திடுக்கிடும் கதை
Thidukkidum Kathai
கலைஞர் மு. கருணாநிதி · கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்
திடுக்கிடும் கதை
[குறிப்பு : ஒரு சிறிய நகைச்சுவைத் துணுக்கை ஆதாரமாகக் கொண்டு இந்தக் கற்பனை தீட்டப்படுகிறது.]
நியூயார்க் நகரத்தைப்பற்றி நிறையக் கேள்விப்பட்டிருக்கிறோம், சிலர் நேரே பார்த்திராவிட்டாலும்! அமெரிக்காவின் அழகுத் திருநகர் மட்டுமல்ல; அதில்தான் எழில்மாடம் என்றெல்லாம் வர்ணிப்பர் நாடு சுற்றிகள்! வானத்தைத் தொடும் மாடமாளிகைகள் அங்கே உண்டு! உச்சியிலே எரிவது மின்சார விளக்கா, அல்லது நட்சத்திரமண்டலம் வரையிலே அந்த உப்பரிகை உயர்ந்து நிற்கிறதா என்ற ஐயப்பாடுகள் புதிதாகப் பார்க்கிறவர்களுக்கு ஏற்படுவது சகஜம். அத்துணை உயரம் பொருந்திய பல அடுக்கு மாடிகள் உள்ள ஹோட்டல் ஒன்றில், உச்சிப்பகுதியில், மூன்று நண்பர்கள் ஒரு அறையை வாடகைக்கு எடுத்துக்கொண்டு அங்கே தங்கியிருந்தார்கள். அவர்கள் நகர சுற்றிப் பார்க்க வந்தவர்கள். உயர்ந்த கட்டிடங்களுக்கு மேலே ஏறிச்செல்வதற்கான, “லிப்ட்” வழியாகக் கீழே வந்தால், அந்த மூவரும் நகரத்தின் சிங்காரப் பகுதிகள் எல்லாம் சுற்றிப் பார்த்துவிட்டு, இரவு பத்து மணிக்கு மீண்டும் தங்களின் அறைக்கு திரும்புவது வழக்கம். இப்படிச் சிலநாட்கள் மூவரும் நியூயார்க்கின் நேர்த்தியை ரசித்துக் கொண்டிருந்தார்கள்.
ஒருநாள் அவர்கள் வேடிக்கை விநோதங்கள் விசித்திரக் கேளிக்கைகள் எல்லாவற்றையும் பார்த்துவிட்டுத் தங்கள் ஹோட்டலுக்குத் திரும்பினர்கள். கீழ்த்தளத்திலுள்ள ஹோட்டல் மானேஜர் அவர்களைப் பார்த்து வருத்தத்துடன் ஒரு செய்தியைச் சொன்னார். அதாவது;
“அன்புள்ள நண்பர்களே! இன்று நீங்கள் உங்கள் அறைக்கு நடந்துதான் போகவேண்டும். ஏனெனில் நமது “லிப்ட்” கெட்டு விட்டது. அதற்காக வருந்துகிறேன்” என்பதுதான் அந்தச் செய்தி. உண்மையிலே அது வருத்தமான செய்திதான். லிப்டில் ஏறி உட்கார்ந்தால் சில நிமிடங்களில் எந்தத் தொல்லையுமின்றிக் குறிப்பிட்ட இடத்திற்கு அவர்கள் போய்விட முடியும். லிப்ட் கெட்டுவிட்ட காரணத்தால்—இப்போது அவர்கள் கடக்கவேண்டிய மாடிகள் பல! ஏறவேண்டிய படிகள் இரண்டாயிரத்துக்கு மேல் இருக்கும். ஊரெல்லாம் சுற்றிக் காலெல்லாம் அலுத்துப் போயிருக்கிற அவர்கள் அவ்வளவு படிகளில் ஏறி, மாடிகள் சுற்றிச் சுற்றித் தங்களுடைய அறைக்குப் போவதென்றால் சாமான்யமா? என்ன செய்வது—போய்த்தானே தீரவேண்டும்! மூவரும் படிகளில் ஏறிப்போகத் தீர்மானித்தார்கள். அதோடு அலுப்புத் தெரியாமல் இருக்க, ஒரு புதிய உற்சாகமான ஏற்பாடு செய்துகொண்டார்கள். தங்கள் அறையை அடைவதற்குள், வழியில் மூவரும் ஆளுக்கு ஒரு கதை சொல்வதென்று முடிவு கட்டினார்கள். அதன்படி முதல் கதை ஒரு காதல் கதை! அந்தக் கதையை ரோமியோ என்பவன் சொல்ல வேண்டும். அடுத்த கதை வீரக் கதை. அதை ஆண்டனி என்பவன் சொல்ல வேண்டும். மூன்றாவது திடுக்கிடும் கதை. அதைச் சார்லஸ் என்பவன் சொல்லவேண்டும். அதன்படியே முதலில் ரோமியோ காதல் கதை கூற ஆரம்பித்தான்.
