களஞ்சியப் பகுதி 9
58 பகுதிகளில்·மூல எண்ணிடல் அல்ல
[வெளியே வந்த ராணி. மயக்க மருந்து கலந்த டீயைக் குடித்திருந்ததால் தெருவில் நின்றிருந்த ராஜாவின் காரில் படுத்துவிடுகிறாழ். தன் வீடு சென்றதும் ராஜா பார்க்கிறான்.] ராஜா: ஆகா! பொம்பளை! நம்ம வண்டீல எப்படி வந்தாங்க? இது என்னடா இது டேஞ்சரா போச்சு! அய்யய்யோ, இந்தாம்மா, யார் அது? இந்தா ஒண்ணைத்தான்! இது, இது, இந்தா பொண்ணு எழுந்திரி, கீழே வா--வா. கீழே எறங்கு, எறங்கு. அட அடடே. இந்தா. இந்தா, எழுந்திரி! இந்தா எழுந்திரிம்மா, எழுந்திரி, யார் நீ? யார் நீ? ராணி: தூக்கம், ஊக்கும். ராஜா: யாரு? என்னாது தூக்கமா? நான் யாருன்னு கேக்கிறேன். தூக்கமாம்ல, தூக்கம். இந்தா தூங்குறதுக்கு இதுதானா எடம்? இந்தாம்மா, ஒண்ணைத்தான், என்னடா இது தர்மசங்கடமா போச்சு! இது என்னா உண்மையிலே தூக்கந்தானா. வேற ஏதாவது? பொண்ணை பாத்தா அப்படி தெரியலே, நல்ல பொண்ணு மாதிரிதான் தெரியுது. என்னடா இது சங்கடமாப் போச்சு. நடு ராத்திரிலே இந்தப் பொண்ணை எப்படி தனியா உட்டுட்டு போறது? எவனாவது கையிலே கழுத்திலே உள்ளதை. இந்தம்மா இந்தா, அங்கு வந்து தூங்கு. வா, வா, இந்தா, இந்தா. படி, படி, ராணி: [மயக்கத்தில்] எதைப் படிக்கிறது? ராஜா: ஆ! மாடிப் படி! ஸ்டெப்ஸ்! படி, ஏறிப்போறதுல்ல அந்தப் படி. ராணி: எப்படி? ராஜா: ஆ! இப்படி; வா! தூக்கமா இது. உம். ராணி: உம், உம். (முணு முணுக்கிறாள்.) ராஜா: அடடே! இந்தம்மா, இந்தா! இந்தா, உன்னைத்தான்! ஏ! பொண்ணு, எழுந்திரி, அடே. என்னடா இது, இந்தா, எழுந்திரு, எழுந்திரு, எழுந்திரு, மெல்ல, மெல்ல, மெல்ல, வா இங்கே, தள்ளாதே, சே! நியூசன்ஸ். ராஜா: [யோசனை] சே, இது என்ன பைத்தியக்காரத்தனம்! தேவதை இல்லே, ரைட்டு, ரைட்டு, அப்புறம் யாரா இருக்கலாம்? எப்பாடி--தூக்கத்திலே பெரிய கும்பகர்ணன் சிஸ்டரா இருப்பாபோல இருக்கே. பொம்பளைங்க எல்லாம் இப்படி தூங்குனா ஊரு உருப்பட்ட மாதிரிதான். (தினசரி பத்திரிகை ஒன்றை எடுத்துப் படிக்கிறான்.) மூதேவி என்று சொன்னவன் மூக்கறுபட்டான்--பத்தரை லக்ஷம் பேருக்கு வேலை யில்லாத் தொல்லை நீங்கிவிட்டது--போலீஸ்காரர்களையே ஏமாற்றிய பக்தாத் திருடர்கள்--உம், அய்யய்யோ! உம், நம்பகிட்ட ஒண்ணும் நடக்காது. அன்புள்ள மகள் லீலாவுக்கு, உன் அப்பா தெரிவிப்பது. என்னையும் உன் அருமைத் தாயாரையும் ஏராளமான சொத்துக்களையும் விட்டுவிட்டு நீ இப்படிப் போகலாமா? நீ கூறியபடியே உனக்கு