தாய்மை
Thaaymai
கலைஞர் மு. கருணாநிதி · கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்
தாய்மை
“சரசத்தாலும் சாகசத்தாலும் எப்படியோ அரசியின் மீது அரசனுக்கு இருந்த அன்பை அழித்து விட்டேன். அரசனது இருதயத்திலே அழியாத சித்திரமாக அமர்ந்திருந்தாள் அந்தக் கோப்பெருந்தேவி! அந்தக் கலையாத ஓவியத்தைக் கரிகொண்டு மெழுகிவிட்டேன்.
“மன்னரின் மன மாளிகையில் ஜோதி விளக்கு அவள், ஒரு காலத்தில்! அந்த ஜோதி விளக்கு இன்று வீதியிலே வீசப்பட்டு விட்டது. தோழிகள் புடை சூழ—தோகை மயில்கள் ஆடும் நந்தவனத்தில் மலரால் நடைபாதை அமைத்து, அவளும் அரசரும் ஆனந்த பவனிகள் நடத்தினரே—அது அந்தக் காலம்.
“இப்போது வேந்தரின் இருதயத்தில் இந்த சுழற் கண்ணியின் சுந்தர ரூபம் பூஜை அறைப் படம்போல ஜோடித்து வைக்கப்பட்டிருக்கிறது. வேந்தரின் மடியும், மலர்த்தோளும் அவளுக்குச் சொந்தம் ஒரு காலத்தில்! இன்றோ என் சொல்லுக்குச் சூழலும் ‘மாயப் பதுமை’யாகி விட்டார், மணிமுடி வீரர்! இது எனக்கு வெற்றிதான்—ஆனாலும் என் மனம் அமைதியடையவில்லை. அரசரின் பாசத்தையும் நேசத்தையும் இழந்தாள் எனினும் பட்டத்து ராணி என்ற மதிப்பை இழந்தாள் இல்லை. அவளது மகன்தான் கீர்த்தத்துக்குச் சொந்தக்காரன் என்ற பாத்தியதையைப் பறி கொடுத்தாள் இல்லை.”
“இந்த நிலையில் எனக்கு நிம்மதி ஏது மைத்துனரே! ஊரெல்லாம் அவள் பக்கம் அனுதாபம் காட்டுகிறது. அரசரும் அவளும் பிரிந்திருப்பது நாட்டுக்கு ஏற்பட்ட எதிர்பாராத கேடு என்று புலம்புகிறது மக்கள் மன்றம். என்னுடைய குணதிசயங்களைக் கொற்றவன் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. அதனால் என் வலையில் விழுந்து விட்டார் என்று மந்திரிகளின் குழு மாரடித்து அழுது கொண்டிருக்கிறது. இளையராணி நான்—என்கிற மதிப்பைக்கூடத் தர மறுக்கிறது அரண்மனை வட்டாரம்.
“அரசரின் மஞ்சத்து ராணியாக மட்டுமன்றி, வெஞ்சமரில் வாளெடுத்து வேலெடுத்துப் போர் புரியும் வீராங்கனையுமன்றோ கோப்பெருந்தேவி—அவள் எங்கே? வளையொலியால் மல்லிகர்த்தவரை வளைத்து விட்ட இவளெங்கே?—என்று வீரர்களின் பாசறைகளில் பேசப்படுகிறது. இத்தனை எதிர்ப்புக்களையும் சமாளிப்பதற்கு நான் தயாராகிக் கொண்டிருக்கிறேன். ஆனால் மைத்துனரே! அவள் மகன் இன்பசாகரன் வளர்ந்து, இளவரசு மகுடத்தைத் தலையில் தூக்குவதற்குள் அழிக்கப்பட்டுவிட வேண்டும். சுந்தரபுரி, சுழற்கண்ணியின் சொத்தாக மாற வேண்டும். என வயிற்றிலே வளர்ந்துகொண்டிருக்கும் சிசு இந்த நாட்டுச் செங்கோலுக்கு உரிமை பாராட்டவேண்டும். அதற்குத் தடை அவளது அருமருந்தன்ன மகன்! தடை இடப்பட்ட ஒரு வழி கூறும் மைத்துனரே! உமது உதவியோடுதான் நான் ஜெயக் கொடி நாட்டவேண்டும்.
