களஞ்சியப் பகுதி 22
தென்றல் மாளிகை
63 பகுதிகளில்·மூல எண்ணிடல் அல்ல
(வேலழகனும், வேதாளமும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்) வேதாளம் : தாங்கள் சந்தேகப்பட்டது மிகவும் சரிதான். என்ன இருந்தாலும் ஒரு நாட்டுக்குத் தளபதி அல்லவா? அவன் கையொப்பமிடும்போது “முத்தாயி” என்று தவறாக எழுதினான் என்றீர்களே, அது தவறுதல் அல்ல. அப்படி ஒரு தப்பல் இருப்பது உண்மை. வேலழகன் : பார்த்தீரா? எனக்குத் தெரியும் அப்போதே. என் வேதாளம்; இருவருக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமல்லவா? வேதாளம் : இருக்கும், இருக்கும்; நிச்சயம் இருக்கும்! வேலழகன் : தொடர்பு இருக்கிற அவளுக்கு துடியிடை உடைய அழகியோ அவள்? வேதாளம் : அழகிதான். நல்ல அழகு. வேலழகன் : சந்தனச் சேரியிலே நான் தங்கியிருக்கும்போது இப்படித்தான் ஒரு அழகியை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தான் ஒரு அந்தரங்க நண்பன். வேதாளம் : அப்படியா? வீரன் : நண்பனிருந்தாலும் அந்த நல்ல வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்ததற்காக அவனுக்கு இருபது பொன் பரிசளித்தோம் பிரபு, வேலழகன் : பொன் மட்டுமா; அந்தச் சேரிக்கே அவனைத் தலைவனாக்கிவிட்டேன். வேதாளம் : ஓஹோ! வேலழகன் : முடியுமானால் முத்தாயியை ஒரு முறை சந்திக்க முயற்சிப்போம், என்ன வேதாளம்? வேதாளம் : அதைத்தான் நானும் யோசித்துக் கொண்டுவிட்டேன். வீரன் : யோசிக்கிறானு முகமே சொல்லுதே பிரபு. வேலழகன் : வேதாளம்; குறிப்பறிந்து செயல் புரிவதில் உமக்கு நிகர் நீரேதான். [அப்போது முத்தன் வருகிறான்] வேலழகன் : என்னப்பா! என்ன வேண்டும்? முத்தன் : என்னை மன்னிக்க வேண்டும். வேலழகன் : விஷயத்தைச் சொல். முத்தன் : சந்தர்ப்பம் சரியில்லை, படையிலிருந்து விலகிக் கொள்வதற்காக... வேலழகன் : என்ன விளையாடுகிறாய்? என்ன யாரென்று எண்ணிவிட்டாய்? படையில் சேரவும், விலகவும் உன் இஷ்டப்படி நடக்கவும் அனுமதி கிடையாது இங்கே! ஆளைப்பார் மல்லேபோல் இருக்கிறான்...எலிபோல் பயப்படுகிறான் கோழை... முத்தன் : தயவு செய்து அந்த வார்த்தை சொல்லாதீர்கள். நான் ஏழையாய் இருக்கலாம். ஆனால் கோழையல்ல. வேலழகன் : வால் நீட்டாதே! வாள் நீளும் மரியாதையாக நில்! மரியாதையாகப் பேசு. முத்தன் : படையில் சேருவதற்கு கட்டாயம் எதுவுமில்லையல்லவா? வேலழகன் : சேருவதற்குக் கட்டாயமில்லை ஆனால் சேர்ந்துவிலகுவது உன் இஷ்டமில்லை. முத்தன் : அதற்குத்தான் நூறு பொன் தண்டம் செலுத்திட வேண்டுமென்று நிபந்தனையிருக்கிறதே. வேலழகன் : [வேதாளத்திடம்] நிபந்தனையை இவன் எனக்கு நினைவூட்டுகிறான் திமிர் பிடித்தவன். (முத்தனிடம்) இந்த தேகத்தை வளர்த்து என்ன செய்யப்போகிறாய்? தேசத்திற்காகத்தான் பலிகேட்டேன். முத்தன் : பலிகொடுக்கலாம்; எமக்கென்று ஒரு தேசம் இருந்தால்! எமது நாட்டைக் காக்க வேண்டுமென்று போர் மூளுமானால் அந்த முன்னணியிலே முத்தனின் பெயர்தான் முதல் இடம்பெறும். பழுதார் அடிமை பூமி; அதைக் காவல் போட்டு மிதித்து கப்பம் வாங்கும் நாட்டுக்குத் தளபதி