்னிறுத்திப் பாடுபட்டீர்களோ அது போல், ஏன், அந்தப் படை எடுப்பைவிடப் பயங்கரமானதுதான் இன்றைக்குக் குடும்பநிலை குலைவுற்று, குடும்பங்கள் பெருகி, மக்கள் தொகை அதிகமாகி, ஆண்டுதோறும் கோடிக்கணக்கான மக்கள் இந்தியாவில் பிறக்கிறார்கள், அவர்கள் தொகை அதிகமாகிக்கொண்டே வருகிறது என்றால், அது பாகிஸ்தான் படை எடுப்பைவிட—சீனப் படை எடுப்பைவிட—நமக்கு நாமே நாட்டிலே ஒரு பாதுகாப்பற்ற நிலையை உருவாக்கிக் கொள்கிறோம் என்ற நிலைமையிலே அதிகமானதாகும். ஆகவே படை எடுப்புக்களால் நம்முடைய நாடு தொல்லையுறாமல் பாதுகாப்பதிலே நாம் எவ்வளவு அக்கறை கொள்ளுகிறோமோ, அதைப்போலவேதான் நம்முடைய வீடுகளிலே ஆண்டுதோறும் குழந்தைகளுடைய ‘பிறப்பு’ என்கின்ற படை எடுப்புக்களால் நாடு சேதமுறாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய பெரும் பொறுப்பை, மதங்களைக் கடந்து, நாம் ஏற்றுக்கொள்ள வேண்டியவர்களாக இருக்கின்றோம். அந்த வகையிலே எல்லோரும் சிந்தித்துச் செயல்பட வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

இந்துமதத்திலேகூட, இந்தக் குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்வதை ஒரு காலத்தில் பாபகரமாகத்தான் பலபேரும் கருதினார்கள். இன்னுஞ் சொல்லப்போனால், இப்படிப்பட்ட முறைகள் கூடாதென்று உத்தமர் காந்தியடிகளேகூடச் சொன்னார்கள். குடும்பக் கட்டுப்பாட்டிற்குக் கருவிகளைப் பயன்படுத்தக்கூடாது—சிகிச்சை முறைகளை ஏற்றுக் கொள்ளக்கூடாது—மனக் கட்டுப்பாடுதான் தேவை என்று மகாத்மா காந்தியடிகளேகூடச் சொன்னார்கள் என்றாலும், அந்தக் காந்தியடிகளுடைய வாரிசுகளாக வந்த பண்டித ஜவகர்லால் நேருவோ, லால்பகதூர் சாஸ்திரியோ, இன்றைக்குப் பிரதமராக இருக்கின்ற இந்திரா காந்தி அம்மையாரோ அல்லது காந்தியடிகள் கொள்கைகள் பலவற்றை ஏற்றுக் கொண்டிருக்கின்ற—அவர்கள் தொண்டர்களாக இருந்த பல ஆளுகின்ற பொறுப்பிலே உள்ளவர்களும், யாரும் காந்தியடிகள் சொன்னதுதான் போதுமானது என்றளவுக்கு எடுத்துக் கொள்ளவில்லை.

இந்தியாவினுடைய மக்கள் பெருக்கத்தைக் குறைக்க வேண்டுமேயானால் சிகிச்சை முறைகளை நாம் மேற்கொண்டாக வேண்டும். நவீன முறைகளை—நவீன உத்திகளைப் பயன்படுத்தியாக வேண்டும் என்ற நிலைமைக்குத்தான் இந்திய அரசும் மாநில அரசுகளும் இன்றைக்குப் பொறுப்பேற்றுக்கொண்டு அந்தக் காரியத்தை வேகமாகச் செய்து வருகின்றன.

எத்தனையோ காரியங்கள் இந்து மார்க்கத்திலே கூட ஒரு காலத்தில், “இவை பாபங்கள்” என்று கருதப்பட்டன. ஆனால் நாளாவட்டத்தில் எவை பாபங்கள் என்று ஒதுக்கித் தள்ளப்பட்டு, அன்றைக்கு எவ்வளவுதான் எடுத்துச் சொன்னாலும், சொல்லுகிறவன் தூற்றப்பட்டு—எடுத்து முன்வைக்கிறவன் இகழப்பட்டு—எடுத்துச் சொல்லப்பட்ட கொள்கைகள் புறக்கணிக்கப்பட்டு, ஒரு

