வேணியின் காதலன்

Veniyin Kadhalan

கலைஞர் மு. கருணாநிதி · கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்

வேணியின் காதலன்

இரவு எட்டுமணி. பட்டாளத்து ஆஸ்பத்திரி பென்வார்டில் நர்ஸ் சூர்யா தன் கடமைகளைப் பரபரப்புடன் கவனித்து வந்தாள். அவளுடைய எண்ணம் ஏதோ ஒரு பொருளின்மீது லயித்துப் போய் ஊசலாடிக் கொண்டிருக்கிறது என்பது மட்டும் நன்றாகப் புரிந்தது.

இளமையின் அழகு ஒளிவிடும் அவளது முகத்திலே கவலையின் ரேகைகள் படிந்திருப்பது மிகத் தெளிவாக யாராலும் தெரிந்துகொள்ளத் தக்கதாய் இருந்தது. நோயுள்ள பெண்மணிகளுக்கு சிகிச்சைகள், உபசாரங்கள் நடத்திக்கொண்டிருந்த அவளது முகத்திலே அழகான சிவந்த உதடுகள் முணுமுணுத்தபடியிருந்தன. “ஏ ஆண்டவனே! அவரை எப்படியாவது காப்பாற்று! அவருக்காகவே நான் உயிர்வாழ்கிறேன். அவர் என் ஜீவகாதல் இன்றைக்கு மறுத்தாலும், என்றைக்கோ ஒரு நாள் ஏற்றுக்கொள்ளத்தான் போகிறார். அதுவரையில் நான் காத்திருக்கிறேன். அதுவரை அவரையும் வாழவிடு! அதன் பின்னும் எங்களை வாழவிடு!”

இதுதான் அந்த ஏழைப் பெண்ணின் பிரார்த்தனை. அவள் பிரார்த்தனையினூடே பட்டாளத்து சார்ஜண்ட் குண்டப்பன் அங்கே பிரவேசித்தான். நர்ஸ் சூர்யா அவனுக்கு மரியாதை செய்து வரவேற்றாள்.

“எப்படியிருக்கிறாள் வேணி?” இது குண்டப்பன் கேள்வி.

“பூரண சுகம்—நல்ல ரெஸ்ட் வேணும். அவ்வளவுதான்!” சூர்யா சொன்னாள் இப்படி.

குண்டப்பன் பேசிக்கொண்டே அவள் படுக்கையண்டை போய் நின்றான். “வேணி!” என்று அழைத்தான். நோயிலே முனகிக் கொண்டிருந்த வேணி, அவனைக் கண்டதும் கண்கள் மூடிக்கொண்டு வேறு பக்கம் திரும்பிப் படுத்துக்கொண்டாள். இரண்டு மூன்று நாட்களாய்ப் பிரக்ஞையற்றிருந்து, இன்றைய தினம் கண் விழித்திருக்கும் வேணி, குண்டப்பனைக் கண்டதும், வேறு பக்கம் திரும்பிப் படுத்துக்கொண்டது சூர்யாவுக்கு ஆச்சரியத்தைத்தான் அளித்தது. அவள் அதைக் காட்டிக்கொள்ளவில்லை. குண்டப்பனும் நிலைமையைச் சமாளித்துக்கொண்டு சூர்யாவிடம்—“சரி, நான் வருகிறேன்” எனக் கூறியபடி அவளிடம் ஏதோ ரகசியம் கூற வேண்டுமென்று ஜாடை காட்டித் தனியாக அழைத்தான். சூர்யாவும் அந்த ரகசியத்தை ஆவலுடன் எதிர்பார்த்தாள்.

“சூர்யா! வேணி ஜாக்கிரதை! ஓடிவிட்டாலும் ஓடிவிடுவாள்!” என்று கூறிவிட்டு அவன் வேகமாகப் போய் விட்டான். சூர்யாவுக்கு ஒன்றுமே புரியவில்லை.

ஓடிவிடுவாளா? ஏன்? எதற்காக சார்ஜண்ட் அப்படிச் சொன்னார்? அப்படியானால் யார் இவள்? இதுபோன்ற கேள்விகளின் அடிமையானாள் சூர்யா. குழப்பத்திலே எதுவும் வேலை ஓடாமல் தன் மேஜையண்டை போய் உட்கார்ந்தாள். சிந்தனை அதிகமாயிற்று. வேணியின் கட்டில் பக்கம் திரும்பிப் பார்த்தாள். திடுக்கிட்டாள். காரணம், வேணி அங்கில்லை. அவள் அந்தக் கூட்டத்தைவிட்டு அப்போதுதான் வெளியே நழுவிக்கொண்டிருந்தாள். சூர்யா ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்தோடி வேணியைப் பிடித்துக்கொண்டு “எங்கே ஓடுகிறாய்?” என்று அதட்டிக் கேட்டாள்.