கல்யாணம் செய்கிற ஏற்பாட்டை கைவிட்டுவிட்டோம், உனக்கு இஷ்டம் ஏற்படுகிறபோது நீயே கல்யாணத்தை முடிவு செய்து கொள்ளலாம், உன் கோபத்தை விட்டுவிட்டு தயவு செய்து வீட்டுக்குத் திரும்பி வரும்படி கேட்டுக்கொள்கிறோம். கல்யாணத்துக்கு நிச்சயமாக பிடிவாதம் செய்யமாட்டோம். உன்னைக் காணாமல் மிகவும் நொந்து போயிருக்கிறோம். உடனே வரவும். உன் அன்புள்ள, அப்பா. ஊம், லீலா... “உனக்கு இஷ்டம் ஏற்படுகிறபோது நீயே கல்யாணத்தை முடிவு செய்து கொள்ளலாம். என்னையும் உன் அருமைத் தாயாரையும், ஏராளமான சொத்துக்களையும் விட்டுவிட்டு...” ராஜா: ஓகோ! பெரிய பணக்கார வீட்டு பொண்ணுபோல இருக்கு. சே, சே! நம்ம நினைச்சமாதிரி தப்பான பொண்ணல்ல, ஹம்... [உடனே உள்ளே ஓடிப்போய் ராணிக்கு தலையணை தருகிறான். அடடே, அம்மா. இதோ பாருங்க, கொஞ்சம் எழுந்திருங்க இதோ. அம்மா. ஹ...மெல்ல, மெல்ல, அய்யய்யோ, பரவாயில்லை. [பிறகு அறைக்கு வெளியே சென்று தூங்குகிறான். பொழுது விடிந்ததும் வேலைக்காரன் காப்பி கொண்டு வருகிறான்.] வேலை: சார்! சார்! மணி ஒன்பதரை ஆகுது சார், எழுந்திருங்க சார், சா...! (போர்வையை விளக்க ராணியைப் பார்த்து)...யாரு? (வெளியில் ஓடி ராஜாவின் மேல் விழுகிறான்.) ராஜா: டேய், டேய்! யார்ரா அவன்? வேலை: சார், சார். நான்தான் சார்! ராஜா: நீயா? ஏண்டா இப்படி மேலே வந்து விழுந்தே? வேலை: சார்! அது யார் சார் அது? ராத்திரி 'ட்ராமா'விலே 'ஆக்ட்' பண்ணினவங்களா? (ராணி விழித்துப் பேசுவதை கவனிக்கிறாள்.) ராஜா: கழுதை, அதுக்காகவா இப்படி ஓடிவந்தே? அது பெரிய எடத்துப் பொண்ணுடா! பேரு லீலா! அவுங்க அம்மா அப்பா கிட்ட சண்டை போட்டுக்கிட்டு வீட்டை விட்டு வந்துடுச்சு! வேலை: என்ன சார் கோபம்? ராஜா: அட, எனக்கென்னடா தெரியும்? நான் பத்திரிகையிலே படிச்சேன். வேலை: ரொம்ப அழகான பொண்ணு சார்! ராஜா: ஆ...! வேலை: சார், இந்தப் பொண்ணை... ராஜா: என்னடா? அந்த பொண்ணுக்கு என்ன? வேலை: எனக்கு ரொம்ப ஆசையா இருக்கு சார்... ராஜா: என்ன சொன்னே? வேலை: நீங்க கல்யாணம் பண்ணி என் கண்ணால பாக்கணும், சார்! ராஜா: போடா, அது பெரிய இடத்துப் பொண்ணு! நம்மை யெல்லாம் கல்யாணம் பண்ணிக்குமா? டேய், நீ ஏண்டா அங்கே போனே? போடா அந்தப் பக்கம்--'மங்கி பிராண்டு!' (ராணி ஓடிப்போய் படுத்து விடுகிறாள்.) ராஜா: ஹூம்! பரவாயில்லே, பரவாயில்லே! ஒண்ணும் பயப்பட வேண்டாம். யாருமில்லே, ராத்திரி தூக்க மயக்கத்திலே ஏதோ... ராணி: ஓகோ! அயாம் ஸ்சாரி! உங்களுக்கு ரொம்ப சிரமம் கொடுத்தேன்! ராஜா: பரவாயில்லே. அதனால் என்ன? ராணி: உம்...