பாலைவன ரோஜா

Palaivana Roja

கலைஞர் மு. கருணாநிதி · கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்

பாலைவன ரோஜா

நாம் வெறும் மாணவர்கள் மட்டுமல்ல—எதிர் கால உலகத்தின் சிற்பிகள்!”—இப்படிப் பத்து மாணவர்களைப் பார்க்கும் போதெல்லாம் கந்தையா சபதம் போட்டுச் சொல்வான். சிரித்துக் கொண்டே சொல்வான். இதை மற்றவர்களுக்கு நினைவுபடுத்த வேண்டியதுதான் தன்னுடைய பிறவிப் பயனைக் கருதியவன் போல் சொல்லிக்கொண்டே இருப்பான்!

எங்கள் கல்லூரி ஒரு பலசரக்கு மண்டி; யார் எதை எதிர் பார்த்து வருகிறார்களோ அது தப்பாமல் கிடைக்கும். காதல் வேண்டுமா? கோதை மயிலாளின் ஜாக்கையை நோக்கிப் படை யெடுக்கும் ஒரு இளைஞர் பட்டாளம்! பாதையை மறிக்காமல் “வாழட்டும்” என்ற பெரும் உபதேசத்தோடு ஒதுங்கிவிடுவார்கள் மற்றவர்கள்! அறிவு வேண்டுமா? அதோ இருக்கிறது நூல்நிலையம். புத்தகங்களைக் கட்டி அழுதபடியே இருக்கலாம்...... அரட்டை அடிக்கவேண்டுமா? ஒரு மணி நேரமா அல்லது நாள் முழுவதுமா? என்று கேட்டபடி ஒரு கூட்டம் வரும்! மற்றும் மேடனிக் காட்சி ரசிகர்கள், சீட்டுக் கச்சேரி வித்துவான்கள், இந்த ரகத்தினர் ஏராளம்! ஏராளம்!

அந்த வகுப்பின் கடைசி ‘டெஸ்க்’லே வசிஷ்ட மண்டலமென ஒரு சில நட்சத்திரங்கள் ஒளிவிட்டுக்கொண்டிருந்தன. அதிலே வட்டமிடும் நிலவாகத் திகழ்ந்தான் கந்தையா.

“வாழ்க்கையிலே ஒரு லட்சியம் வேண்டும்” என்று பெர்ணட்ஷாவைப் போல உபதேசம் செய்வான். இங்கர்சாலைக் கொண்டுவந்து நிறுத்துவான்.

“நாம் அதிர்ஷ்டசாலிகள்? புதிய திராவிடத்தை நாம்தான் மலர்விக்கவேண்டும். நீலவானிலே அடக்குமுறை இருள் கவ்வி இருக்கிறது. அதோ! தேன் அருந்த நம் எதிர்காலச் சந்ததிகளாம் தும்பிகள் துதிபாடி நிற்கின்றன. வெள்ளி நிலவே! திராவிடப் பெருங்குடி மக்களே! நீங்கள் தான் எழ வேண்டும்!...நாளையே திராவிடம் மலர்ந்துவிடும்...” இப்படி அழகு நடை போடும் கவிதை மணிகளைக் கந்தையா அள்ளி அள்ளி வீசுவான். அவன் மேடையேறினால் புராணக் கொள்கைகள் பாடையேறுமே என்று அஞ்சும் பண்டிதர் கூட்டம்!

அவன் மட்டுமல்ல, அவனிடம் ஒரு படையே இருந்தது. வகுப்பின் கடைசி ‘பெஞ்சி’லே கடைசிப் பையன் கண்ணையன். “பாரதிதாசன் பரம்பரையிலே இவன் மூத்தவன்” என்று அவனைப்பற்றிக் கந்தையா விருது அளித்திருந்தான்.

அவன் பக்கத்திலே உட்கார்ந்திருப்பவன் ராமு; அந்தக் கல்லூரியிலே ‘ஈன்ஸ்டினின் தியரி’யைப்பற்றி நன்றாகத் தெரிந்தவன் அவன். அவனுக்காக ஒரு முதல் வகுப்புத் தேர்விலே, உதவி நிதி காத்திருந்தது. இங்கிலாந்து சென்று படித்து ஒரு ‘புரொபஸர்’ ஆகவேண்டுமென்பது அவன் கனவு!

மற்றவன் ஒரு பாடகன்; தென்னாட்டு இசையை “மாடர்னைஸ்” செய்யவேண்டும் என்று முனகிக்கொண்டே இருப்பான்!

