புலிவால்
The Tiger's Tail
மு. கருணாநிதி
புலிவால்
மலையாள மொழியில் இலக்கியங்கள் மாத்திர மல்ல, குத்தலான, கேலியான கிண்டல்களே கூட உண்டு. ‘சுருக்’ கென்று தைக்கக்கூடிய கேலி மொழிகள், மலையாளத்திலே நிரம்ப உண்டு. அருமை நண்பர் எம்.ஜி.ஆரோடு பழகிய நேரத்தில் - நான் நீண்ட காலம் அவரோடு பழகியது உங்களுக்குத் தெரியும். இளம் வயதிலே பழகிய போது நான் அவரிடம் கேட்பேன். மலையாளத்தில் மிக சிறப்பான ‘சுருக்’ கென்று குத்தக்கூடிய கேலி மொழி எது? என்று கேட்டபோது - ‘நாயர் புடிச்ச புலிவால்’ என்று சொன்னார். அதற்கு தமிழிலே பழமொழி ஒன்று இருக்கிறதாம். என்னவென்றால், ‘உடும்பு வேண்டாம் கையை விட்டால் போதும்’ என்று சொல்வோம். அதாவது உடும்பைப் பிடிக்க ஒருவன் போனான். உடும்புஅவன் கையைப் பிடித்து விட்டது. உடும்பு தனக்கு வேண்டாம். கையை விட்டால் போதும் என்று கெஞ்சினான் என்று தமிழிலே சொல்வோம்.
ஆனால், ‘நாயர் புடிச்ச புலிவால்’ என்பது ஒரு நல்ல கதையைக்கூட நமக்கு எடுத்துக்காட்டும். நாயர் புலிவாலை பிடித்து விடுகிறார். புலி, நாயருக்குப் பயந்து ஓடிக் கொண்டிருக்கிறது. நாயர், புலி வாலை பிடித்துக் கொண்டே இருக்கின்றார். என்ன கஷ்டம் என்றால் - புலிவாலை நாயர் விட்டால் புலி, நாயர் மீது பாய்ந்து விடும். நாயர் விடாத காரணத்தால் புலி ஓடிக் கொண்டேயிருக்கிறது. நாயர் புடிச்ச புலி வால் - இன்னதற்காக பொருத்தமாக இருக்கிறது பாருங்கள். (கைதட்டல்) புலி வாலை நாயர் புடிச்சாரோ இல்லையோ, நம் நாடு புலி வாலை பிடித்துக் கொண்டு இன்று பாடுபாடு பட்டுக் கொண்டு இருக்கிறது. (கைதட்டல்)
*