பெண்களுக்கு ஏன் - மீசை தாடியில்லை?

Pengalukku En - Meesai Thaadiyillai?

மு. கருணாநிதி

பெண்களுக்கு ஏன் - மீசை தாடியில்லை?

அகநானூறு புராணத்தில் ஒரு கதை.

ஒரு ரிஷி இருந்தார் தேவலோகத்திலே. அந்த ரிஷிக்கு பூலோகத்துக்குச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்கிற ஆசை. தனியாகச் சென்றால் உற்சாகமாக இருக்காது என்று தன்னுடைய துணைவியையும் அழைத்தார்.

துணைவியார், “பருவம் அடைந்த மங்கை நமக்கு இருக்கிறாள். அவளை தேவலோகத்தில் தனியாக விட்டுவிட்டுப் போனால் என்ன ஆவது? எனவே நான் வரவில்லை” என்று சொன்னாள்.

“இல்லை, இல்லை. நீயும் வர வேண்டும். நாம் பருவம் அடைந்த பெண்ணை பத்திரமான இடத்தில் விட்டுவிட்டுப் போகலாம்” என்று சொன்னார்.

யாரிடத்திலே பருவப் பெண்ணை விட்டுவிட்டுப் போகலாம் என்று யோசித்தார்கள்.

சிவனிடத்திலே விட்டுச் செல்லலாமா? உடனே அவர்களுக்குள் ஆராய்ச்சி. அவர் பக்கத்திலே பார்வதியும், தலையிலே கங்கையும் வைத்திருப்பவர் ஆயிற்றே! இந்த இருவரும் போதாமல் தாருகா வனத்து ரிஷி பத்தினிகளையெல்லாம் கற்பழித்ததாகக் கதை இருக்கிறதே. அவரை நம்பி நம்முடைய பருவச் சிட்டை எப்படி விட்டுச் செல்வது?

இந்தக் கேள்வி எழுந்த காரணத்தால் சிவனைக் கை கழுவினார்கள்.

விஷ்ணுவிடம் விட்டுச் செல்லலாமா? என்று எண்ணினார்கள்.

அவன் பாமா - ருக்மிணி போதாமல் ஆயிரக் கணக்கான கோபிகா ஸ்திரீகளோடும் விளையாடி, அடுத்த வீட்டுக்காரன் மனைவியான ராதையிடமும் விளையாடியவன் ஆயிற்றே! எனவே அவனிடத்தில் எப்படி விட்டுச் செல்வது? என்ற ஐயப்பாடு ஏற்பட்டது. அவரையும் கை கழுவினார்கள்.

சரி இந்திரனிடம் விட்டுச் செல்லலாமா? என்றவுடன் “சரிதான் போங்கள்! அவரிடத்திலா? அவர் ரிஷிபத்தினி அகலிகையையே கற்பழித்து அவருடைய உடலெல்லாம் ஆயிரம் கண்கள் - புண்கள் என்கிற அளவுக்கு கடும் கோபத்திற்கு ஆளானவர் ஆயிற்றே! அவரிடமா?” என்று பத்தினி கேட்டாள்.

கடைசியாக ஒரு முடிவுக்கு வந்தார்கள். எமனிடத்திலே விட்டுச் செல்லலாம் என்று. அவன்தான் தர்மராஜன், நல்லவன். அவனிடத்திலே விட்டுச் செல்லலாம் என்ற முடிவுக்கு வந்து எமனிடத்திலே அந்தப் பெண்ணை ஒப்படைத்து விட்டு ரிஷியும் ரிஷிபத்தினியும் பூலோகத்திற்குப் புறப்பட்டார்கள்.

எமன் ஒரு தரம் தன்னுடைய அரண்மனையிலிருக்கும் அந்தப் பெண்ணைப் பார்த்தான். தர்மராஜன் அல்லவா? அவனுக்கே சபலம் தட்டியது.

எனவே, அந்தப் பெண்ணிடம் தன்னுடைய ஆசையை வெளியிட்டான் எமன். அவளும் ஆசையை வெளியிடுபவன் எமன் ஆயிற்றே என்ற காரணத்தால் சம்மதித்தாள்!

இருவருக்குமிடையே நட்பு உதயமாயிற்று. இந்த நட்புக்கிடையே எமனுக்கு ஒரு சந்தேகம். நாம் செய்கிற காரியம் யாருக்காவது தெரிந்துவிட்டால் என்ன ஆவது என்பதற்காக எமன், பகல் நேரத்திலே எல்லாம் அந்தப் பெண்ணைத் தன்னுடைய வயிற்றிலே போட்டு விழுங்கிவிடுவது; இரவு நேரத்திலே மாத்திரம் தன்னுடைய பள்ளியறைக்குச் சென்று வெளியே துப்புவது. பிறகு இருவரும் பள்ளியறையிலே இன்பமாக இருப்பது. இது நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக நடைபெற்று வருகின்ற எமலோகத்துக் காதல் காட்சி.

ஒருநாள் குளிப்பதற்காக நீரோடைக்குச் செல்கிறான் எமன். குளிக்கும் நேரத்திலே வயிற்றுக்குள்ளே மப்பு மந்தாரம் இருக்கக் கூடாதல்லவா? எனவே பக்கத்திலே பளிங்கு மண்டபத்திலே அந்தப் பெண்ணைத் துப்பி உட்கார வைத்து விட்டு “இங்கேயே இரு. குளித்து விட்டு வருகிறேன்” என்று சொல்லி விட்டுப் போய்க் குளிக்கிறான்.

அதே நேரத்தில் அந்தப் பக்கமாக அக்கினி பகவான் வருகிறான். வந்தவன் பளிங்கு மண்டபத்திலே இருக்கிற பாவையைப் பார்த்து விடுகிறான். உடனடியாக அவனுக்கு காதல் ஏற்படுகிறது. அவளும் சம்மதித்து விடுகிறாள்.