காதல் கதை
பாபிலோன் நகரம் செல்வத் திருநகரம். அங்குதான் நான் சொல்லப்போகும் கதையின் பாத்திரங்கள் வாழ்ந்தார்கள். ஓவிட் என்பான் இதை அழகாக எழுதியிருக்கிறான்.
இரட்டைக் குழந்தைகளைப்போல இரண்டு வீடுகள் ஒட்டிக் கொண்டிருந்தன. ஒற்றைக்கல் சுவர் ஒன்று அந்த வீட்டைப் பிரித்துவைத்தது. அதில்தான் இரண்டு நெஞ்சு இணைந்த காதலர்கள் வாழ்ந்தார்கள். திஸ்பே ஒரு அலங்காரத் திருஉருவம்; பைரமஸ் ஒரு ஆணழகன். கருத்தொருமித்த அவர்களுடைய காதலே மூடி மறைக்க அவர்களுடைய பெற்றோர்கள் முடிவு செய்தனர். வெம்பிய உள்ளத்தினராய் இல்லத்துக்குள்ளேயே வாடி வதங்கினார்கள். அதற்கு அந்தக் களிமண் சுவரோ உணர்ச்சிக்கு இடப்பட்ட வேலியாக இருந்து வேலை பார்த்து வந்தது.
யாரின் கண்களைவிடக் காதலர்களின் கண்களுக்குத்தான் கூர்மை அதிகமாயிற்றே! அந்தச் சுவரிலே இருந்த ஒரு பொந்து அவர்களுடைய கவனத்தை ஈர்த்தது. அவ்வளவுதான்!
நேரம்—காலம் இன்னதென்று பாராது திஸ்பேயும், பைரமசும் ‘குசுகுசு’ வென்று காதலுரையாட ஆரம்பித்தார்கள். சுவரின் ஒரு பக்கத்திலே பைரமஸ் வார்த்தைகளைக் கொட்டி அவள் வர்ணித்தபடி நிற்பான். அதையெல்லாம் ஆமோதித்தபடிச் சுவரின் மற்றொரு பக்கத்திலே திஸ்பே மெய்ம்மறந்து நிற்பாள். அந்தநேரமென்றும், அர்த்தசாமமென்றும் பாராது அவர்கள் இன்பக்கடலாடினர்கள்! இத்தனை நாட்கள் இரண்டு ஜோடிக் கிளிகளைக் பிரித்து வைத்திருக்கும் தடைக்கல்லாக நின்ற அந்தக் களிமண் சுவர், இப்போது தேக்கிய இன்ப வெள்ளத்திற்குப் பெருங்கரையாக நின்று பேருதவி செய்தது. பொந்தின் இடையிலே காதற் சொற்களின் இன்னிசை எந்நேரமும் ஒலித்தபடி இருந்தது. அவர்களுடைய உதடுகள் உராய்ந்ததில்லை. ஆனால் எப்போதும் ‘இச்’ என்ற ஒலி மட்டும் மெல்லென அதிர்ந்து கொண்டே இருந்தது.
பெற்றோரை ஏமாற்றும் காதலராய் அவர்கள் எத்தனை நாட்கள் தான் வாழமுடியும்? வேற்றார் சென்று திருமணம் செய்து இல்வாழ்வு நடத்த அந்த இளம் இதயங்கள் முடிவு செய்தன.
பாபிலோன் நகருக்குப் பக்கத்திலே நிசின் சமாதி ஒன்று இருக்கிறது. அதன் அருகிலே நிற்கும் மல்பெரி மரத்தின் பக்கத்திலே இரவு நேரத்தில் இருவரும் சந்திப்பது எனவும்—பின்னர் அங்கிருந்து கட்டுப்பாடென்னும் கோட்டையால் வாலிபத்தை வெட்டிச் சாய்க்கும் பெற்றோரை விட்டுவிட்டு ஓடிவிடுவது எனவும்—முடிவு செய்தனர்.
பெண்கள்தான் எப்போதும் அவசரக்காரர்களாயிற்றே! அதன்படிக் குறிப்பிட்ட நேரத்தில், கள்ளரும் அஞ்சி நடுங்கும் நள்ளிரவைக் கண்டு உள்ளம் நலியாமல், திஸ்பே மல்பரி மரத்தடிக்கு வந்து சேர்ந்தாள். ஆனால், பைரமசைமட்டும் அங்கே காணவில்லை. அந்த இருட்டிலே பேதைப் பெண் அவள் அவனை எங்கே தேடுவாள்? காற்றிலே புழுதி பறக்கும் ஓசைகூடப் பைரமசின் பாத ஒலியாகத்தான் தோன்றியது அந்தப் பாவைக்கு! “ஓ” வென்ற ஒலி அவள் கேட்டுத் திஸ்பே திரும்பினாள்.