“மைத்துனரே! உமது மறைவிலே நின்றுகொண்டுதான் என் ஜீவ லட்சியத்தை நிறைவேற்ற வேண்டும். என் மெளனமாக இருக்கிறீர்—பேசும்; விலகி நின்று பேசுகிறீரே என்ற கோபமா? வேந்தர் வரும் நேரமாயிற்றே என்றுதான் பயந்தேன். இதோ...மூடிக் கிடக்கும் உமது முரட்டு உதடுகள் எனது ரோஜா இதழ்களால் திறக்கிறேன்... ‘இச்!... இச்!’ போதுமா? நீண்ட விருந்து மற்றொரு நாளைக்கு! மைத்துனரே! சுந்தரபுரியின் ராணி சுழற்கண்ணி—அவள் குழந்தைக்கு இந்த நாடு உரியது—இப்படி ஒரு நல்ல எதிர்காலம் தோன்றுமா? அதற்கான திட்டம், உமது திட்டசனயமிக்க மூளையிலே இப்போதே உதயமாகுமா?”
“கவலைப்படாதே சுழற்கண்ணி! இந்த திட்டசனயன் இருக்கும்போது திட்டங்களுக்கா குறைவு? தித்திக்கும் முத்தங்களை நீ தந்ததுபோல், சித்திக்கும் யோசனைகளைத் தரவும் நான் தயங்கமாட்டேன். அரசரின் இளைய ராணியாவதற்கு அபூர்வமான ஆலோசனை வழங்கினேனே—அதை மறந்தாயா! அதைப் போலவே இளவரசன் இன்பசாகரனை வாழ்க்கைப் புதரிலிருந்து பறித்துப் போடச் சரியான வழி கண்டு பிடிக்கிறேன். இன்பசாகரன் இளம் அரும்பு! அந்த அரும்பை விரலால்கூட நசக்கி எறிந்துவிட முடியும்—நான் நினைத்தால்! ஆனால், அந்த அரும்பு இருக்குமிடமோ அரண்மனைத் தோட்டம். வேலியற்ற கொல்லையல்ல, வேந்தன் வீட்டு முள்ளு மொக்கு இருக்குமிடம்! சாவஜாக்கிரதையாகச் சதியை நிறைவேற்றவேண்டும். இளவரசன் சாக வேண்டும். ஆனால் நாம் கொன்றதாகத் தெரியக்கூடாது—கொலை செய்யப்பட்டதாகவே செய்தி வருதல் கூடாது. இயற்கையாக இறந்தான் என்று நாடும், நாட்டாளும் மன்னனும் நம்ப வேண்டும். அதற்கு வழிசொல்லுகிறேன்!”
“சொல்லும் மைத்துனரே சீக்கிரம்!”
“இன்னொன்று கொடு, சொல்லுகிறேன்!”
“இதோ! ஒன்றென்ன; ஒன்பது!”
“ஆகாகா! சுழல்! சொக்கி விட்டேன்—சொக்கிவிட்டேன்! முத்தப்போதையிலே மூளை வேலை நிறுத்தம் செய்து விட்டது. நாளை விடியற்கால திட்டத்தோடு வந்து உன்னைச் சந்திக்கிறேன்.”
“வேந்தர் பள்ளியறையை விட்டுப் போன பிறகு வாரும்.”
“அவர் இருக்கும்போது வர எனக்குப் பைத்தியமா?”
“சரி! திட்டம் நேர்த்தியாக இருக்க வேண்டும்!”
“உன்னைப் போல?”
“இல்ல; நம் உண்மைக் காதலைப் போல!”
