தலைவனின் பரிசு
The Leader's Gift
மு. கருணாநிதி
தலைவனின் பரிசு
சேனை தழையாகிச் செங்குருதி நீர் தேக்கி ஆனை மிதிக்கும் அருஞ்சேறாம் போர்க் களத்தில் எதிரிகளின் முடி நடுவதற்கு முரசம் ஆர்த்துவிட்டது, அழைப்பு வந்துவிட்டது அந்த வீரனுக்கு.
படை முழக்கம் பாராய் கண்ணே - தடையின்றி விடை தாராய் பெண்ணே! என வேண்டுகிறான். விழுப்புண்படாத நாளெல்லாம் வீணான நாட்கள் எனக் கருதும் வீர மகன். விழிப் பண்பாடும் வடி வழகி முத்து நகை சிந்துகின்ற இதழ் குவித்து முத்தமிந்து ‘வெற்றியோடு திரும்பிடுக அத்தான்’ என்று அணைத்து நின்றாள், கண்ணீரை அவனுக்குத் தெரியாமல் அவன் தோளில் துடைத்துக் கொண்டு.
“வேலெடுத்து வா” என்பான் - விழி தருவாள். “ரத்தம் படிந்த வாள் எங்கே?” எனக் கேட்பான். செவ்விதழ் கொடுப்பாள். “அக்கணமில்லை பெண்ணே, இக்கணம்! இணை பிரியா எந்தன் துணையே! தலைவனவன் தயாராய் நின்றிருப்பான் எனை நோக்கி! வேல் தருவாய், விடை தருவாய். இடையில்லாப் பேரழகே!” என மடை திறந்த காதல் வெள்ளம் விட்டு மறவனவன் நடக்கலுற்றான் மாவீரர் அணிவகுப்பின் பக்கம்.
வழியில் தாய் கண்டாள், வாழ்த்தினாள். ‘வருக புலியே வெற்றியோடு’ என்றாள். “தலைவனவன் உன் மீது சிறு கோபம் கொண்ட சேதி நானறிவேன், நீ மறைத்தால் தெரியாமல் போகுமா தம்பி! தாயகத்தின் மேன்மைக்குத் தலை கொடுக்கச் செல்கின்ற படை வரிசை காத்திருக்கும், கடமை செய்து வா, என் கண்ணே” என்று முன்பவன் மார்பிலே பெற்றிருந்த புண்மீது முத்தமிட்டாள்.
போருக்குச் சென்ற வீரன் எதிரிகளைப் பொடி செய்து எலும்புப் புழுதியிலே சேர்த்துவிட்டான். இரத்தச் சகதியிலே இரு தரப்பு வீரர்களும் இறுதி யாத்திரைக்குச் சித்தமானார்கள். கடைசி வெற்றி பகைவருக்கு என்றொரு சேதி பறந்து வர, “கண்ணிருந்தும் குருடரா நாம்?” எனக் கேட்டபடி களத்தினிலே, நம் காலை சுழல்காற்றாய்ப் பறந்து சென்றான். தனியொருவன் - தலைவனவன் கண்ணெதிரே பகைப் படையின் பலமழித்தான், தோல்விப் புகைப்படலம் ஒழித்து நின்றான். வெற்றிக்கு வித்திட்டான். அம்மவோ! இறுதியில் மறைந்து வந்த அம்புக்கு இரையானான்!
வெற்றி கண்ட படைத் தலைவன், வீரன் சாய்ந்துவிட்ட காட்சி தனைக் கண்டு கதறிவிட்டான்...
சிறியோர் சேட்டை விளைத்த சிறு கசப்பால் கருத்தினிலே வேறுபாடு கொண்டிருந்த காவலனும், களப்பட்டு வீழ்ந்திருந்த காளைதனைக் கண்ணீரால் குளிப்பாட்டுகிறான்.
சாகின்ற வீரன் சொல்வான்:
“தலைவா! தமைக் காத்த தலைவன் கண்களில் நீரைப் பெருக்குமாறு ஏற்படுகின்ற இதுபோன்ற களச்சாவுகளை வீரர்கள் யாசித்தாவது பெறுதல் வேண்டும்”