காட்சி 45

காட்சி-45

45 பகுதிகளில்

(மலையப்பனால் மீனு அவமதிக்கொண்டிருக்கிறாள்—வீட்டிலே மீனு பலாத்காரம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் போது—குமரன் வந்து விடுகிறான்) மலையப்பன் :- டேய் குமரா! அந்திய காலம் நெருங்கி விட்டது. (குமரன் மீனுவை வெளியே கடத்துகிறான்) மலையப்பன் :- மரியாதையாக அந்த உயிலை கொடுத்து விடு! குமரன் :- மலையப்பா! வேடனைப் பார்த்து வேங்கை சொன்னதாம் "அந்த வில்லையும் அம்பையும் கீழேபோட்டு விடு! பிறகு நான் உன்னை வேட்டையாடிக் கொள்கிறேன்" என்று. அதை விட வேடிக்கையான மனிதனப்பா நீ! மலையப்பன் :- கொடுக்கிறாயா? இல்லையா? குமரன் :- நீ யார் கேட்க? நான் யார் கொடுக்க? இது மக்களின் சொத்து! மலையப்பன் :- மக்கள்! மடையனே! அவர்கள் இப்போது உன் மக்கள் அல்ல! மலையப்பனின் துப்பாக்கியில் இருந்து உன்னை நோக்கிப் பாயும் தோட்டாக்கள்! குமரன் :- அதனால் தான் சொல்லுகிறேன்—துப்பாக்கியை உடைத்தெறிய வேண்டும் என்று. மலையப்பன் :- குமரா! பலி பீடத்தில் தலையைவைத்து விட்டாய். குமரன் :- கொல்! ஆனால் கொடியவனே! கொலை புரிந்தால் கொள்கை அழிந்து விடுமென நினைக்காதே! மலையப்பன் :- உன் எண்ணம் சுக்கு நூறாகப் போய் விடும்! குமரன் :- நீ சரித்திரத்தின் ஒரு பாதியைத்தான் படித்திருப்பாய்! சுக்கு நூறாகப் போனவர்களின் எலும்புகள் பொறுக்கி வைத்துக் கொண்டு—கஷ்டப்பட்டு கண்ணீர் சிந்தியவர்களின் கணக்குகளை எழுதி—அந்தக் கண்ணீர்த்துளியின் அடிப்படையிலே எழுந்த புரட்சி அத்தியாயத்தை நீ படித்திருக்க மாட்டாய்! பார்வையிலே பழுது ஏற்பட்டதால் அல்ல! படித்தால் பாவம் என்று உன் பரம்பரை வேதம் எழுதி வைத்திருப்பதால்! தீ வைத்தாலும் சரி, திருட்டுத்தனமாக தாக்கினாலும் சரி! தேனீக்கள் தேள் எனக் கொட்டினாலும் சரி! சிறைச்சாலை வாய்திறந்து வரவேற்றாலும் சரி! மொட்டை யடித்தாலும் சரி! மூர்க்கத்தனம் செய்தாலும் சரி! அழிக்க முடியாத பகுத்தறிவுக் கொள்கை இது! பத்தரை மாத்துத் தங்கம்! மலையப்பன் :- விடு! இல்லா விட்டால் இந்த வீடே உனக்கு சுடுகாடாகி விடும். (இருவருக்கும் சண்டை மூளுகிறது. வெளியே நின்ற பூசாரி ஓடிவிடுகிறான். குமரன் குழந்தையை தூக்கிக் கொண்டு வெளியேறுகிறான். மலையப்பன் குமரனால் தாக்கப்பட்டு கீழே சாய்ந்தான். இது தான் குமரனின் இறுதி மூச்சு) குமரன் :- உயிர் ... உயிர் ... உரிமைச் சாசனத்தை கொண்டு வந்த எனக்கு மரண சாசனமா? இதோ இந்த போலீஸ்காரர்கள் என்னைக் கைது செய்யக் கூடாது என்று அன்று தடுத்தீர்கள். இன்று, அதே போலீஸ்காரர்கள் உங்களிடம் இருந்து என்னை காப்பாற்ற வந்திருக்கிறார்கள். அப்படி என்னகெடுதி செய்து விட்டேன் நான் உங்களுக்கு? (மீனு வருகிறாள்) குமரன் :- உயிர்விடப் போகும் நான் கடைசியாக உன்னிடம் ஒரு உதவி கேட்கிறேன். உனக்கு என் மேல் அன்பு இருக்கிறது. மீனு :- எது வேண்டுமானாலும் செய்கிறேன். குமரன்! குமரன் :- நீ வாழ வேண்டும். மீனு :- நான் வாழ முடியாதவள் குமரன்! குமரன் :- உனக்காக அல்ல! குழந்தைகளுக்காக! ஜீவானந்தரே! என் சொத்துக்கள் மக்களுக்கு சொந்த மாக்குகிறேன்! நான் தான் சாகிறேன். ஆனால், என் எண்ணங்கள் சாகவில்லை. சாகாது...என்ற மனத் திருப்தியோடு நான் உங்களை விட்டுப் பிரிகிறேன். வாழ்க சுயமரியாதை, வெல்க பகுத்தறிவு. (குமரன் உயிரை இழக்கிறான்) “ உலகைத்திருத்தும் உத்தமர்களுக் கெல்லாம் இது தான் முடிவா?” இதை மாற்றி அமைப்பது யார்? # நாம்