சந்தனக்கிண்ணம்
Santhana Kinnam
கலைஞர் மு. கருணாநிதி · கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்
சந்தனக்கிண்ணம்
தலைவர் பேச ஆரம்பித்தார். புது நிலவு போன்ற மணமகளையும், பூரிப்பு வழிய அமர்ந்திருக்கும் மணமகனையும் பாராட்டினார். பழமையின் அடிச்சுவடுகள் மறையாமலிருக்கிற அந்தப் பட்டிக் காட்டிலே பகுத்தறிவுச் சுடர் கொளுத்திவைத்த அந்த இளைஞனை இதயபூர்வமாக வாழ்த்தி மகிழ்ந்தார். வாழ்வுக்கு ஒளி தரப்போகும் தன் காதலனைத் தலைவர் பாராட்ட, அது கேட்டு வெட்கத்தோடு அமர்ந்திருக்கும் புதுப் பெண்ணின் நெஞ்சம் இன்ப ஓடையாயிற்று.
புரோகித மணம் ஏன் கூடாது—புரட்சித் திருமணம் எப்படி வளர்ந்தது என்பதற்கான விளக்கங்களை வாரி வாரித் தலைவர் இறைத்தார். வந்திருந்த வண்டினங்கள் அந்தத் தீந்தமிழ்த் தேனை உண்டு மகிழ்ந்தன.
பொருந்திய மணம் என்றால் என்ன; திருமணத்திற்குத் தேவையான—தகுதியான வயது என்ன என்பது பற்றியும் விளக்கம் தந்தார்.
பழமையும் புதுமையும் மோதிக்கொள்ளக் கூடாது என்று கேலி செய்தார், ஆதாரங்கள் காட்டி.
திராவிடம் என்று ஓர் இனம் உண்டு. “திராவிடம்” என்று இழித்துரைப்பர், தீயோர். ‘தீயோருக்குத் திராவிடம் தான்!’ என்று சான்றுகள் வழங்கினார்.
“திராவிட உட்கல வங்க” என்ற தாகூரின் பாட்டிலே—“தெக்கணமும் அதிற் சிறந்த திராவிட நற்றிரு நாடும்” என்ற மனோன்மணீயம் ஆசிரியர் ஏட்டிலே—“திராவிடர் வரலாறு” என்ற சரித்திரப் புத்தகத்திலே—“மாமல்லன் காலத்தில் திராவிட பாணியில் செதுக்கப்பட்டது” என்ற மகாபலிபுரத்துச் சிற்பக் கல்வெட்டிலே—“திராவிட வித்யாபூஷணம்” என்று சாமிநாத அய்யரவர்களுக்குத் தரப்பட்ட பட்டத்திலே “திராவிட” என்கின்ற தேன்மலர் மணம் வீசுவதைத் தென்றல் நடையில் எடுத்துச் சொன்னார்.
அத்தகைய திராவிடத்தைக் காப்பாற்ற மணமக்கள் முன் வர வேண்டுமென்பதை, ‘காதலிலே கவிதையிலே களம் போகும் பேச்சு—கணவனுக்கும் மனைவிக்கும் திராவிடமே மூச்சு!’ என்ற கவிதை வரிகளால் குறிப்பிட்டார்.
பின்னர் வாழ்வுப் பாதையில் குறுக்கிடும் வளைவுகளை எடுத்துச் சொல்லி எதையும் தாங்கிடும் துணிவு வேண்டும் என்று தைரியமூட்டினார். குடும்பம் என்பது மணல் வீடு கட்டி மரப் பொம்மை வைத்து மழலை விளையாட்டு விளையாடிய கொழுந்துப் பருவ நிகழ்ச்சியல்ல எனக் காட்டி, ‘வாழ்க்கை வானில் பறக்கச் சிறகடிக்கும் வெண் புறாக்கள்! வாழ்க நீவிர் வளமெல்லாம் பெற்று!’ என வாழ்த்தினார், பலமுறை. புறநானூற்றில் உலவிடும் தாய்மார்கள் பலர் தேவை என்று முழங்கினார். சுருக்கமாகவும் சுவையாகவும் புறநானூறு கூறுகிற ஓர் அழகான கவிதைக்கு மெருகேற்றி எளிய நடையிலே கீதமிசைத்துத் தந்தார். அந்தக் கீதமே ஒரு கதையாக இருந்தது.