புள்ளிமானைக் கொன்று போட்ட பெண் சிங்கம் ஒன்று இரத்தம் வழியும் நாக்கைச் சப்புக் கொட்டியவாறு வந்து கொண்டிருந்தது. பாவம்! திஸ்பே நடு நடுங்கிவிட்டாள். பாயவரும் சிங்கத்தின் பார்வையை மறைத்து உயிரைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அந்தப் பாவை, தன் மார்பகத்தை மூடியிருந்த மேலங்கியைத் தூக்கி எறிந்துவிட்டு ஒரே நொடியில் ஓடி விட்டாள்! காற்றிலே மிதந்து வந்து தன் முகத்தை மறைத்த மேலங்கியைத் தன் கூரிய நகங்களால் பிராண்டி, இரத்தக்கறை படிந்த பற்களால் கிழித்து எறிந்து விட்டுத் தன் குகைக்கு நடை போட்டது அந்தக் கிழட்டுச் சிங்கம்!
காதலியைக் காக்கவைத்த பைரமஸ், சிங்கம் அப்பால் நகர்ந்த பின்புதான் அங்கு வந்து சேர்ந்தான். காதலியைத் தேடினான்; தேடினான்! ஆனால், அவனே திஸ்பேயின் இரத்தம் தோய்ந்த மேலங்கியையும், சிங்கத்தின் பாதச்சுவடுகளையும்தான் பார்க்க முடிந்தது.
உள்ளம் வெடிக்க, உடல் துடிக்க அவன் சோகப் பெருங்கூச்சலிட்டான். “தாமதித்து வந்ததால் என் தாரத்தை இழந்தேனே! சிங்கத்தால் நீ சாகவில்லை. கண்மணியே! என்னுல் தான் நீ இறந்தாய். நள்ளிரவில்—நடுக்காட்டில்—இளையவளாம் உன்னைத் தனியாக வரச்சொல்லி நானேதான் உனைக் கொன்றேன்” என்றெல்லாம் புலம்பித் தன் உடைவாளை மார்பிலே பாய்ச்சிக் கொண்டு, திஸ்பேயின் மேலங்கியை அணைத்தபடி மண்ணிலே சாய்ந்தான், அந்த வனப்புகொள் வாலிபன்!
இந்நேரம் காதலன் வந்திருப்பான்; கண்காணச் சீமை சென்று காதல் வாழ்வு நடத்தலாம் என்றெல்லாம் மனக்கோட்டை கட்டியபடி திஸ்பே மல்பரி மரத்தடிக்கு வந்தாள். அய்யய்யோ! அவள் கண்ட காட்சியை அவளால் நம்பவே முடியவில்லை, இதயராஜாவின் இருதயத்தைக் கூர்வாள் கெளவிக்கொண்டிருந்தது. திஸ்பே உடன் தாவிக் காதலனின் மெய் தழுவி “அன்பே உன்னுயிர் குடித்தது கொடுவாள் அல்ல; நான்தான் உன்னைக் கொன்றேன்; என்மீது உனக்குள்ள வற்றாத காதல்தான் உன்னைக் கொன்றது!”—என்று அழுது, பைரமசின் நெஞ்சிலே பதிந்திருந்த வாளை எடுத்துத் தன் மார்பிலே பாய்ச்சிக் கொண்டாள். உற்றோரின் கட்டுப்பாட்டிற்கும் ஊராரின் கண்டனத்திற்கும் ஆளாகி, உள்ளம் நொந்து, புதுவாழ்வு நடத்தச் சென்ற காதலர்கள் நிசின் சமாதிக்கு அருகிலே பிணமாகச் சாய்ந்து கிடந்தார்கள். சமுதாயம் சேர்த்துவைக்காத ஜோடிகள் மரணம் தன் இருட்கரங்களால் இணைத்து வைத்தது! ஆனால் ஒன்று! மல்பரி மரத்தடிக்குத் தாமதமாக வந்து திஸ்பேயை வாட்டிய பைரமஸ், சாக்காடென்னும் பூக்காட்டிற்கு முன்னமேயே சென்று தன் ஆருயிரைத் தேடிக்கொண்டிருந்தான்.
இந்தக் கதையைக் கூறிய ரோமியோவும் மற்ற இருவரும் கதையிலேயே லயித்து, ஆயிரத்துக்கு மேற்பட்ட படிகளைக் கடந்தனர். ஏறவேண்டிய தூரம் இன்னும் சிறிது இருக்கிறது. தீர்மானப்படி ஆண்டனி வீரக்கதையைச் சொல்லத் தொடங்கினான்.
