களஞ்சியப் பகுதி 13
58 பகுதிகளில்·மூல எண்ணிடல் அல்ல
—0— (வீட்டை நோக்கிச் செல்லும் ராணியின் மனப் போராட்டம்) மனம்: என்ன உலகமிது...ம்...இரக்கமுள்ளவனைப்போல் நடித்து இழி செயலில் ஈடுபட்ட பாபு--அறிமுகமில்லாத என்னை அன்போடு உபசரித்து ஐஸ்வரியவான் வீட்டுப் பெண் என்று நம்பிட்ட ராஜா--இரவெல்லாம் எங்கே போயிருந்தாயம்மா என்று கேள்வி கேட்கப் போகும் அப்பா...அய்யோ! இரவு நான் எங்கே போயிருந்தேன்...? எப்படி அப்படித் தூங்கி விட்டேன்? அப்பாவுக்கு என்ன பதில் சொல்லுவது? எனக்கொன்றும் புரியவில்லையே... நிழல்: ஏன் புரியவில்லை ராணி? என்ன விழிக்கிறாய்? நான் இருக்கும்போது எதற்காகப் பயப்படுகிறாய்? நான்தான் லீலா! அந்த ராஜாவிடம் பொய் சொன்னாயே அந்த லீலா நான் தான். ராணி லீலாவா? நிழல்: ஆமாம், ராணி. கவலைப்படாதே. அபலைகளை, ஆலை யிட்ட கரும்பாக ஆக்கிவிடும் உலகமடி இது--சாமர்த்தியக்காரர்கள் மட்டுமே பிழைக்கக்கூடிய ஜகமடி இது--பிறருக்குக் கேடு வராத அளவுக்குப் பொய் சொல்வதில் தவறில்லை பெண்ணே; தவறில்லை! ராணி: அப்பாவிடமும் பொய் சொல்வதா? நிழல்: இனமறியாத ஒரு ஆண்மகன் வீட்டிலே இரவு முழுவதும் தங்கியிருக்கிறாய்--'எந்தக் களங்கமும் இன்றி அங்குத் தூங்கினேன் அப்பா' என்று சொன்னால் அப்பா நம்பிவிட முடியுமா? எப்படியும், தவறு செய்யாதவள் நீ; அதனால் பொய் சொல்வதில் தவறில்லை. ராணி: எப்படிப் பொய் சொல்வது? நிழல்: இந்த லீலா இருக்கும்போது ஏன் அதற்காகக் கவலைப்படுகிறாய்? வா, போவோம்!