“கைக்காரியடி சுழற்கண்ணி நீ! கட்டிலறையிலே அரசனிடம் கூட இப்படித்தானே கதையளப்பாய்?”
“எனக்கு இரண்டு இருக்கிறது அத்தான் இருதயம்! ஒன்றில் உமது ஆசை; மற்றொன்றில் சுந்தரபுரியின் சிம்மாசனத்தைப் பற்றிய கனவு! இரண்டாவது இருதயத்தால்தான் அரசனைப் புகழ்கிறேன்—ஆராதிக்கிறேன்—ஆனந்தம் பொழிகிறேன்!”
“சுழல்! நேரமாகிறது வருகிறேன்! அதோ அரசர் வருவது போல் தெரிகிறது!”
“விடியற்காலை—திட்டம்—மறந்து விடாதீர்!”
“விருந்து—அதையும் நீ மறந்து விடாதே!”
சுழற்கண்ணி, அவன் பேச்சை ஆமோதிப்பதுபோலத் தலை யசைத்துக்கொண்டு புன்னகை சிந்தினாள். திட்டசனயனே அந்தச் சிரிப்பை ரசித்தவாறு அந்த இடத்திலிருந்து நகர்ந்தான். துடித்த உதடுகள் அழுத்தமான நாவினால் தடவியபடி ஏதோ ஓர் இன்பச் சுவையை அனுபவித்தவாறு அந்த முரடன் சுழற்கண்ணியின் பார்வையிலிருந்து மறைவதற்கும்—“சுந்தர்” என்றவாறு சுவைக் காவியம் படிப்பதற்கு அரசன் வருவதற்கும் சரியாக இருந்தது.
மன்னன் வந்தான். திட்டசனயனிடத்திலே அவள் கூறியவை அனைத்தும் உண்மையே என்பதை நிரூபிப்பது போல் அவள் மடியில் சாய்ந்தான்—பிடியில் சிக்கினான்.
சுழற்கண்ணி சுந்தரபுரி மன்னனின் இளைய ராணி. அவளுக்கு மைத்துனன் திட்டசனயன். தூரத்து உறவு. அரண்மனையிலே அவனுக்கு மெய்க்காப்பாளன் வேலை. அரசனது மெய் காக்கவும்—ஓய்வு கிடைத்து, நேரம் வாய்க்கும்போது சுழற்கண்ணியின் மெய் தழுவிக் கிடக்கவும்—ஆகிய இரண்டு வேலைகளும் மாறிமாறி வந்து கொண்டிருந்தன அவனுக்கு! கனிரசம் பருகக் கசக்குமா? அதிலும் அவன் கரடித் திருமனியன்! தேன் கூடு போலச் சுழற்கண்ணி, வலிய வலிய வருகிறாள். கொம்பு வளைந்து தேனைக் கொட்டிக் குடிக்குப் பசி தீர்ப்பது போலக் கற்பனை கூடச் செய்ய முடியாது. சுந்தரபுரி அரண்மனையிலோ இது நித்திய நிகழ்ச்சியாக இருந்தது. பாருங்கல்லில் ஒத்த கரடு முரடான அவனது மார்பகத்தில் பச்சைக்கிளி போன்றவள் தொத்திக் கிடந்தாள்.
அவனே, “என் இச்சைக்கினியவளே! இனிப்பு தரும் இன்னமுதே!” எனப் பழுத்த குரலெடுத்துப் பாடிக் கொண்டிருந்தான். திரைமறைவில் நடக்கும் இந்த அவமானகரமான அநியாயத்தின் அடையாளமும் தெரியாமல் அரசருக்கரசன் அவளை நோக்கி, “உத்தமியே! உயர்ந்தவளே! உல்லாசி! ஊர்வசி!” எனப் புகழாரம் தொடுத்துக் கொண்டிருந்தான்.
