காட்சி—39
காட்சி 39·46 காட்சிகளில்
(தங்கையை தேடி அலைந்த குணசேகரன் தன் நெஞ்சக் குமுறலை பாடல் மூலம் வெளியிடுகிறான்)
நெஞ்சு பொறுக்குதில்லையே—இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால் (நெஞ்சு
அஞ்சியஞ்சிச் சாவார்—இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே வஞ்சனைப் பேய்களென்பார்—இந்த மரத்திலென்பார் அந்தக் குளத்திலென்பார் துஞ்சுது முகட்டிலென்பார்—மிகத் துயர்படுவார் எண்ணிப் பயப்படுவார் (நெஞ்சு
கஞ்சி குடிப்பதற்கிலார்—அதன் காரணங்கள் இவையெனும் அறிவுமிலார்
பஞ்சமோ பஞ்சமென்றே—நிதம் பரிதவித்தே உயிர் துடிதுடித்தே துஞ்சி மடிகின்றாரே—இவர் துயர்களைத் தீர்க்க ஓர் வழியுமில்லையே (நெஞ்சு
குப் : அண்ணே நீ பாடினதெல்லாம் சரிதான்.
குண : இந்தப் பாட்டை நான் பாடலே குப்பா இந்தப் பாட்டை நான் பாடியிருந்தால் எல்லோரும் அடிக்க வருவாங்க இது வேறே ஒருத்தர் பாடியது.
பூசாரி : டேய் குப்பா தீவெட்டி பூஜைக்கு நேரமாச்சு மணி அடிக்கவாடா. (குணசேகரன் போய்விடுகிறான்)
குப் : என்னண்ணே! போறே? நாளைக்கு வர்றியா?
(பூஜை முடிந்தவுடன் கல்யாணி வருகிறாள்)
கல் : (சிலையை நோக்கி) தாயே! பராசக்தி! எனக்கு நீ தான் கதி! லோகமாதா என்னைக் காப்பாற்று.
பூசாரி : யாரது?
கல் : கதியற்றவள் பெயர் கல்யாணி.
பூசாரி : கவலைப்படாதேம்மா உன் கஷ்டங்கள் எல்லாம் தீருவதற்குத்தான் அம்பாள் கோயிலுக்கு வந்திருக்கே நீ ஏன் இப்பண்ணுமாதிரி இருக்கே! உள்ளே சென்று என் தாயைத் தாராளமாக வணங்கம்மா! (கல்யாணி உள்ளே போகிறாள். சென்றவுடன் பூசாரி தனக்குள்) ஆஹா! என்ன அழகு, என்ன உடம்பு! என்ன வாசியம்! இன்று இவளை விட்டுக்கூடாது வழி பலாத்காரம் பலாத்காரமா? பராசக்தி கோவிலிலா? ஆம் வேறு எங்கே செய்வது பூசாரி சுட்டகல்லில் சோறு என்று சொல்லி பக்தர்களை ஏமாற்றினைப் கற்பழிப்பதா? ஆம் இதைச் செய்வதில் என்ன? ஏன் அம்பாள் இருக்கிறாள் என்று பார்க்கிறாயா? அவள் இந்த இடத்திலேதான் இருப்பாள். நடமாட்டாள். ம்... தாமதிக்காதே (கல்யாணியின் கையைப் பிடித்து) கல்யாணி வேறு விதியாசமா நினைக்காதே. வியாதியுள்ள பெண்களைத் தொடுவதற்கு எப்படி டாக்டருக்கு உரிமை இருக்கிறதோ... அதுபோல பக்தியுள்ள பெண்களைத் தொடுவதற்கு ஆண்டவனுடைய அடியார்களாகிய எங்களுக்கு உரிமை உண்டு.
கல் : சீ...காமப்பேயே—தாயே பராசக்தி!
(பூசாரி கல்யாணியின் கற்பைக் கசக்க முயல்கிறான். ஆனால் குப்பன் இக்காட்சியைக் கண்டு மணியை அடித்து விடுகிறான். புலி வாயின் பிடியிலிருந்து புள்ளி மான் தப்பி ஓடுகிறது)