தலையில் மலை
Thalaiyil Malai
மு. கருணாநிதி
தலையில் மலை
“மலையொன்றைத் தலையில் தூக்கிக் கொண்டு நாடு முழுவதும் பவனி வருவேன்! இது என்னுடைய முதல் திட்டம்! வானத்தை வில்லாக வளைத்து அந்த வில்லுக்கேற்ற நாணாக மண்ணைக் கயிறாகத் திரித்துக் காட்டுவேன்! இது என்னுடைய இரண்டாவது திட்டம்! அடுத்தடுத்து இன்னும் பல அற்புத திட்டங்களை வைத்திருக்கிறேன். அவற்றைப் பின்னர் இந்த நாட்டு மக்களின் முன்னிலையில் நிறைவேற்றிக் காட்டுவேன்.
இவ்வாறு, பொதுமக்கள் மன்றத்தின் நடுவே தோள் தட்டி அறைகூவல் விடுத்தான் ஒரு வாலிபன். மக்கள், அவன் வார்த்தைகளை வாய்பிளந்தவாறு கேட்டு மயங்கிப் போயினர். இப்படி ஒரு வாலிபன் வீரம் பேசிக் கொண்டு திரிவது மன்னரின் காதுக்கும் எட்டியது. அவனைக் கொலுமண்டபத்திற்கு அழைத்து வருமாறு ஆணை பிறப்பித்தார். பீநடை போட்டுக் கொலுமண்டபத்தில் நுழைந்த வாலிபனை மன்னர் அமர்ச்சியப்படுத்தாமல் அவன் மக்களிடம் அறிவித்த திட்டங்கள் சாத்தியமானவை தானா? என்று வினவினார்!
“இயலாதது என்று இவ்வுலகில் எதுவுமில்லை அரசே! நான் அறிவித்த திட்டங்களை நிச்சயமாக நிறைவேற்றுவேன்” என்று, நிமிர்ந்து நின்று முழங்கினான் அந்த வாலிபன்.
“அப்படியானால், வீரமிக்க வாலிபனே! உன் முதல் திட்டத்தை என் எதிரில் செய்து காட்டுக! தயார்தானா?”
மன்னரின் இந்த ஆவல் ததும்பிய கேள்விக்கு அவன் மிக்க அமைதியாகப் பதில் அளித்தான்.
“மன்னர் மன்னவா? எதற்கும் சில வசதி வாய்ப்புகள் வேண்டுமன்றோ? நான் நாட்டு மக்களிடமும், தங்களின் திருமுன்னிலும் கூறிய செயல்களை நிறைவேற்றியே தீருவேன். ஆனால் ஒன்று! நான் நெடுநாட்கள் பயணம் செய்து களைத்துப் போயிருக்கிறேன். தங்களுக்கு விருப்பமிருந்தால் அரண்மனை விருந்தினனாக ஓரிரு மாதங்கள் என்னை ஏற்றுக் கொள்ள வேண்டுகிறேன். உடலில் வலிவு மிகுந்ததும், என்னுடைய முதல் திட்டமான மலையைத் தலையில் தூக்கும் காரியத்தைச் செய்து காட்டுகிறேன்” என்றான்.
மன்னர் மகிழ்ச்சியுடன் அவன் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டார். “ஓரிரு மாதங்கள் என்ன, மூன்று மாதங்கள் முழுமையான காலம் எடுத்துக் கொள்க! அந்த மூன்று மாத காலமும் அரண்மனையில் உனக்குத் தேவையான வசதிகள் அனைத்தும் வழங்கப்படும்” எனக் கூறி அவனைத் தட்டிக் கொடுத்தார்.
வாலிபனின் வீரச் செயல்களைக் காண, பொது மக்கள் நாட்களை எண்ணிக் கொண்டிருந்தனர்.
அவனுக்கு அரண்மனையில் உல்லாசமான வாழ்க்கை! உடலுக்கு வலிவு தரும் உணவு வகைகள்! உள்ளத்திற்குக் களிப்பூட்டும் பானங்கள்! கேட்டதெல்லாம் கிடைத்தது.
அவன் வெளியிட்ட திட்டங்களை நிறைவேற்றி விடுவானேயானால், அவனையே தனது படையின் தலைமைத் தளபதியாக நியமித்துக் கொள்ளப் போவதாக மன்னர், அமைச்சர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.
மூன்று மாதங்கள் முடிவுற்றன. முதல் திட்டமான, மலையைத் தலையில் தூக்கிக் கொண்டு நடக்கும் திட்டம் நிறைவேற்றப் படுவதற்கான நாள் அறிவிக்கப்பட்டது. நாடு முழுவதும் மலையடிவாரத்தில் கூடியது. மன்னரும், அமைச்சர் பெருமக்களும், அரண்மனை அலுவலாளரும் தத்தமக்குரிய இடங்களில் அமர்ந்திருந்தனர். வாலிபன் வண்ண ரத மொன்றில் வந்து இறங்கினான். அவன் மேனி புதுப்பொலிவுடனும் வலிவுடனும் விளங்கியது. மூன்று மாத கால அரண்மனை வாசத்தின் விளைவு அவன் உடற்கட்டில் நன்கு தெரிந்தது.