வீரக்கதை
“ரோமியோ காதல் கதை என்ற பெயரால் உண்மையிலேயே ஒரு காதல் கதை சொன்னான். நான் வீரக்கதை என்ற தலைப்பில் ஒரு விசித்திரக் கதை சொல்லப்போகிறேன்; மிகச் சுருக்கமாக. கேளுங்கள் இருவரும்!
“அடிமை வியாபாரத்தை எதிர்த்துப் பெரியதொரு கிளர்ச்சி ஏற்பட்டதல்லவா! அதுபோல ஒரு கிளர்ச்சி, வேறு ஒரு உரிமையைக் காப்பாற்றுவதற்காக நடைபெற்றது. அந்தக் கிளர்ச்சி எந்த ஊரில் நடந்தது என்றெல்லாம் கேட்காதீர்கள். கிளர்ச்சிக்குத் தலைமை வகித்தவர் பெயரும் தெரியாது. கிளர்ச்சியின் நோக்கம் என்னவென்றால் அந்த ஊரில் உள்ள ஒரு ஜாதிக் கூட்டத்தாரை ஊரைவிட்டே விரட்டவேண்டும் என்பதுதான்! அந்த ஜாதிக் கூட்டத்தாரின் தலைவன்தான் அந்த ஊரையே பரிபாலித்துவந்தான். தலைவனின் ஜாதியை விரட்டவேண்டுமென்று கிளர்ச்சித் தலைவர் ஆக்ரோஷமாகப் பேசிவந்தார். அப்படி அந்த ஜாதியார் ஓடாவிட்டால் அவர்களைக் கண்ட இடத்தில் கொன்றுபோட வேண்டுமென்று கர்ச்சனை செய்தார். அந்த ஜாதித் தலைவன் மிகவும் தந்திரசாலி. அவன் தன்னுடைய சூழ்ச்சியைப் பயன்படுத்திக், கிளர்ச்சிக்காரர்களின் ஜாதியிலே பிறந்த ஒருவரைப் பிடித்து அந்த ஊருக்குத் தலைவனாக்கி விட்டான். அந்தப் புதுத்தலைவன் கிளர்ச்சிக்காரத் தலைவரைக் கூப்பிட்டு “நீர் இனிமேல் இந்த ஊரைவிட்டு யாரையும் துரத்து வதாகவோ அல்லது அவர்களை பயமுறுத்தும் வகையிலோ பேசக் கூடாது. அப்படிப் பேசினால் உம்மீது கடும் நடவடிக்கை எடுப்பேன்” என்று கூறிவிட்டான். புதுத்தலைவனின் மிரட்டலைக் கண்ட கிளர்ச்சித் தலைவர், உடனே, “புதுத்தலைவருக்கு ஜே” என்று கூறிவிட்டு, ஜாதித்தலைவனையும், அவன் கூட்டத்தாரையும் ஊரைவிட்டுத் துரத்துவதைப் பற்றி இனிமேல் பேசுவதில்லை என்று வாக்கு அளித்து விட்டு, கிளர்ச்சிப் படையில் உள்ள வீரர்களின் கவனத்தையும் வேறுபக்கம் இழுக்க ஆரம்பித்து விட்டார். இதுதானப்பா என்னுடைய வீரக்கதை!” என்று முடித்து விட்டான் ஆண்டனி.
அவர்கள் மூவரும் இரண்டாயிரம் படிகளையும் அநேகமாகக் கடந்து தங்கள் அறைக்குப் பக்கத்திலே வந்துவிட்டார்கள். மூன்றுவதாக சார்லஸ் சொல்ல வேண்டிய திடுக்கிடும் கதை பாக்கியிருந்தது. ஆண்டனி, அவனைப் பார்த்து “சார்லஸ் நீ உன் கதையைச் சொல்லு” என்றான். சார்லஸ் சொல்ல ஆரம்பித்தான். “தோழர்களே! நான் உண்மையிலேயே இப்போது திடுக்கிடும் கதைதான் சொல்லப்போகிறேன். இரண்டாயிரம் படிகள் ஏறிய நாம் மறுபடியும் இரண்டாயிரம் படிகள் கீழே இறங்கி, மீண்டும் இரண்டாயிரம் படிகள் மேலே ஏற வேண்டும்” என்றான்.
“ஏன்—உன் ‘திடுக்கிடும் கதை’ அவ்வளவு நீளமானதா?” என்றான் ரோமியோ!
“இல்லை ரோமியோ! நமது அறையின் சாவியைக் கீழ்த்தளத்தில் மேனேஜர் அறையிலேயே வைத்துவிட்டு வந்து விட்டேன்” என்று வருத்தமுடன் சொன்னான் சார்லஸ்.
(இருவருக்கும் அது திடுக்கிடும் கதையாகத்தானே இருந்திருக்கும்.)