சுந்தரபுரி சாம்ராஜ்யத்தைச் சுடுகாடாக்க வந்த ‘வசந்த சேனை’ சுழற்கண்ணியின் உருவத்திலே உலவுகிறாள் என்பது அந்த ராஜ ரசிகனுக்குப் புரியாமல்தான் போய்விட்டது!
அரசனின் அந்தப்புர மயிலாக, ஆலோசனை வழங்கும் அமைச்சராகக் களம்புகு நேரத்தில் பின் தொடரும் மறத்தியாகச் சுந்தரபுரி மக்களின் சுகத்தைக் கவனிக்கும் பாசமுள்ள தாயாக அந்த மாளிகையிலே சுடர்விட்டுக் கொண்டிருந்த மாணிக்கமாம் கோப்பெருந்தேவியாரைக் கொந்தளிக்கும் கடலாக மாற்ற வந்து சேர்ந்தது கொடுமையான புயல், சுழற்கண்ணி என்ற பெயரில்!
மன்னனுக்கு ராணியாக இருந்த தேவி, இன்பசாகரனுக்குத் தாயாகவும் மாறிய நேரந்தான், சுழற்கண்ணியின் படையெடுப்புக்கு ஏற்ற நேரமாகி விட்டது. முற்றுகையிட்டாள், முடிசூடியை; உடனே வெள்ளைக் கொடியைப் பறக்கவிட்டான் வேந்தன்! ஆயிரந்தோர்—ஐயாயிரம் காலாள்—ஆனைப்படை—புரவிச்சேனை அத்தனையும் தாக்கினாலும் அசைக்க முடியாது அவன் அரண்மனைக் கோட்டைச் சுவரை. அவளோ, ஒரு விழி வீச்சில், அவனது மனக் கோட்டையைச் சுக்கு நூறாக்கி, நொறுங்கிப்போன ஒவ்வொரு அணுவிலும் நின்றுகொண்டு வெறியூட்டும் நர்த்தனம் புரிந்தாள்.
தேவி இன்பசாகரனோடு தாய்க்குலத்தின் பெருமையைத் தரணிக்கு அறிவித்துக்கொண்டிருந்தாள்.
தேவனோ “திராட்சையினும் இனியது இந்த ரசம்” என இதழ் பருகிக்கொண்டு கிடந்தான், இளையவளோடு! அதுவும் அவனுக்குப் புதியவளோடு!
கதிர் மறைந்த உலகிற்கு இருள் நீக்கும் நிலவு போலக் கோப்பெருந்தேவியின் கவலை படிந்த வாழ்விற்கு வாட்டம் தவிர்க்கும் வைரமாக இன்பசாகரன் திகழ்ந்தான்.
பல கனிப் பார்வையாளர் மீது நிலவு, ஒளி மழையையாவது பெய்கிறது; அதுவும் கிடைக்கவில்லை அந்த ‘அபாக்கியவதிக்கு’!
இன்பசாகரன் மட்டுமே அவளுக்கு ஆறுதல் பொருளானான். அந்தப் பொருளையும் பூமியிலே புதைத்துவிடத் துடித்துக் கொண்டிருந்தாள் சுழற்கண்ணி. அதற்கான திட்டத்தையும் திட்டசனயன் தயாரித்து விட்டான்.
“இந்தச் சதியில் ஜெயம் நமக்கே!” என்று ஒருவரை ஒருவர் தழுவியபடி உரக்கக் கூவி மகிழ்ந்தனர்—ஊர் கெடுக்க வந்த ஜாலக்காரர்கள்.
திட்டத்தின் முதற் கட்டம் மிகத் தீவிரமாக அமுலுக்குக் கொண்டு வரப்பட்டது.
திடீரெனச் சுழற்கண்ணி இளவரசன் இன்பசாகரன் மீது அன்பு மழை பொழிய ஆரம்பித்தாள். “அக்காளுக்கும் என்னைப்போலத்தானே ஆசையிருக்கும். அவளோடும் பேசி மகிழ்ந்து, கூடிக் குலவியிருப்பதுதானே தங்கையைப் போன்ற தர்மம் தவறாதவர்களுக்குத் தகுதியான காரியம்!” என்று உபதேசம் செய்ய ஆரம்பித்தாள் மன்னனிடம்!