அவனைக் கண்ட மன்னரும், மக்களும் கையொலி செய்து வரவேற்றனர். முரசுகள் அதிர்ந்தன. இசைக் கருவிகள் ஒலித்தன. வாலிபன், தன் இரு கைகளையும் உயர்த்தினான். அனைத்து ஒலிகளும் நின்று அமைதி நிலவிற்று. அவன், மலையின் அடிவாரம் நோக்கிச் சென்றான். அனைவரது விழிகளும் இமைக்காமல், நடக்கப் போகும் நிகழ்ச்சியை உற்று நோக்கிக் கொண்டிருந்தன.
“நான் மலையைத் தலையில் தூக்கிக் கொண்டு நடக்கத் தயார்!” என்று கூவினான் அவன்! ஒரே மகிழ்ச்சி ஆரவாரம்!
ஆனால் நடந்தது என்ன? அவன் மலையைத் தூக்கவில்லை. திரும்பத் திரும்ப - “நான் மலையைத் தலையில் தூக்கிக் கொண்டு நடக்கத் தயார்” என்பதையே சொல்லிக் கொண்டிருந்தான். அந்தச் சொற்களையே கேட்டுக்கேட்டு அலுத்து விட்ட அனைவரும் அவனை நெருங்கிச் சென்றனர்.
“ஏன், அதையே சொல்லிக் கொண்டிருக்கிறாய்? செய்து காட்டு!” என்று மன்னர் உரத்த குரலில் கூறினார்.
“மன்னா, மலையைத் தலையில் தூக்கிக் கொண்டு நடப்பதாகத் தான் சொன்னேனே. அதை மறந்து விடாதீர்கள். நீங்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து இப்போதே இந்த மலையை என் தலையில் தூக்கி வையுங்கள். அதைத் தூக்கிக் கொண்டு நாடு முழுவதும் நடக்கிறேனா, இல்லையா என்பதைப் பிறகு பாருங்கள்!”
என்று, மிக அடக்கமாக வாலிபன் விளக்கம் கூறினான்.
“இவனைக் கைது செய்யுங்கள்” என்று மன்னர் உறுமினார், சிறுத்தை போல!
“என்னை இனிமேல் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள். ஆனால் ஒன்று! நான் என் நண்பர்களிடமும், மனைவியிடமும் செய்த சபதத்தை நிறைவேற்றி விட்டேன். அதாவது அரண்மனையில் முக்கியமான விருந்தினனாக ஒரு மாதமாவது இருந்து விட்டு வருகிறேன் என்று சபதம் செய்தேன். அது நிறைவேறிவிட்டது.”
புன்முறுவல் முகத்தில் பூத்திட அந்த வாலிபன் அச்சமின்றிப் பதில் அளித்தான்.
“அடே! அப்படியொரு ஆசையிருந்தால், உன்னால் செய்ய முடிந்ததைச் சொல்லி அதற்குப் பரிசாக அரண்மனையில் தின்று தொலைத்திருக்கலாமே?” என்று மன்னர் கடிந்து கொண்டார்.
“செய்யக்கூடியதைச் சொன்னால் அப்படிச் சொல்கிறவனை யார் மதிக்கிறார்கள்? அரசே! அற்புதங்களைச் செய்து முடிப்பேன் என்று கூறினால் தான் ஆராதனைகள். அன்பான வரவேற்புகள், அத்தனையும் கிடைக்கின்றன!”
வாலிபனின் பதிலைக் கேட்ட மன்னர் வெகுண்டெழுந்து,
“ஓகோ! அதற்காகத்தான் எங்களை ஏமாற்றினாயா?” என்று கர்ச்சித்தார்.
“அரசர்க்கரசே! நான் இந்த நாட்டுக்குள் நுழையும் போதே இங்கு திருக்குறள் புழக்கத்தில் உள்ளதா? என்று விசாரித்தேன்! அரசரே அறியார் திருக்குறளை எனக் கேள்வியுற்றதும் என் முயற்சியில் துணிவுடன் இறங்கினேன். திருக்குறளைப் படித்திருந்தால், தாங்களும் சரி, தங்கள் நாட்டு மக்களும் சரி, என் கூற்றினை ஒப்புக் கொண்டிருக்க மாட்டீர்கள்”
இப்படி வாலிபன் பதில் அளித்தான்.
“அப்படியென்ன இருக்கிறது அந்தக் குறளில்?”
இது மன்னரின் கேள்வி!
வாலிபன் கூறிய குறள் இதுதான்:
“சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்.”
ஒரு செயலைச் செய்து முடிப்பேன் என்று வாயளவில் கூறுவது யார்க்கும் மிக எளிது! ஆனால் சொல்லியவாறு அச் செயலை முடிப்பது எளிதானதல்ல: அரிதானதாகும் - என்பதே இந்தக் குறளுக்குப் பொருள்.
*