காட்சி—8

காட்சி 8·46 காட்சிகளில்

(ஜாலிக்காரி ஜாலியுடன் ஓர் தாசி வீட்டில் நடக்கும் நாட்டியத்தை வெறுப்புடன் ரசிக்கிறான்)

ஓ ரசிகரும் சீமானே வா ஜொலிக்கும் உடையணிந்து களிக்கும் நடனம் புரிவோம்—அதை நினைக்கும் பொழுது மனம் இனிக்கும் விதத்தில் சுகம் அளிக்கும் கலைகள் அறிவோம் (ஓ ரசிகரும்

கற்சிலையும் சித்திரமும் கண்டு—அதன் கட்டழகிலே மயக்கம் கொண்டு சிற்சிலையின் கட்டழகிலே மயக்கம் கொண்டு—வீண் கற்பனையெல்லாம் மனதில் அற்புதமென்றே மகிழ்ந்து விற்பனை செய்யாதீர் மதியை—தினம் நினைக்கும் பொழுது மனம் இனிக்கும் விதத்தில் சுகம் அளிக்கும் கலைகள் அறிவோம்

வானுலக மோட்சமதை நாடி—இன்ப வாழ்க்கையை இழந்தவர்கள் கோடி—பெண்களின் வாழ்க்கையை இழந்தவர்கள் கோடி—வெறும் ஆணவத்தினிலே பெரும் ஞானியைப்போல நின்று வீணிலே அலைய வேண்டாம்—தினம் நினைக்கும் பொழுது மனம் இனிக்கும் விதத்தில் சுகம் அளிக்கும் கலைகள் அறிவோம்

(குணசேகரன் டான்ஸ் கச்சேரியில் ஜாலிக்காரி ஜாலியால் குளிர்ந்த பானத்தில் மயக்க மருந்திட்டு மயக்கப்பட்டு தன் பணத்தை பூராவும் பறிகொடுக்கிறான்)

(கல்யாணி வீடு)

டாக்டர் : (கல்யாணியைப் பரிசோதித்து விட்டு) அவசரமாக இந்த மருந்தை வாங்கிக்கொண்டு வாங்க.

தங்கப்பன் : (எதிரே வரும் மாமனாரைப் பார்த்து) இப்போ எப்படி இருக்கு?

மாணிக் : (டாக்டர் சீட்டைக் காட்டி) அவசரமாக இந்த மருந்தை வாங்கிக்கொண்டு வாங்க. (தங்கப்பன் சைக்கிளில் வேகமாக செல்லுகிறான்)

பார்வதி : (வெளியே வந்து) பேரன் பன்னீர்செல்வம் பிறந்திருக்கிறான்.

மாணிக் : (களிப்புடன்) மாப்பிள்ளே! மாப்பிள்ளே!

(மருந்தை வாங்கிவரப் போய்க்கொண்டிருந்த மாப்பிள்ளை வீட்டின் எதிரே காரில் அடிபட்டு விழுந்து இறக்கிறார். அதைக் கண்ணுற்ற மாமனார் மாணிக்கம் பிள்ளை அதிர்ச்சியால் மரணமடைகிறார். கல்யாணி விதவையாகிறாள்.)