மூலையிலே தூக்கி எறியப்பட்டாலும், இன்றைக்கு அதே இந்து மார்க்கத்திலே பல கொள்கைகளை ஏற்றுக்கொண்டு நாட்டின் நன்மைக்காக அவற்றைப் பயன்படுத்துகின்ற நிலைமைகளையெல்லாம் நாம் காணுகின்றோம். “குழந்தைகள் பிறக்கக்கூடாதென்று தடுப்பதா? அது நாம் செய்கிற காரியமா? ஆண்டவன் தருவதல்லவா? அதைப்போய் தடுத்தால் ஆண்டவனுக்கே செய்கிற துரோகமல்லவா?” என்று நம்முடைய பெரியோர்கள் எல்லாம் சொன்னார்கள். நகர்ப்புறங்களிலே, கொஞ்சம் நாகரிகத்தினுடைய வெளிச்சம்படுகின்ற இடங்களிலேகூட, அப்படிப்பட்ட பெரியோர்கள் இருந்தார்கள் என்றால், கிராமப்புறங்களிலே எவ்வளவு மூர்த்தன்யமாக இந்தக் கொள்கையை—குடும்பக் கட்டுப்பாடு தேவை என்ற கொள்கையை—எதிர்த்திருப்பார்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

எவ்வளவோ காரியங்கள் பாபமாகக் கருதப்பட்டது. நான்கூட ஒரு கூட்டத்திலே எடுத்துச் சொல்லி அதைக்கூட நம்முடைய நண்பர்கள் * நூல் வடிவிலே தந்திருக்கிறார்கள். என்னுடைய தகப்பனார் ஒரு காலத்திலே புகைப்படம் எடுத்துக் கொள்ளவே பயந்தார். என்னுடைய கிராமத்திற்குப் புகைப்படம் எடுப்பவன் ஒருநாள் வந்தான். புகைப்படம் எடுக்கிறவன் வந்து, எல்லோரையும் புகைப்படம் எடுக்கிறேன் என்று சொன்ன நேரத்தில், பல பேர் அவனைச் சூழ்ந்து கொண்டார்கள். புகைப்படம் எடுத்தால் ஆயுள் குறைந்துவிடும்—புகைப்படம் எடுக்கக்கூடாது—என்றெல்லாம் தடுத்தார்கள். ஆனால் என்னுடைய இல்லத்திலே இருந்தவர்கள் கொஞ்சம் நகர்ப்புறங்களுக்குச் சென்று அந்த நாகரிகத்தைக் கற்றவர்கள்—என்னுடைய சொந்தக் காரர்கள் புகைப்படம் எடுத்துக் கொள்வதிலே

* தமிழ்நாடு குடும்ப நலத்துறையின் வெளியீடான “சமுதாயக்கடமை”.

ஆபத்தில்லை என்று கூறி, என்னுடைய தகப்பனாரைக் கட்டிப் பிடித்துக் கொண்டுவந்து உட்கார வைத்து, நாற்காலியில் அமர்த்தி அந்த நேரத்திலும் எழுந்து ஓடிவிடுவாரோ என்று பக்கத்திலே பாதுகாப்பெல்லாம் போட்டு, தாயாரையும், என்னையும் பக்கத்திலே நிற்கவைத்து ஒரு புகைப்படம் எடுத்தார்கள். அதுதான் அவர் எடுத்துக்கொண்ட முதல் புகைப்படமும் கடைசிப் புகைப்படமுமாகும். அந்த அளவுக்குப் பிறகு புகைப்படம் எடுக்கவே அவர் ஒத்துக்கொள்ளவில்லை. ஆனால் அந்தப் படம் எடுத்தும் ஒரு இருபது இருபத்தைந்து ஆண்டு காலம், அதற்கு மேலும் வாழ்ந்துதான் அவர் மறைந்துபோனார். எனவே புகைப்படம் எடுப்பதே கூட ஒரு பாபம்; புகைப்படம் எடுத்தால் நமது ஆத்மாவில் பாதிபோய் அந்தப் புகைப்படத்திலே மறைந்து விடுகிறது. ஆகவே அற்ப ஆயுளிலே இறக்க நேரிடுகிறது என்கின்ற நம்பிக்கைகூடக் கிராமங்களிலே இருந்தது. இந்த நம்பிக்கைகளிலிருந்தெல்லாம் விடுபட்டு, நாம் நாகரிக உலகிலே நடைபோட்டுக் கொண்டிருக்கின்றோம். ஆகவே நாட்டினுடைய பாதுகாப்பைப்பற்றி நாம் சிந்திக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