குடிசைதான் ஒரு புறத்தில் கூரிய வேல், வாள் வரிசையாய் அமைந்திருக்கும், வையத்தைப் பிடிப்பதற்கும், வெம்பகை முடிப்பதற்கும், வடித்து வைத்த படைக்கலம்போல் மின்னும், மிளிரும். புலியின் குகையினிலே அழகில்லை; புதுமையல்ல! கிலியும் மெய் சிலிர்ப்பும் கீழிறங்கும் தன்மையும் தலை காட்டா மானத்தின் உறைவிடம், மறவன் மாளிகை!
இல்லத்து வாயிலிலே கிண்ணத்துச் சோற்றோடு வெல்லத்தைச் சிறிது கலந்து வயிற்றுக்குள் வழியனுப்பப் பொக்கை வாய்தனைத் திறந்து பிடியன்னம் எடுத்துப் போட்டாள் பெருநரைக் கிழவி யொருத்தி; ஓடிவந்தான் ஒரு வீரன். ‘ஒருசேதி பாட்டி’ என்றான் “ஆடி வந்த சிறுமிபோல் பெரு மூச்சு வாங்குகின்றாய் ஆண் மகனா நீ தம்பி? மூச்சுக்கு மூச்சு இடைவேளை ஏற்படட்டும்—பின் பேச்சுக்குத் துவக்கம் செய்!” என்றாள் அந்தக் கண்டலுக்குப் போர்போன கிழட்டுத் தமிழச்சி.
“வேடிக்கை நேரம் இதுவல்ல பாட்டி, உன் வாடிக்கைக் கேலியை விட்டுவிடு. மடிந்தான் உன் மகன் களத்தில்” என்றான், மனம் ஒடிந்து நிமிர்ந்தாள் தாய்க்கிழவி ஒருமுறை.
“தாயம் ஆடுகையில் காய்களை வெட்டுவதுண்டு— களமும் அதுதான்; காயம் மார்பிலா? முதுகிலா? கூறுவாய்” என்றாள். “முதுகில்” என்றான். கிழவி துடித்தனள், இதயம் வெடித்தனள், வாள் எடுத்தனள், முழவு ஒலித்த திக்கை நோக்கி முடுக்கினள் வேகம்!
“கோழைக்குப் பால் கொடுத்தேன்—குப்புற வீழ்ந்து கிடக்கும் மோழைக்குப் பெயர் போர்வீரனும்! முன்பொரு நாள் பாய்ந்துவந்த ஈட்டிக்குப் பதில் சொல்ல மார்பைக் காட்டிச் சாய்ந்து கிடந்தார், என் சாகாத கண்ணாளர். அவருக்குப் பிறந்தானா! அடடா! மானமெங்கே! குட்டிச் சுவருக்கும் கீழாக வீழ்ந்துபட்டான் இமய வரம்பினிலே வீரம் சிரிக்கும்; இங்கு வீணை நரம்பினிலே இசை துடிக்கும்; அதுவும் மானம் மானமென்றே முழக்கும்! மதுவும் சுராவும் உண்டு வாழும் மானமற்ற வம்சமா நீ? ஏடா?