“தேவி! நான் எப்படியோ விதியின் மாயையால் உங்கள் வாழ்வில் குறுக்கிட்டு விட்டேன். என்னை மன்னித்து விடுங்கள். இனி நான் எங்கே போவேன்? தங்கள் தங்கையாக எண்ணிக் கருதி எனக்கு வாழ்வு அளியுங்கள்” என்று கோப்பெருந்தேவியின் பாதங்களில் கண்ணீரைச் சொரிந்தாள்.
மன்னன்—மகாராணி—இளவரசன் அனைவருமே அவளது மாயமாலத்தில் மயங்கினர்.
“அரண்மனையில் புதிய இன்பம்! சந்தோஷமான திருப்பம்! அரசரும் அரசியும் ஒற்றுமைப்பட்டு விட்டனர். சுழற்கண்ணி, தன் தவறுகளை உணர்ந்து திருந்தி விட்டாள். அப்பப்பா! இளையராணி இப்போது இன்பசாகரனை எப்படிக் கவனிக்கிறாள் தெரியுமா! பெற்ற தாய்கூட இவ்வளவு அன்பு காட்ட முடியாது!” என்று சுந்தரபுரி முழுதும் குரல் கிளம்பியது.
இளவரசன் இப்பொழுதெல்லாம் தாயிடம் கூட அவ்வளவு அதிகமாகத் தங்குவதில்லை. இளைய ராணியின் மாளிகையிலே விளையாடிக் கிடக்கிறான். அவள் கையால்தான் அவனுக்கு உணவு தரவேண்டும். அவள் சொன்னால்தான் எதையும் கேட்பான். இது கண்டு அரண்மனையே அதிசயித்தது. அரசரும் சுழற்கண்ணியின் மீது புதிய பாசம் கொண்டார். அரசியும் அவளைத் தன் அருமைத் தங்கைபோல நடத்தினாள். தங்கையின் நெஞ்சிலே புகையும் நெருப்பை அவள் எங்கே கண்டாள்?
ஒருநாள் சுழற்கண்ணியின் மாளிகையில் இன்பசாகரன் குழல் வாத்தியக் கருவியுடன் நுழைந்தான். தெரியாதவள்போல அவள், “ஏது இந்தக் குழல் வாத்தியம்?” என்று கேட்டு வைத்தாள்.
“திட்டசனயன் கொடுத்தானம்மா!” என்று கூறியபடி அதை ஊதிக்கொண்டு கூத்தாடினான், இன்பசாகரன்.
சதித்திட்டம் இரண்டாவது கட்டத்தை அடைந்து விட்டது. இனி ஆரம்பிக்க வேண்டியதுதான் நமது வேலையை என்ற முடிவோடு, அவள் அவனைத் தழுவி யெடுத்துத் தன் மஞ்சத்தின் பக்கம் உட்கார வைத்து முத்தங்களால் அவன் முகத்தைச் சிவக்க வைத்தாள்.
தின்பதற்காக ரோஜாப் பூவைப் பறிப்பவர்கள் அதன் மென்மையையும் வண்ணத்தையும் வியந்து கொண்டா இருப்பார்கள்! இதழ்களைக் கிள்ளி வாயில் போட்டுக்கொண்டே கடைசியில் அந்தக் காம்பை எறிந்து விடுவார்கள்!
அப்படித்தானிருந்தது, அவள் அந்த மலரொத்த இளைய மன்னனை எடுத்து முத்தமிட்டதும், அருகே உட்காரவைத்துக் கொண்டதும்!
