உயிருக்கு விலை ஐம்பது லட்சம்

Fifty Lakhs — The Price of a Life

மு. கருணாநிதி

உயிருக்கு விலை ஐம்பது லட்சம்

மிஸ்டர் லஞ்சய்யா, “யார் அது?” என்று அதட்டுகிறார்

“நான் தான் எமதர்மன்”

“எருமை வாகனம் எங்கே?”

“அரசாங்க இலாகாக்களுக்கு இரவல் கொடுத்திருக்கிறேன்.”

“அவர்களது ஆமை வாகனம் என்ன ஆயிற்று?”

“அது ரிப்பேரில் இருக்கிறது”

“நத்தை வாகனம் கூடவா?”

“அதைத்தான் நகர சபைகளுக்கான நீர்வாகத்திற்கு அனுப்பி விட்டார்களே!”

“ஓஹோ! இலாகாக்களுக்கு எருமையையும், நத்தையையும் வைத்துக் கொண்டு, தெருவில் மனிதர்கள் மீது மோத மட்டும் மான் வாகனம், முயல் வாகனங்களை வைத்திருக்கிறார்களா?”

“அது கிடக்கட்டும். வா போகலாம்”

“எங்கே?”

“இன்னுமா தெரியவில்லை? நீ செத்துவிட்டாய், யமலோகம் போகலாம் வா”

“யமலோகமா? அங்கே பஞ்சாயத்து யூனியன்,முனிசிபாலிடி, கார்ப்பரேஷன், சட்டசபை, மேல்சபை, பார்லிமெண்ட், ராஜ்ய சபா முதலியவை உண்டா? கட்சிகள் உண்டா? தேர்தல்கள் உண்டா?”

“ஒரு சனியனும் இல்லை. ஒரே அமைதியான உலகம்!”

‘சே, சே. அமைதியான இடமே எனக்குப் பிடிக்காது. என் காரியம் நடக்க அமளி துமளி அதிகம் இருக்க வேண்டும்... உன்னுடன் வருவதற்கில்லை.”

“மிஸ்டர் லஞ்சய்யா! நீங்கள் அப்படிச் சொல்லக் கூடாது. பிறகு நான் கடமையிலிருந்து தவறிவிட்டேன் என்ற களங்கம் வந்து சேரும்”

“ஓய் எமதர்மா! உமக்குக் களங்கம் வராமல் இருக்க ஒரே வழி என்ன தெரியுமா?.... நான் உன்னோடு வருவதாக இருந்தால் ஐந்து லட்சம் ரூபாய்க்கு இப்பொழுதே செக் தரவேண்டும்.”

எமதர்மனுக்குத் தலை கிறுகிறுத்தது. “சாவதற்கும் லஞ்சமா?” என்று முணுமுணுக்கிறான்.

“.... அடுத்த ஜென்மம் பிறப்பதாயிருந்தால் அதற்கும் கேட்பேன் தெரியுமா....”

“.... அடுத்த பிறவி எடுக்க வேண்டாம், அதற்கும் சேர்த்து இப்போதே கேட்டுவிடு, கொஞ்சம் ‘கன்சஷன்’ கொடு”

“....பத்து லட்சம் கொடுத்துவிடு”

“.... இவனைக் காசாலேதான் சாக அடிக்க வேண்டும்” என்று ஒரு செக்கை எடுத்து எழுதுகிறான் எமன். அந்தச் செக்கை நீட்டி.

“இந்தா காசாலேசா! நீ காசாலே சா!”

மிஸ்டர் லஞ்சய்யா செக்கைப் பார்க்கிறார். “ஐம்பது லட்சம்”

“ஆ! ஐம்பது லட்சம்!” மிஸ்டர் லஞ்சய்யா வாயைப் பிளக்கிறார்.

பிறகு வாயை மூடவே இல்லை.