மறத்தமிழக் குடியிலே மாசு தூவி விட்டாய்! மார்பு கொடுத்தேன்; மகனாய் வளர்த்தேன், தின்று கொழுத்துத் திமிர் பாய்ந்த தோள்கள் எங்கே? தினவெடுக்க வில்லையோ? அந்தோ! வேலுக்கு வழிசொல்ல வகையற்ற கோழையே! என் வீரப் பாலுக்கு வழிசொல்வாய்!” என்று கதறினள், எண்பதை நெருங்கிய ஏழைக் கிழவி. சென்றங்கு செருமுனையில் சிதறிக் கிடந்த செந்தமிழக் காளைகளைப் புரட்டிப் பார்த்தாள். அங்கு நந்தமிழ் நாட்டைக் காக்க ஓடிற்று இரத்த வெள்ளம்! பிணக் குவியலிலே பெருமூச்சு வாங்க நடந்தாள். மணப் பந்தலிலும் அந்த மகிழ்ச்சியில்லை; மகன் பிறந்தபோதும் மகிழ்ச்சிக்கு எல்லையுண்டு. அவன் இறந்து கிடந்தான் ஈட்டிக்கு மார்பு காட்டி! இதைக் கண்டாள்—இதயம் குளிர்ந்தாள்; “எதைக் கண்டாலும் இனிக் கவலையில்லை; என் மகன் வீரனாய் இறந்தான்!” என்றாள், “அறுத்தெறிய இருந்தேன் அவன் குடித்த மார்பை; அடடா! கருத்தெரியப் பொய் சொன்ன கயவன் எங்கே? வாளிங்கே! அவன் நாக்கெங்கே?”—
இந்த வீர இசையைத் தலைவர் முடித்தார். பந்தல் அதிர்ந்தது, கைதட்டலால்! கையொலி ஓய்ந்த பிறகு தலைவர் சொன்னார்: “இந்தப் பாட்டு நான் எழுதியதில்லை. இதோ இருக்கிறாரே; இந்த மணமகன் எழுதியது!” என்று உற்சாகத்தோடு உரைத்தார். மீண்டும் பந்தல் அதிர்ந்தது! பக்கத்திலிருந்த புதுப்புறாவின் இளங்கன்னங்கள் ரோஜாவாயின. இதயம் எப்படி மலர்ந்ததோ யாரறிய முடியும்? தலைவர் வாழ்த்துரையை முடித்தார். பரிசுகள் வழங்கும் படலம் ஆரம்பமாயிற்று. மணமகளின் உள்ளத்தை அருகிருந்த மணமகனைவிட அதிகமாக உணரக்கூடிய சக்திவாய்ந்த ஓர் உருவம் அந்தப் பந்தலிலே அமர்ந்திருந்தது. அதுதான் மணமகளின் தோழி விஜயா. கமலாவும் விஜயாவும் கல்லூரியில் மட்டுமல்ல; இளமையிலேயே இணைபிரியாதவர்கள். விஜயா இல்லற வாழ்க்கைப் பாதையிலே பயணம் நடத்திக் கொண்டிருப்பவள். கமலா இன்றுதான் அடியெடுத்து வைக்கிறாள், கந்தனின் கை கோத்தபடி. அறிஞர்களின் பாராட்டுக்குரிய ஓர் அன்புத் துணை தன் தோழிக்குக் கிடைத்தது கண்டு விஜயாவுக்கு அளவிட முடியாத மகிழ்ச்சி! அந்த ஆனந்தத்தில் மெய்ம்மறந்திருந்தாள். கணவன் மணமேடையில் புகழப்படும் போதெல்லாம் கமலா, விஜயாவைக் கெண்டைக் கண்ணால் பார்த்ததை விஜயா மட்டுமே உணரமுடிந்தது. பரிசளிப்புகள் முடியும் தறுவாயிலிருந்தன. இன்ப வெள்ளத்தில் எல்லாவற்றையும் மறந்திருந்த விஜயா திடுக்கிட்டு எழுந்தாள். பரபரப்புடன் மணமேடைக்கு ஓடினாள். தன் கையிலேயிருந்த ஒரு தாள் சுருளைப் பிரித்தாள்.
“கண்ணே, கமலா...! நீ அதிர்ஷ்டசாலி இதைப் பெற்றுக்கொள், நம் அன்பின் அடையாளமாக! எந்த நெருக்கடி வந்தாலும் சரி, இந்த அன்புச் சின்னத்தை மறந்து விடாதே! சந்தனக் கிண்ணம்—உன் உள்ளம் சந்தோஷக் கிண்ணமாயிருப்பதை விளக்கும் சின்னம்!”
என்று கூறிக்கொண்டே கமலாவைத் தழுவிக்கொண்டாள். ஆனந்தக் கண்ணீர் பொழிந்தாள். கமலாவும் கண்கலங்கிவிட்டாள் சந்தோஷத்தால். வாழ்வின் ஆரம்பவிழா அரும்பிவிட்டது.
குடும்பம் குதூகலமாய்த் துவங்கியது. கமலா கொஞ்சம் பழமைப்பித்துப் பிடித்தவள். காதலர்களுக்குள் ஊடல் ஏற்படுவதெல்லாம் பழமை—புதுமைச் சண்டையினாலேயே என்ற நிலைமை சிலநாள் தொடர்ந்தது. பிறகு இருவருமே கடவுளர்களைக் கேலி செய்ய ஆரம்பித்தனர்.