இருவரும் அந்தப் பளிங்கு மண்டபத்திலே இன்பமாக இருக்கிற நேரத்திலே எமன் குளித்துவிட்டு அந்த வழியாக வருகிறான். அவன் பார்த்துவிட்டால் ஆபத்து ஆயிற்றே என்று பயந்த அந்தப் பருவ மங்கை, எமனை ஏமாற்றுவதற்காக அக்கினி பகவானைத் தூக்கித் தன்னுடைய வயிற்றிலே போட்டு விழுங்கிவிடுகிறாள்.

எமன், இவைகள் எதுவும் தெரியாதவன் - பாவம். அவளை! வழக்கம் போல் தன்னுடைய வயிற்றிலே தூக்கிப் போட்டு விழுங்கி விடுகிறான்.

அக்கினி பகவானைத் தேடிக் கொண்டு வந்த வாயு பகவான் எங்கே நண்பனைக் காணவில்லையென்று உலகமெல்லாம் தேடத் தொடங்கிவிட்டான்.

இப்போது ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

எமன் வயிற்றிலே அந்தப் பருவப் பெண்! பருவப் பெண்ணின் வயிற்றிலே அக்கினி பகவான்!

பகல் நேரம் வந்ததும் சும்மா இருக்கக் கூடாதே என்று அந்தப் பருவப்பெண் எமன் வயிற்றுக்குள்ளேயே தன் வயிற்றிலிருக்கிற அக்கினி பகவானை உமிழ்ந்து, எமனுடைய வயிற்றையே பள்ளியறையாகப் பகல் நேரமெல்லாம் ஆக்கிக் கொண்டாள்!

பிறகு இரவு நேரத்தில் வழக்கம்போல் எமன் அவளை உமிழ்வதும், அவளோடு இருப்பதும் வாடிக்கையாக இருந்தது.

இதற்கிடையே வாயு பகவான், உலகமெல்லாம் தேடுகிறான். அக்கினியைக் காணவில்லை. அக்கினி இல்லாவிட்டால் உலகம் இயங்குமா? சிகரெட் பிடிக்க நெருப்பு எழுமா? அடுப்பெரிக்க விறகுக் கட்டையில் தீ வருமா?

எனவே, அக்கினியைக் காணாமல் உலகமெல்லாம் அலறுகிறது.

அந்த நேரத்திலே உலகைக் சுற்றிப் பார்க்கச் சென்ற ரிஷியும், ரிஷிபத்தினியும் தேவலோகம் திரும்புகிறார்கள். பெண்ணைக் காணவில்லை. ஒன்றும் புரியவில்லை. முறையிடுகிறார்கள்.

அந்த நேரத்தில் வாயு பகவான், இந்த விஷயங்களையெல்லாம் இரகசியமாகத் தெரிந்து வைத்துக் கொண்டு, இதை வெளிப்படுத்த வேண்டும் என்று தேவர்களுக்கு விருந்து வைத்து சிறப்பு விருந்தினர்களாக சிவன், விஷ்ணு, பிரம்மா, எமன் அனைவரையும் அழைக்கிறான், தேவர்கள் உட்பட.

அனைவரும் வருகிறார்கள். பெற்றோர்களும் வந்திருக்கிறார்கள்.

எமனிடத்திலே மாத்திரம் மூன்று இலைகள் போடச் சொல்கிறான் வாயு பகவான்.

சிவன், “என்ன அவனுக்கு மாத்திரம் மூன்று இலைகள்? எங்களை யெல்லாம் அவமதிக்கிறாயா?” என்று கேட்கிறார்.

“இல்லை, இல்லை, கொஞ்சம் பொறுங்கள்” என்று சொல்லிவிட்டு எமனைப் பார்த்து, “எமனே! உன்னுடைய வயிற்றிலே இருக்கின்ற அந்தப் பெண்ணை வெளியே உமிழ்வாயாக!” என்றதும் எமன் எதுவும் சொல்ல முடியாமல் அந்தப் பெண்ணை வெளியே உமிழ்கிறான்.

அந்தப் பெண் வெளியே வந்து இன்னொரு இலையிலே உட்காருகிறாள்.

இரண்டு இலை - இரட்டை இலை ஆயிற்று.

“சரி மூன்றாவது இலை எதற்காக?” என்று எமன் ஆத்திரத்தோடு கேட்கும்போது, வாயு பகவான், அந்தப் பெண்ணைப் பார்த்து “பத்தினித் தங்கமே! உன் வயிற்றுக்குள் இருக்கின்ற என் ஆருயிர் நண்பன் அக்கினி பகவானை தயவுசெய்து வெளியே அனுப்பு” என்று சொல்லுகிறான்!

உடனே அவள் நடுங்கி வயிற்றுக்குள் இருந்த அக்கினி பகவானை வெளியே உமிழ, அக்கினி பகவான் வெளியே வருகிறான். அவன் வெளியே வருகிறபோது அந்த நடுக்கத்தில் அந்தப் பெண்ணுடைய முகத்திலே இருக்கின்ற தாடி, மீசையெல்லாம் பொசுங்கிவிடுகிறது.

அதுவரையிலே உலகத்திலே இருந்த பெண்களுக்கு ஆண்களைப் போல் முகத்திலே தாடி, மீசை இருந்தது - கதைப்படி.

அக்கினி பகவான் வெளியே வந்த நடுக்கத்திலே தாடி மீசையெல்லாம் பொசுங்குகிறதல்லவா? அது முதல் உலகத்திலே பிறந்த எல்லாப் பெண்களும் தாடி, மீசை இல்லாமலே பிறக்கிறார்கள்.