களஞ்சியப் பகுதி 21
58 பகுதிகளில்·மூல எண்ணிடல் அல்ல
——★—— [ராசா, ராணியைக் கொண்டுவந்து விட்டுப் போகிறான்.] சமரசம்: யாரது? யாரோ வந்த மாதிரி இருந்ததே! [அப்போது அவனிடமிருந்து புறா பறந்து ராணியின் தலை மேல் உட்காருகிறது, ராணி நடக்க அது நகர்வது தெரிகிறது.] சமரசம்: உம்...விட்டுடுவேனா! ஒன் மேலே எவ்வளவு பிரியம் எனக்கு—ஓடப் பாக்கிறியே! [புறாவை பிடிக்க முயற்சிக்கிறார். சாந்தம்மாள் மாடியின் மேலிருந்து பாத்து விடுகிறாள், ராணி தப்பி விடுகிறாள்.] ——★—— சாந்தம்: என்னப்பா விஷயம்? வேலைக்காரன்: ஒண்ணுமில்லேம்மா! சமையல்காரன்: டேய், சும்மா இரு. இப்ப அய்யா, அந்த பொண்ணுக்கூடவேல்லே சுத்திக்கிட்டு திரியிராரு... சாந்: ஆ! நீயும் பாத்துட்டியா? சமை: என் கண்ணாலே பாத்தோம்மான்னா, அது இன்னைக்கு நேத்தா நடக்குது? அது எவ்வளவு நாளா நடக்குது... வேலை: சும்மா சொல்றான்க. ஒண்ணுமில்லேம்மா! சாந்: டேய், நீ சும்மா இரு. நீ அய்யா ஆளுல்ல, அவன் நேரே பாத்தவன் சொல்றான்! ஊகூம்...அப்படியா சேதி! சரி, சரி, ஒங்க வேலையைப் போய்ப் பாருங்க...ஏண்டா நீ நிக்கிறே? வேலை: ரொம்ப நாளா இல்லீங்க. இன்னைக்குத்தான்! சாந்: உம்...இன்னைக்கிதானா? வரட்டும் பேசிக்கிறேன்! [அப்போது சமரசம் வருத்தத்துடன் வருகிறார்.] சாந்: உம். வாங்க சார்! வாங்க...வாங்க...இப்படி உட்காருங்க, விளையாட்டெல்லாம் முடிஞ்சாச்சா? சம: அட கொஞ்சம் சும்மா இரு. சாந்: ஓகோ! அதுக்குள்ளே போயிடுச்சேன்னா கவலையாக்கும்! சம: பின்னே இருக்காதா, விளையாடிட்டு இருக்கும் போதே... சாந்: ஆமாம், ஆமாம்! பாதியிலே போயிட்டா கவலையாத்தானே இருக்கும்! சம: நீ பாத்தியா? சாந்: உம், அந்தக் கண்றாவியை நான் பாத்துக்கிட்டுதானே இருந்தேன்! சம: கண்றாவியா? அடச்சீ கழுதை! ஓடிப் போயிடுச்சே அது ரொம்ப அழகு! சாந்: ஊஹூம்...அப்ப இருக்கிறது மட்டமா? சம: மட்டம்னு சொல்லலியே! அது மாதிரி இல்லே! ஆஹா, ஓடிப் போயிடுச்சே! சாந்: அய்ய! நான் வேணும்னு போயி வரச் சொல்லட்டுமா? சம: வரச் சொல்லட்டுமா...? சாந்: ஓய்! உம்ம புத்தி வரவர ரொம்ப மட்டமா போவுது! சம: இந்தா...இந்தா...என்ன இன்னைக்கு நீ சேஞ்சாயிட்டே? சாந்: அங்க சேஞ்சாயிடுச்சில்ல. இனி இங்கயும் சேஞ்சாக வேண்டியதுதானே! சம: இந்தா! என்ன நீ ஓன்பாட்ல கடகடான்னு பேசிக்கிட்டே போறே? சாந்: கடகடான்னு ஒண்ணும் பேசலே; உண்மையைத்தான் சொல்றேன்! சம: எந்த உண்மையை? சாந்: அட, எங்கப்பா பெரிய ஆளுப்பா! சம: ஆ! நீன்னா சொல்லிட்டே என்னை நீ? உம்... சாந்: நீ... சம: நீயா? எங்கே, இன்னொரு வாட்டி சொல்லு. சாந்: நீ...ர... சம: நீ... சாந்: நீ... சம: புருஷனைப் பாத்து நீங்கிறே. எங்கே இன்னொரு தரம் சொல்லு நீ. சாந்: நீ. சம: இரு, இந்தா வர்ரேன். வேலைக்காரன்: எசமான்... [அவன் ஒரு பலகை கொண்டு வருகிறான். சமரசம் அதை வாங்கி மனைவியை அடிக்க ஓங்குகிறார்.] சம: கொண்டா இங்கே... வேலை: அய்யய்யோ. அது "சமாதானம் ஓங்குக!" சமாதானம். சம: உம்... வேலை: எழுதி வாங்கிக்கிட்டு வந்திருக்கேன். சம: ஓகோகோ, சமாதானம் ஓங்குகவா? சரி, சமாதானம். சாந்தம்மா, சர்தான் வா, இப்படி வா...உட்காரு வந்து. சாந்: உம்...அந்தப் பொறாவை கொண்டாந்து ஒக்கார வச்சுக்க. வேலை: என்ன எசமான் இது? சம: அதானே புரியலே. நான் ஒலக சமாதானத்துக்கு புறா வாங்கிக்கிட்டு வந்தா, அது ஊட்டுச் சண்டையை வளர்த் துடுச்சே. உம்...சரி, அதைக் கொண்டுபோய் அங்கே மாட்டு. வேலை: அப்ப இதை இப்படி திருப்பி மாட்டிட்டான்? [பலகையைத் திருப்பிக் காட்டுகிறான்.] சம: என்ன? "சண்டை ஓங்குஹ." சண்டை ஓங்குஹவா? ஆ...நீ ஏழுதினியா? அழிடா, அழி, அழி, அழி.