“பரமசிவனையும் பார்வதியையும் தினம் தினம் பள்ளியறைக்குப் பல்லக்கில் தூக்கிக்கொண்டு போகிறார்களே பக்தர்கள்...! ஆனால் அவர்களுக்குக் கணபதி, முருகன் இருவரைத் தவிர வேறு குழந்தைகள் பிறக்கவே இல்லையே! ஏன்?” என்பான் கந்தன்.
“தெரியாதா உங்களுக்கு? அவர்கள் கர்ப்பத்தடை செய்து கொண்டார்கள்!” என்று சிரிப்பாள் கமலா.
“கடலிலே மீனை வெள்ளைக்காரனும் பார்த்தான்; நாமும் பார்த்தோம்.........” என்று ஆரம்பிப்பான் கந்தன்.
“வெள்ளைக்காரன் மீனைப் பார்த்து சப்மரீன் செய்தான்; நாம் மச்சாவதாரம் செய்தோம்!” என்று முடிப்பாள் கமலா.
இப்படி வளர்ந்தது அவர்களின் இன்ப வாழ்வு. இந்தப் புதியஜோடி கண்டு கந்தனின் தாய் களிப்படைந்தாள் என்றாலும், “கமலாவும் இப்படியெல்லாம் கடவுளைத் திட்டுகிறாளே! அடுப்பங் கரையில் கிடக்க வேண்டியதுகளுக்கு இந்த வம்புகள் எல்லாம் ஏன்?” என்ற ஆத்திரம் மெல்லத் தலைநீட்ட ஆரம்பித்தது. வெளிப்படையாகக் கண்டித்தால் மகனுக்கு வருத்தம் வருமே யென்று ஜாடைமாடையாகக் கண்டிக்கத் தொடங்கினாள்.
அப்படிக் கண்டனங்கள் கிளம்பும்போது காதலனின் இன் முகத்தை நினைத்துக் கமலா ஆறுதல் பெறுவாள். அது மட்டுமல்ல; அவள் தோழி விஜயா அடிக்கடி சொல்லியிருக்கிறாள்: “வீட்டிலேயிருக்கிற பெரியவர்களின் மனதை நோகவிடும்படி நடக்காதே! அனுசரித்து நட!” என்ற பொன்மொழிகளை.
அவற்றை நினைத்துக் கொள்வாள் கமலா. உடனே ஓடிப் போய் அவள் கொடுத்த அன்புப் பரிசை—அந்தச் சந்தனக் கிண்ணத்தை எடுத்து முகத்திலே அணைத்துக்கொள்வாள். சந்தனக் கிண்ணத்தின் விளிம்புகளிலே அவள் தன் ஆருயிர்த் தோழியின் உயிர்த்துடிப்புள்ள இதழைக் காணுவாள்; அந்தக் கிண்ணத்தின் பளப்பளப்பிலே தோழியின் சிரிப்பைக்கண்டு துள்ளியெழுவாள். காதலன் வீட்டில் இல்லாத நேரத்தில் அவளுக்குப் பேச்சுத்துணை சந்தனக் கிண்ணந்தான்! மாமியாருக்கு மருமகள் மீது ஏற்பட்ட கோபம் அவள் வலுவில் பேசவந்தாலும் அதிகமாகப் பேசுவது கிடையாது. பால்யத்தோழி—பள்ளித் துணை விஜயா அந்தக் கிண்ணத்திலே தன் கன்னத்தைக் காட்டிக் கமலாவைவிட்டுக் கள்ளச் சொல்லிக் கொண்டேயிருந்தாள். கிண்ணத்திலே மின்னும் “விஜயா” என்ற எழுத்துக்கள் கமலாவிடம் எத்தனையோ பழங்கதைகளைச் சொல்லும்; கமலாவும் கண்ணை மூடிக்கொண்டு அந்த இன்பக்கதைகளைக் கேட்பாள்.
திடீரென்று நாட்டிலே தீப்பொறி கிளம்பிற்று. தமிழை ஒழிக்கத் தருக்கர்கள் படை திரட்டினர். அதற்குத் தடைபோடத் தரணியாண்ட இனத்தவர் புறப்பட்டனர். வடநாட்டு இந்தி மொழி ஏகாதிபத்தியம் திராவிடத்திலே திணிக்கப்பட்டது. அதை எதிர்த்து மொழிப்போர் வீராவேசமாக மூண்டது.
“மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை எமை மாட்ட நினைக்கும் சிறைச்சாலை!” என்ற கவிதையை முழங்கியவாறு தமிழர் பட்டாளம் கிளம்பிற்று. சிங்கங்கள் சிறைபுகுந்தன. சிசுக்களுடன் பல தமிழ்த்தாய்கள் அடக்குமுறையின் கோரவாய் விழுங்கியது. மொழிகாக்கப் போன இருவர்—தாளமுத்து, நடராசன் எனும் மாவீரர்கள்—தம் மூச்சைக்காக்க முடியாமல் ஆக்கப்பட்டனர் இந்தி வெறியர்களால். தமிழகமெங்கும் கொதிப்பு—குமுறல்—புயல்!
கமலா பலகணி வழியாக வீதிப்புறத்தைப் பார்த்தபடி நின்றுகொண்டிருக்கிறாள். அவளுடைய கையிலே அந்தச் சந்தனக் கிண்ணமிருக்கிறது. சந்தனக் கிண்ணத்தோடு பேசி முடித்தாகி விட்டது; இப்போது அவள் எதிர்பார்ப்பது அலுவலகத்திலிருந்து திரும்பும் கந்தனை.
கண்களும் வலிக்கத் துவங்கிவிட்டன; கந்தனைக் காணோம்; ஒரு பெருமூச்சோடு பலகணியைவிட்டு அகல முயன்றாள். அமைதியாயிருந்த தெருவிலே ஓர் அலைமுழக்கம் புறப்பட்டது. பரபரப்போடு கமலா பலகணி வழியாகப் பார்வையைச் செலுத்தினாள். “தமிழ் வாழ்க! இந்தி ஒழிக! தாளமுத்து—நடராசன் புகழ் வாழ்க!” என்று பரணி பாடியபடி ஒரு தமிழர் பட்டாளம் பவனி வந்துகொண்டிருந்தது. ஒளவைக்கிழவி போன்ற ஒரு மூதாட்டி கம்பீர நடைபோட்டுக் கையிலே கொடி ஏந்திப் பிறை போல வளைந்த கூனல் எப்படி நிமிர்ந்தது என, பார்ப்போர் ஆச்சரியப்படும்படி அந்த அணிவகுப்புக்குத் தலைமை வகித்துச் சென்றாள். நெடிது உயர்ந்த சேரன்—செங்குட்டுவனே வந்து விட்டான என அதிசயிக்கத்தக்க அளவுக்கு வாட்ட சாட்டமான ஒரு மனிதர்—அஞ்சா நெஞ்சர்—படையின் தளபதியாக வீரநடை போட்டார். அந்தப் புலிநிகர் மாந்தர்களின் ஒலிமுழக்கம் கமலாவை வீறுகொள்ளச் செய்தது.
திருமணத்தன்று, “காதலிலே கவிதையிலே களம் போகும் பேச்சு! கணவனுக்கும் மனைவிக்கும் திராவிடமே மூச்சு!” என்று தலைவர் சொன்ன கவிதை நினைவுக்கு வந்தது. நினைவு அலைகளிலே சுழன்றுகொண்டிருந்த அந்த ஏந்திழையை ஒரு குரல் திடுக்கிட வைத்தது. “தமிழ் வாழ்க!”—தென்றல் நடையிலே! “இந்தி ஒழிக!”—புயல் நடையிலே! இரண்டு நடையிலும் கிளம்பிய ஒலி கந்தனுடையதுதான்! கமலா வெளியே ஓடிவந்தாள். கந்தன், கையிலே கொடியேந்தியவாறு ஆவேசமுடன் அந்தப் பட்டாளத்தில் பவனி வந்தான். கமலா கூட்டத்துக்குள் ஓடினாள். கந்தனைப் பிடித்து நிறுத்தினாள். கந்தனுக்கு ஒன்றுமே புரியவில்லை. ஐயோ, கூட்டத்திலேயுள்ள கொள்கை வீரர்கள் தன்னைப்பற்றித் தவறாக நினைக்கக் கமலா இடமளித்துவிடுவாளோ என்று கலங்கினான். கமலா ஆத்திரத்தோடு கேட்டாள்!
“இந்தி எதிர்ப்புக்கு உங்களை யார் போகச்சொன்னது?”