“கண்மணி! உனக்கு ஓர் அருமையான பண் கற்றுத் தருகிறேன். அதை இந்தக் குழலில் நீ ஊதினால் பிரமாதமாக இருக்கும்!” என்று பேச்சை ஆரம்பித்தாள் வயதில் இளமையும், வஞ்சகத்தில் முதுமையுங் கொண்ட அந்த வடிவழகி.
“கற்றுக் கொடம்மா!” என்று குழலை அவளிடம் கொடுத்தான் இளவல்.
அவளும் குழல் மூலம் பண் எழுப்பினள். “இனிமை! இனிமை!!” எனப் பாராட்டினர் தோழியர்.
அந்தப் பண் பாலகனின் மனத்தையும் கொள்ளை கொண்டது. தானும் அதைக் கற்றுக்கொள்ள வேண்டுமென்ற ஆர்வம் இளம் நெஞ்சில் கொழுந்து விட்டது.
“எப்படியாவது எனக்கு இந்தப் பண்ணைக் கற்றுக் கொடம்மா?” எனப் பிடிவாதம் செய்தான்.
அவளும் அந்த வேண்டுகோளுக்குத்தானே அந்தப் பிஞ்சு மனத்திலேயிருந்து எதிர்பார்க்கிறாள்.
இரண்டு நாள் சிரமம் எடுத்துக்கொண்டான் இளவரசன்—பண், பாடமாகிவிட்டது!
“அருமை தம்பி! அருமை! நான் வாசித்ததைவிட நீ வாசிக்கும்போது, பண்ணிலே மழலையின் இனிமை மறைந்து திருக்கிறது! பெருமையை அதிகமாக்குகிறது. ஆகா! இந்தக் கீதத்தை அரண்மனை நந்தவனத்திலே உட்கார்ந்து வாசித்தால் மயில்கள் எல்லாம் தாமே வந்து எதிரே நின்று ஆடும்!” என்று சாகசப் பேச்சைத் தாய்க் குரலிலே கலந்து தந்தாள் சுழற்கண்ணி!
“இதோ இப்போதே போய்த் தோட்டத்தில் வாசிக்கிறேன். தோகை மயில்கள் ஆடுகின்றனவா என்று பார்க்கிறேன்” எனக் குழலுடன் ஓட்டம் பிடித்தான் இளவரசன்.
சுழலியின் கண்கள் அகல விரிந்தன. அவள் முகத்தில் புதிய தேஜஸ் காணப்பட்டது. “வெற்றி! வெற்றி!” எனத் தனக்குள் முணுமுணுத்துக் கொண்டாள், மகிழ்ச்சியோடு!
அரண்மனைத் தோட்டம்—அடுக்குமல்லிகைப் புதரின் ஓரம்—அழகே உருவெடுத்த அரசிளங்குமரன் ஆர்ப்பித்து விட்டான் குழல் வாத்தியத்தை! இளையவன் கற்றுத் தந்த பண்ணை மாறி மாறி ஊதினான். பாவம்; அவனுக்கென்ன தெரியும்—அவன் கற்றுத்தந்த கீதம் பாம்புகளை அருகே வரவழைக்கும் கீதமென்று!
பண்ணை அவனுக்குப் பாடமாக்க வேண்டும். அவன் அதை ஊதிக்கொண்டிருக்கும்போது தோட்டத்தில் தொலைவிலே விஷப் பாம்பை விட்டுவிட வேண்டும். குழலோசை கேட்டுப் பாம்பு அவனருகே வந்து படமெடுத்து ஆடும். பண்ணை அவன் நிறுத்தினால்; உடனே பாம்பு அவன் மீது சீறிப் பாய்ந்துவிடும்.
இப்படியொரு திட்டத்தைத் திட்டசனயன் தீட்டித் தந்து, அதற்கு வெகுமதியாக அவளிடம் பெற வேண்டியதைப் பெற்று, அவளும் இளவரசனை அரண்மனைத் தோட்டத்திற்கு அனுப்பி விட்டாள். இன்பசாகரனின் குழலோசை குளிர்ச்சியை மொண்டு மொண்டு ஊற்றியது! ஆனந்தத் தென்றல் வந்து ஆரத் தழுவுவது போன்ற உணர்ச்சியைத் தந்தது!