இன்றைக்கு நம்மையும் மீறி என்னதான் குடும்பநலத் திட்டத்தைப் பல்வேறு இடங்களிலும், பல்வேறு மாநிலங்களிலும்—நம்முடைய மாநிலத்திலே பல்வேறு மாவட்டங்களிலும், ஒரு மாவட்டத்திற்கு ஒரு மாவட்டம் போட்டி போட்டுக்கொண்டு நாம் இதை நிறைவேற்றினாலும்—வெற்றிகரமாக நிறைவேற்றினாலும்—ஏற்கனவே இருந்த மூன்று கோடி இப்பொழுது நான்கு கோடி என்றுதான் மாறியிருக்கிறது! மூன்று கோடி நான்கு கோடியாக

மாறியிருக்கும்பொழுது, ஏன் நாடாளுமன்றத்திலே நம்முடைய மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கை குறைய நேரிடும், அதுதான் அதிகமாக ஆகியிருக்கிறதே என்று சிலர் எண்ணக்கூடும்; கேட்கக்கூடும். ஆனால் உயர்ந்த சதவிகிதத்தைப் பார்த்துத்தான் நாடாளுமன்றத்தில் அந்த எண்ணிக்கையை இன்றைக்கு வகுக்கின்றார்கள். அப்படிப் பார்த்தால் நம்முடைய சதவிகிதத்தில் ஏதோ ஒரு அரைப் புள்ளியோ, ஒரு புள்ளியோ குறையுமேயானால், இந்த 39-க்கும் ஆபத்து வரக்கூடும். அதிலேகூட ஒன்றிரண்டு குறையக்கூடும். நாற்பத்தி ஒன்றாக இருந்தோம் நாடாளுமன்றத்தில், நம்முடைய தமிழ் நாட்டின் சார்பில் உறுப்பினர்கள். இன்றைக்கு 41, 39 ஆகக் குறைந்ததற்குக் காரணம் இங்கே குடும்பநலத் திட்டம் நிறைவேற்றப்பட்டு, மக்கள் தொகை குறைந்ததால், இரண்டு எண்ணிக்கை குறைந்தது நாடாளுமன்றத்தில். மேலும் எண்ணிக்கைக் குறையுமோ என்ற அச்சம் நம்மையெல்லாம் இன்றைக்கு ஆட்டிக் கொண்டிருக்கிறது. அந்த அச்சம் போக்கப்படவேண்டும் என்பது மாத்திரமல்ல. ஏற்கனவே இருந்த 41 இடங்கள் நம்முடைய தமிழ்நாட்டிற்கு வேண்டுமென்று, தமிழ்நாட்டு அரசாங்கத்தின் சார்பில் தில்லி சர்க்காரை நாம் வலியுறுத்திக் கொண்டிருக்கின்றோம். 1951—52-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையிலேதான் நாடாளுமன்றத்திலே உறுப்பினர்கள் தொகை வகுக்கப்பட வேண்டுமென்று நாம் கேட்டுக்கொண்டிருக்கிறோம். அதற்கு மத்திய சர்க்கார் இணங்கிடவேண்டும்; தமிழ்நாட்டு மக்களுடைய இந்த ஒருமித்த குரலுக்கு அவர்கள் செவிசாய்க்க வேண்டும் என்று நான் எடுத்துச் சொல்வேன். நம்முடைய எண்ணிக்கைக் குறையாமல் காப்பாற்றிக் கொள்ளவேண்டும் என்கின்ற உரிமைக்குரல் ஒருபுறத்திலே இருக்கிற அதே நேரத்தில், நாம் குடும்பநல வாழ்விலும்—

குடும்பநலத் திட்டத்திலும் மேலும் வெற்றிகரமாகச் செல்ல வேண்டும் என்பதைத் தயவுசெய்து யாரும் மறந்துவிடக் கூடாது.

ஒரு அரசாங்கம் செயல்படுத்துகின்ற திட்டங்கள் வெற்றிகரமான விளைவுகளைத் தரவேண்டுமேயானால்—அந்தத் திட்டத்தினுடைய பயனை அனைவரும் பகிர்ந்து கொள்ள வேண்டுமேயானால், அப்படிப் பகிர்ந்து கொள்வதற்கு மக்கள் பெருக்கம் அணை போட்டுத் தடுக்கப்பட்டாக வேண்டும்.