இந்த வருங்கால மேதைகளுக்கெல்லாம் கொள்கை வடிவம் கொடுத்து வளர்த்துவந்தான் கந்தையா—என்னவோ வருங்கால திராவிட நாட்டில் அவர்களுக்கெல்லாம் ஒவ்வொரு இலாகா கொடுப்பதைப்போல! இந்தக் ‘கந்தையா’ குழுவினரால் தனது கல்லூரிக்கு மாறுத புகழ் வரப்போகிறது என்று நினைத்தார் கல்லூரித் தலைவர்! ஆசிரியர்கள் அவர்களிடம் அன்பு காட்டா விட்டாலும் அவர்களுடைய ‘எதிர்காலத்’ திட்டம் மரியாதை செலுத்தினர்.

அகில உலகமும் புகழும் அரசியல் மேதை, விஞ்ஞான வித்தகன், ஓவிய நிபுணன், இசை வல்லுனன், இப்படிப் பலவித கோணங்களில் காட்சி தந்து அவர்கள் எதிர்காலம்.

பாவம்! சூதாட்டம் போலன்றி, மாசமருவின்றித் துவங்கிய அந்த எதிர்காலம் எக்காலமாக மாறும் என்பதை அவர்கள் மாணவப் பருவம் உணர்த்தவே இல்லை!

சந்தர்ப்பம் ஒரு சதிராடும் சூனியக்காரி! பொங்கி எழும் வாலிபம் இருக்க—‘உம்’ என்ற மாத்திரத்தில் பகைவரைச் சங்காரம் செய்யும் திறனிருக்க—அவர்களையெல்லாம் விட்டு விட்டுச் செல்வச் சிரிப்பிலே ஆழ்ந்து அழுகிப்போன பிணத்திற்கு மாலை சூட்டும் மாயமாலக்காரி அவள்! அந்தச் சந்தர்ப்பத்தின் குளிர்ப் பிடியிலே ஏழைக் கந்தையாக்கள் எப்படி மாட்ட முடியும்?

இப்படியே ஆண்டுகள் பல ஓடின. ஓடும் ரயிலில் ‘டிக்கெட் ப்ளீஸ்’ என்றபடி நகர்ந்துகொண்டிருந்தேன் நான்! அந்த ஆள் மெளனமாகச் சிந்தனையை எங்கோ மேயவிட்டுக்கொண்டிருந்தான். “சரிதான்...மாட்டிக்கொண்டான் ஒருவன்” என்று நினைத்தபடி அவனைத் தட்டினேன். அவன் திரும்பினன். “என்னைத் தெரிகிறதா சார்! நான்தான் சார் உங்களோடு கல்லூரியில் படித்த கந்தையா!” என்றான்.

என்னுள் நம்ப முடியவில்லை. கந்தையா எங்காவது வெளி நாடுகளிலே மேல் படிப்புக்காகச் சென்றிருப்பான்—உலகம் போற்றும் அறிஞனைத் திகழ்வான்—என்று நினைத்துக்கொண்டிருக்கும் நான், சாதாரணக் கந்தல் அணிந்த கந்தையாவை நினைத்துப்பார்க்கமுடியவில்லை!

“என்னப்பா கந்தையா! உன்னோடு சேர்ந்த கூட்டாளிகெல்லாம் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்? முதல் வகுப்பு வாங்கிய ராமுவுக்கு அமெரிக்கா செல்ல ‘ஸ்காலர்ஷிப்’ கிடைத்து விட்டதா? கவிஞர் கண்ணையன் ஏதோ தமிழ் ஆராய்ச்சி செய்யப் போவதாகச் சொல்லிக்கொண்டிருப்பானே,” என்று ஆர்வ மிகுதியால் கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனேன்.

“ஆமாம்! கந்தையா முதல்தரமான பேச்சாளன்; எதிர் காலத்தில் நல்ல அரசியல்வாதியாக வருவான் என்று எதிர் பார்த்தீர்கள்.

“ராமு ஒரு கணித மேதை! கண்ணையன் ஒரு கவிஞன்! சுந்தரம் ஒரு சங்கீத ரத்தினம்! கோபாலன் சிறுவனாக இருக்கும் போதே பறக்கும் விமானம் செய்த ஆராய்ச்சிக்காரன். அவர்கள் எல்லாருமே இப்போது குமாஸ்தாக்கள்” என்று சொல்லியபடி ‘கோ’வென்று அழுதுவிட்டான்.

“இதோ பார்த்தாயா” என்று என்னிடம் பத்திரிகையில் வந்த ஒரு போட்டோவைக் காண்பித்தான்! “அடே! இவன் பிச்சுமணியாச்சே! மேடையிலே நீ கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் தவிப்பானே? இவனுக்கு என்னப்பா இப்போ?” என்றேன்.