ராத்திரி... ராஜா: இங்கதான் படுத்திருந்தீங்க--இந்த இடத்திலே தான் படுத்திருந்தீங்க! ராணி: நான் எப்படி இங்கே?... ராஜா: நம் காரு... ராணி: ஓ காரு, சரி; சரி! ராஜா: ஆமாம், காரு... ராணி: நீங்க? ராஜா: நான் தான் ராஜா! ராணி: எந்த ஊருக்கு? ராஜா: அய்யய்யோ! என்னம்மா இது, டேஞ்சர் பண்றீங்க? சரிதான், சிஸ்டருக்கு இன்னும் தூக்கம் தெளியல போலிருக்கு! அம்மா, நான் எந்த ஊருக்கும் ராஜால்ல; என் பேரு...என் பேரு ராஜா! ராணி: ஓ, எக்ஸ்யூஸ்மி! ராஜா: பரவாயில்லை, பரவாயில்லை! ராணி: உம், இது... ராஜா: நம்ப வீடுதான்; நம்ப வீடுதான்! நேத்தி நான் நாடகத்துலே 'ஆக்ட்' பண்ணினேனே. சேரன் செங்குட்டுவன்...நீ நாடகத்துக்கு வந்து பாக்கிலே! ராணி: இல்லே, நாடகத்திலே டிக்கட்... ராஜா: ஆமாம், ஆமாம். கெடச்சி இருக்காது...டிக்கட் கெடச்சி இருக்காது! ஏராளமான கூட்டம்--ஹவுஸ்புல்! ராணி: ஆமாம்; ஆமாம்! ராஜா: ஆமாம், ஆமாம்! ஆங், ஏம்மா, இவ்வளவு பெரிய எடத்துப் பெண்ணாயிருந்தும் உங்க அப்பா அம்மா மனசு வருத்தப்படும்படியா நடந்துக்கலாமா? ராணி: உங்களுக்கு நான் யாருன்னு தெரியுமா? ராஜா: ஓ! இதோ, இந்தப் பத்திரிகையிலே எல்லாம் போட்டிருக்கே. ஆமாம் லீலா! உங்கப்பா பேரையும், விலாசத்தையும் பத்திரிகையிலே போட்டா எல்லாருக்கும் யாருன்னு தெரிஞ்சுபோகும்; அதனால குடும்பத்துக்கு கெட்ட பேரு வருங்கிறதுக்காக ரொம்ப தந்திரமா 'நியூஸ்'--கொடுத்திருக்காரே! பெரிய சாமர்த்தியசாலிதான் உங்கப்பா! ராணி: (சமாளித்து) ஆமாம்! ராஜா: ஆமாம்! ஆ, காப்பி சாப்ட்டுலே!... ராணி: (காப்பி சாப்பிட்டுவிட்டு) அப்ப...நான் வர்றேன்! ராஜா: ஊஹூம்...இரும்மா! நில்லு...இந்தா நில்லு! உம்; உன்னைத் தனியா அனுப்ப மாட்டேன். உங்க வீட்டு வரைக்கும் வந்து உன்னை விட்டுட்டு வர்றேன்! ராணி: வேண்டாம்; வேண்டாம்! வீட்ல ஏதாவது அனாவசியமா தப்பா நினைச்சுக்கு வாங்க! ராஜா: லீலா! நீ என்னை ஏமாத்தப் பாக்கிறே! நான் உன்கூட வந்து உங்க பங்களா வாசல்ல உன்னை இறக்கி விட்டுட்டுதான் வருவேன்; யாரும் தப்பா நினைச்சுக்க மாட்டாங்க. ராணி: உம். உங்களுக்கு ஏன் வீண் சிரமம்! என் கோபந்தான் தெளிஞ்சு போச்சே! நானே போயிடுவேன்! ராஜா: இருந்தாலும், பெரிய பணக்கார வீட்டுப் பொண்ணு...நம்ப கார் இருக்கும்போது நடந்தா போறது! கொஞ்சம் இரு. இதோ வந்துட்டேன்!