தெனாலிராமன் பூனை

Tenali Raman's Cat

மு. கருணாநிதி

தெனாலிராமன் பூனை

18 வயது நிரம்பியவர்களுக்கு வாக்குரிமை ! தாய்மார்களுக்குத் தனி இடம் ! தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஊராட்சி மன்றங்களில் தனி இடம் ஒதுக்கப்படும் !

இவ்வளவு இனிப்பான அறிவிப்புகள் ! இந்த மூன்று அறிவிப்புகளையும் எம். ஜி. ஆர். செய்தாரே ! அதையும் முறையாகச் செய்தாரா ? ஒழுங்காகச் செய்தாரா ? என்றால் இல்லை.

தெரியாத காரணத்தாலா ? அப்படி நான் நம்பவில்லை. தெரியும் ! வேண்டுமென்றே முறைகேடாகச் செய்தார் என அப்படிச் செய்தாரென்றால் யாராவது கோர்ட்டுக்குப் போவார்கள் ! கோர்ட் மூலம் தேர்தலுக்குத் தடை வரும். அப்படி என்று பெருமூச்சு விட்டு தேர்தல் நடத்தாமல் இருந்து விடலாம் என்று வேண்டுமென்றே செய்யப்பட்ட காரியம்.

தெனாலிராமன் பூனை வளர்த்தான் என்று ஒரு கதை கேள்விப்பட்டிருக்கிறோம். அரசன் தெனாலிராமனிடத்தில் ஓர் அழகான பூனைக்குட்டியைக் கொடுத்து அதைப் பெரிதாக வளர்த்து ஓராண்டு காலத்தில் தன்னிடத்திலே திருப்பித் தரவேண்டும் என்று சொல்லி பூனைக்குட்டியை வளர்ப்பதற்காக பொன், நாணயங்களையும் ஒப்படைத்துவிட்டு அரசன் காத்திருந்தான்.

தெனாலிராமன் முதல்நாள் என்ன செய்தான் தெரியுமா ? பூனைக்குட்டியை வீட்டிற்குத் தூக்கிவந்து, அதற்குப் பால் வைத்தான், எப்படிப்பட்ட பால் தெரியுமா நல்ல சூடான, தொட்டால் நாக்கு வெந்து சுருண்டு விழக்கூடிய கொதிப்பு ஏறிய பால் ஒரு கிண்ணத்தில் வைத்து பூனைக்குட்டியின் முன்னால் வைத்தான். பாலைக் கண்டதும் பூனைக்குட்டிக்கு அவ்வளவு ஆனந்தம். எப்படித் தாழ்த்தப்பட்டோருக்கு தனி இடம் என்றதும் தாழ்த்தப்பட்டோருக்கு ஆனந்தமோ ! தாய்மார்களுக்குத் தனி இடம் என்றதும் தாய்மார்களுக்கு ஆனந்தமோ? 18வயது இளைஞர்களுக்கெல்லாம் வாக்குரிமை என்றதும் இளைஞர்களுக்கு ஆனந்தமோ அதைப்போல் இந்தப் பூனைக்குட்டிக்கு ஆனந்தம்.

‘ஆகா பால் என்று வாயைக் கொண்டுபோய் வைத்தது. வாய் வெந்து நாக்கு வெந்து பூனை ஓடி விட்டது. மறுநாள் அதே பூனைக்குட்டியைக் கொண்டுவந்து வைத்து நன்றாக ஆறிய பால் வைத்தான்.

வருமா அது ! சூடுகண்ட பூனை, எனவே வரவில்லை. பாலேத் திரும்பியும் பாரேன் என்று ஓடிவிட்டது. பிறகு அந்தப் பூனைக்குட்டி பெரிதாக வளர்ந்தாலும் கூட இளைத்து எலும்பும், தோலுமாக இருந்தது.

அரசன் தெனாலிராமனை அழைத்தான். ‘வளர்க்கச் சொன்ன பூனைக்குட்டி எங்கே ? கொண்டுவா’ என்றான். கொண்டுவந்தான். அது எலும்பும் தோலுமாக இருந்தது. ‘என்னப்பா ஆயிரக்கணக்கான பொன் நாணயங்கள் கொடுத்தேன் இதை வளர்க்கச் சொல்லி ! பூனை இப்படி எலும்பும் தோலுமாக இருக்கிறதென்று கேட்டான் அதற்குத் தெனாலிராமன் இந்தப் பூனைக்கு நான் தினம் தினம் பால் வைக்கிறேன். ஆனால் குடிப்பதே இல்லையென்று சொன்னான், பால் குடிக்காத பூனையா ? இது என்னப்பா உலகத்திலேயே அதிசயமாக இருக்கிறதே’ என்று வியந்த அரசன் தன் மாளிகையிலேயே இருக்கிற பாலைக் கொண்டு வரச் சொல்லி பூனைக்கு நேராக வைக்கச் சொன்னான்.

பாலைக் கண்டது தான் தாமதம் ! நாலுகால் பாய்ச்சலில் பூனை ஓடிற்று. சரிதான் தெனாலிராமன் சொல்வது உண்மைதான் என்று அரசன் நம்பினான்.

அதைப்போலத்தான் எப்படி சூடுகண்ட பூனை தெனாலிராமனால் வளர்க்கப்பட்ட பூனை ஆறிய பாலைப் பார்த்ததும் ஓடியதோ அதைப்போல இந்த நாட்டு மக்களையெல்லாம் தாழ்த்தப்பட்டோருக்குத் தனி இடம். தாய்மார்களுக்குத் தனி இடம் 18 வயது இளைஞர்களுக்கெல்லாம் வாக்குரிமை என்கிற பாலைக் காட்டி — ஆனால் — சூடான பாலைக் காட்டி — ஏ! அப்பா எங்களுக்கு பாலே வேண்டாம் என்று சொல்லுகின்ற அளவுக்கு இந்தத் தேர்தலையே ஒரு வகையாக முடித்துக் காட்டிய பெருமை என்னுடைய அருமை நண்பர் தமிழகத்தினுடைய முதலமைச்சர் மாண்புமிகு எம். ஜி. ராமச்சந்திரனத் தவிர வேறு யாருக்கும் கிட்ட முடியாது.