“அம்மா—என்னை விட்டுவிடுங்கள். உங்களுக்குக் கோடி புண்ணியமுண்டு.” அந்த யுவதி அழுதாள்.

“சார்ஜண்ட் உத்திரவில்லாமல், உன்னை விடுவதா? முடியாதம்மா முடியாது!”

“சார்ஜண்ட்—அவர் யாரம்மா எனக்கு உத்திரவிட! எனக்கு உத்திரவிட வேண்டிய உத்தமர் ஊமையாகிக் கிடக்கிறார் தாயே!

வேண்டுமானால் எனக்குக் கொஞ்சம் விஷத்தைக் கொடுத்துவிடுங்கள்—அந்த விரியன் பாம்பிடம் என்னை ஒப்புவிக்காதீர்கள்.”

“நன்றுயிருக்கிறது நியாயம். உன்னை நம்பியிருக்கிற ஒருவரை இப்படியா ஏமாற்றுவது? உன் உடம்பு சுகமாக வேண்டும் என்று குண்டப்பன் எவ்வளவு கஷ்டப்படுகிறார்?”

“ஆமாம் என் உடம்புதான் அவனுக்குத் தேவை. அதற்காகக் கஷ்டப்படுகிறான். கனி, அழுகிவிடாமல் காப்பாற்றுகிறார்களே ஏன்? அதன்மேல் உள்ள கருணையாலா? இல்லை; அதைச் சுவைத்துத் தின்ன வேண்டுமென்ற காரணத்தால்! அந்த வகையைச் சேர்ந்தவனம்மா இந்த வஞ்சகன்!”

“ஏன் அவர் மீது சீறிவிழுகிறாய்? நீ அவருக்கு வைப்பாட்டி தானே?” கேட்டாள் சூர்யா.

“அய்யோ! சொல்லாதீர்களம்மா! அப்படி இன்னொரு முறை சொல்லாதீர்கள்! கேளுங்கள் தாயே என் கேலிக்கதையை! புண்ணகிப்போன உடல்களைக் கண்ணைக் காத்து வரும் புனித வதியே, வெறியனின் கோர விளையாட்டால் கந்தல் கந்தலாகப் பிய்த்தெறியப்பட்ட என் வாழ்க்கைச் சரித்திரத்தைக் கேளுங்கள். பட்டாளத்திலே ஒரு சிப்பாய்.......அவர்தான் என் பாசத்திற்குரிய கணவன். அவரைப் படாத பாடு படுத்தி என்னையும் பஞ்சணைக்கு இழுக்கிறான் பாவி குண்டப்பன். அவர் சிப்பாய்தான்; ஆனால் காருண்ய சீலர் தாயே! என் மூச்சிலே கலந்துவிட்ட ஜீவன் அவர். என் கண் எதிரிலேயே அந்தத் தடியன் அவரைத் தாக்கினான். எனக்கு தலை சுற்றியது. கந்தா, கந்தா என்று கதறிக்கொண்டு தரையில் விழுந்துவிட்டேன். அவ்வளவுதான் எனக்குத் தெரியும். விழித்துப் பார்த்தபோது நான் ஆஸ்பத்திரியில் இருக்கிறேன்.”

“கந்தன்!”

“ஆமாம், அம்மா! ஏன் உங்களுக்கு அவரைத் தெரியுமா?”

“சமீபத்தில் பட்டாளத்தில் சவுக்கடி தண்டனை கிடைத்ததே—அவரா?”

