தெனாலிராமன் கதை
The Tenali Raman Story
மு. கருணாநிதி
தெனாலிராமன் கதை
எம். ஜி. ஆர். முதலமைச்சராகப் பதவி ஏற்றதை அடுத்து, எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் சட்டசபையில் கேட்டேன்; கழக ஆட்சியில் தரப்பட்டதைப் போல போனஸ், போக்குவரத்துச் செலவுக்கான 15 ரூபாய் விவசாயிகளுக்குத் தரப்படுமா ? என்று கேட்டேன். நீங்கள் கொடுத்ததைவிட அதிகமாகத்தான் தரப்படும் என்றார்.
அப்படி சொல்லி இரண்டு ஆண்டு காலமாகிறது. இந்த இரண்டு ஆண்டு காலத்தில் தரப்படாமல் இப்போது 20 ரூபாய் அதிகம் கொள்முதல் நிலையம், அரசு வாங்கிக் கொள்ள ஏற்பாடு என்கிறார்.
போனவாரம் எட்மண்ட் சொல்லியிருக்கிறார் நெல்லை அரசாங்கம் வழங்க வழியில்லை. அப்படி வாங்குவதற்கு எங்களிடம் பணம் இல்லை என்று கூறி இருக்கிறார். ஆனால் எம். ஜி. ஆர். இன்று ‘நெல்லை வாங்கிக் கொள்வேன்’ என்று சொல்லியிருக்கிறார். இது எப்படி இருக்கிறது என்றால், தெனாலிராமன் கதையைப் போல இருக்கிறது.
தெனாலிராமன் ஒரு நாள் மன்னரைச் சந்தித்தான். “தெனாலிராமா, நம்முடைய அரண்மனைக்குப் பக்கத்தில் இருக்கிற மாளிகையில் அழகான ஓவியங்களைத் தயார் செய்ய வேண்டும். அதைப் பார்த்து நான் மகிழவேண்டும்” என்றார் மன்னர்.
“இதென்ன மன்னா பெரியகாரியம்? நானே ஓவியங்களைத் தீட்டுகிறேன் பத்தாயிரம் பொன் கொடுங்கள்” என்கிறான்
மன்னனும் பத்தாயிரம் பொன் கொடுக்கிறான். ஆறுமாத காலத்தில் ஓவியம் தயாராகி விடும் என்று தெனாலிராமன் சொல்கிறான்.
பத்தாயிரம் பொன் வாங்கிக் கொண்டுபோனவன் திரும்பி வரவில்லை. ஆறுமாதங்கள் கழித்துத் திரும்பி வருகிறான் மன்னனிடம்.
“ஓவியம் தயாரா? பார்க்கலாமா?” என்று மன்னன் கேட்கிறான். ‘பார்க்கலாம்’ என்று தெனாலிராமன் சொல்கிறான் அதுவரையில் எந்த ஓவியமும் எழுதப்படவில்லை.
‘மறுநாள் காலை ஓவியங்களைப் பார்க்கவருகிறேன்’ என்கிறான் மன்னன். எப்படி மன்னனைத் திருப்திபடுத்துவது என்று தெனாலிராமன் யோசிக்கிறான். ஒரு சட்டியில் சாணத்தைக் கரைத்து, துடைப்பத்தால் தோய்த்து எடுத்து மாளிகை யினுடைய வெள்ளைச் சுவர்களில் பல இடங்களில் கோடுகளாகக் கிழித்துக் கொண்டே போனான்.
காலையில் மன்னன் வருகிறான். மன்னனை அழைத்துச் செல்கிறான் தெனாலிராமன். ஓவியங்களைக் காணவில்லை. சாணத்தால் போடப்பட்ட பெரிய கோடுகள் தான் இருக்கின்றன. ‘இவைகள் எல்லாம் என்ன’ என்று மன்னன் ஆத்திரத்தோடு கேட்கிறான்.
தெனாலிராமன் ‘இவைகள் எல்லாம் குதிரையின் வால்கள்’ என்று சொல்கிறான். ‘குதிரைகள் எங்கே’ என்று மன்னன் கேட்கிறான். சுவருக்கு அப்பாலே இருக்கின்றன என்று தெனாலிராமன் கூறுகிறான்.
அதைப்போல மன்னனுக்கு தெனாலிராமன் குதிரை வாலைக் காட்டியதைப்போல விவசாய பெருமக்களுக்கு எம். ஜி. ஆர். 20 ரூபாய் அதிகவிலை என்று காட்டுகிறார். நாளைய தினம் ‘குதிரைகள் எங்கே’ என்று கேட்டால் ‘சுவருக்கு பின்னால் இருக்கிறது’ என்று தெனாலிராமன் சொன்னே அதைப்போல ‘கொள்முதல் நிலையம் எங்கே, என்று கேட்டால், ‘தேர்தலுக்குப் பின்னால் வரும்’ என்றுதான் சொல்வார்.
சுவருக்குப் பின்னால் இருக்கும் குதிரைகளைப் போல தேர்தலுக்குப் பின்னால் அது வரப்போவதில்லை.