“அவன் சாதாரணப் பிச்சுமணியல்ல இப்போது; அவன் அப்பா ஒரு மாஜி கலெக்டர். அவன் அத்திம்பேர் டெல்லி செக்ரெட்டரியெட்டில் இருக்கிறார். அவன் மாப்பிள்ளை மந்திரிக்கு உறவு. இப்போது அவன் ஐ. நா. சபைக்குப் போகிறான், நம் நாட்டுப் பிரதிநிதியாக!” ஆவேசத்தோடு பேசிக்கொண்டே போனான்! வண்டி ஸ்டேஷனில் நின்றது. “நான் போய் வருகிறேன் கந்தையா” என்று சொல்லிவிட்டு நான் வண்டியை விட்டு இறங்கினேன்!

“சார்! அதைப் படியுங்கள்” என்று சுவரிலே ஒட்டி இருந்த போஸ்டரைக் காண்பித்தான் கந்தையா; நான் படித்தேன்.

“சுதந்திர இந்தியக் குடியரசு மக்களாகிய நாம், பேச்சுரிமை, எழுத்துரிமை, வழிபாட்டு உரிமை, அபிப்பிராயம் வெளியிடும் உரிமை, ஆகிய இவைகளோடு பிரஜைகள் எல்லாருக்கும் சரிசமமாகச் சந்தர்ப்பம் முதலியவற்றை வழங்கவும் உறுதிப் படுத்துகிறோம்.”

படித்து முடித்தேன். எல்லாருக்கும் சரிசமமாகச் சந்தர்ப்பம் வழங்கும் இந்திய அரசியல் சட்டம் என்னைப் பார்த்து எள்ளி நகையாடியது!

கல்லூரியிலே படிக்கும்போது கந்தையா ஒரு பிரசங்க பீரங்கி! ராமு ஒரு கணிதமேதை! கண்ணையன் ஒரு கவிதா சிரோன்மணி! சுந்தரம் ஒரு சங்கீதரத்தினம்! கோபாலன் வகுப்பறைக்குச் செல்லாமலேயே கற்றுத்தேர்ந்த இஞ்சினீயர்! இப்போது அவர்கள் எல்லோரும் குமாஸ்தாக்கள்!

தொட்டாற் சுருங்கியைப்போல் கந்தையாவின் சொற்பொழிவுக்குப் பதில் சொல்ல முடியாமல் மேடையிலே குன்றிப்போய் நிற்கும் பிச்சுமணி, இப்போது அமெரிக்காவிலே குன்றென உலவு கிறான். அவனே வென்று வாகை சூடிய கந்தையா, டிக்கெட் இல்லாமல் பிரயாணம் செய்யும் நிலை! தென்றல் தாக்கி வரும் ரோஜாவின் மணம்! கருப்பு வண்டினைக் கனகமயமாக்கும் அதன் மகரந்தப்பொடி! அழுகி நாற்றமெடுத்த சொந்த நாட்டில் பரிமள கந்தம் வீசச் செய்யவேண்டிய அந்த நந்தவன ரோஜா வெண்மணற்பரப்பிலே கண்பார்வைக்கு எட்டாத பாலைவனத்திலே கருகிக்கொண்டிருக்கிறது! பகை ஒழிக்கும் வாளாக வார்க்கப்படவேண்டிய அந்த எஃகுக்கம்பி வறுமை ஈரமும் பட்டினி நீரும் பட்டுத் துருப்பிடிக்கிறது! அதோ! அங்கே திறமை சிறிதுமில்லாப் பிச்சுமணி, சுற்றி இருப்போர் தயவால் உயர ஏறிப் போகிறான். இந்த ரோஜாக்களைப் பிழிந்து அந்த வெள்ளெருக்கை மலருக்குச் சிகப்பு வர்ணம் பூசுகிறார்கள்.

நான் மாணவனாக இருக்கும்போதெல்லாம் எனக்குக் கந்தையாவின் கொள்கை பிடிக்காது. இருந்தும் இந்தக் காட்சியை நினைத்த என் இருதயம் கண்ணீர் விட்டது.

“அழு! மாசுபடிந்த திராவிடமே அழு! கறுத்துப் போன மேகம், சோகத்தால் கனத்துப்போன உள்ளம், இவைகளுக்கு மாற்று; கண்—நீர்தான்! அந்த கண்ணீர் ஓடையில்தான் புதிய சமுதாயத்தின் விடுதலைப் படகு மிதந்திடவேண்டும்” என்று உரக்கச் சிரித்துக்கொண்டே சொன்னான் கந்தையா! சொல்லிக் கொண்டே அழுதான்! அந்த அலறலோடு வண்டி நகர்ந்தது!