“ஆம் தாயே அந்த நிலவுதான் என் லட்சிய கீதம். அவரைத்தான் துவளத் துவள அடித்தான் அந்த துன்மார்க்கன்; துவளத் துவள அடித்தான். நான் தொத்தி விளையாண்ட தோள்கள்..... என் கண்ணைப் பொத்தி விளையாண்ட கரங்கள் சண்டாளனின் சவுக்கு நுனியால் கொத்தி விளையாடப்பட்டன. அவர் கண்களிலே ரத்தம் வழிந்தது. விடவில்லையம்மா அந்தக் கொடியவன்—அவருக்கு நேராகவே என்னைக் கொஞ்சினான். கோர மொழி பேசினான். கூண்டுக் கிளி ஆக்குவேனென்றான். அதற்குத்தான் தாயே அவசரப்படுகிறான். என் சுகத்தைப்பற்றி அக்கறைப் படுகிறான். அம்மா என்னை விட்டுவிடுங்கள்! உங்கள் உடன்பிறந்தவளாயிருந்தால் ஒரு துளி கண்ணீரைக் கண்டதும் துடிக்கமாட்டீர்களா? அம்மா...என்னைக் காப்பாற்றுங்கள், இல்லாவிட்டால் உங்களை விடமாட்டேன்”—கெஞ்சினாள் வேணி. சூர்யாவுக்கு மூளை குழம்பியது. விழிகள் சோர்ந்தன.

கந்தன்—தற்போது வேணியின் கணவன்—ஒரு காலத்தில் சூர்யாவின் சிந்தை கவர்ந்தவனாக இருந்தான். அப்போதெல்லாம் சூர்யாவின் குடும்பம் செல்வத்திலே மிதந்தது. சீரும் சிறப்பும் மிக்க மாப்பிள்ளைகள் சூர்யாவின் வீட்டு வாயிலிலே காத்திருந்தார்கள். அந்தத் தனவந்தர் வீட்டுப் பெண் எப்படித் தரித்திர நாராயணனும் கந்தனுக்கு மாலையிடமுடியும்? புரோகிதர் குறித்த நல்லதோர் நாளில் சூர்யா குட்டிப்பட்டி முதலியாரின் மகனுக்கு மனைவியானாள்.

சூர்யா அக்கினி சாட்சியாகத்தான் மணந்தாள். மணப்பந்தலில் அம்மி மிதித்து அருந்ததியைத்தான் சந்தித்தாள். இருந்துமென்ன? பத்தே மாதத்தில் சூர்யா விதவையாகி விட்டாள். பாவம். சூர்யாவைச் சுற்றி வீசிய சூறாவளி அத்தோடு நின்றதா? சொத்து சுகத்தை யெல்லாம் ஹைகோர்ட்டின் படிக்கட்டுகளைக் கட்டுப்பதிலேயே அவள் அப்பா கழித்துவிட்டார். அது மட்டுமா? குறுக்கு வழியிலே வந்த செல்வம் யாருக்கும் சொல்லிக் கொள்ளாமல் குறுக்கு வழியாகவே சென்றுவிட்ட கவலையில் அவரும் மண்டையைப் போட்டுவிட்டார்.

அப்பாவை அடக்கம் செய்துவிட்டு, மறுநாளே சூர்யா, நர்சிங் பள்ளியில் சேர்ந்தாள். அப்போதெல்லாம் அவள் அருமருந்தாம் கந்தனைச் சந்திக்கலாம்; கந்தர்வ லோகத்திலே உலாவலாம் என்று கனவுகூடக் கண்டதில்லை. மனிதன் நினைப்பதைப் போலவா எல்லாம் நடக்கின்றன?

கந்தன் ஆஸ்பத்திரிக்கு நினைவிழந்துதான் வந்தான். சூர்யாவின் நினைவிலே மீண்டும் புகுந்துகொண்டான்.

இந்த நேரத்திலேதானே தன் காதலுக்கோர் போட்டிக்காரியாக வேணி முளைக்கவேண்டும்? யார் இந்த வேணி? எப்படி அவள் கந்தனுக்கு மனைவியானாள்? என்பனவற்றைக் கேட்டறிய வேண்டுமென்று சூர்யாவுக்கு ஆசைதான். ஆனால் இவைகளையெல்லாம் விசாரித்துத் தன் வேதனையை அதிகரித்துக்கொள்ள அவள் விரும்பவில்லை.

தன் மென்தோள்களிலே துயில் கொண்ட கந்தனே வேறொரு பெண்ணும் வேணி உரிமை கொண்டாடுவதா? சூர்யாவால் வேணியின் காதல் போட்டியை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.

ஆசைக் கனவுகளைப் புதுப்பித்துக்கொள்ள சூர்யாவுக்கு ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. ஆமாம்...மருந்து கொடுப்பது போல வேணிக்கு விஷம் கொடுத்துக் கொன்றுவிடலாம்.... பின்னர் கந்தன் வேணியை மறந்துவிடுவான்....இடத்தைப் பின்னர் சூர்யா பிடித்துக்கொள்ளலாம்....