நான் பலமுறை சொல்லியிருக்கின்றேன். பதினாறு பொருளை எட்டுப் பேருக்குப் பகிர்ந்து அளிப்பது என்றால், ஆளுக்கு இரண்டு தந்து விடலாம். பதினாறு பொருளை, 32 பேருக்குப் பகிர்ந்தளிக்கக்கூடிய நிலைமை வருமேயானால், ஆளுக்குப் பாதிதான் வரும் என்பதை யாரும் மறந்து விடக்கூடாது. இன்றைக்கு நான்கு கோடி மக்களுக்குத் தமிழ்நாடு அரசாங்கம், ஒரு திட்டத்தைத் தயாரித்து, ஆங்காங்குத் திட்டங்களுடைய விளைவுகளைப் பரிசீலிக்கின்ற நேரத்தில், நான்கு கோடி பேருக்காகப் போடப்பட்ட திட்டம், நிறைவேறுகிற நேரத்தில், நான்கு கோடி ஐந்து கோடியாகவும் அல்லது ஆறு கோடியாகவும் மாறியிருக்குமேயானால், திட்டத்தினுடைய உரிய பயனை அனைவரும் பகிர்ந்து கொள்ள முடியாது. அவரவர்களுக்குக் கிடைக்கிற விகிதாச்சாரம் குறைவாக இருக்கும். எனவே நிறைவான பயன் நாட்டிற்கு ஏற்பட இயலாது. இவைகளை எல்லாம் கணக்கிலே வைத்துக் கொண்டுதான், நான் இந்தக் குடும்பநலத் திட்டத்தை வெற்றிகரமாக ஆக்கவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

வீடுதான் நாட்டினுடைய ஆரம்பத் தளமாகும். வீடுகளில் நல்விளக்கு எரிந்து—வீடுகள் பிரகாசமாக இருந்து—வீடுகளில் நிம்மதி இருந்து—வீட்டிலே

இருப்பவர்கள் மகிழ்ச்சியிலே திளைத்தால்தான், அது நாட்டில் எதிரொலிக்கும். இன்றைக்கு வீடுகள் அவ்வாறில்லை. நல்ல தொழிலே இருந்தாலும், வசதி வாய்ப்புக்கள் அந்தக் குடும்பத்திற்கு இருந்தாலும், அளவோடு குழந்தைகள் அந்தக் குடும்பத்திலே இருந்தால்தான்—இரண்டு அல்லது மூன்று குழந்தைகள் இருந்தால்தான், தாய் தகப்பனுக்கு நிம்மதி இருக்கும் என்பதை ஒவ்வொரு குடும்பத்திலும் நாம் காணமுடியும். அந்த நிம்மதி ஏற்படவேண்டுமேயானால் குடும்பம் அளவானதாக இருக்க வேண்டும். வசதியும் வாய்ப்பும் உள்ள குடும்பத்திலேயும் இரண்டு மூன்று குழந்தைகளுக்குமேல் இருத்தல் ஆகாது என்கின்ற சலிப்பு ஏற்பட்டு விடுகின்ற நேரத்தில், சாதாரணமான குடும்பங்கள்—சாமான்ய மக்களுடைய குடும்பங்கள்—ஏழை எளியவர்களுடைய குடும்பங்கள் ஆகியவற்றில் மக்கள் தொகைப் பெருகிக்கொண்டேயிருந்தால்—ஆண்டுதோறும் குழந்தைகள் அந்த இல்லத்திலே பிறந்துகொண்டே இருந்தால், முதல் குழந்தை பிறந்த நேரத்தில் அதற்கு நல்ல கவனிப்பு இருக்கும்! அடுத்த குழந்தை பிறந்தபிறகு முதல் குழந்தை கவனிப்பாரற்றுப்போகும்! அதற்கடுத்த குழந்தை பிறந்தால் இரண்டாவது குழந்தை கவனிப்பாரற்றுப்போகும். நாலைந்து குழந்தைகளானால் நாலைந்து குழந்தைகளும் கவனிப்பாரற்றுப்போகும்!

ஏழை வீட்டில்—எளியவன் வீட்டில்—சாதாரண வருவாய் உள்ளவனுடைய வீட்டில்—ஒரு குழந்தை இரண்டு குழந்தை என்றால், இரண்டையும் ஒழுங்காகப் படிக்க வைக்கமுடியும். இரண்டுக்கும் ஒழுங்காகச் சத்துணவு வழங்க முடியும். இரண்டையும் பட்டினி இல்லாமல் பாதுகாக்க முடியும். அவைகள் பெருகிவிடுமேயானால் குழந்தைகளும்

அரைப்பட்டினி, தாயாரும் தகப்பனாரும் முழுப் பட்டினி என்கின்ற அளவுக்குத்தான் குடும்பங்கள் நடைபெறும். ஆகவே இந்தக் குடும்பக் கட்டுப்பாட்டில் எந்தவிதமான பாபமும் கிடையாது.

