பகுதி 1

Unnumbered opening

10 பகுதிகளில்·மூல எண்ணிடல் அல்ல

வசனம் : மு. கருணாநிதி. குறிஞ்சிநாட்டுக் கொற்றவனுக்கு இரண்டு மனைவிகள். இருவரும் கர்ப்பவதிகள். இளையாளின் அண்ணன் துர்ஜயன், தன் அதிகாரம் நிலைக்க, தங்கையின் குழந்தை தரணி ஆளவேண்டுமே என்று அவனுக்குத் தனி ஆசை. அதன் காரணமாக................. கோபதிவர்மன் :- கொலைகாரி. போதும் உன் கும்மாளம். அங்கே நாசவேலை நடத்திவிட்டு அதை மறைக்க இங்கே நடனம். சித்ரா :- என்ன? கோபதி:- சிங்காரியின் வாழ்வைச் சிதைக்க நீ போட்டாயே திட்டம், அது செத்துவிட்டது தெரியுமா? சண்டாளி. சித்ரா:- திட்டமா? என்ன? கோபதி:- ஆஹா! என்ன நடிப்பு அக்கிரமக்காரி, உன்னை அக்கினியில் தள்ளிப் பொசுக்கினாலும் போதாது. அன்பானந்தர்:- அரசே, கோபம் நீதியை மறைத்து விடும், நிதானமாக.... கோபதி:- நிதானம், அன்பானந்தரே! நீரே கேளும் இந்த நீலியை! அன்பா:- மகாராணி, இளையராணி கர்ப்பமுற்றிருப்பதில் தங்களுக்குப் பொறாமை, அந்தக்குழந்தை ராஜ்யத்தில் பங்கு கேட்குமே என்ற பயம். அதன் காரணமாய் இளைய ராணிக்கு அனுப்பப்பட்ட மருந்தில் தாங்கள் விஷம் கலந்து விட்டார்கள். சித்ரா :- ஆ! அன்பா :- இது இளைய மகாராணியின் குற்றச்சாட்டு சித்ரா :- இதை நம்புகிறீர்களா? கோபதி:- நன்றாக நம்புகிறேன், சித்ரா சிங்காரியை மட்டுமென்ன, உன் சுயநலத்திற்காக என்னையே கொலை செய்யவும் துணிவாய்! சித்ரா:- அக்கிரமமான கட்டுக்கதை. நான் நிரபராதி! என் நெஞ்சைப் பிளக்காதீர்கள். கோபதி:- சீ! தொடாதே. (கீழே தள்ளிவிடுகிறான்) அன்பா:- அரசே! பூரண கர்ப்பவதி. கோபதி:- கர்ப்பவதி! சிங்காரியும் கர்ப்பவதிதான். சித்ரா:- சுவாமி, சிங்காரியை என் தங்கையாக மதிக்கிறேன். கோபதி:- பொய், சுத்தப்பொய்! சித்ரா:- எனக்காக வாதாட யாருமில்லை. சிங்காரியின் பக்கம் அவள் அண்ணன். அவள், அன்புக்குரிய மன்னர். எனக்கு சத்தியம் மாத்திரந்தான் சாட்சி! அன்பா:- மகாராஜா! விஷய விளக்கத்திற்கு வாதி, பிரதிவாதி இருவரையும் விசாரிக்க வேண்டும். கோபதி:- வீண் நம்பிக்கை, இருந்தாலும் குறிஞ்சிநாட்டுக் கொற்றவன் அவசரப்பட்டான் என்ற அவச் சொல் வேண்டாம். நீதிமன்றத்திற்கு நீரே ஏற்பாடு செய்யும். துர்ஜயன்:- காளிங்கா, காரியம் கெட்டு விட்டது. எதிர்பார்த்தது நடக்கவில்லை. நாளை நீதிமன்றத்தில் நமது சூழ்ச்சிகள் அம்பலமாகிவிடும். இந்த துர்ஜயன் ஏகபோக அதிகாரத்திற்கு சமாதி அமைக்கப்பட்டுவிடும். இந்தத்தரணியை என் தங்கையின் மகன் ஆளவேண்டுமென்ற ஆசை அழிபட்டுப்போகும். இதிலிருந்து நாம் மீள வேண்டுமானால் மகாராணி மாளவேண்டும். காளிங்கன்:- ஆமாம்! துர்ஜயன்:- இன்றிரவே நமது திட்டம் நிறைவேறியாகவேண்டும். * * * அன்பா:- இன்றிரவே நமது திட்டம் நிறைவேறியாகவேண்டும். சித்ரா:- அப்படியானால், நான் அரண்மனையைவிட்டு ஓடவேண்டுமா? அன்பா:- ஆம் அம்மணி! இந்த ஆபத்திலிருந்து விடுதலை பெற வெளியேறித்தான் ஆகவேண்டும். சித்ரா:- வெளியேறி அரசருக்கு வருத்தத்தை அதிகமாக்குவதைவிட உயிர் விடுவது மேல். அன்பா:- இல்லை, தங்கள் உயிர்பெரிதல்ல மகாராணி! தங்கள் வயிற்றில் தவழும் அந்த மாணிக்கம் குறிஞ்சிநாட்டு மகுடத்திற்கு ஏற்றது. அதைக் காப்பாற்ற இத்தியாகம் செய்யத்தான் வேண்டும்; சித்ரா:- நான் எங்கே செல்வேன் அமைச்சரே! அன்பா:- சுரங்கத்தின் மூலம் செல்லுங்கள். அது தங்களை அருகிலுள்ள கிராமத்தில் போய்ச் சேர்க்கும். சித்ரா:- அமைச்சரே! அன்பா:- கவலைப்படாதீர்கள், அரண்மனையில் அநீதி வாழும்வரை, அஞ்ஞாதவாசம், பிறகு நியாயம் தங்களை நேரில் மாளிகைக்கு இழுக்கும். துர்ஜயன்:- ஆ! தப்பிவிட்டாள்!!...... அன்பா:- தலையணையை நன்றாகச் சோதித்துப் பார். காளிங்கா நன்றாகச் சோதித்துப்பார்............ காளிங்கா அஹ் ஹஹ்ஹா! துர்ஜயன்:- சிரி! நன்றாகச் சிரி!.... சப்தம்போட்டுச் சிரி!... கலகலவென்று சிரி!... இதுதானே உன் கடைசிச் சிரிப்பு... காளிங்கா இந்த முட்டாளின் பிணம், யார் கண்ணுக்கும் படக்கூடாது. அரண்மனைத் தோட்டத்திலே புதைத்துவிட வேண்டும்.