காட்சி 1

காட்சி—1

ஜமீன்மாளிகை வெளிப்புறம்

72 பகுதிகளில்

### ஜமீன்மாளிகை வெளிப்புறம் (பொதுமக்கள் கூடியிருக்கிறார்கள்..... அவர்களுக்குள் “தொண தொண” என்று பேசுகிறார்கள்.... “சைலன்ஸ்” என்ற பேரொலியுடன் காளிங்கராயன் கதவைத் திறந்து கொண்டு வருதல்...) மக்கள்:— ஏ, காளிங்கராயர் வந்துட்டாரு!.. ஜமீன்தாரய்யா வந்துடுவாரு!.. (அனைவரும் வாயிற்புறத்தையே பார்த்தல்—ஜமீன்தார் வருகிறார்.) ஒருவன்:— ஜமீன்தார் ஜம்புலிங்க பூபதி! மக்கள்:— வாழ்க!... காளிங்:— என்னடா காட்டுக்கூட்டம்...வாழ்க...வாழ்க...வாள் வாழ்கன்னு!... அழகா... நல்லா நம்ப சாஸ்திரத்துக்கு சம்பிரதாயத்துக்கு எத்தப்படி... ஜமீன்தார் ஜம்புலிங்க பூபதிக்கு ஜே! ஜே!.. என்று கோஷம் போடுவீங்களா?.. ஒருவன்:— ஜமீன்தார் ஜம்புலிங்க பூபதிக்கு... மக்கள்:— ஜே! ஜமீன்தார்:— பெரியவர்களுக்கு நமஸ்காரம்!.. சிறியவர்களுக்கு ஆசீர்வாதம்!... காளிங்கராயா!... காளிங்:— பிரபு! ஜமீன்தார்:— இவர்களின் குறைகளைக் கேள்!.. காளிங்:— உத்தரவு பிரபு... (ஒரு பெண் மனு ஒன்றை ஜமீன்தாரிடம் கொடுத்தல்—அவர் பரிவுடன் வாங்குதல் — அந்தப் பெண் ஜமீன்தாரின் காலில் விழுந்து கும்பிடுதல்..) ஜமீன்தார்:— எழுந்திருங்கள்...எழுந்திருங்கள்...நீங்கள் எல்லாம் என் காலில் விழுந்து வணங்குகிறீர்களே; நான் என்ன மகானு? மகரிஷியா? மகாத்மாவா?.. இல்லை! ஆனால் ஒன்று நீங்கள் விழுந்து வணங்குவது ஜமீன்தார் ஜம்புலிங்கத்தின் காலில் இல்லை!... தர்மத்தின் காலைத்தொட்டுக் கும்பிடுகிறீர்கள்! நீதியின் காலை — நாணயத்தின் காலைத்தொட்டுக் கும்பிடுகிறீர்கள்! என்ன காளிங்கராயா?...நான் சொல்வது சரிதானு?.. காளிங்:— வேற யார் சொல்ல முடியும் — நாமே சொல்லிக்க வேண்டியதுதான்! ஜமீன்தார்:— (காலில் விழுந்த பெண்ணிடம்) உன் குறை என்னம்மா? பெண்:— என் புருஷன் சதாநேரமும் சாராயத்தைக் குடிச்சிட்டு.. குடும்பத்தைக் குட்டிச் சுவராக்கிட்டாருங்க!.. ஜமீன்தார்:— ஐயகோ! ஐயகோ! தாய்க்குலம் கண்ணீர் வடிப்பதா? அதுவும் என் எதிரிலா? தாய்க்குலத்தின் கண்ணீரை என்னால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை... காளிங்கா!... இந்தப் பெண்மணியின் கணவனைக் கூப்பிட்டு... கிரமமாக உத்தரவிடு!.. (பெண்ணை நோக்கி) கவலைப்படாதே அம்மா!.. உன் புருஷனைத் திருத்துவதுதான் பொறுப்பு... காளிங்கா! அதோடு இன்னொரு கட்டளை - உடனே அமுலாக வேண்டும். நமது ஜமீன் எல்லைக்குள் மதுவின் வாடையே அடிக்கக்கூடாது. காளிங்:— நம்ம எல்லைக்குள்தானே!... அதை அமுல்படுத்திடலாம். புலவர்:— மாரி பொய்த்தாலும் பாரியின் கொடை பொய்க்காது! தலையைக் கொடுக்கவும் தயாரான குமணன்! தான்செய்த தர்மங்களையெல்லாம் கொடையாகக் கொடுத்தான் கர்ணன்! பாரியாய் — குமணனாய் — கர்ணனாய்க் காட்டியளிக்கும் வள்ளலே வாழ்க!... வாழ்க!.... ஜமீன்தார்:— காளிங்கா!: அப்பா யாரு?... புலவர்:— ஒரு தமிழ்ப்புலவன் ஐயா! காளிங்:— முகஸ்துதி பண்ணும் போதே தெரியுதே!.. புலவர்:— எல்லாப் புலவர்களையும் அப்படிச் சொல்லாதீர்கள்! உறுதியோடு இருக்கிற புலவர்களும் இருக்காங்க... சமயத்துக்குத் தக்கபடி தாளம் போடுகிற புலவர்களும் இருக்காங்க!.. ஜமீன்தார்:— காளிங்கா...புலவர் மனதைப் புண்படுத்தாதே! புலவரே! உங்களுக்கு என்ன வேணும்? புலவர்:— இதோ... இந்தப் பெண் பூங்கொடியை விட்டுவிட்டு என் மனைவி இறந்துவிட்டாள்!... தாயில்லாக் குழந்தையை வச்சிகிட்டு நான் தவிக்கிறேன்!.. ஜமீன்தார்:— (குழந்தையைத் தூக்கி) அய்யோ பாவம்!...தங்கப் பதுமை மாதிரி இருக்கு...குழந்தை... ஏம்மா! ஜலதோஷமா உனக்கு... (மூக்கைச் சிந்தி விடுகிறார்..) (மக்கள் வியப்பு—குழந்தையைப் புலவரிடம் கொடுத்தவாறு) புலவரே! கவலை வேண்டாம். மாதாமாதம் ஜமீனில் இருந்து இந்தக் குழந்தையை வளர்க்கவும், படிக்கவும் பணம் அனுப்பப்படும். உமது விலாசத்தை மானேஜர் காளிங்கராயனிடம் கொடுத்துவிட்டுப் போங்கள்... புலவர்:— நன்றி ஐயா நன்றி!.... (மனுக்கள் காளிங்கனிடம் குவிகின்றன.) ஜமீன்தார்:— காளிங்கா! வண்டி தயாரா?.... எங்கே வண்டிக்காரன்?.... காளிங்:— டேய் சடையா!...சடையா!.. (உமாவைத் தூக்கியபடி சடையன் ஓடி வந்து) சடையன்:— எஜமான்...வண்டி தயாருங்க!.. உமா:— அப்பா! நானும் கூட வரேம்ப்பா! ஜமீன்தார்:— உமா! வேண்டாம்மா...நீ போயி விளையாடு... அப்பா கோயிலுக்குப் போயிட்டு வரேன்! காளிங்:— குழந்தைங்க கோயிலுக்குப் போகக்கூடாது!...வாம்மா வா...என்கூட வா! (ஜமீன்தார் வந்து வண்டியில் ஏறி அமர்தல். சடையனும் வண்டியில் ஏறி ஓட்ட— வண்டி புறப்படுகிறது.) ★