அறிஞர் அண்ணா அவர்கள், குடும்பக்கட்டுப்பாடு விழா ஒன்றில் பேசுகிற நேரத்தில் மிக அழகாக ஒன்றைச் சொன்னார்கள். ஆண்டவனேகூட குடும்பக் கட்டுப்பாட்டில் மிகச் செம்மையாக நடந்துகொண்டிருக்கிறார் என்று சொல்லி, நம்முடைய பெரிய கடவுள் என்று சொல்லப்படுகின்ற சிவபெருமானே கூட, இரண்டே பிள்ளைகளைத்தான் பெற்றார்—ஒன்று பிள்ளையார், இன்னொன்று முருகன் என்று அண்ணா சொன்னார். சிவபெருமானாவது இரண்டு பிள்ளைகளைப் பெற்றார். பிள்ளையார் பிள்ளைகளைப் பெறவில்லை. முருகன் பிள்ளைகள் பெற்றதாகப் புராணம் கிடையாது. எனவே கடவுள்களேகூடக் குடும்பக் கட்டுப்பாட்டை ஒழுங்காக நிறைவேற்றியிருக்கும் பொழுது, நாம்—மனிதர்கள் அதை நிறைவேற்றக் கூடாது—நிறைவேற்றுவது பாபம் என்று கருதுவது தவறான கருத்தாகும். குடும்பக் கட்டுப்பாட்டை நிறைவேற்றாத கடவுள்கள் எல்லாம் என்ன பாடுபட்டார்கள் என்பதைப் புராணமே சொல்லுகிறது. 21 குழந்தைகளுக்குத் தந்தையான குசேலன் என்ன ஆனான்? அவன் கடைசியாக கிருஷ்ணபரமாத்மாவைத் தேடிச் சென்று, குபேரன் ஆனான் என்று புராணம் படிக்கிறோம். நான் கேட்கிறேன், ஒவ்வொரு கிராமத்திலேயும் உருவாகிற குசேலர்களுக்கெல்லாம், ஒரு கிருஷ்ணபரமாத்மா கிடைப்பாரா, அவல் வாங்கிச் சாப்பிட்டு அரண்மனைகளையும் மாளிகைகளையும் கட்டித்தர!

அதைப்போலவே நாரத மகாமுனிவர், பெண்ணுருவம் எடுத்து அறுபது குழந்தைகளைப் பெற்றார். பெற்ற காரணத்தினாலேதான் தம்புரா தூக்கிக்

கொண்டு ஊரெல்லாம் அலைந்து கொண்டிருக்கிறார் என்று புராணத்திலே படிக்கிறோமேயல்லாமல், அறுபது குழந்தைகளோடு அவர் ஒழுங்காக வாழ்ந்தார் என்று நாம் படிக்கவில்லை. எனவே புராணத்திலேயே நமக்கு நல்ல எடுத்துக்காட்டு இருக்கிறது. அதிகக் குழந்தைகளைப் பெற்றவர்கள் ஆலாய்ப் பறந்தார்கள். இரண்டே குழந்தைகளைப் பெற்ற பரமசிவன் கயிலையங்கிரியில் மிக உன்னதமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று நாம் படிக்கின்றோம். ஆகவே நம்முடைய கடவுள்களைப் பின்பற்றியாவது நீங்கள் இந்தக் குடும்பநலத் திட்டத்திலே மும்முரமாக ஈடுபடவேண்டுமென்று இந்து மதத்திலே உள்ளவர்களை நான் கேட்டுக் கொள்வேன்.

நாட்டின் பாதுகாப்பில், மதத்தையும் கடந்த நிலையை நீங்கள் எடுத்து இந்த அரசாங்கத்தினுடைய செயல் முறைகளுக்கு ஒத்துழைக்க வேண்டுமென்று மற்ற மதத்தினரையெல்லாம் கேட்டுக் கொள்வேன். இந்தத் துறைக்குப் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கின்ற பேராசிரியர் அன்பழகன் அவர்களுடைய சீரிய முயற்சியினால், தமிழகத்தைப் பொறுத்தவரையிலே குடும்பநலத் திட்டம் மிக வேகமாக, வெற்றிகரமாக நடைபெற்று வருகின்றது. அந்த வகையிலே அனைவரும் ஒத்துழைப்புத்தர வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

———

முதல்வர் டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி · குடும்பத்தின் நல்விளக்கு. அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்