மகுடியிலும் இல்லாத மயக்க உணர்வை அந்தக் குழலிலேயிருந்து புறப்பட்ட பண் கிளப்பியது.
நேரம் பார்த்துக்கொண்டிருந்த கோர மனிதன் திட்டசனயன், தான் பிடித்து வைத்திருந்த பாம்பை இளவரசனுக்கு அருகேயுள்ள புதரின் பக்கமாகக் கீழே விட்டான். விடுபட்ட பாம்பு, குழலோசை நோக்கி நகர்ந்தது. தன்னை நோக்கி ஆபத்து ஊர்ந்து வருகிறது என்பதை அறியாத அந்த அழகுப் பிறை நிலவு, சின்னம்மா கற்றுத்தந்த பண்ணை விடாமல் ஊதிக்கொண்டே இருந்தது.
இன்னும் சிறிது நாழிகையில் மயில்கள் எல்லாம் வந்து தன் முன்னே ஆடப்போகின்றன என்ற நினைவோடு, இன்னும்—இன்னும் அதிக உற்சாகத்தோடு குழல் ஒலி புறப்பட்டது!
நகர்ந்து வந்த நாகம், படமெடுத்தபடி பாலகனின் எதிரே மயங்கி நின்றது. அதைப் பார்க்காத இளவரசன் குழலூதும் கவனத்தில் கண்களை மூடிக்கொண்டு உட்கார்ந்திருந்தான்.
கண்கள் மூடிக்கொண்டே குழல் ஊதுவது—திடீரெனத் திறந்து பார்த்தால் எதிரே மயில்கள் ஆடும்—அதைப் பார்த்து மகிழ்வது! இப்படி ஓர் இன்பக் கனவோடு அவன் இசை முழக்கம் செய்து கொண்டிருந்தான்.
அவன் என்ன கண்டான்—எதிரே உயிர் வாங்கும் பாம்பு பல்லிலே விஷம் தேக்கியபடி ஆடிக்கொண்டிருக்கிறது என்பதை!
மயங்கி நிற்கிறது நாகம்! மயக்கம் தெளிந்தால் இளவரசன் அதற்கு இரையாவான்!
இசை நின்றால், உடனே பாம்பின் மயக்கமும் தெளிந்து விடும்!
என்ன நடக்கப்போகிறது என்பதை உப்பரிகையில் இருந்தபடியே இளையவள் பார்த்துக் கொண்டிருந்தாள்.
புதரின் மறைவில் இருந்தபடியே திட்டசனயன் புன்னகை சிந்திக் கொண்டிருந்தான்.
அந்தக் கொடுமையைக் காண்பதற்குக் கோப்பெருந்தேவியும் அங்கு வந்து சேர்ந்தாள். கீதம் அவளைக் கவர்ந்தது. எங்கிருந்து வருகிறது எனக் கவனித்தாள். இன்பநாதம் எழுப்புவது தன் மகன் எனக் கண்டாள். மகிழ்ந்தாள். அடுத்த கணம் மகிழ்ச்சி மறைந்தது. சுந்தரபுரியின் எதிர்கால மன்னன்—அவனெதிரே சாவின் நர்த்தனம்!
வயிற்றிலே கிடந்த வைடூரியம்! அதை விஷத்தால் குளிப்பாட்டி வேகவைக்க எதிரே மரணத்தின் மயக்கம் நிறைந்த சதிராட்டம்!
“அய்யய்யோ—என்ன செய்வேன்!” என நிமிர்ந்தாள். இளையவள்—திட்டசனயன் இருவரும் இருப்பதை உணர்ந்தாள்.