இதைக் கேட்டுக் கந்தன் விழித்தான். ஆனால், கமலா வார்த்தையை முடிக்கவில்லை ......இப்போதுதான் முடித்தாள்; “......என்னை விட்டுவிட்டு?” என்று!
“இந்தி எதிர்ப்புக்கு உங்களை யார் போகச் சொன்னது, என்னை விட்டுவிட்டு!” என்ற மொழி கேட்டதும் மூதாட்டி ஓடிவந்து கமலாவை அணைத்துக்கொண்டாள். மீண்டும் தமிழ் முழக்கம் தொடர்ந்தது. ஊர்வலம் அந்த வீதியைத் தாண்டியது. போலீசார் பாய்ந்தனர், புள்ளிமான் கூட்டத்திலே புலியென! வேட்டுச் சப்தம், வேதனை ஒலி. ‘தமிழ் வாழ்க!’ என்ற போர் முரசம். அத்தனைப் பேரையும் சிறைச்சாலைக்கு “வாருங்கள்” என வரவேற்றது அதிகாரத் திமிர்!
கமலாவும் கந்தனும் சிறைச்சாலையிலே, “கணவனுக்கும் மனைவிக்கும் திராவிடமே மூச்சு!” என்பதை மோகனத்திலே முணுமுணுத்துக்கொண்டிருந்தனர்.
அடக்குமுறை தர்பார் துவண்டது. இந்தி வெறியர்கள் ‘இனிப் பலிக்காது நம் முயற்சி’ என மிரண்டனர். கட்டாய இந்தி, கடையைக் கட்டியது! தமிழர் படை வென்றது. வீரர் உலாப் பாடினர்; கட்டாய இந்தி, கழுதை தேய்ந்து கட்டெறும் பாயிற்று! வென்றது மொழிப்போர்!
கமலாவும் கந்தனும் தமிழ் காத்த தடந் தோள்களிலே வெற்றிமாலை சூடி, வீட்டுக்குத் திரும்பினர். “வீண் வேலையில் ஈடுபட்டாய், இனி வேலை கிடையாது உனக்கு!” என்ற ஆபீஸ் உத்தரவும் அவனுக்கு முன் வீட்டுக்கு வந்திருந்தது. தாயாரோ, புகையும் எரிமலையாக இருந்தாள்.
“அம்மா, உனக்கு ஒரு கேடு என்றால் துள்ளியெழ மாட்டேனா நான்? அது போலத்தான் தாயே, தாய் மொழியைப் பழித்தவரை எதிர்த்தேன்; இது குற்றமா அம்மா?” என்று அழுதான் கந்தன். மகனைவிட மருமகள் மீது அதிக ஆத்திரம் அந்த மாதாவுக்கு.
வேலையற்ற நிலை—வேலை கிடைக்காத நிலை. வேதனை வாழ்வு. வேலையில்லாத கந்தன் இயக்க வேலையிலேயே முழு நேரமும் ஈடுபட்டான். அந்த ஊர் செயலாளர் அவன்தான். கந்தனைத் தெரியாதார் யாருமில்லை. அவன் புகழ் வளர்ந்தது. ஊரிலே இயக்கச் சார்பிலே ஒரு பொதுக் கூட்டம். எல்லா ஏற்பாடுகளும் செய்துவிட்டான். சொற்பொழிவாளருக்கு வழிச் செலவுக்கு இருபது ரூபாய் அனுப்பியாக வேண்டும்.
பணம் வசூல் ஆகவில்லை. கூட்டம் நின்றுவிடக் கூடாதே என்று துடித்தான். வீட்டிலே நிம்மதியின்றி அலைந்தான். சிறைச்சாலையிலே கமலாவுக்குச் சரியான உணவும் பாதுகாப்புமின்றி உடல் நலம் கெட்டது. அது ஏழ்மையின் காரணமாகத் தொடர்ந்தது. டாக்டர் எழுதிக் கொடுத்த மருந்தை வாங்கித் தரப் பணமில்லை. வீட்டிலிருந்த வெள்ளிச் சாமான்களையும் விற்றுச் சாப்பிட்டாகி விட்டது. சந்தனக் கிண்ணம் ஒன்றுதான் பாக்கி வெள்ளியிலே! “அதை விற்றாவது மருந்து வாங்கிக் கொடேன்!” என்றாள் தாயார். அவனுக்கு அதை விற்க மனம் வரவில்லை. மனைவியின் தோழி யளித்தது அந்தச் சந்தனக் கிண்ணம். ஆகவே மறுத்துவிட்டான். இப்போது சொற்பொழிவாளருக்கு அனுப்பப் பணம் இல்லையென்றதும் அவன் விழிகள் அந்தக் கிண்ணத்தைத் தேடின. நோயுற்றிருந்த கமலா தூங்கிக் கொண்டிருந்தாள். கைகள் நடுங்கக் கந்தன் சந்தனக் கிண்ணத்தை எடுத்தான். அடகு வைத்துப் பெற்ற பணத்தைச் சொற்பொழிவாளருக்கு அனுப்பினான்.