நீர். அந்தப் படையிலே நான் இருப்பதும் ஒன்று தான்... வேலழகன் : என்ன சொன்னாய், ராஜதுரோகி? முத்தன் : சகோதரத் துரோகிக்கே ஆழ்வார் பட்டம் கிடைத்திருக்கிறது. தளபதி அவர்களே; நான் துரோகி இல்லை! எமது நாட்டை அபகரித்தவரின் அணிவகுப்பில் பணிபுரிய மாட்டேன் என்பது துரோகமா? வேலழகன் : ஆ! என்னை எதிர்த்துப் பேசிய முதல் ஆள் இவன்தான். இவனுக்கு ஒரு முடிவு தேடாமல் விடமாட்டேன். வேங்கை புரத்து அரசாட்சிக்கு எதிராகக் கிளம்பும் இம்மாதிரி விஷவித்துக்களை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும்; இவனுக்கென்று ஒரு தேசமாம்; அந்த தேசத்தின் விடுதலைக்குத்தான் பாடுபடுவதாம். வெளியிலே உலவுகிறான், பைத்தியக்கார விடுதியிலே இருக்க வேண்டியவன். முத்தன் : உங்களைப் போன்றவர்களுக்கு வைத்தியம் செய்வதற்காக; வேலழகன் : சீ! காட்டுமிராண்டி! முத்தன் : காட்டுமிராண்டி! நிலைக்கண்ணாடியைப் பார்த்து நீரே சொல்லிக்கொள்ளும் அந்த வார்த்தையை! (வேலழகன் பதட்டம்-துடிப்பு) வேதாளம் : கொஞ்சம் இப்படி வாருங்களேன். [தனியாக இருவரும்] வேதாளம் : பயல விடாதீர்கள். விட்டால் தண்டப் பொருளைக் கட்டித் தப்பிவிடுவான். பிறகு முத்தாயியைப் பிடிக்க முடியாது, வேலழகன் : என்ன செய்யலாம்? வேதாளம் : காவலில் போடுங்கள் கழுதையை...ஆனால் ஒன்று...நான் இந்த நாய்க்குட்டியிடம் நல்லவனாக நடந்துகொள்கிறேன். அதாவது நடிக்கிறேன் என்கிறேன். [பிறகு இருவரும் முத்தன் இருக்குமிடத்திற்கு வருகிறார்கள். வரும் போதே] வேலழகன் : வேதாளம்! இது பட்டாளத்து விஷயம், உமது சிபார்சுக்கு இங்கு இடமேயில்லை. வேதாளம் : தயவு செய்து மன்னித்து விடுங்கள்...முத்தன் ஏழை. வேலழகன் : வேதாளம்! திரும்பத் திரும்ப சொல்லுகிறேன். நீர் இதில் தலையிடக்கூடாது. வேதாளம் : ஏன் தலையிடக்கூடாது? தங்களுக்குத் தரவேண்டிய நூறு பொன்னைக் கொடுத்துவிட்டால் முத்தனை நீங்கள் என்ன செய்யமுடியும்? ஏன் முத்தா! நூறு பொன் கொடுத்துவிடேன். முத்தன் : கையில் தந்து விடுகிறேன். வேதாளம் : ஆங்! தளபதி அவர்களே! முத்தன் போகலாமல்லவா இப்போது! வேலழகன் : கூடாது...தண்டப் பொன்கள் வந்து சேரும் வரையில் அவன் இங்கேயேதான் இருக்கவேண்டும். வேதாளம் : அய்யா! பெருமைக்குரிய பிரபு அவர்களே! அவனை விட்டு விடுங்கள். நானே நாளை காலையில் பொன்களத் தந்து விடுகிறேன். வேலழகன் : முடியாது...வேலழகன் உத்தரவு விடுகிறேன். ஏய், யாரங்கே! இவனைக் காவலில் வையுங்கள். முத்தன் : இப்படித்தான் சொல்லுகிறதா உங்கள் அரசாங்கத்தின் பாசறை நீதி? நன்றாயிருக்கிறது. வேலழகன் : பேசவிடாதீர்கள். கூண்டுக்குள் போட்டு மூடுங்கள் இந்தக் குறும்பன். [முத்தன் கைகளில் விலங்கு மாட்டப்படுகிறது. வேதாளம் தன் முகத்தை மூடிக் கொண்டு வெளிக்கிளம்புகிறான். அவன் போகும் போது முத்தனை வருத்தத்துடன் பார்த்துக் கொண்டே] வேதாளம் : முத்தா! முன் ஜென்ம கர்ம வினை முடி சூடிய மன்னனையும் விடாது. [என்று கூறிவிட்டுப் போகிறான். முத்தன் தென்றல் மாளிகையின் ஒரு அறையில் அடைக்கப்பட்டு—வெளியேகாவல் போடப்படுகிறது.]