அவர்கள் பார்க்காதவள்போல் பாலகன் பின்னே வந்தாள். அவளுக்குப் புரிந்து விட்டது—சதி பற்றிய விளக்கம். குழலோசை நின்றால், பின் குமரனைப் பாம்பு தீண்டிவிடும் என்பதையும் தெரிந்து கொண்டாள். அவளது தாய் உள்ளம் தணலிவிட்ட புழுவாயிற்று.
எந்தத் தாய்க்குத்தான் சகிக்கும்! தான் பெற்ற தங்க விக்ரகத்தின் மேனியெங்கும் நீலம் பாய்ந்து, அலங்கோலமாக விழப்போவதை எந்த அன்னைக்குத்தான் தாங்கிக் கொள்ள முடியும்!
“இன்பசாகரா!” என்று சப்தம் போட்டால் அவன் திடீரெனக் குழல் வாசிப்பதை நிறுத்தி விடுவான்—உடனே நாகம் தன் வேலையை முடித்து விடும். என் செய்வாள் தாய்? கத்தினாள். எப்படி? “இன்ப சாகரா!...வாத்தியத்தை நிறுத்தாதே! நிறுத்தாதே! ஊதிக்கொண்டேயிரு!” என்று அலறினாள். தாயின் குரல் அந்த இளவலின் காதிலே ஒலித்தது. கண்ணைத் திறந்தான். எதிரே பாம்பு! நடுக்கம் தாங்க முடியவில்லை. எழ முடியாதபடி ஆகி விட்டான்!
தாயோ தொடர்ந்து சப்தமிட்டுக் கொண்டேயிருந்தாள்: “நிறுத்தாதே! ஊது!! ஊது!” என்று.
அவனும் ஊதிக்கொண்டேயிருந்தான், ஏன் எதற்கு என்று புரியாத நிலையிலே!
“ஊது! ஊது!!” என்று கூவிக்கொண்டே தாய் அவனருகே வந்து கொண்டிருந்தாள்.
குழலோசை உச்சக் கட்டத்தை அடைந்தது. நாகமும் இன்னும் மேலே உயர்ந்து படந்தாக்கி ஆடியது.
“நிறுத்தாதே! ஊது! ஊது!”—தொடர்ந்து அலறல்! அதையொட்டி “ஆ!” என்ற சப்தம்!
ஆம்; கோப்பெருந்தேவி, ‘தடா’வென்று அந்தப் பாம்பின் முன்னே விழுந்தாள்.
படமெடுத்திருந்த பாம்பு அவள் மீது பாய்ந்தது—அவள் உடலில் விஷம் பரவியது. இனியென்ன? பாம்பு ஓடியது. ஓடுகிற பாம்பை வாளால் வீசிக் கொன்று விட்டு அங்கு ஓடிவந்து விழுந்தான் மன்னவன்.
“பிரபு! பிரபு!”
கோப்பெருந்தேவி அழுதாள்.
“செல்வத்தை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ளுங்கள்!” என்று இன்பசாகரனை இழுத்து அரசனின் கையிலே ஒப்புவித்தாள்.
“அம்மா!” என ஓலமிட்டான் இளவரசன்.
தாய்மை தன் கடமையைச் செய்து விட்டுக் கண்ணை மூடிக் கொண்டது.
அரசன் இளைய ராணியையும் திட்டசனயனையும் வெறித்துப் பார்த்தான். அவர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்துக் கொண்டிருந்தனர்.
“விடாதீர்கள், அவர்களை!” என்று கத்தினன்.
“அய்யோ! ஒரு வினாடி தவறி விட்டது—இல்லையேல் நாகத்தை வாளால் நறுக்கிவிட்டு, மனைவி, மகன் இருவரையுமே காப்பாற்றியிருப்பேன்!” என அங்கலாய்த்துக் கொண்டான் அரசன்.
என் செய்வது? தாய்மையின் மதிப்பு தரணிக்குத் தெரிய வேண்டுமே—அதனால்தான் போலும் அவன் சிறிது தாமதமாக அங்கு வர நேர்ந்தது!