களஞ்சியப் பகுதி 27

பழுதார் வீதி

63 பகுதிகளில்·மூல எண்ணிடல் அல்ல

[வேலழகனும் வேதாளமும் ஒரு ரத வண்டியில் செல்லும்போது முத்தாயியை பார்த்து விடுகின்றனர்.] வேலழகன் : குறும்பா!... வேதா : நிறுத்து! [ரதம் நிற்கிறது] வேதா : பிரபு! அதோ;....அந்தப் பொன் வாத்து தான் நான் கூறிய முத்தாயி!... வேல : ஆகா!...பொன் வாத்து என்று கூறுகிறீரே...புலவர் மொழியில் அன்னம் என்று கூறும்:....சொர்ணம் என்று சொல்லும், வேதாளம்—இவளை நான் எப்படியும் அடையவேண்டும்...நானும் முத்தாயியும் விரைவில் காதல் கீதம் பாடவேண்டும்! வேதா : கவலையை விடுங்கள்...உங்கள் கீதத்துக்கு நான் தான் தாளம்! [ரதம் போகிறது. பின்னால் முத்தன். இழுத்துவரப் படுகிறான்] [முத்தாயி ஓடிவருகிறாள் குறும்பனைப் பார்த்து] முத் : அய்யா...அய்யா!...நீங்கள் வேங்கை நாட்டு வீரர்தானே? குறு : ஆமாம்...என்ன வேண்டும்?... முத் : அவரை விடுதலை செய்து விட்டார்களா?... குறு : யாரை? முத் : முத்தன்! குறு : ஓ!...விடுதலை செய்து விட்டார்களே!...அவனை விடுதலை செய்து, பிரமாதமான மரியாதைகளோடு அதோ அழைத்து வருகிறார்கள்!... முத் : ஆ!...என்ன?... [முத்தாயி ஓடுகிறாள் மகிழ்ச்சியுடன். முத்தன் அடிபட்டு கீழே கிடக்கிறான்...] முத்தன் : அடியுங்கள்!...நன்றாக அடியுங்கள்!...என் இருதயத்தில் எழுச்சிக் கனல் பொங்கப் பொங்க அடியுங்கள்!...இப்படித் தவறு செய்யாதவர்களே அடித்து அடித்துத் தானய்யா தரைமட்டமாகப் போயிருக்கிறது பல தான் தோன்றிகளின் தர்பார் மண்டபங்கள்!...அடியுங்கள்; பாதகர்களே அடியுங்கள்!... [கூட்டத்தை விலக்கிக்கொண்டு முத்தாயி பார்க்கிறாள்.] முத் : அத்தான்!... முத்தன் : முத்தாயி!... முத் : அத்தான்...அத்தான்!...என்னைத்தான் இப்படிச் செய்து விட்டார்கள்?...நான் அவ்வளவு சொல்லியும் கேட்கவில்லையே!...ஐயோ, அத்தான்...இந்த அலங்கோலக் காட்சியை நான் காணவேண்டுமென்று எத்தனை நாளாகக் காத்திருந்தீர்கள் அத்தான்?... முத்தன் : அழாதே முத்தாயி, அழாதே!...இது ஒன்றும் அலங்கோலக் காட்சியல்ல...கத்திமுனைகளையும்,...கட்டாரி வீச்சுக்களையும் நம்பி வாழும் காட்டு மிராண்டிகளின் கொலுமண்டபத்திலே எத்தனை எத்தனை வீரர்கள் தங்கள் உயிர்களையே காணிக்கையாக தந்திருக்கிறார்கள்... வீங்கிய தோளும், விடுதலை வாளும் கொண்டு, ஓங்கிய கையைத் தாழ்த்தாமல், ஒழிந்திடுவோம் எனத் தெரிந்திடினும்...ஒளி சிந்தும் விழியில் ஒருதுளி பயமும் படாமல், ‘இன்பமணம் பெற்ற திருமணமும் கூடும்—அல்லது எங்கள் பிணம் அந்தக் களத்திலே நாறும்’, என்ற மொழியுரைத்து...எதிரியை வெல்லப் பழியுரைத்து—படையினர்க்கு வழியுரைத்துக் கிளம்பிய எத்தனை எத்தனை விடுதலைக் குமார்கள்......சுதந்திர அன்னையின் மடியிலே சமாதிக் குழந்தைகளாய்—கல்லறை செல்வங்களாய்—தூங்கிக் கொண்டிருக்கிறார்கள்! அந்த வீரத் தியாகிகள் ஏற்றிருக்கும் தழும்புகளே நினைத்தால், என் தங்கமே; இந்தத் தண்டனை மிகக் குறைவு!.... [வேலழகன் வருகிறான்.] வேல : என்னடா இங்கே...யார் இந்த நிலாப் பதுமை? யாரம்மா நீ?... முத்தன் : துரோகி...தொடாதே! வேல : ஏன், இந்தத் தோகை மயிலுக்கு நீ தான் சொந்தக்காரனோ?... முத்தன் : வெறியனே!...பெண்களிடம் பழகத் தெரியாத பண்பற்ற மிருகமே!... வேல : என்ன? (அறைகிறான்)-முத்தாயி? அத்தான்!... முத்தன் : காதலும் கடமையும் ஒன்றுக பின்னிக் கிடக்கும் எங்கள் ஆனந்த வாழ்விலே குறுக்கிட்ட கண்ணியமற்றவனே!...கட்டுண்டு கிடப்பவனை அடித்து மகிழும் வீராதி வீரனே!... [சிரிக்கிறார்கள்] சிரிப்புகள்!...சிரிப்புகள்!...நன்றாகச் சிரிப்புகள்!...உரக்க உரக்கச் சிரிப்புகள்!... சித்திரச் சோலையிலே சிலந்திவலை பின்னிவிட்ட வேலழகன் கும்பலே...வீணர்களின் கூட்டமே...நன்றாகச் சிரிப்புகள்!...ஹா...ஹா... [முத்தன் சிரித்துக் கொண்டே விழுகிறான்...இழுத்துச் செல்கின்றனர்.] முத் : அத்தான்...அத்தான்...அய்யா!...நல்வர்களே, அவரை விட்டுவிடுங்கள்! என் இருதயத்தின் நட்சத்திரத்தை எடுத்துக்கொண்டு போகாதீர்கள்!...சாவாலும் பிரிக்க முடியாத எங்களன்பிற்கு என்ன பாவம் காணப்போகிறீர்கள்? வேண்டாம்; என் உயிரை எனக்குத் திருப்பிக் கொடுத்து விடுங்கள்! அய்யா...அய்யா...உங்களுக்கு கோடி புண்ணியம் உண்டு...என் அத்தானை விட்டுவிடுங்கள்...அத்தான்!...அத்தா! [திரிசங்கு வருகிறான்.] மானங்கெட்ட பெண்ணே! முத்தாயி : அத்தான் ... அத்தான்! ... அப்பா! ... அப்பா!... [திரிசங்கு முத்தாயியை இழுத்துக்கொண்டு போகிறான்]