கூட்டம் குறிப்பிட்டபடி ஏற்பாடாகியது. புகைவண்டி நிலையத்துக்குக் கந்தன் புறப்பட்டான் சொற்பொழிவாளரை வரவேற்க! அப்போது அவன் தாய் கமலாவைத் திட்டிக்கொண்டிருந்தாள். கூர்ந்து கவனித்தான். சந்தனக் கிண்ணத்தைக் கமலா தொலைத்துவிட்டாள் என்பதுதான் தாயின் குற்றச்சாட்டு. காய்ச்சலோடு கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும் கமலா, எதுவும் பேசாமல் அழுது கொண்டிருந்தாள். தன் அருமை விஜயா காணாமற் போய்விட்டதை நினைத்துக் கண்ணீர்விட்டாள். தன் கண்களைத் துடைத்துக் கொண்டு கந்தன் புகைவண்டி நிலையத்திற்கு ஓடினான். புகைவண்டி வந்தது. ஆனால் கூட்டத்திற்கு வரவேண்டிய சொற்பொழிவாளர் வரவில்லை. அசையாமல் அப்படியே நின்று கந்தன் விம்மி விம்மி அழுதுவிட்டான். தன்னுடைய வீட்டுக் காரியத்திற்கு ஒருவர் வருவதாயிருந்து வராமல் போனாலும் பரவாயில்லை. பொதுக்காரியம்—பொது மக்களிடம் பணம் வசூல் செய்து பொதுமக்களை எப்படி ஏமாற்றுவது என ஏங்கினான். மேடைக்கு வந்து மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டான். மக்கள் முணுமுணுத்தபடி கலைந்தனர்.
வீட்டுக்கு வந்தான். கமலாவுக்குக் காய்ச்சல் அதிகமாகிவிட்டது. கண்களிலே ஒளி குறைந்துவிட்டது. தாயார் பக்கத்திலே அமர்ந்து அழுதுகொண்டிருந்தாள். கந்தன் ஓடிவந்து “கமலா! கமலா!” என்று அலறினான்.
அவள் மெல்ல வாய் திறந்தாள். “அத்தான் அந்தச் சந்தனக் கிண்ணம்” என்று இதழசைத்தாள்.
“கமலா, அதை நான்தான் திருடி அடகு வைத்திருக்கிறேன்—பணம் வந்ததும் மீட்டுவிடலாம்” என்று கதறினான். அவன் கதறலிடையே கமலா கண்ணை மூடினாள். பிறகு திறக்கவே யில்லை; கந்தன் அழுதான்; அழுதுகொண்டேயிருந்தான்!
இப்போது கந்தன் ஏழையல்லன். பணக்காரனுமில்லா விட்டாலும் பண வசதி இருக்கிறது.
இருபது ரூபாய்க்கு அடகு வைத்த சந்தனக் கிண்ணத்தை வட்டியோடு முப்பது ரூபாய் கொடுத்தால் மீட்டு விடலாம்.
ஆனால்,
அதை மீட்டு யாரிடம் கொடுப்பது? கமலாவா இருக்கிறாள் அவளிடம் கொடுக்க? அவளைத்தான் இந்திவெறியர்களின் சிறைச்சாலை, கொஞ்சம் கொஞ்சமாக விடுதலைக்குப் பிறகும் விடாமல் கொன்றுவிட்டதே!
கந்தன் சந்தனக் கிண்ணத்தை மீட்டுவிடத் தயாரா யிருக்கிறான். எப்போது? கிடைத்ததும் மீண்டும் இலட்சியப் போரின் வெற்றி விழாவிலே, வீரர்களுக்குச் சந்தனம் வழங்கும் சந்தர்ப்பம் வருமே; அப்போது!