அருமையான யோசனைதான்! சூர்யாவின் மென்மை இருதயமோ இந்தக் கோர நினைப்பால் நைந்துபோனது. பிளாரென்ஸ் நைட்டிங்கேல்களின் அரும்பெரும் தொண்டுகளால் ஏற்றம் பெற்ற நர்ஸ் தொழிலுக்குக் கேவலம் ஒரு காதல் விவகாரத்துக்காகக் களங்கம் கற்பிப்பதா?

சூர்யாவின் உள்ளம் ஒரு போர்க்களமாகியது. அவளையறியாமலே வாய்மட்டும் முணுமுணுத்தது.

“அவள் வாழட்டும்....வேணியின் வாழ்வு புத்துயிர் பெறட்டும்!” அந்த தியாகச் சின்னம் இப்படித்தான் மொழிந்தது.

மலர்ந்திருந்த அவளுடைய செந்தாமரை முகம் இறுகிப்போன அல்லிமொட்டுப் போலாயிற்று. சோகத்தின் மின்வேகத் தாக்குதலால் அவளுடைய உதடுகள் கருத்துப்போய் வெடிப்பு விழுந்தது.

“எழுந்திரு! கலங்காதே; அவருக்கு நான் தான் சிகிச்சை செய்கிறேன்” துக்கம் தோய்ந்த குரலிலே ஆறுதல் கூறினாள் சூர்யா.

சூர்யாவின் இந்த வாய்மொழி கேட்டதும், வேணியின் முகத்திலே மகிழ்ச்சியின் சாயல் படிந்தது. “எப்படியம்மா இருக்கிறது இப்போது? பேசுகிறாரா? வேணி என்று என் பெயர் சொன்னாரா?”

“ஆமாம், ஒரு நாள் உன் பெயரைச் சொல்லிப் புலம்பினான்.”

“புலம்பினான்! என் ராஜன் புலம்பினான்! எங்கேயம்மா இருக்கிறார் இப்போது?”

“அவர் பட்டாளத்து ஆஸ்பத்திரியில்தான் இருக்கிறார். நான்கூடச் சிறிது நேரத்தில் போகவேண்டும் சிகிச்சை செய்ய!”

“அம்மா கவனித்துப் பார்த்துக்கொள்ளுங்கள் அவரை. என் சிந்தையில் சித்திரமாகிவிட்டவருக்குச் சிகிச்சை செய்யும் அந்தக் கைகளைக் கொடுங்கள், கொடுங்களம்மா கொடுங்கள்!” நர்ஸ் சூர்யாவின் பூக்கரங்களைப் பிடித்துத் தன் கண்களில் ஒத்திக்கொண்டாள் வேணி!

“வேணி!”—இதயத்தின் அடித்தளத்திலிருந்து பெருமூச்சின் துணைகொண்டு உதிர்த்தாள் சூர்யா. அவளது கடைக் கண்களின் ஓரத்தில் அரும்பு விட்டிருந்த கண்ணீர் மார்பகத்தில் விழுந்தது.

“வா வேணி, உன் கண்ணிறைந்த அந்த மன்னவரைக் காட்டுகிறேன் வா!” என்று கத்திக் கொண்டே வேணியின் கையைப் பிடித்து இழுத்தாள் சூர்யா. அப்போது ஆண்கள் வார்டிலிருந்து ஒரு தள்ளுவண்டி வந்துகொண்டிருந்தது.

“என் மிஸ்டர் தாமோதர், எந்த ‘பெட்’ பேஷண்ட் இவர்? என்ன ஆச்சு?” என்று வண்டியைத் தள்ளி வந்தவரைப் பார்த்துக் கேட்டாள் சூர்யா.

“நீ இரக்கப்பட்டு, இரவும் பகலுமாய்ப் பாதுகாத்து வந்தாயே அந்த ஆசாமிதான் சூர்யா இவர்! ஆள் ‘பினிஷ்’ ஆகிவிட்டான்.”

“ஆ! கந்தனு? வேணி! நம் நெஞ்சு புகுந்தவன் செத்து விட்டான் வேணி!”

தரையில் சாய்ந்தாள் சூர்யா.

“ஐயோ, வாழ்க்கைத் துண்டித்த சண்டாளா, குண்டப்பா! கந்தா! கந்தா! கந்தா!” வேணி தள்ளுவண்டியில் விழுந்தாள்—மண்டை உடைந்து ரத்தம் சிந்தித் தரையைச் சிவப்பாக்கியது. அந்தச் செங்குருதியிலே, வேணியின் கருங்கூந்தல் துவைந்து கிடந்தது.

◆ ◆ ◆