வள்ளுவர் சொன்ன பொய்

Valluvar Sonna Poi

மு. கருணாநிதி

வள்ளுவர் சொன்ன பொய்

ஒரு வேடன் வேகமாக ஒரு மானைத் துரத்தி வருகிறான். அழகான புள்ளிமான் குட்டி. அது துள்ளி ஓடவேண்டிய தோட்டத்தில் ஓடிவிடாமல் அதைக் கொன்றுவிட வேண்டும் என்கிற விருப்பத்தோடு வேடன் துரத்தி வர அது எங்கேல்லாமோ சுற்றி இறுதியாக வள்ளுவரின் இல்லத்திற்குள்ளே நுழைந்துவிட, வாயிற்புறத்திலே உட்கார்ந்து குறள் தீட்டிக் கொண்டிருக்கிற வள்ளுவர், தன்னைக் கடந்து, தன்வீட்டிற்குள்ளே மான்குட்டி சென்றதைக் காணுகிறார். பத்து நிமிடத்திற்குப் பிறகு வேடன் அங்கே ஓடி வருகிறான். வள்ளுவரைப் பார்த்துக் கேட்கிறான். “இந்தப் பக்கம் ஒரு மான்குட்டி வந்ததா?”

பொய் சொல்வதே தீது என்று கருதுகிற வள்ளுவர் என்ன சொல்லியிருக்க வேண்டும்? “ஆமாம். வந்தது. வீட்டிற்குள்ளேதான் இருக்கிறது” என்று சொல்லியிருக்க வேண்டும். சொல்லவில்லை. சொன்னால் வேடன், உள்ளே நுழைந்து அந்த மான் குட்டியை இழுத்துச் சென்று கொண்டு தின்றிருப்பான். எனவே ‘வரவில்லை’ என்கிறார். வள்ளுவரா பொய் சொல்வார் என்று எண்ணிக் கொண்டு வேடனும் வேறு பக்கம் போய்விடுகிறான். “பெருந்தகையே! பொய்யே சொல்லாத தாங்கள் இப்படி ஒரு பொய் சொல்வதற்குக் காரணம் என்ன?”

அப்பொழுதுதான் வள்ளுவர் சொல்கிறார் : “நான் சொன்னது பொய்யா? உண்மையா? என்பதல்ல. வாய்மையா, அல்லவா!! என்பதை ஆராய்ந்து பார். பிறருக்குத் தீங்கு செய்யாத ஒன்றைச் சொன்னால் அதற்குப் பெயர் வாய்மை. எனவே நான் சொன்ன பொய்மையும் அந்த வாய்மையிடத்தில் வைக்கப்படும்”