வீரன் தலை கவிழ்ந்தது ஏன்?

Why Did the Warrior Bow His Head?

மு. கருணாநிதி

வீரன் தலை கவிழ்ந்தது ஏன்?

அந்த மன்றத்தில் அன்று கூடியிருந்தோர் ஒரு குறிப்பிட்ட குழுவைச் சேர்ந்தவர்கள்.

ஊரிலுள்ள எல்லோரையும் பற்றி ஆய்வு நடத்தி வீண் காலம் கழிக்கும் இயல்புடையவர்கள். இன்றும் அவ்வாறே ஒருவரோடு ஒருவர் போட்டியிட்டுக் கொண்டு, ஊர்க் கதைகளைப் பேசிக் கொண்டிருந்தனர், யாரையாவது இகழ்ந்து பேசுவது என்பது அவர்களுக்கு இனிமையான பொழுது போக்கு, பகை புகுந்தது எனக் கண்டு ஊரின் படை திரண்டால் இந்தக் கூட்டத்தினர் ஓடிப் பதுங்கிக் கொள்வர். பகை முடிந்து ஊர்ப் படையினர் வெற்றிக்கு விழா எடுக்கும் போது ஒளிந்தோர் திரும்பி வந்து எப்படிக் கிடைத்தது வெற்றி என வீண் உரையாடல் நடத்துவர். ஊர்ப் பணிகளிலும் ஈடுபடும் ஊக்கமில்லை. ஊரைக் காத்திடும் வீரச் செயல்களிலும் நாட்டமில்லை. வக்கணை பேசிப் பொழுதைக் கழிப்பதில் மட்டும் பேரார்வம்.

தங்கள் பணியின் நிமித்தம் அந்த மன்றத்தைக் கடந்து செல்வோர் அவர்களைப் பொருட்படுத்துவதில்லை. வணிகர்கள் அவ்வழி செல்வர். வீரர்கள் அவ்வழி நடந்திடுவர். அழகு மங்கையர் அவ்வழி ஏகிடுவர். அவர்கள் யாரும் அந்தக் குழுவினரைக் கண்டு மதிப்புத் தந்ததில்லை. தங்கள் பணியுண்டு தாங்களுண்டு என்றே சென்றிடுவர்.

அன்று மட்டும் ஏனோ ஒரு வீரன் அந்த மன்றத்தைக் கடந்திடும் போது தலையைக் கவிழ்த்துக் கொண்டான்.

அவன் கால்கள் தள்ளாடின. முதுமை அவனை வருத்திடவில்லை; காரணம் அது அவன் மீது ஆட்சி நடத்தவே தொடங்கவில்லை. நோய் அவனை அணுகிடவில்லை. மலைத் தோள் கொண்டவன்தான். கதிர் ஒளி பரப்பும் கண்கள்தான் அவனுக்கு. இரும்புச் சிலையொன்று!

நடப்பது போல் நடப்பவன்தான். போர்க்களத்தில் பகைக் குலத்தின் இடுப்பு முறிப்பதில் புலிபோலத்தான் அவன்.

அந்த ஆற்றல் மறவன் அந்த மன்றத்தைக் கடந்திடும் போது புழுவாக நெளிவானேன்? புயல் காற்றிடைத் துரும்பாக அவன் உள்ளம் இருப்பதால்தானே பூனை போல் பதுங்கிச் செல்கிறான்!

எல்லோரையும் இகழ்ந்து பேசுவதையே தொழிலாகக் கொண்ட அந்தக் குழுவினரை அவன் அகன்ற விழியின் நோக்கே அலறிப் புடைத்து ஓடச் செய்துவிடும்.

ஆனால் அந்தப் பெருமித நோக்கு எங்கே?

அந்தப் பீடு நடை எங்கே?.... யாரும் பதில் கூறவில்லை. மன்றத்தில் குழுமியிருந்த இகழ்ச்சிச் செயலாளர்களும் அந்த வீரனின் தளர்ந்த நடைக்குக் காரணம் அறியாது பல கதைகளைப் படைத்தனர்.

உண்மைக் காரணத்தை அவன் உளச் சான்று உரைத்திருக்கிறது.

எல்லாப் புகழும் அவனுக்கு இருந்தும்கூட அந்தப் புகழைக் காக்க விரும்பும் மனைவி அவனுக்கு வாய்க்கவில்லை. அதனால்தான் இழித்துப் பேசுவதைத் தொழிலாகக் கொண்டவர்களின் முன்னால் செல்லும்போது அவன் உள்ளம் அவனைத் துளைத்தெடுக்கிறது. நடை தளர்கிறது. தலை கவிழ்கிறது.