சொர்க்கத்திற்குச் சென்றுவந்த அழகி!
The Beauty Who Went to Heaven and Returned!
மு. கருணாநிதி
சொர்க்கத்திற்குச் சென்றுவந்த அழகி!
வசதியான குடும்பத்தில் ஓர் அழகான அனைவராலும் பாராட்டத்தக்க—கற்பு நெறி வாய்ந்த ஒரு பெண்மணி இருந்தாள். பெற்றோருக்கு அவள் ஒரே பெண். திடீரென அவள் இறந்து விட்டாள் அவள் மரணமடைந்த பிறகு அவளுடைய தாயும் தந்தையும் அவளையே நினைத்து பெரும் கவலையோடு இருந்தார்கள். அவளுக்குப் பூட்டி மகிழ்ந்த அணிகலன்கள் எல்லாம் தாயும் தந்தையும் எடுத்து வைத்து அவற்றைப் பார்த்துப் பார்த்துக் கண்கலங்கினார்கள்.
ஒரு நாள் தந்தை வெளியில் சென்றிருந்தார் தாய் மாத்திரம் வீட்டில் இருந்தாள். அப்போது ஒரு துறவி அந்த வீட்டிற்கு வந்தான். அந்தத் துறவி ஓர் எத்தன்—ஏமாற்றுக்காரன்—அந்தத் தாய் அப்போலித் துறவியை வரவேற்று உபசரித்து அன்னமிட்டு தாங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் எனக் கேட்டாள். அந்த வீட்டில் நகைகள் ஏராளமாக இருக்கின்றன என்று தெரிந்தே வந்த அந்தப் போலித் துறவியோ “நான் சொர்க்கத்தில் இருந்து வருகிறேன்” என்று சொன்னான்.
உடனே அந்தத்தாய் என்னுடைய மகள் இறந்து மூன்று ஆண்டு ஆகிறது. அவளும் சொர்க்கத்தில்தானே இருக்கிறாள் அவளை நீங்கள் பார்த்தீர்களா என்று கேட்டாள்.
துறவியோ “பார்த்தேன்! பார்த்தேன்! உங்கள் பெண் சுகமாக இருக்கிறாள். ஆனால் அவளுக்கு ஒரே ஒரு குறை! சொர்க்கத்திற்குச் செல்லும் பொழுது நகைகளே எல்லாம் இங்கே விட்டுவிட்டுச் சென்று விட்டாளாம். துறவியாரே என் வீட்டுப் பக்கம் போனால் அவைகளை எல்லாம் வாங்கிக் கொண்டு வாருங்கள் என்று சொன்னாள்!” என்றான்.
இப்படித் துறவி சொன்னதும் “அப்படியா சொன்னாள் என் மகள்! அவளுக்கில்லாத நகையா! இந்த நகைகளை யெல்லாம் அவளிடத்திலே கொடுத்து விடுங்கள்” என்று வீட்டிலிருந்த நகைகள் அத்தனையையும் மூட்டை கட்டி துறவியினிடத்திலே அந்தத் தாய் ஒப்படைத்தாள். அந்தத் துறவியும் அதை வாங்கிக் கொண்டு சென்று விட்டான்.
கொஞ்ச நேரத்திற்கெல்லாம் வெளியில் சென்றிருந்த தந்தை வந்தார். உடனே அந்தத் தாய் தன்னுடைய கணவனைப் பார்த்து ஆர்வத்தோடு அவசர அவசரமாக “நம்முடைய மகள் சொர்க்கத்திலே இருப்பதைப் பார்த்து விட்டு ஒரு துறவி வந்தார் நகை இல்லாமல் நம் மகள் வருத்தப்படுவதாக அந்தத் துறவி சொன்னார். எல்லா நகைகளையும் அவரிடத்திலே கொடுத்தனுப்பியிருக்கிறேன்” என்று சொன்னதும் “அடிப்பாவி! பைத்தியக்காரி! ஏமாந்து விட்டாயே! யாரோ ஒருவன் உன்னைச் சரியாக ஏமாற்றி இருக்கிறான். தாய்க்குலம் என்றால் சரியாக இருக்கிறது பார்த்தாயா! இப்படி ஏமாந்து விட்டாயே!” என்று சொல்லி உடனே குதிரையில் ஏறி அந்தத் துறவியைத் துரத்திச் சென்றான். துறவி ஓடினான். நகையைப் பறிகொடுத்த தந்தையோ விடாமல் குதிரையில் துரத்திச் சென்றார்.
ஓடிக் கொண்டே இருந்த துறவி திடீரென்று ஒரு மரக் கிளையில் ஏறி உட்கார்ந்து கொண்டான். குதிரையில் துரத்திச் சென்றவரோ மரக்கிளைக்குக் கீழே குதிரையை நிறுத்திவிட்டு துறவியைப் பிடிக்க மரத்திலே ஏறினார். அந்த நேரம் பார்த்து மரக்கிளையில் இருந்த துறவி குதிரையின் மீது குதித்து குதிரையை ஓட்டிச் சென்று விட்டான்.
எனவே துறவியைப் பிடிக்க முடியாத நிலையில் “துறவியாரே பெண்ணுடைய தாயார் கொடுத்தநகைகளையும் என் பெண்ணிடம் கொடுத்துவிடு, நான் கொடுத்த குதிரையையும் அவளிடத்திலே கொடுத்துவிடு” என்று சொல்லிவிட்டு வேதனையோடு வீட்டுக்குத் திரும்பினார்.
“நான் உங்களைக் கேட்கிறேன். கதையில் வந்ததுபோல குதிரையையும் கொடுத்து விட்டுத் திரும்பவா? அல்லது இழந்த நகையை இழந்த உரிமையை—இழந்த உணர்வை மீட்டு யாரிடத்திலோ ஏமாந்து விட்ட தமிழ்க் குலத்தைக் காப்பாற்றவா? “குதிரையையும் எடுத்துக் கொண்டு போ” என்று கூறிவிடவா? என்கின்ற கேள்வியைத்தான் நான் உங்கள் முன் வைக்கிறேன்.”
யாராலோ நீங்கள் தந்திரமாக ஏமாற்றப்படுகிறீர்களே! இதை எடுத்துச் சொல்லுகின்ற பணியில் தொடர்ந்து ஈடுபட்டு இருப்பவர்கள்தான். இருந்தாலும் எனக்கே ஒரு சந்தேகம்! என்றைக்காவது ஒருநாள் நமக்கே கூட சலிப்பு ஏற்பட்டு விடுமோ! என்கின்ற சந்தேகம். நமக்கே கூட ஒரு மனச் சங்கடம் ஏற்பட்டு விடுமோ என்கின்ற ஒரு ஐயப்பாடு!